Wednesday, 8 February 2012

'கடைசிப் புத்தகம்'




'கடைசிப் புத்தகம்'

(அல்போன்சு தொதே - ALPHONSE DAUDET (1840 - 1897)

 *****************************************************



"இறந்து விட்டார்" 

யாரோ சொன்னார் மாடிப்படியில். 

அந்தச் சோகச் செய்தி வரும் என்பதைப் பல நாளாகவே உணர்ந்திருந்தேன். எந்த நிமிடமும் காதில் விழப் போகிறது என்று எனக்குத் தெரிந்து தான் இருந்தது. எனினும் திடுக்கிட வைத்தது, எதிர்பாராத ஒன்றைப் போல. 

கனத்த இதயமும் நடுங்கும் உதடுகளுமாய் அந்த எழுத்தாளரின் எளிய இல்லத்தில் நுழைந்தேன். அலுவலறை தான் அங்கே நிறைய இடத்தை ஆக்கிரமித்திருந்தது. எல்லாச் சுகங்களையும் வீட்டின் எல்லா அழகுகளையும் 'படிப்பு, படிப்பு' என்ற ஒன்று விரட்டிவிட்டிருந்தது. 

மிகத் தாழ்வான சிறு இரும்புக் கட்டிலில் உடல் கிடந்தது. தாள்கள் குவிந்த மேசையும் பாதிப்பக்கத்தில் முடிந்து போன அவரது பெரிய எழுத்தும் மைப்புட்டியில் நின்றிருந்த எழுதுகோலும் சான்றளித்தன, எவ்வளவு திடீரென்று சாவு அவரைத் தாக்கிவிட்டது என்பதற்கு. 

தலைமாட்டில் ஓக் என்ற மரத்திற் செய்த உயரமான அலமாரியொன்று கையெழுத்துப் பிரதிகளும் ஏதேதோ தாள்களும் பிதுங்கிய நிலையில் பாதி திறந்திருந்தது. சுற்றுமுற்றும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்களைத் தவிர வேறில்லை. 

எங்கும், ராக்கைகளில், நாற்காலிகள் மேல், மேசை மீது, தரைமூலைகளில், அடுக்கடுக்காக அவை காணப்பட்டன.  

இருக்கையில் அமர்ந்து அவர் எழுதிக் கொண்டிருந்த போது இந்த அடைசல், இந்த அலங்கோலம் கண்ணுக்கு இதமளித்தது. படைப்பு தயாராகிறது என்பதை உணர முடிந்தது.  

ஆனால் பிணத்தின் அருகே இது அவலக் காட்சியல்லவோ? சரிகிற இந்த அடுக்குகள் எல்லாம் பழைய புத்தகக் கடைகளில், நடைப்பாதைப் பரப்பல்களில் காற்றாலும் வழிப்போக்கர்களின் விரல்களாலும் புரட்டப்பட்டுத் தொலைந்து போகத் தயாராய் இருப்பதாகத் தோன்றின.

அவரை முத்தமிட்டுவிட்டு அந்த ஜில்லிட்ட மற்றும் கல்லாய் இறுகிவிட்ட நெற்றியின் ஸ்பரிசம் தந்த சோகத்தில் மூழ்கி அவரை நோக்கியபடி நின்றிருந்தேன். திடீரெனக் கதவு திறந்தது. ஓர் ஆள், சுமையால் களைப்புற்ற தோற்றத்தோடு மகிழ்ச்சியுடன் நுழைந்து அச்சகத்திலிருந்து அப்போதுதான் வெளியான புத்தகங்களின் பார்சல் ஒன்றை மேசை மேல்வைத்து, "பஷ்லேன் அனுப்பினார்" என்று கூறினார். 

கட்டிலைப் பார்த்ததும் பின்வாங்கித் தொப்பியை அகற்றிவிட்டு சந்தடியின்றி வெளியேறினார். 

நோயாளி எழுத்தாளரால் பொறுமையிழந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்டு ஒரு மாதத் தாமதத்துடன் பஷ்லேன் அச்சகம் அனுப்பிய பார்சல் உயிர் நீங்கிய பின்பு கிடைத்த நிகழ்ச்சி, மிக அவலமான விதியின் விளையாட்டு. 

பாவம் நண்பர்! அதுதான் அவரது கடைசிப் புத்தகம். அதன்மீது அவர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார். காய்ச்சல் காரணமாய் நடுங்கிக் கொண்டிருந்த விரல்கள் எவ்வளவு அக்கறையுடன் பிழை திருத்தின! முதல் பிரதியைக் கையிலேந்த எவ்வளவு அவசரப்பட்டார்! இறுதி நாட்களில் பேச இயலாத நிலையில் அவருடைய கண்கள் வாயிற்கதவின் மீதே மொய்த்திருந்தன. 

தவிப்பும் எதிர்பார்ப்பும் நிறைந்த அந்தப் பார்வையை அச்சகத்தின் உரிமையாளரும் அச்சுக்கோப்பவரும் கட்டகரும் (பைண்டர்) காண முடிந்திருந்தால் கைகளின் இயக்கமும் அச்சிடலும், பக்கங்கள் புத்தகமாக உருவெடுத்தலும் மிகத் துரிதமாகி ஏற்ற காலத்தில், அதாவது ஒரு நாள் முன்னதாகக் கிடைத்து, இறக்கப்போகிறவர்க்கு மூளையில் குழம்புகிற மற்றும் மங்கத் தொடங்கிவிட்ட தம் கருத்துகளைப் புதுப்புத்தகத்தின் வாசனையிலும் அச்சின் நேர்த்தியிலும் எழுத்துருவில் பார்க்கிற மகிழ்ச்சியைத் தந்திருக்கும். 

நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ள எழுத்தாளனுக்கே கூட அது ஓர் இன்பந்தான்; என்றும் குறைந்துவிடாத இன்பம். தன் நூலின் முதல் பிரதியைத் திறந்து எண்ணங்கள் மூளையில் தெளிவு குறைந்த நிலையில் இருந்தது போல் அல்லாமல் அச்சில் ஆணித்தரமாக எடுப்பாக உள்ளதைக் காணும்போது எவ்வளவு பரவசம்! இள வயது எழுத்தாளனால் சரியாகப் பார்க்க இயலாது. 

மூளை சூரிய ஒளியால் தாக்கப்பட்டிருப்பது போல் எழுத்துகள் மேலுங் கீழும் நீலமாகவும் மஞ்சளாகவும் நீண்டு சிதைந்து தோன்றும். வயது ஆக ஆகப் படைப்புப் பூரிப்பில் கொஞ்சம் வருத்தமும் சேரும்.

சொல்ல விரும்பியதை எல்லாம் சொல்லாமற் போனோமே என்ற வருத்தம். தான் இயற்றியதைக் காட்டிலும் தன்னிடமிருந்தது சிறப்பானது என்றே கருத நேரிடும். தலையிலிருந்து கைவரைக்குமான பயணத்தில் ஏராளமானவை தவறிப்போகின்றன. 

அந்தோ! இந்த மகிழ்ச்சி, இந்த வருத்தம் இவற்றில் எதுவுமே அவர் அடையவில்லை, தம் கடைசிப் புத்தகத்தினால். 

அசைவற்று பாரமாகித் தலையணையில் கிடக்கிற தலையையும் பக்கத்தில் புத்தம் புதிய புத்தகத்தையும் காண்கையில் ஆழ்ந்த துயரம் உண்டாயிற்று. 

கடைகளில் புத்தகம் காட்சிக்கு வைக்கப்படும். அட்டையில் உள்ள ஆசிரியரின் பெயரை வாசகர்கள் படிப்பார்கள்.உடம்புக்கும், உயிருக்கும் உள்ள உறவை இங்கே காணலாம். விறைத்துப் போன இந்த உடலைப் புதைப்பார்கள், மறப்பார்கள்.  

இதிலிருந்து வெளிவந்த புத்தகம் கண்ணுக்குப் புலப்படுகிற உயிர் போல வாழும், இறவாமலே வாழக்கூடும்.



(பிரெஞ்சிலிருந்து தமிழில்:- சொ.ஞானசம்பந்தன்)

Saturday, 4 February 2012

பாடம் - யாருக்கு?




வெண்மதியைப் பெண்பார்க்க அளகேசன், அவனது பெற்றோர். இரண்டு இளைஞர் ஆக ஐவர் மட்டுமே வந்தனர். 

அளகேசனைச் சுட்டிக்காட்டிய அவன் தந்தை , "இவன் என் மகன் அளகேசன்; அவர்கள் இணை பிரியா நண்பர்கள் " என்றார். 

சம்பிரதாயப் பேச்சுக்குப் பின்பு மங்கையர் இருவர் வந்தமர்ந்தனர். " இதுதான் வெண்மதி, அது நெருங்கிய தோழி தடங்கண்ணி " என அறிமுகப்படுத்தினார் அறிவரசன். 

அவர்களின்மீது பாய்ச்சிய முதல் பார்வையிலேயே அளகேசன் திடுக்கிட்டான், ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அவனது நிலையே நண்பர்கள்து நிலையும். 

இவர்களை நோக்கிய வெண்மதிக்கும் தடங்கண்ணிக்கும் அதிர்ச்சிதான்! தங்கள் வெறுப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டனர்.

" தனியே எதுவும் பேச விரும்பினால் பேசலாம் " என்றார் அளகேசனின் தந்தை. 

அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் வெண்மதி, "ஆமாம், பேசவேண்டும் " என உடனடியாகக் கூறினாள். 

இருவரும் பக்கத்து அறையில் அமர்ந்தனர். 

வெண்மதி தொடங்கினாள்:

" என்னை இதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா?" 

"ஊகூம், பார்தததில்லை." 

"பொய் சொல்லாதீர்கள்; போன மாதம் நான் உங்கள் ஊருக்கு வந்தபோது கண்டீர்களே!" 

"இருக்கலாம், நினைவில்லை" 

"பாட்டெல்லாம் பாடினீர்கள்!" 

"அதற்கென்ன? பாட்டுப் பாடுவது தவறா?" 

"தவறா அல்லவா என்பது எந்தப் பாட்டை, எப்போது, யாரிடம், எந்த நோக்கத்தோடு பாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

அவன் பதில் தர இயலாமையால் மௌனியானான். 

வெண்மதி," அன்று நீங்களும் நண்பர்களும் நடந்துகொண்ட விதம் உங்களுடைய அநாரிகக் குணத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்திவிட்டது; ஒழுக்கம் கெட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது" என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டாள். 

விருந்தினர் விடை பெற்றுக்கொண்ட கையோடு அறிவரசனும் வெற்றிச்செல்வியும் மாப்பிள்ளை வீட்டார் பற்றி உயர்வான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். 

முட்டுக்கட்டை போட்டாள் வெண்மதி. 

"எனக்குப் பிடிக்கவில்லை, அப்பா!" 

" எது?"

 "இவனை நான் கட்டிக்கொள்ள மாட்டேன்" 

"ஏன்?" 

"இவன் ஒரு காலிப் பயல்."  

"என்னது? யார் சொன்னது?" 

"இவளைக் கேளுங்கள்." 

தடங்கண்ணி விளக்கினாள்: 

" நாங்கள் மாமல்லபுரம் சுற்றுலா போனபோது இவளையும் என்னையும் கேலி கிண்டல் செய்து, மட்ட ரக சினிமா பாட்டுப் பாடி இந்த மூன்று பேரும் தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள்; தலைவராய்ச் செயல்பட்டவர் மாப்பிள்ளை." 

வெற்றிச்செல்வி விசாரித்தார்: 

" நன்றாய்த் தெரியுமா, கண்ணி? இந்தப் பிள்ளைகள்தான் அவர்கள் என்று உறுதியாகத் தெரியுமா? அவசரப் புத்தியால் ஆள் மாறாட்டமாகி மங்கல காரியம் நின்றுவிடக் கூடாது" 

"அம்மா, இவர்கள்தான் அந்தப் பொறுக்கிகள் என்பதற்கு அய்யமே இல்லை" என ஆத்திரத்தோடு சொன்னாள் வெண்மதி. 

" ஏதோ, வயதுக் கோளாறு; அதிகமாய் சினிமா பார்க்கிறதாலே வருகிற சின்ன புத்தி. திருமணத்துக்குப் பின்னாலே எல்லாம் சரியாகிவிடும், வெண்மதி. இந்த மாதிரி நல்ல இடம் அமைவது கஷ்டம்."

"இடத்தைக் காட்டிலும் மனிதர் தானே முக்கியம், அம்மா? அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட அவமானமும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவனுடைய பேச்சும் நடத்தையும் அவ்வளவு கீழ்த்தரம். இவனாவது, திருந்துவதாவது? வேண்டாம் விஷப் பரீக்ஷை. இவனுடன் வாழ நான் ஒருகாலும் சம்மதிக்க மாடேன்."

அறிவரசன் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். சிந்தனையில் முற்போக்கும் செயலில் துணிச்சலும் பிறரின் நியாயமான கருத்தை ஏற்கும் மனப் பக்குவமும் உடைய அவருக்கு மகளின் கூற்று சரிதான் என்று பட்டதால், "வேறு வரன் பார்ப்போம்" எனச் சுருக்கமாய்ச் சொல்லி விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். 

அடுத்த மூன்று நாளில் அளகேசன் சரியாய் உண்ணாமல் உறங்காமல் சங்கடப்பட்டான். வெளியே தலை காட்டத் துணிவில்லை. "அவமானப்படுத்திவிட்டாளே!" என எண்ணி எண்ணிக் குமைந்தான். திரௌபதி தன்னை எள்ளி நகையாடியதை நினைத்து நினைத்துத் துரியோதனன் இப்படித் தான் பொருமியிருப்பான் போலும். 

"பழி வாங்கியே தீரவேண்டும், அதுவே என் மனப் புண்ணுக்கு மருந்து" என்று முடிவு செய்தான். நண்பர் இருவரிடமும் தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்டான். அவனது நிலையை நன்கு புரிந்துகொண்ட அவர்கள் அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கி வீடு திரும்புகையில் அடித்து உதைத்துத் தக்க பாடம் புகட்டுவதாய் உறுதி கூறி அவனுக்கு ஆறுதல் தந்தனர். 

அவன் எச்சரித்தான்: "அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; என்ன இருந்தாலும் பெண், வாழ வேண்டியவள்" 

நடமாட்டம் குறைவாய் உள்ள தெரு வொன்றில் தக்க இடம் தேர்ந்து காத்திருந்தனர். 

சற்று நேரத்தில், "அதோ வருகிறாள்" எனப் பரபரப்புடன் கூறினான் ஒருவன். 

ஆம், வெண்மதி வந்துகொண்டிருந்தாள், இரு வீலரில். 

மடக்கி அடிக்கத் தொடங்கியதும் வண்டியுடன் விழுந்தவள் சுதாரித்துக்கொண்டு அடுத்த நொடியில் எழுந்துவிட்டாள். அவளது கை கால்கள் இயந்திர கதியில் இயங்கி மிக வலுவான எதிர்த்தாக்குதலைத் தொடுத்தன. இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திடுக்கிட்டுத் தட்டுத் தடுமாறிச் சிறிது நேரம் சமாளித்துப் பார்த்துவிட்டுத் தலை தெறிக்க ஓட்டமெடுத்தனர். 

கற்பிக்க வந்தோர் கற்பிக்கப்பட்டனர்! 

செய்தி கேள்விப்பட்டுத் திரண்டு வந்த அக்கம்பக்கத்தாரிடம் வெற்றிச்செல்வி விளக்கினார்:

" கராத்தேயில் கறுப்பு வார் வாங்கியிருக்கிறாள். எட்டாம் வகுப்பு படித்தபோதே கற்க ஆசைப்பட்டாள். பெண்பிள்ளைக்கு இதெல்லாம் ஏன் என்று நாங்கள் கேட்டதற்கு, நாளைக்கு என்னை ஒருவனுக்குக் கட்டிக்கொடுப்பீர்களே. அவன் குடித்துவிட்டு அடிக்க வந்தால் தடுத்துக் கொள்ள வேண்டுமே! அதற்குத்தான் என்று அவள் சொன்னபோது எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் சின்ன வயதில் எவ்வளவு முன் யோசனை என்று வியந்து புகழ்ந்து விருப்பத்தை நிறைவு செய்தோம். 

அவள் எண்ணப்படியே கராத்தே கை கொடுத்தது!




இரு குறள்



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள் 314) 

பொருள்: நமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல் அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்தலே. 

பதிலுக்கு நாம் இன்னா செய்யாமல் நல்லது செய்தால், "ஐயோ! இப்படிப்பட்ட குணவானுக்குத் தீங்கு இழைத்தோமே" என்றெண்ணி அவர் நாணுவார். அதுவே அவருக்குத் தக்க தண்டனை. அத்தண்டனையால் திருந்துவார்; இனிமேல் இன்னா செய்ய எண்ணார். 

******* 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (குறள் 987) 

பொருள்: கெடுதல் செய்தவர்க்கும் நல்லது செய்யாவிட்டால் என்ன பயன் சான்றாண்மையால்? 

இந்தக் குறளும் தீமைக்கு நன்மை செய் என்றுதான் போதிக்கிறது. அப்படியானால் இரண்டு குறளும் ஒரே கருத்து உடையவைதானா? 

அல்ல, அல்ல. 

இரண்டாம் குறள் சான்றோர்க்குச் சொல்லப்பட்டது. எல்லா நற்குணங்களும் நிறைந்தவர் சான்றோர். இன்னா செய்தார்க்கும் இனியன செய்யாமற்போனால் அவர்க்கு இழுக்கு ஏற்படும். பள்ளம் நோக்கிப் பாய்தல் நீருக்கும், வானம் நோக்கி ஓங்குதல் நெருப்புக்கும் இயல்பு போல நன்மை புரிதல் சான்றோர்க்கு இயல்பு. அதனால் பாதகம் அடைந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார். இந்தக் குறளில் தண்டித்தல் என்ற எண்ணத்துக்கு இடமில்லை. முதற்குறளோ தண்டனை பற்றிப் பேசுகிறது. அதை நிறைவேற்றச் சிறப்பான வழியைக் காட்டுகிறது. இக்குறள் பெரும்பான்மையரான சாதாரணர்க்குச் சொன்னது.  

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். 'அவர் நாண' என்ற தொடர் அவர் வெட்கப்படவேண்டும், தவறு செய்துவிட்டோம் என்று நாணக்கூடியவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயல்பாக நல்லவர்தான்; ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்றபடி ஏதோ குணங்கெட்டுப் போய்க் கெடுதி இழைத்துவிட்டார் என்றால்தான் நாம் பதிலுக்கு நன்மை புரியலாம். சிலர் நம் பெருந்தன்மையைப் பலவீனம் என்று கணித்து மேன்மேலும் இன்னா செய்ய முயல்வர். இவர்களுக்குச் சட்டப்படியோ, வேறு தக்க நடவடிக்கையாலோ பதிலடி தர வேண்டும். 

நல்லது செய்வதிலும் தவறுண்டு, அவரவர் குணத்தை அறிந்து செய்யாவிடில் என்று வள்ளுவர் எச்சரிக்கிறாரோ! 

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. (குறள் 469)


இப்போது தெளிவாகத் தெரிகிறது, தீமைக்கு நன்மை என்பது சான்றோர் வழி என்பதும், அவ்வழியை மற்றவர் கண்மூடித் தனமாகப் பின்பற்றக்கூடாது என்பதும்.


(நிலாச்சாரலில் வெளிவந்த என் கட்டுரை)

Friday, 3 February 2012

இத்தாலியில் ஓர் இரவு



( போல் லூய் குரியே என்ற பிரஞ்சுக்காரர் - 18 ஆம் நூற்றாண்டு - எழுதிய சிறு கதை ; நான் மொழிபெயர்த்து ஏப்ரல் 94 மஞ்சரி இதழில் வெளிவந்தது )


ஒரு தடவை நான் இத்தாலியின் மலைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தேன் . அது கொடியவர் வாழும் இடம் என்பதும் அவர்கள் யாரையும் நேசிப்பதில்லை என்பதும் என் நம்பிக்கை . சிறப்பாகப் பிரஞ்சுக்காரர்களை அவர்களுக்குத் துளியும் பிடிக்காது. இதற்கான காரணத்தைச் சொல்வதென்றால் மிக விரியும் . எங்களைப் பிறவிப் பகைவர்களாக அவர்கள் கருதுகிறார்கள் , அவர்களிடம் மாட்டிக்கொண்டால் எங்களுக்குப் பெருந்துன்பம் ஏற்படும் என்று சொல்வது போதும் .  

எனக்குத் துணை ஓர் இளைஞன் . ஆபத்து மிக்க மலைப் பதையில் எங்கள் குதிரைகள் நடக்கப் பெரிதும் இடர்ப்பட்டன . முன்னால் போய்க்கொண்டிருந்த என் கூட்டாளிக்கு வசதியாயும் குறுக்கு வழியாயும் தோன்றிய ஓர் ஒற்றையடிப் பாதை எங்களை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. 

தவறு என்னுடையது தான் ; இருபது வயதுப் பையனை நான் நம்பினேனே ! காடுகளுக்கு இடையில் பகல் முழுதும் வழியைத் தேடினோம் ; தேடித் தேடியே மேன்மேலும் வழி தவறிப் போனோம் . இரவும் வந்துவிட்டது , நாங்கள் ஓர் இருண்ட வீட்டை அணுகியபோது . 

எங்களுக்குச் சந்தேகந்தான் ; வேறு வழி ? நுழைந்தோம் .  

அங்கே கரி தயாரிப்பவர்களின் குடும்பத்தினர் உண்டுகொண்டிருந்தனர் ; எங்களைக் கண்ட உடனே உண்ண அழைத்தனர் . 

என் இளம் கூட்டாளி உடனே ஒப்புக்கொண்டுவிட்டான் . நாங்கள் சாப்பிட்டோம் , குடித்தோம் . இல்லை , அவன் உண்டான் , குடித்தான் .  

நானோ அந்த இடத்தையும் வீட்டாரின் தோற்றத்தையும் ஆராய்ந்துகொண்டிருந்தேன் .  

அவர்கள் கரி தயாரிப்பவர்கள் போலத்தான் இருந்தார்கள் ; ஐயம் இல்லை ; ஆனால் அந்த வீடு ! அதை ஆயுதத் தொழிற்சாலை என்றே கூறலாம் ; எங்கே பார்த்தாலும் துப்பாக்கி , ரிவாலவர் வாள் , கத்தி , பிச்சுவா , இவை எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. என்னையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன் . 

என் தோழனோ நேர் மாற்றம் : பேச்சும் சிரிப்பும் , அட்டகாசம் ! அந்தக் குடும்பத்தில் ஒட்டிக்கொண்டான் . அவன் மடத்தனமாய் ( இதை நான் எதிர்பார்த்திருக்க வேண்டும் ) நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்பதைச் சொன்னதோடு எங்கே போகிறோம் , நாங்கள் யார் என்பதையுங்கூட உளறிவிட்டான் . 

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் : எங்களுடைய பிறவிப் பகைவரின் நடுவில் , தனியாய் , திக்குத் தெரியாத நிலையில் , மனித உதவி எதுவுங்கிட்ட இயலாத் தொலைவிலே ! 

போதாக் குறைக்கு அவன் தன்னைப் பணக்காரன் போலக் காட்டிக்கொண்டு , உணவுக்கான தொகையைத் தருவதுடன் மறு நாள் வழிகாட்டியாய் வருவோர்க்கு விருப்பமான எதையும் கொடுப்பதாகவும் வாக்களித்தான் . 

இறுதியில் தன் கைப்பை பற்றிப் பேசத் தொடங்கி அதன்மீது மிக்க கவனம் செலுத்தும்படியும் தன் தலை மாட்டில் அதை வைக்குமாறும் கேட்டுக்கொண்டான் ! அதையே தலையணையாக வைத்துக்கொள்வானாம் ! 

! இளைஞர்களே ! இளைஞர்களே ! உங்கள் இளமை எவ்வளவு பரிதாபத்துக்கு உரியது ! அவன் சொன்னதைக் கேட்டவர்கள் அந்தப் பையில் அரச முடியின் வைரங்களை நாங்கள் எடுத்து வந்திருக்கிறோம் என்றே நம்பியிருப்பார்கள் ! 

ஆனால் அந்தப் பையின்மீது அவன் அவ்வளவு அக்கறை செலுத்தியதற்கான காரணம் அதில் அவனுடைய காதலியின் கடிதங்கள் இருந்தமையே . 

உண்ட பின்பு வீட்டுக்காரர்கள் கீழறையில் படுத்தார்கள் ; நாங்கள் சாப்பிட்ட மாடி அறையில் ஒரு பரண் இருந்தது ; 7 அல்லது 8 அடி உயரத்தில் இடம் பெற்றிருந்த அதில் ஏணி மூலம் ஏற வேண்டும் . அது ஒரு வகைக் கூடு என்றே சொல்ல வேண்டும் ; கூரையைத் தாங்கும் சாத்துகளுக்கு அடியில் மண்டி போட்டு அதில் நுழைய வேண்டும் .. உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப் பட்டிருந்த அந்த இடத்தில்தான் எங்கள் படுக்கை . 

என் தோழன் விலை மதிப்பற்ற தன் பையைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கினான் . நானோ ? விழித்திருக்க முடிவு செய்து கொண்டு அவன் அருகில் அமர்ந்தேன் . 

இரவு அமைதியாய்க் கழிந்தது . என்னைப் பீடித்திருந்த அச்சம் நீங்கத் தொடங்கியது .  

பொழுது விடியப் போகிறது என்று எனக்குத் தோன்றிய நேரத்தில் வீட்டுக்காரரும் அவரது மனைவியும் தர்க்கம் செய்வதை உணர்ந்தேன் ; காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கவனித்தேன். 

கணவர் வினவியது தெளிவாய்க் காதில் விழுந்தது : " சரி , முடிவாய் என்னதான் சொல்கிறாய் ? இரண்டு உயிரையும் போக்கிட வேண்டுமா ? " 

"ஆமாம் " என்றார் மனைவி . 

பின்பு ஒன்றுமே கேட்கவில்லை . 

எனக்கு மூச்சு திணறியது ; உடல் முழுதும் சலவைக் கல் போல் குளிர்ந்தது ; நான் உயிரோடு இருந்தேனா , செத்துவிட்டேனா என்பது பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்காது . 

நிராயுத பாணியான நாங்கள் இருவர் ஏராள ஆயுதங்களைக் கொண்ட பத்துப் பதினைந்து பேரை எதிர்ப்பதா ? என் தோழனோ களைத்துப் போய்த் தூங்கிக்கொண்டிருந்தான் , பிணம் போல ! அவனைக் கூப்பிடுவதா , கூச்சலிடுவதா ? துணிச்சல் இல்லை . தனியாய்த் தப்பிப்பதா ? இயலாது : சன்னல் சிறியது ; கீழே இரண்டு நாய்கள் ஓநாய் மாதிரி ஊளையிட்டுக் கொண்டிருந்தன . 

கால் மணி நேரம் கால் யுகமாய்க் கழிந்த பின்பு , மாடிப் படியில் காலடியோசை கேட்டது ; அறைக் கதவின் விரிசல் வழியாய்ப் பார்த்தபோது வீட்டுக்காரர் தெரிந்தார் . ஒரு கையில் விளக்கு மறு கையில் பெரிய கத்தி .முன்னால் கணவரும் பின்னால் மனைவியுமாய் ஏறி வந்தனர் . 

அவர் கதவைத் திறந்தார் ; அறைக்குள் நுழைவதற்கு முனபு அவர் கீழே வைத்த விளக்கை மனைவி எடுத்துக்கொண்டார் . காலணிகளைக் கழற்றிவிட்டு அவர் நுழைந்தபோது வெளியே நின்ற மனைவி , கையால் விளக்கு வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு , மெல்லிய குரலில் , " மெதுவாய் , மெதுவாய்ப் போ " என்றார். 

ஏணியை நெருங்கிய அவர் கத்தியை வாயில் கௌவியபடி ஏறி வந்தார்; கழுத்துப் பகுதியை நீட்டிக்கொண்டு படுத்திருந்த இளைஞனின் அருகில் வந்து , ஒரு கையால் கத்தியை எடுத்து , மறு கையால் , ... ஐயோ ! 

சாத்தில் தொங்கிக்கொண்டிருந்த பன்றி இறைச்சியைப் பிடித்து ஒரு துண்டை அறுத்துக்கொண்டு இறங்கிப் போய்விட்டார் . கதவு மூடியது ; விளக்கும் போய்விட்டது .  

தனியாய் நான் சிந்தனையில் ஆழ்ந்தேன் . 

பொழுது புலர்ந்ததும் குடும்பத்தார் யாவரும் வந்து எங்களை அழைத்தனர் . 

காலை உணவு மிகத் தூய்மையாய் , மிகச் சுவையாய் வழங்கப்பட்டது ; இரண்டு முழுச் சேவலையுங் கூடச் சமைத்து வைத்திருந்தனர் : ஒன்று உண்ணவாம் , மற்றது எடுத்துப் போகவாம் . அவற்றைப் பார்த்தபோது தான், " இரண்டு உயிரையும் போக்கிட வேண்டுமா ? " என்ற பயங்கரச் சொற்களின் பொருள் எனக்குப் புரிந்தது .