வெண்மதியைப்
பெண்பார்க்க அளகேசன், அவனது பெற்றோர். இரண்டு இளைஞர் ஆக ஐவர் மட்டுமே
வந்தனர்.
அளகேசனைச்
சுட்டிக்காட்டிய அவன் தந்தை , "இவன் என் மகன் அளகேசன்;
அவர்கள் இணை பிரியா
நண்பர்கள் " என்றார்.
சம்பிரதாயப்
பேச்சுக்குப் பின்பு மங்கையர் இருவர் வந்தமர்ந்தனர். " இதுதான் வெண்மதி, அது நெருங்கிய
தோழி தடங்கண்ணி " என அறிமுகப்படுத்தினார் அறிவரசன்.
அவர்களின்மீது
பாய்ச்சிய முதல் பார்வையிலேயே அளகேசன் திடுக்கிட்டான், ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட
அவனது நிலையே நண்பர்கள்து நிலையும்.
இவர்களை நோக்கிய
வெண்மதிக்கும் தடங்கண்ணிக்கும் அதிர்ச்சிதான்! தங்கள் வெறுப்பைக் கஷ்டப்பட்டு
அடக்கிக்கொண்டனர்.
" தனியே எதுவும் பேச விரும்பினால் பேசலாம் "
என்றார் அளகேசனின் தந்தை.
அந்த நேரத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் வெண்மதி, "ஆமாம், பேசவேண்டும் " என உடனடியாகக் கூறினாள்.
இருவரும்
பக்கத்து அறையில் அமர்ந்தனர்.
வெண்மதி
தொடங்கினாள்:
" என்னை இதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா?"
"ஊகூம், பார்தததில்லை."
"பொய் சொல்லாதீர்கள்; போன மாதம் நான் உங்கள் ஊருக்கு வந்தபோது
கண்டீர்களே!"
"இருக்கலாம், நினைவில்லை"
"பாட்டெல்லாம் பாடினீர்கள்!"
"அதற்கென்ன? பாட்டுப் பாடுவது தவறா?"
"தவறா அல்லவா என்பது எந்தப் பாட்டை, எப்போது, யாரிடம், எந்த நோக்கத்தோடு
பாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
அவன் பதில் தர
இயலாமையால் மௌனியானான்.
வெண்மதி," அன்று நீங்களும்
நண்பர்களும் நடந்துகொண்ட விதம் உங்களுடைய அநாரிகக் குணத்தை அப்பட்டமாய்
வெளிப்படுத்திவிட்டது; ஒழுக்கம் கெட்டவர்களை எனக்கு அறவே
பிடிக்காது" என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.
விருந்தினர் விடை
பெற்றுக்கொண்ட கையோடு அறிவரசனும் வெற்றிச்செல்வியும் மாப்பிள்ளை வீட்டார் பற்றி
உயர்வான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர்.
முட்டுக்கட்டை
போட்டாள் வெண்மதி.
"எனக்குப் பிடிக்கவில்லை, அப்பா!"
" எது?"
"ஏன்?"
"இவன் ஒரு காலிப் பயல்."
"என்னது? யார் சொன்னது?"
"இவளைக் கேளுங்கள்."
தடங்கண்ணி
விளக்கினாள்:
" நாங்கள் மாமல்லபுரம் சுற்றுலா போனபோது இவளையும்
என்னையும் கேலி கிண்டல் செய்து, மட்ட ரக சினிமா பாட்டுப் பாடி இந்த மூன்று
பேரும் தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள்; தலைவராய்ச் செயல்பட்டவர் மாப்பிள்ளை."
வெற்றிச்செல்வி
விசாரித்தார்:
" நன்றாய்த் தெரியுமா, கண்ணி? இந்தப் பிள்ளைகள்தான் அவர்கள் என்று
உறுதியாகத் தெரியுமா? அவசரப் புத்தியால் ஆள் மாறாட்டமாகி மங்கல
காரியம் நின்றுவிடக் கூடாது"
"அம்மா, இவர்கள்தான் அந்தப் பொறுக்கிகள் என்பதற்கு
அய்யமே இல்லை" என ஆத்திரத்தோடு சொன்னாள் வெண்மதி.
" ஏதோ, வயதுக் கோளாறு; அதிகமாய் சினிமா பார்க்கிறதாலே வருகிற சின்ன
புத்தி. திருமணத்துக்குப் பின்னாலே எல்லாம் சரியாகிவிடும்,
வெண்மதி. இந்த மாதிரி
நல்ல இடம் அமைவது கஷ்டம்."
"இடத்தைக் காட்டிலும் மனிதர் தானே முக்கியம், அம்மா? அன்றைக்கு எனக்கு
ஏற்பட்ட அவமானமும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவனுடைய பேச்சும் நடத்தையும்
அவ்வளவு கீழ்த்தரம். இவனாவது, திருந்துவதாவது? வேண்டாம் விஷப் பரீக்ஷை. இவனுடன் வாழ நான்
ஒருகாலும் சம்மதிக்க மாடேன்."
அறிவரசன்
அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். சிந்தனையில் முற்போக்கும் செயலில்
துணிச்சலும் பிறரின் நியாயமான கருத்தை ஏற்கும் மனப் பக்குவமும் உடைய அவருக்கு
மகளின் கூற்று சரிதான் என்று பட்டதால், "வேறு வரன் பார்ப்போம்" எனச் சுருக்கமாய்ச்
சொல்லி விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
அடுத்த மூன்று
நாளில் அளகேசன் சரியாய் உண்ணாமல் உறங்காமல் சங்கடப்பட்டான். வெளியே தலை காட்டத்
துணிவில்லை. "அவமானப்படுத்திவிட்டாளே!" என எண்ணி எண்ணிக் குமைந்தான்.
திரௌபதி தன்னை எள்ளி நகையாடியதை நினைத்து நினைத்துத் துரியோதனன் இப்படித் தான்
பொருமியிருப்பான் போலும்.
"பழி வாங்கியே தீரவேண்டும், அதுவே என் மனப்
புண்ணுக்கு மருந்து" என்று முடிவு செய்தான். நண்பர் இருவரிடமும் தன்
உள்ளக்கிடக்கையை வெளியிட்டான். அவனது நிலையை நன்கு புரிந்துகொண்ட அவர்கள்
அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கி வீடு திரும்புகையில் அடித்து உதைத்துத் தக்க
பாடம் புகட்டுவதாய் உறுதி கூறி அவனுக்கு ஆறுதல் தந்தனர்.
அவன்
எச்சரித்தான்: "அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; என்ன இருந்தாலும் பெண்,
வாழ வேண்டியவள்"
நடமாட்டம்
குறைவாய் உள்ள தெரு வொன்றில் தக்க இடம் தேர்ந்து காத்திருந்தனர்.
சற்று நேரத்தில், "அதோ
வருகிறாள்" எனப் பரபரப்புடன் கூறினான் ஒருவன்.
ஆம், வெண்மதி
வந்துகொண்டிருந்தாள், இரு வீலரில்.
மடக்கி அடிக்கத்
தொடங்கியதும் வண்டியுடன் விழுந்தவள் சுதாரித்துக்கொண்டு அடுத்த நொடியில்
எழுந்துவிட்டாள். அவளது கை கால்கள் இயந்திர கதியில் இயங்கி மிக வலுவான
எதிர்த்தாக்குதலைத் தொடுத்தன. இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திடுக்கிட்டுத்
தட்டுத் தடுமாறிச் சிறிது நேரம் சமாளித்துப் பார்த்துவிட்டுத் தலை தெறிக்க
ஓட்டமெடுத்தனர்.
கற்பிக்க வந்தோர்
கற்பிக்கப்பட்டனர்!
செய்தி
கேள்விப்பட்டுத் திரண்டு வந்த அக்கம்பக்கத்தாரிடம் வெற்றிச்செல்வி விளக்கினார்:
" கராத்தேயில் கறுப்பு வார்
வாங்கியிருக்கிறாள். எட்டாம் வகுப்பு படித்தபோதே கற்க ஆசைப்பட்டாள். பெண்பிள்ளைக்கு
இதெல்லாம் ஏன் என்று நாங்கள் கேட்டதற்கு, நாளைக்கு என்னை ஒருவனுக்குக் கட்டிக்கொடுப்பீர்களே.
அவன் குடித்துவிட்டு அடிக்க வந்தால் தடுத்துக் கொள்ள வேண்டுமே! அதற்குத்தான் என்று
அவள் சொன்னபோது எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் சின்ன வயதில் எவ்வளவு
முன் யோசனை என்று வியந்து புகழ்ந்து விருப்பத்தை நிறைவு செய்தோம்.
அவள் எண்ணப்படியே
கராத்தே கை கொடுத்தது!
வெண்மதியின் முன்னெச்சரிக்கை உணர்வும் பெற்றோரின் முற்போக்கு எண்ணமும் மிகவும் பாராட்டுக்குரியது. அளகேசனுக்கும் அவன் நண்பர்களுக்கும் சரியான பாடம்தான். இனி எந்தப் பெண்களிடமும் வாலாட்டுமுன் கொஞ்சமாவது யோசிப்பார்கள். காலத்துக்கேற்ற நல்ல கதை.
ReplyDeleteஎன்னுடைய இந்தப்பதிவுக்கு வருகை தரும்படி தங்களை அன்புடன் அழைக்கிறேன். நன்றி.
ReplyDeletehttp://geethamanjari.blogspot.com.au/2012/02/blog-post.html