'கடைசிப் புத்தகம்'
(அல்போன்சு தொதே - ALPHONSE DAUDET (1840 - 1897)
"இறந்து விட்டார்"
யாரோ சொன்னார்
மாடிப்படியில்.
அந்தச் சோகச்
செய்தி வரும் என்பதைப் பல நாளாகவே உணர்ந்திருந்தேன். எந்த நிமிடமும் காதில் விழப்
போகிறது என்று எனக்குத் தெரிந்து தான் இருந்தது. எனினும் திடுக்கிட வைத்தது, எதிர்பாராத
ஒன்றைப் போல.
கனத்த இதயமும்
நடுங்கும் உதடுகளுமாய் அந்த எழுத்தாளரின் எளிய இல்லத்தில் நுழைந்தேன். அலுவலறை
தான் அங்கே நிறைய இடத்தை ஆக்கிரமித்திருந்தது. எல்லாச் சுகங்களையும் வீட்டின்
எல்லா அழகுகளையும் 'படிப்பு, படிப்பு' என்ற ஒன்று விரட்டிவிட்டிருந்தது.
மிகத் தாழ்வான
சிறு இரும்புக் கட்டிலில் உடல் கிடந்தது. தாள்கள் குவிந்த மேசையும்
பாதிப்பக்கத்தில் முடிந்து போன அவரது பெரிய எழுத்தும் மைப்புட்டியில் நின்றிருந்த
எழுதுகோலும் சான்றளித்தன, எவ்வளவு திடீரென்று சாவு அவரைத் தாக்கிவிட்டது
என்பதற்கு.
தலைமாட்டில் ஓக்
என்ற மரத்திற் செய்த உயரமான அலமாரியொன்று கையெழுத்துப் பிரதிகளும் ஏதேதோ தாள்களும்
பிதுங்கிய நிலையில் பாதி திறந்திருந்தது. சுற்றுமுற்றும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்களைத்
தவிர வேறில்லை.
எங்கும், ராக்கைகளில், நாற்காலிகள் மேல், மேசை மீது, தரைமூலைகளில், அடுக்கடுக்காக
அவை காணப்பட்டன.
இருக்கையில்
அமர்ந்து அவர் எழுதிக் கொண்டிருந்த போது இந்த அடைசல், இந்த அலங்கோலம் கண்ணுக்கு இதமளித்தது. படைப்பு
தயாராகிறது என்பதை உணர முடிந்தது.
ஆனால் பிணத்தின்
அருகே இது அவலக் காட்சியல்லவோ? சரிகிற இந்த அடுக்குகள் எல்லாம் பழைய புத்தகக்
கடைகளில், நடைப்பாதைப்
பரப்பல்களில் காற்றாலும் வழிப்போக்கர்களின் விரல்களாலும் புரட்டப்பட்டுத் தொலைந்து
போகத் தயாராய் இருப்பதாகத் தோன்றின.
அவரை
முத்தமிட்டுவிட்டு அந்த ஜில்லிட்ட மற்றும் கல்லாய் இறுகிவிட்ட நெற்றியின் ஸ்பரிசம்
தந்த சோகத்தில் மூழ்கி அவரை நோக்கியபடி நின்றிருந்தேன். திடீரெனக் கதவு திறந்தது.
ஓர் ஆள், சுமையால்
களைப்புற்ற தோற்றத்தோடு மகிழ்ச்சியுடன் நுழைந்து அச்சகத்திலிருந்து அப்போதுதான்
வெளியான புத்தகங்களின் பார்சல் ஒன்றை மேசை மேல்வைத்து,
"பஷ்லேன்
அனுப்பினார்" என்று கூறினார்.
கட்டிலைப்
பார்த்ததும் பின்வாங்கித் தொப்பியை அகற்றிவிட்டு சந்தடியின்றி வெளியேறினார்.
நோயாளி
எழுத்தாளரால் பொறுமையிழந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்டு ஒரு மாதத் தாமதத்துடன்
பஷ்லேன் அச்சகம் அனுப்பிய பார்சல் உயிர் நீங்கிய பின்பு கிடைத்த நிகழ்ச்சி, மிக அவலமான
விதியின் விளையாட்டு.
பாவம் நண்பர்!
அதுதான் அவரது கடைசிப் புத்தகம். அதன்மீது அவர் பெருத்த நம்பிக்கை வைத்திருந்தார்.
காய்ச்சல் காரணமாய் நடுங்கிக் கொண்டிருந்த விரல்கள் எவ்வளவு அக்கறையுடன் பிழை
திருத்தின! முதல் பிரதியைக் கையிலேந்த எவ்வளவு அவசரப்பட்டார்! இறுதி நாட்களில் பேச
இயலாத நிலையில் அவருடைய கண்கள் வாயிற்கதவின் மீதே மொய்த்திருந்தன.
தவிப்பும்
எதிர்பார்ப்பும் நிறைந்த அந்தப் பார்வையை அச்சகத்தின் உரிமையாளரும்
அச்சுக்கோப்பவரும் கட்டகரும் (பைண்டர்) காண முடிந்திருந்தால் கைகளின் இயக்கமும்
அச்சிடலும், பக்கங்கள் புத்தகமாக உருவெடுத்தலும் மிகத் துரிதமாகி ஏற்ற காலத்தில், அதாவது ஒரு நாள்
முன்னதாகக் கிடைத்து, இறக்கப்போகிறவர்க்கு மூளையில் குழம்புகிற
மற்றும் மங்கத் தொடங்கிவிட்ட தம் கருத்துகளைப் புதுப்புத்தகத்தின் வாசனையிலும்
அச்சின் நேர்த்தியிலும் எழுத்துருவில் பார்க்கிற மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.
நல்ல ஆரோக்கிய
நிலையில் உள்ள எழுத்தாளனுக்கே கூட அது ஓர் இன்பந்தான்; என்றும் குறைந்துவிடாத இன்பம். தன் நூலின்
முதல் பிரதியைத் திறந்து எண்ணங்கள் மூளையில் தெளிவு குறைந்த நிலையில் இருந்தது
போல் அல்லாமல் அச்சில் ஆணித்தரமாக எடுப்பாக உள்ளதைக் காணும்போது எவ்வளவு பரவசம்!
இள வயது எழுத்தாளனால் சரியாகப் பார்க்க இயலாது.
மூளை சூரிய
ஒளியால் தாக்கப்பட்டிருப்பது போல் எழுத்துகள் மேலுங் கீழும் நீலமாகவும்
மஞ்சளாகவும் நீண்டு சிதைந்து தோன்றும். வயது ஆக ஆகப் படைப்புப் பூரிப்பில் கொஞ்சம்
வருத்தமும் சேரும்.
சொல்ல
விரும்பியதை எல்லாம் சொல்லாமற் போனோமே என்ற வருத்தம். தான் இயற்றியதைக் காட்டிலும்
தன்னிடமிருந்தது சிறப்பானது என்றே கருத நேரிடும். தலையிலிருந்து கைவரைக்குமான
பயணத்தில் ஏராளமானவை தவறிப்போகின்றன.
அந்தோ! இந்த
மகிழ்ச்சி, இந்த வருத்தம் இவற்றில் எதுவுமே அவர் அடையவில்லை, தம் கடைசிப் புத்தகத்தினால்.
அசைவற்று
பாரமாகித் தலையணையில் கிடக்கிற தலையையும் பக்கத்தில் புத்தம் புதிய புத்தகத்தையும்
காண்கையில் ஆழ்ந்த துயரம் உண்டாயிற்று.
கடைகளில்
புத்தகம் காட்சிக்கு வைக்கப்படும். அட்டையில் உள்ள ஆசிரியரின் பெயரை வாசகர்கள்
படிப்பார்கள்.உடம்புக்கும், உயிருக்கும் உள்ள உறவை இங்கே காணலாம்.
விறைத்துப் போன இந்த உடலைப் புதைப்பார்கள், மறப்பார்கள்.
இதிலிருந்து
வெளிவந்த புத்தகம் கண்ணுக்குப் புலப்படுகிற உயிர் போல வாழும், இறவாமலே
வாழக்கூடும்.
(பிரெஞ்சிலிருந்து தமிழில்:- சொ.ஞானசம்பந்தன்)
ஒரு முதிய எழுத்தாளரின் கடைசி ஆசையைக் கண்கூடாகக் காட்டிய வர்ணனைகளும் உணர்வுகளின் வெளிப்பாடும் கதையோடு மனத்தைக் கட்டிப்போட்டுவிட்டன. காலந்தாழ்த்தி வெளியான அப்புத்தகத்துக்கான உழைப்பு அதன் பலனைக் காணுமுன்பே கண்மறைந்த அவலம் மனத்தை உருக்குவதாக உள்ளது. தேர்ந்த மொழிபெயர்ப்பும் இக்கதையின் பெரும்பலம். தொடரட்டும் தங்கள் தமிழ்த்தொண்டு.
ReplyDelete