Saturday, 4 February 2012

இரு குறள்



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள் 314) 

பொருள்: நமக்குத் தீமை செய்தவரைத் தண்டித்தல் அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மை செய்தலே. 

பதிலுக்கு நாம் இன்னா செய்யாமல் நல்லது செய்தால், "ஐயோ! இப்படிப்பட்ட குணவானுக்குத் தீங்கு இழைத்தோமே" என்றெண்ணி அவர் நாணுவார். அதுவே அவருக்குத் தக்க தண்டனை. அத்தண்டனையால் திருந்துவார்; இனிமேல் இன்னா செய்ய எண்ணார். 

******* 

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. (குறள் 987) 

பொருள்: கெடுதல் செய்தவர்க்கும் நல்லது செய்யாவிட்டால் என்ன பயன் சான்றாண்மையால்? 

இந்தக் குறளும் தீமைக்கு நன்மை செய் என்றுதான் போதிக்கிறது. அப்படியானால் இரண்டு குறளும் ஒரே கருத்து உடையவைதானா? 

அல்ல, அல்ல. 

இரண்டாம் குறள் சான்றோர்க்குச் சொல்லப்பட்டது. எல்லா நற்குணங்களும் நிறைந்தவர் சான்றோர். இன்னா செய்தார்க்கும் இனியன செய்யாமற்போனால் அவர்க்கு இழுக்கு ஏற்படும். பள்ளம் நோக்கிப் பாய்தல் நீருக்கும், வானம் நோக்கி ஓங்குதல் நெருப்புக்கும் இயல்பு போல நன்மை புரிதல் சான்றோர்க்கு இயல்பு. அதனால் பாதகம் அடைந்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார். இந்தக் குறளில் தண்டித்தல் என்ற எண்ணத்துக்கு இடமில்லை. முதற்குறளோ தண்டனை பற்றிப் பேசுகிறது. அதை நிறைவேற்றச் சிறப்பான வழியைக் காட்டுகிறது. இக்குறள் பெரும்பான்மையரான சாதாரணர்க்குச் சொன்னது.  

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். 'அவர் நாண' என்ற தொடர் அவர் வெட்கப்படவேண்டும், தவறு செய்துவிட்டோம் என்று நாணக்கூடியவராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனையைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயல்பாக நல்லவர்தான்; ஆனால், யானைக்கும் அடி சறுக்கும் என்றபடி ஏதோ குணங்கெட்டுப் போய்க் கெடுதி இழைத்துவிட்டார் என்றால்தான் நாம் பதிலுக்கு நன்மை புரியலாம். சிலர் நம் பெருந்தன்மையைப் பலவீனம் என்று கணித்து மேன்மேலும் இன்னா செய்ய முயல்வர். இவர்களுக்குச் சட்டப்படியோ, வேறு தக்க நடவடிக்கையாலோ பதிலடி தர வேண்டும். 

நல்லது செய்வதிலும் தவறுண்டு, அவரவர் குணத்தை அறிந்து செய்யாவிடில் என்று வள்ளுவர் எச்சரிக்கிறாரோ! 

நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. (குறள் 469)


இப்போது தெளிவாகத் தெரிகிறது, தீமைக்கு நன்மை என்பது சான்றோர் வழி என்பதும், அவ்வழியை மற்றவர் கண்மூடித் தனமாகப் பின்பற்றக்கூடாது என்பதும்.


(நிலாச்சாரலில் வெளிவந்த என் கட்டுரை)

No comments:

Post a Comment