Wednesday, 15 February 2012

அணுக்களும் அணுவும்



திருவள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றன் முதலடி,

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிஎன்பது. 

அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்என்று கம்பராமாயணத்தில் படிக்கிறோம். அணுவை நூறு கூறு போட்டால் கிடைக்கிற கோண் என்ற நுண்ணிய கூறிலும் (இறைவன்) இருக்கிறான் என்பது அதன் பொருள். 

மேற்கண்ட இரு கூற்றுளும் அணுவைத் துளைக்க இயலும் என்று தமிழர் எண்ணியிருக்கின்றனர், அதன் நூறு பங்கில் ஒரு பங்குக்குக் கோண் என்று பெயரும் இட்டிருக்கின்றார்கள் என்ற தகவல்களைத் தெரிவிக்கின்றன.

அணு என்பது மிக மிகச் சிறியது என்ற அர்த்தத்தில் அணுவளவும்எனவும் அவனன்றி ஓரணுவும் அசையாதுஎனவும் சாதாரண மக்கள் கூடச் சொல்கிறார்கள். 

இதையெல்லாம் அடிப்படையாய்க் கொண்டு தமிழர்கள் அணு அறிவியலின் முன்னோடிகள் என்று முடிவு கட்டலாமா? கூடவே கூடாது. 

ஏன்? ஏனென்றால் ஆட்டம் (atom) என்று அறிவியல் கூறுகிற அணுவும் தமிழரின் அணுவும் வெவ்வேறு. 

இன்னுஞ் சொல்லப் போனால் தமிழரின் அணு ஒன்றல்ல, இரண்டு!
அவற்றுள் ஒன்று, சென்டிமீட்டர், அடி, முழம் என்பவை போல ஒரு நீட்டலளவைப் பெயர். அதன் மதிப்பு மிகச் மிகச் சிறிது, கற்பனைக்கும் எட்டாதது. ஒரு சாண் அளவைக் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி(!) பாகமாகப் பிரித்தால் கிடைப்பது ஓர் அணு. 

ஒரு சாண் என்பது உசிலைமணி கையால் அளந்தாலும் 25 சென்டிமீட்டருக்கு மேல் போகாது; அங்குலக் கணக்கில் சொன்னால் பத்து அங்குலத்தைத் தாண்டாது. பத்தங்குலத்தை இரண்டரை கோடி பங்காகப் பிரிக்க முடியுமா? அப்படியே முடிந்தாலும் கிடைக்கிற, கண்ணுக்குப் புலப்படாத அணு என்ற அளவு எதையளக்க உதவும்? அதை வைத்துக் கொண்டு 150 அணு எவ்வளவு, 1000 அணு எவ்வளவு என்று மேல்வாயிலும் முக்காலணு,  வீச அணு என்று கீழ்வாயிலும் கணக்குப் போடலாமே ஒழிய, வாழ்வில் பயன்படுத்த இயலாது. 

இன்னோர் அணுவைப் பார்ப்போம். இது அளவையல்ல, பொருள், இதைத்தான் துளைத்து’, ‘சத கூறிட்டுஎன இலக்கியங்கள் கூறுகின்றன. இது கூட முழுப் பொருளல்ல. ஒரு முழுப் பொருளின் ஏறக்குறைய பதினாறைரைக் கோடியில் ஒரு பாகந்தான் இந்த அணு. துல்லியமாகச் சொன்னால்,

1 அணு = 1/16,55,80,800

மலையளவுள்ள ஒரு பென்னம்பெரிய பொருளைக் கூடக் கோடிக்கணக்கான சம கூறுகளாகப் பகுப்பது நடைமுறை சாத்தியமே அல்ல. அதில் ஒரு கூறைத் துளைப்பதும் நூறு பங்காக்குவதும் வெறுங் கற்பனை தான். 

இவ்வாறு நம் முன்னோர் கூறிய அணு இரண்டுமே அவர்களது கற்பனையில் உதித்தவை. 

இனி அறிவியல் அணுவோ வேதியியல் மாற்றத்துக்கு உட்படக் கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு, அது வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாது எனினும் அதனுள்ளே கரு எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற நுண்ணிய பொருள்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எந்த அணுவும் தனியாக இல்லை. வேறு அணுக்களுடன் கலந்தே காணப் படுகிறது. எல்லாத் தனிமங்களின் அணுக்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிமத்தின் அணுவின் அளவையும் எடையையும் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். அணுவை அணுவுலையில் தான் பிளக்க முடியும். 

மேற்கண்டவை அறிவியல் அணுவைப் பற்றிய சுருக்கமான செய்திகள். 

தமிழரின் கற்பனை அணுக்களையும், எதார்த்தமான அறிவியல் அணுவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆட்டம்என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் அணு என்னாமல் வேறு சொல்லால் (எடுத்துக் காட்டாக இணுஎன்று) சொல்லியிருந்தால் குழப்பத்துக்கு இடமே இருந்திராது.

Monday, 13 February 2012

கடற் புயலில்



( பிஏர் லொத்தி - 1850 / 1923 - எழுதிய என் சகோதரன் ஈவ் என்னும் பிரஞ்சு புதினத்தில் ஒரு பகுதியை மொழிபெயர்த்துள்ளேன் )


இரு நாளாகவே கடலில் ஒரு பேரிரைச்சல், வரவிருக்கும் ஆபத்தை அறிவித்தபடி எங்களைச் சுற்றி முழங்கியது . கன்னங்கரேல் என்றிருந்த வானில் மேகங்கள் பயங்கரக் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அங்கு மிங்கும் ஓடின . 

அந்தப் பெரிய ஓசை வரவரக் கனங்கூடிச் செறிவு பெற்றதாயும் தொய்வு அற்றதாயும் மாறிற்று ; இயற்கையின் சீற்றத்தில் மூர்க்கம் அதிகமானது போல் தோன்றிற்று . 

வெண்ணிற மேற்பரப்பும் பென்னம் பெரிய சுருள் வடிவுங்கொண்ட நீர்த் திரள்கள் ஒன்றை யொன்று விரட்டிக்கொண்டு வருவது போல் வந்து எங்கள் கப்பலின் ஓட்டத்தைத் தடுத்தன . அதன்மீது பலங்கொண்ட மட்டும் மோதின : பயங்கர உலுக்கல்கள் , சத்தங்கள் ! 

சில சமயம் கப்பல் , கடலின்மேல் கோபங்கொண்டாற் போல் , முன் பகுதியை உயர்த்தியபடி நீரின்மேல் ஏறியது ; பின்பு தலை தூக்கிய அதே நிலையில் தாழ்ந்து , இரு பக்கமும் எழும்பிய நீர்ச் சுவர்களின் இடையில் உருவான ஒரு விதப் பள்ளத்தாக்கின் அடிப் பாகத்தைத் தொட்டது . மேலே வளைந்து ஒன்று சேரப்போகிற அந்தப் பச்சை நிறச் சுவர்களின் நடுவிலிருந்து வேக வேகமாகக் கப்பலை ஓட்டித் தப்ப வேண்டியிருந்தது . 

சில்லென்ற மழை தன் நீண்ட வெண்ணிற அம்புகளால் ஆகாயத்தில் கோடு வரைந்தபடி இறங்கி , வாரால் அடித்தாற் போலத் தாக்கி , சுரீர் வலியை ஏற்படுத்திற்று . 

உயரே பாய்மரங்களில் ஏறிப் பாய்களைச் சுருக்கும் முயற்சியில் பலர் முனைந்தனர் . எப் பாடு பட்டாவது காற்றை எதிர்த்து முன்னேற வேண்டியிருந்தது . காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்க அழுத்தமாக நிற்பதும் , பேயாட்டம் ஆடி வழுக்கும் ஈரக் கம்புகளைப் பற்றிக் கொள்வதுமே பெரும் பாடாக இருக்கையில் , காயமுற்று முனகுகிற ஒரு பெரிய பறவையின் சிறகுகள் கடைசித் தடய் அடித்துக்கொள்வது மாதிரி திடீர் திடீர் எனவும் ஒழுங்கு இல்லாமலும் ஆடிக்கொண்டிருந்த கொமபுகளின்மேல் அந்தரத்தில் தொற்றிக்கொண்டு வேலை செய்வதென்றால் ? 

இரண்டு மணி நேரம் பாடுபட்டும் பணி முடியவில்லை . அவர்களை இறங்கச் சொன்னோம், குளிரால் குறைவாய்ப் பாதிக்கப்பட்ட மாற்று ஆட்களை அனுப்பலாம் என்னும் முடிவோடு . 

அவர்கள் இறங்கினார்கள் , வெளிறிப் போய் , தொப்பலாய் நனைந்து , மார்பிலும் முதுகிலும் நீர்த் தாரைகள் ஒழுக , கைகள் ரத்த விளாறாய் , நகங்கள் தேய்ந்து , பற்கள் கிடுகிடுக்க !

இரு நாள் : நீரில் வாழ்ந்தோம் , பேருக்குச் சாப்பிட்டோம் ; லேசாய்க் கண்ணயர்ந்தோம் . தெம்பு குறைந்துகொண்டே வந்தது . இந்த நீண்ட காத்திருப்பும் ஈரம் மற்றும் குளிர் காரணமாய்த் தொடர்ச்சியான களைப்புந்தான் கடல் பயணத்தின் மெய்யான பயங்கரம். தாக்கு பிடிக்காத பரிதாபத்துக்கு உரியவர்கள் பற்பல இரவும் பகலும் நனைந்து , அழுக்கேறி , வியர்வையும் உப்பும் கலந்த பிசுபிசுப்புக் கலவையால் மூடப்பட்டுக் கிடந்துதான் இறுதி மூச்சை விடுவார்கள் . 

சத்தம் பெரிதாகிக்கொண்டே தான் வந்தது ; நாங்களும் அலை அலையாய்த் தாவிக்கொண்டிருந்தோம் . வெள்ளை நுரை போர்த்த கடலைத் தவிர எல்லாம் இருண்டது ; குளிர் மாலைப் பொழுது கவிந்தது ; வானை மறைத்திருந்த கரு மேகங்களான திரைகளின் பின்னால் கதிரவன் மறைந்தான் ; அவன் எங்களைக் கை விட்டமையால் இனி எல்லவற்றையும் இருட்டில் சமாளித்தாக வேண்டும் . 

என் தம்பி மாற்று ஆட்களுள் ஒருவனாய் மேலே ஏறினான் . நான் அண்ணந்து பார்த்தபோது அந்தரத்தில் பணியாற்றிய அந்த மனிதத் திராட்சைக் கொத்து சிற்சில சமயம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டது . 

திடீரென்று ஒரு பயங்கர உலுக்கல் : அந்தக் கொத்து சடாரென அறுந்து வேறு வடிவங்கொண்டது . அதிலிருந்து இரண்டு உடல்கள் நீங்கிக் கைகளை அகலமாய் விரித்தபடி, உறுமிக்கொண்டிருந்த அலைகளில் விழுந்தன ; இன்னோர் உடம்பு கப்பலின் மேல்தளத்தில் சப்பையாய் வீழ்ந்தது , கத்தாமல் கொள்ளாமல் , உயிரற்றது போல் . 

கேப்டன் அலறினார் : 

" வாட்ட சாட்டமான கெர்பூல் கடலிலே , மற்றவன் யார் ?" 

தாக்குப் பிடித்தவர்கள் கயிறுகளைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு இருந்தமையால் அந்தரத்தில் ஒரு கணம் ஊசலாடிவிட்டு மீண்டும் ஏறினார்கள் , விறு விறு என்று , குரங்குகள் மாதிரி .

அவர்களுள் தம்பியை அடையாளம் கண்டேன் ; எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது . 

கடலில் விழுந்தவர்களுக்காக மிதவைகளைப் போட்டோம் . என்ன பயன் ? அவர்கள் தென்படாமல் இருப்பதே நல்லது என்று கருதினோம் ; ஏனென்றால் காப்பாற்றுவதற்காகக் கப்பலை நிறுத்த இயலாத சூழ்நிலையில் அவர்களைக் கை கழுவி விட்டுப் போவதற்குக் கருங்கல் நெஞ்சமல்லவா தேவைப்படும் ? 

எல்லாப் பெயர்களையும் கூப்பிட்டுப் பார்த்ததில் கடலோடு போன இரண்டாம் தொழிலாளி யார் என்பது தெரிந்தது : அவர் ஒரு சாதுவான கற்றுக் குட்டி ; அவருடைய விதவைத் தாயார், பிரான்சை விட்டுக் கப்பல் புறப்பட்டபோது , கேப்டனிடம் பரிந்துரை செய்து வேலையில் சேர்த்திருந்தார் . 

தளத்தில் விழுந்து கிடந்தவரை மருந்தகத்துக்குத் தூக்கிச் சென்றோம் . 

அங்கே இரண்டடி உயரத்துக்குத் தண்ணீர் : பாட்டிலகள் உடைந்து சிந்திச் சிதறிய எல்லா மருந்துகளும் ஒன்றாய்க் கலந்த நெடி . படுத்து அமைதியாகச் சாவதற்கும் இடமில்லை ; இறக்கப் போகிறவருக்குக் கூட , கடல் கருணை காட்டாமல் அவரை உலுக்கி அலைக்கழித்தது . அவரது தொண்டையிலிருந்து ஒரு வித ஒலி வெளிவந்து இரைச்சல்களில் கரைந்து போயிற்று . 

அவர் விரைவிலேயே இறந்து போனார் . அமைதிச் சூழ்நிலையில் அவரைப் பிழைக்க வைத்திருக்கக்கூடும் .


Sunday, 12 February 2012

ஆங்கிலேயரும் பிரெஞ்சியரும்




ஆங்கிலேயரும் பிரெஞ்சியரும் ஒரே இனத்தினர், பக்கத்துப் பக்கத்து நாடுகளில்தான் வசிக்கிறார்கள் என்றாலும் அவர்களிடையே முரண்பாடுகளும் பல உண்டு. 

இரு நாடுகளையும் பிரிப்பது 37 கி.மீ. மட்டுமே அகலமுள்ள ஒரு கடல். அதை ஆங்கிலேயர் இங்கிலீஷ் சேனல் (ஆங்கிலக் கால்வாய்) என்கின்றனர். பிரெஞ்சியரோ, அப்படி அழைக்க விரும்பாமல், கலே என்னும் பிரெஞ்சுத் துறைமுகத்தின் பெயரால் 'பாதக் கலே' என்று சொல்கிறார்கள். 

மேலும் பல மாறுபாடுகளைக் கீழே காண்க:


1. ஆட்சி முறை

இங்கிலாந்து : மன்னராட்சி

பிரான்சு : மக்களாட்சி



2. சமுதாயம்

இங்கிலாந்து  : அரச குடும்பத்தார், பிரபுக்கள், சாமானியர் என வேறுபட்டது.

பிரான்சு: யாவரும் சமம்



3. மதப்பிரிவு

இங்கிலாந்து : புரோட்டஸ்டண்ட்

பிரான்சு : கத்தோலிக்கம்



4. மொழி

இங்கிலாந்து  : ஜெர்மன் குடும்பம்

பிரான்சு : லத்தீன் குடும்பம்



5. மனப்பான்மை

இங்கிலாந்து  : கட்டுப்பெட்டி

பிரான்சு : புதுமை விருப்பம்



6. நிற வெறி

இங்கிலாந்து  : மிகுதி

பிரான்சு : குறைவு



7. ஊர்திகள்

இங்கிலாந்து  : இடப்பக்கம் செல்லும்

பிரான்சு : வலப்பக்கம் போகும்



8. நூல்களில் பொருளடக்கம்

இங்கிலாந்து  : தொடக்கத்தில்

பிரான்சு : கடைசியில்



9. ஆணுறைக்குப் பெயர்

இங்கிலாந்து  : பிரெஞ்சு லெதர்

பிரான்சு : ஆங்கில உறை



10. அனுமதியின்றி மட்டம் போடுதல்

இங்கிலாந்து  : பிரெஞ்சு லீவ் எடுத்தல் என்பர்.

பிரான்சு : ஆங்கில பாணியில் நழுவுதல் என்பர்.


Thursday, 9 February 2012

மெய்யா? பொய்யா?



நான்காம் வகுப்பு மாணவனாய் நானிருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டில் கருமாதிக்கு என்னையும் அழைத்துச் சென்றனர். காலை வகுப்புக்குப் போகவில்லை. பிற்பகலாவது போகலாம் என்றால் முடியாது போலிருந்தது. சாப்பிட்டு விட்டுக் கிளம்பவேண்டும். துறையிலிருந்து எல்லாரும் வந்தபின்புதான் உண்ணலாமாம். ஆவலுடன் அவர்களின் வருகையை எதிர்பார்த்திருந்தேன். நேரம் ஆனதேயொழிய அவர்கள் வருவதாய்த் தெரியவில்லை.  

இனிக் காத்திருக்க நேரமில்லை என்ற நிலையில், 'சாப்பிடாமலே போகிறேன்' எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டு வழியிலிருந்த என் வீட்டில் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாய் விரைந்தேன். அப்படியும் தாமதமாகிவிட்டது. 

மதிப்புக்குரிய ஆசிரியர் கட்சிராயரை எனக்கு மிகப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். 

"ஏன் தாமதம்?" என்று கேட்ட அவரிடம் காரணத்தைச் சொன்னேன். 

மகிழ்ச்சியுடன் அவர் கூறினார். "பார்த்தீர்களா? சாப்பாட்டைவிடப் படிப்பு முக்கியம் என்று நினைத்திருக்கிறான்." 

ஒரு மாணவன் அதை ஏற்காமல், "பொய் சொல்கிறான்" என மறுத்தபோது என் பிஞ்சு மனம் வாடிற்று. பொய் சொல்லி எனக்குப் பழக்கமில்லை. உண்மை செல்லாமற் போய்விடுமோ? 

ஆசிரியர் என் கண் கீழிமையை இழுத்துப் பார்த்துவிட்டு, "சாப்பிடாமல்தான் வந்திருக்கிறான்" என்று உறுதியாய்க் கூறி என்னை ஆதரித்தபோது உள்ளம் பூரித்தேன். ஒரு கணந்தான். மீண்டும் எதிர்ப்பு! 

"அவனுக்கு எப்போதும் கண் அப்படித்தான் இருக்கும்!" 

அடப்பாவி! என்னவோ என் இமைகளை அடிக்கடி விலக்கிப் பார்த்து அனுபவப்பட்டவன் போல் பேசுகிறானே! எப்படி நிரூபிப்பேன்? ஒரே தவிப்பு! 

மீண்டும் ஆசிரியர் உதவிக்கு வந்தார். என் உள்ளங்கையை முகர்ந்து பார்த்துவிட்டு, "மெய்யாகத்தான் சொல்கிறான்" என்று சான்றளித்ததும் எதிர்ப்பு ஓய்ந்தது. மன ஆறுதலுடன் இருக்கைக்குச் சென்றேன்.  

(இமையைப் பிதுக்கிப் பார்த்தால் சாப்பிட்டது சாப்பிடாதது தெரியுமா என்று இன்றுவரை எனக்கு ஐயம்தான்!!) 

சில ஆண்டுகளுக்குப் பின்பு அதே போன்ற நிகழ்ச்சி. 

12 வயது இருக்கும். தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை! மாலையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து தெருவில் ஓடியாடி விளையாடி மகிழ வாய்ப்பிருந்தது. 

ஒருநாள் ஆட்டத்துக்குப் பின்பு இரு நண்பர்களும் நானும் கோவிலுக்குப் போவதென்று திடீர் முடிவு செய்து செயலிலும் இறங்கினோம். திரும்பி வருகையில் விளக்கு வைத்துவிட்டது. தாமதத்துக்குக் காரணத்தைத் தாயார் கேட்டபோது உண்மையைச் சொன்னேன்.  

உடனே என் அண்னன் (12 வயது மூத்தவர்), "பொய்! சினிமாக் கொட்டகைக்குப் பாட்டுக் கேட்கப் போயிருப்பான்" என்றார். 

நான்காம் வகுப்பு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தெரிந்தமாதிரி பேசுகிறாரே! என்ன அநியாயம்! 

"கோவிலுக்குத் தான் போனேன், குஞ்சிதபாதத்தைக் கேட்டுப்பாருங்கள், அவனும் வந்தான்"

அண்ணன் வாய் அடைத்தது. தாயார் நம்பினார்.  

(சினிமாப் பாட்டுக் கேட்கக் கொட்டகைக்குப் போகலாம் என்ற புதிய தகவலை அன்றுதான் அறிந்துகொண்டேன். அண்ணன் தம்மையறியாமலே தவறான வழியொன்றைக் காட்டினார். எனக்கு அதில் நாட்டம் இல்லாமையால் தப்பித்தேன்!) 

இந்த இரு நிகழ்ச்சிகளிலிருந்தும் நான் படிப்பினை பெற்று ஒரு முடிவுக்கு வந்தேன். குடும்பத்திலாகட்டும், வெளியிலாகட்டும், யாராவது என்னிடம் ஒன்றைச் சொன்னால் அது பொய் என மறுப்பதற்குத் தக்க ஆதாரம் இல்லாதவரைக்கும் மெய் என்றே கொள்ளவேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

குற்றவாளிகள் பலர் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது சட்டத்தின் அடிப்படையல்லவா? அதுபோலப் பொய் சொல்லி எத்தனை பேர் ஏமாற்றினாலும் சரி, ஒரு மெய்யரைப் பொய்யர் என்று நான் தவறாக நினைத்துவிடக்கூடாது. 

அந்த முடிவின்படிதான் ஒழுகிவருகிறேன்.



(நிலாச்சாரலில் வெளியான என் கட்டுரை.)