Monday, 13 February 2012

கடற் புயலில்



( பிஏர் லொத்தி - 1850 / 1923 - எழுதிய என் சகோதரன் ஈவ் என்னும் பிரஞ்சு புதினத்தில் ஒரு பகுதியை மொழிபெயர்த்துள்ளேன் )


இரு நாளாகவே கடலில் ஒரு பேரிரைச்சல், வரவிருக்கும் ஆபத்தை அறிவித்தபடி எங்களைச் சுற்றி முழங்கியது . கன்னங்கரேல் என்றிருந்த வானில் மேகங்கள் பயங்கரக் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அங்கு மிங்கும் ஓடின . 

அந்தப் பெரிய ஓசை வரவரக் கனங்கூடிச் செறிவு பெற்றதாயும் தொய்வு அற்றதாயும் மாறிற்று ; இயற்கையின் சீற்றத்தில் மூர்க்கம் அதிகமானது போல் தோன்றிற்று . 

வெண்ணிற மேற்பரப்பும் பென்னம் பெரிய சுருள் வடிவுங்கொண்ட நீர்த் திரள்கள் ஒன்றை யொன்று விரட்டிக்கொண்டு வருவது போல் வந்து எங்கள் கப்பலின் ஓட்டத்தைத் தடுத்தன . அதன்மீது பலங்கொண்ட மட்டும் மோதின : பயங்கர உலுக்கல்கள் , சத்தங்கள் ! 

சில சமயம் கப்பல் , கடலின்மேல் கோபங்கொண்டாற் போல் , முன் பகுதியை உயர்த்தியபடி நீரின்மேல் ஏறியது ; பின்பு தலை தூக்கிய அதே நிலையில் தாழ்ந்து , இரு பக்கமும் எழும்பிய நீர்ச் சுவர்களின் இடையில் உருவான ஒரு விதப் பள்ளத்தாக்கின் அடிப் பாகத்தைத் தொட்டது . மேலே வளைந்து ஒன்று சேரப்போகிற அந்தப் பச்சை நிறச் சுவர்களின் நடுவிலிருந்து வேக வேகமாகக் கப்பலை ஓட்டித் தப்ப வேண்டியிருந்தது . 

சில்லென்ற மழை தன் நீண்ட வெண்ணிற அம்புகளால் ஆகாயத்தில் கோடு வரைந்தபடி இறங்கி , வாரால் அடித்தாற் போலத் தாக்கி , சுரீர் வலியை ஏற்படுத்திற்று . 

உயரே பாய்மரங்களில் ஏறிப் பாய்களைச் சுருக்கும் முயற்சியில் பலர் முனைந்தனர் . எப் பாடு பட்டாவது காற்றை எதிர்த்து முன்னேற வேண்டியிருந்தது . காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்க அழுத்தமாக நிற்பதும் , பேயாட்டம் ஆடி வழுக்கும் ஈரக் கம்புகளைப் பற்றிக் கொள்வதுமே பெரும் பாடாக இருக்கையில் , காயமுற்று முனகுகிற ஒரு பெரிய பறவையின் சிறகுகள் கடைசித் தடய் அடித்துக்கொள்வது மாதிரி திடீர் திடீர் எனவும் ஒழுங்கு இல்லாமலும் ஆடிக்கொண்டிருந்த கொமபுகளின்மேல் அந்தரத்தில் தொற்றிக்கொண்டு வேலை செய்வதென்றால் ? 

இரண்டு மணி நேரம் பாடுபட்டும் பணி முடியவில்லை . அவர்களை இறங்கச் சொன்னோம், குளிரால் குறைவாய்ப் பாதிக்கப்பட்ட மாற்று ஆட்களை அனுப்பலாம் என்னும் முடிவோடு . 

அவர்கள் இறங்கினார்கள் , வெளிறிப் போய் , தொப்பலாய் நனைந்து , மார்பிலும் முதுகிலும் நீர்த் தாரைகள் ஒழுக , கைகள் ரத்த விளாறாய் , நகங்கள் தேய்ந்து , பற்கள் கிடுகிடுக்க !

இரு நாள் : நீரில் வாழ்ந்தோம் , பேருக்குச் சாப்பிட்டோம் ; லேசாய்க் கண்ணயர்ந்தோம் . தெம்பு குறைந்துகொண்டே வந்தது . இந்த நீண்ட காத்திருப்பும் ஈரம் மற்றும் குளிர் காரணமாய்த் தொடர்ச்சியான களைப்புந்தான் கடல் பயணத்தின் மெய்யான பயங்கரம். தாக்கு பிடிக்காத பரிதாபத்துக்கு உரியவர்கள் பற்பல இரவும் பகலும் நனைந்து , அழுக்கேறி , வியர்வையும் உப்பும் கலந்த பிசுபிசுப்புக் கலவையால் மூடப்பட்டுக் கிடந்துதான் இறுதி மூச்சை விடுவார்கள் . 

சத்தம் பெரிதாகிக்கொண்டே தான் வந்தது ; நாங்களும் அலை அலையாய்த் தாவிக்கொண்டிருந்தோம் . வெள்ளை நுரை போர்த்த கடலைத் தவிர எல்லாம் இருண்டது ; குளிர் மாலைப் பொழுது கவிந்தது ; வானை மறைத்திருந்த கரு மேகங்களான திரைகளின் பின்னால் கதிரவன் மறைந்தான் ; அவன் எங்களைக் கை விட்டமையால் இனி எல்லவற்றையும் இருட்டில் சமாளித்தாக வேண்டும் . 

என் தம்பி மாற்று ஆட்களுள் ஒருவனாய் மேலே ஏறினான் . நான் அண்ணந்து பார்த்தபோது அந்தரத்தில் பணியாற்றிய அந்த மனிதத் திராட்சைக் கொத்து சிற்சில சமயம் மட்டுமே கண்ணுக்குப் புலப்பட்டது . 

திடீரென்று ஒரு பயங்கர உலுக்கல் : அந்தக் கொத்து சடாரென அறுந்து வேறு வடிவங்கொண்டது . அதிலிருந்து இரண்டு உடல்கள் நீங்கிக் கைகளை அகலமாய் விரித்தபடி, உறுமிக்கொண்டிருந்த அலைகளில் விழுந்தன ; இன்னோர் உடம்பு கப்பலின் மேல்தளத்தில் சப்பையாய் வீழ்ந்தது , கத்தாமல் கொள்ளாமல் , உயிரற்றது போல் . 

கேப்டன் அலறினார் : 

" வாட்ட சாட்டமான கெர்பூல் கடலிலே , மற்றவன் யார் ?" 

தாக்குப் பிடித்தவர்கள் கயிறுகளைக் கெட்டியாய்ப் பற்றிக்கொண்டு இருந்தமையால் அந்தரத்தில் ஒரு கணம் ஊசலாடிவிட்டு மீண்டும் ஏறினார்கள் , விறு விறு என்று , குரங்குகள் மாதிரி .

அவர்களுள் தம்பியை அடையாளம் கண்டேன் ; எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது . 

கடலில் விழுந்தவர்களுக்காக மிதவைகளைப் போட்டோம் . என்ன பயன் ? அவர்கள் தென்படாமல் இருப்பதே நல்லது என்று கருதினோம் ; ஏனென்றால் காப்பாற்றுவதற்காகக் கப்பலை நிறுத்த இயலாத சூழ்நிலையில் அவர்களைக் கை கழுவி விட்டுப் போவதற்குக் கருங்கல் நெஞ்சமல்லவா தேவைப்படும் ? 

எல்லாப் பெயர்களையும் கூப்பிட்டுப் பார்த்ததில் கடலோடு போன இரண்டாம் தொழிலாளி யார் என்பது தெரிந்தது : அவர் ஒரு சாதுவான கற்றுக் குட்டி ; அவருடைய விதவைத் தாயார், பிரான்சை விட்டுக் கப்பல் புறப்பட்டபோது , கேப்டனிடம் பரிந்துரை செய்து வேலையில் சேர்த்திருந்தார் . 

தளத்தில் விழுந்து கிடந்தவரை மருந்தகத்துக்குத் தூக்கிச் சென்றோம் . 

அங்கே இரண்டடி உயரத்துக்குத் தண்ணீர் : பாட்டிலகள் உடைந்து சிந்திச் சிதறிய எல்லா மருந்துகளும் ஒன்றாய்க் கலந்த நெடி . படுத்து அமைதியாகச் சாவதற்கும் இடமில்லை ; இறக்கப் போகிறவருக்குக் கூட , கடல் கருணை காட்டாமல் அவரை உலுக்கி அலைக்கழித்தது . அவரது தொண்டையிலிருந்து ஒரு வித ஒலி வெளிவந்து இரைச்சல்களில் கரைந்து போயிற்று . 

அவர் விரைவிலேயே இறந்து போனார் . அமைதிச் சூழ்நிலையில் அவரைப் பிழைக்க வைத்திருக்கக்கூடும் .


No comments:

Post a Comment