நான்காம் வகுப்பு
மாணவனாய் நானிருந்தபோது நெருங்கிய உறவினர் வீட்டில் கருமாதிக்கு என்னையும்
அழைத்துச் சென்றனர். காலை வகுப்புக்குப் போகவில்லை. பிற்பகலாவது போகலாம் என்றால்
முடியாது போலிருந்தது. சாப்பிட்டு விட்டுக் கிளம்பவேண்டும். துறையிலிருந்து
எல்லாரும் வந்தபின்புதான் உண்ணலாமாம். ஆவலுடன் அவர்களின் வருகையை
எதிர்பார்த்திருந்தேன். நேரம் ஆனதேயொழிய அவர்கள் வருவதாய்த் தெரியவில்லை.
இனிக்
காத்திருக்க நேரமில்லை என்ற நிலையில், 'சாப்பிடாமலே போகிறேன்'
எனச் சொல்லிவிட்டுப்
புறப்பட்டு வழியிலிருந்த என் வீட்டில் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவசர
அவசரமாய் விரைந்தேன். அப்படியும் தாமதமாகிவிட்டது.
மதிப்புக்குரிய
ஆசிரியர் கட்சிராயரை எனக்கு மிகப் பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும்.
"ஏன் தாமதம்?" என்று கேட்ட அவரிடம் காரணத்தைச் சொன்னேன்.
மகிழ்ச்சியுடன்
அவர் கூறினார். "பார்த்தீர்களா? சாப்பாட்டைவிடப் படிப்பு முக்கியம் என்று
நினைத்திருக்கிறான்."
ஒரு மாணவன் அதை
ஏற்காமல், "பொய் சொல்கிறான்" என மறுத்தபோது என் பிஞ்சு மனம் வாடிற்று. பொய் சொல்லி
எனக்குப் பழக்கமில்லை. உண்மை செல்லாமற் போய்விடுமோ?
ஆசிரியர் என் கண்
கீழிமையை இழுத்துப் பார்த்துவிட்டு, "சாப்பிடாமல்தான் வந்திருக்கிறான்" என்று
உறுதியாய்க் கூறி என்னை ஆதரித்தபோது உள்ளம் பூரித்தேன். ஒரு கணந்தான். மீண்டும்
எதிர்ப்பு!
"அவனுக்கு எப்போதும் கண் அப்படித்தான்
இருக்கும்!"
அடப்பாவி! என்னவோ
என் இமைகளை அடிக்கடி விலக்கிப் பார்த்து அனுபவப்பட்டவன் போல் பேசுகிறானே! எப்படி
நிரூபிப்பேன்? ஒரே தவிப்பு!
மீண்டும்
ஆசிரியர் உதவிக்கு வந்தார். என் உள்ளங்கையை முகர்ந்து பார்த்துவிட்டு, "மெய்யாகத்தான்
சொல்கிறான்" என்று சான்றளித்ததும் எதிர்ப்பு ஓய்ந்தது. மன ஆறுதலுடன்
இருக்கைக்குச் சென்றேன்.
(இமையைப் பிதுக்கிப் பார்த்தால் சாப்பிட்டது சாப்பிடாதது தெரியுமா என்று
இன்றுவரை எனக்கு ஐயம்தான்!!)
சில
ஆண்டுகளுக்குப் பின்பு அதே போன்ற நிகழ்ச்சி.
12 வயது இருக்கும். தொலைக்காட்சியில்லாத காலமாதலால் வீட்டுக்குள் முடங்கி
சேனலில் மொய்த்து நேரம் போக்குகிற துர்பாக்கியம் ஏற்படவில்லை! மாலையில்
கூட்டாளிகளுடன் சேர்ந்து தெருவில் ஓடியாடி விளையாடி மகிழ வாய்ப்பிருந்தது.
ஒருநாள்
ஆட்டத்துக்குப் பின்பு இரு நண்பர்களும் நானும் கோவிலுக்குப் போவதென்று திடீர்
முடிவு செய்து செயலிலும் இறங்கினோம். திரும்பி வருகையில் விளக்கு வைத்துவிட்டது.
தாமதத்துக்குக் காரணத்தைத் தாயார் கேட்டபோது உண்மையைச் சொன்னேன்.
உடனே என் அண்னன்
(12 வயது மூத்தவர்), "பொய்! சினிமாக்
கொட்டகைக்குப் பாட்டுக் கேட்கப் போயிருப்பான்" என்றார்.
நான்காம் வகுப்பு
நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. தெரிந்தமாதிரி பேசுகிறாரே! என்ன அநியாயம்!
"கோவிலுக்குத் தான் போனேன், குஞ்சிதபாதத்தைக்
கேட்டுப்பாருங்கள், அவனும் வந்தான்"
அண்ணன் வாய்
அடைத்தது. தாயார் நம்பினார்.
(சினிமாப் பாட்டுக் கேட்கக் கொட்டகைக்குப் போகலாம் என்ற புதிய தகவலை அன்றுதான்
அறிந்துகொண்டேன். அண்ணன் தம்மையறியாமலே தவறான வழியொன்றைக் காட்டினார். எனக்கு
அதில் நாட்டம் இல்லாமையால் தப்பித்தேன்!)
இந்த இரு
நிகழ்ச்சிகளிலிருந்தும் நான் படிப்பினை பெற்று ஒரு முடிவுக்கு வந்தேன்.
குடும்பத்திலாகட்டும், வெளியிலாகட்டும், யாராவது என்னிடம் ஒன்றைச் சொன்னால் அது பொய் என
மறுப்பதற்குத் தக்க ஆதாரம் இல்லாதவரைக்கும் மெய் என்றே கொள்ளவேண்டும் என்பதுதான்
அந்த முடிவு.
குற்றவாளிகள்
பலர் தப்பித்தாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது
சட்டத்தின் அடிப்படையல்லவா? அதுபோலப் பொய் சொல்லி எத்தனை பேர்
ஏமாற்றினாலும் சரி, ஒரு மெய்யரைப் பொய்யர் என்று நான் தவறாக
நினைத்துவிடக்கூடாது.
அந்த
முடிவின்படிதான் ஒழுகிவருகிறேன்.
(நிலாச்சாரலில் வெளியான என் கட்டுரை.)
மிகவும் நல்லதொரு கருத்தைத் தங்கள் அனுபவத்தின் வாயிலாகப் புரியவைத்துள்ளீர்கள். அதை இன்றுவரை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருவது மிகவும் பாராட்டுக்குரியது. யூகங்களின் அடிப்படையில் ஒருவரைச் சந்தேகித்தல் மிகவும் தவறு என்பதைப் பலரும் அறிய உணர்த்தியமைக்கு நன்றி.
ReplyDelete