Saturday, 25 February 2012

பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு.....




எண்ணற்ற தமிழ்ப் பழமொழிகளுள் இரண்டே இரண்டு மட்டும் பிரெஞ்சிலிருந்து வந்திருக்கின்றன : 

1 - மின்னுவ தெல்லாம் பொன்னல்ல . 

இதை ஆங்கிலம் வழியாய்ப் பெற்றுள்ளோம் . 

12 ஆம் நூற்றாண்டின் பிரஞ்சு மத வாதி அலேந்த லீல் , " பொன்னைப் போன்று மின்னுவதை எல்லாம் பொன்னென்று  கருதாதீர்கள் " என்று எழுதினார் . இதை ஆங்கில எழுத்தாளர் ஜான் ட்ரைடன் மனத்துள் கொண்டு தம் 'மானும் சிறுத்தையும்' ( The Hind and the Panther ) என்ற நூலில் " பலரும் சொல்வது போல் மின்னுவதெல்லாம் பொன்னல்ல " எனச் சுருக்கினார் (1687 ) .


2 - உனக்கும் பேபே , உங்க அப்பனுக்கும் பேபே 


இது புதுச்சேரி மாநில மக்களால் ஒரு பிரஞ்சுக் கதையிலிருந்து உருவாக்கப்பட்டுப் பெரும்பாலும் அவர்கள் மத்தியில் புழங்குகிறது.

கதைச் சுருக்கம் :

ஆடு திருடிய ஒருவன் வழக்கில் சிக்கினான் . தண்டனையிலிருந்து தப்புவதற்காக வழக்குரைஞரை நாடினான் . அவர் சொல்லித் தந்தபடி நீதி மன்றத்தில் ஊமை போல நடித்தான் . எல்லாக் கேள்விகளுக்கும் அவன் பேபே என்றே பதில் உரைத்தமையால் அவனிடமிருந்து எந்த விவரமும் அறிய முடியாத நீதிபதி வழக்கைத் தள்ளிவிடவே அவன் விடுதலையானான்.  

பின்பு தம் கட்டணத்தைக் கேட்ட வழக்குரைஞரிடமும் அவன் பேபே என்றே கூறி அவரை ஏமாற்றினான் . 

உனக்கும் பேபே உங்க அப்பனுக்கும் பேபே என்றால் உனக்கும் நாமம் உன் தகப்பனுக்கும் நாமம் என்று பொருள் .  

ஏமாற்றுக்காரர்களுக்கு உதவுகிற பழமொழியிது .

Wednesday, 22 February 2012

சட்டங்களின் சிற்பிகள்



உலகில் முதல்முதலாய்ச் சட்டங்கள் இயற்றி, வழக்குரைஞர்களை உருவாக்கி , நீதி மன்றங்களை நிறுவி , வழக்கு விசாரித்துத் தீர்ப்பு வழங்குகிற முறையை ஏற்படுத்தியவர் ரோமானியர். 

அந்த முறைதான் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் இன்றளவும் அமலில் நீடிக்கிறது அது மட்டுமல்ல ; ரோமானிய சட்ட நூல்களிலிருந்து பற்பல லத்தின்  சொற்களையும் சொற்றொடர்களையும் எடுத்து உலகு பயன்படுத்துகிறது .  

அவற்றுட் சில :  

அலிபி , ஹபெயாஸ் கொர்ப்புஸ். , மலா ஃபிதே , போஸ்த் மொர்தேம் , ப்ரிமா ஃபசியே , சினே திஏ 
( alibi , habeas corpus , mala fide , post mortem , prima facie , sine die ). 

குற்றவாளி தப்பிக்கலாம் , நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்னும் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை எடுத்துச் சொன்னவர் த்ரயான் என்ற ரோமானிய சக்கரவர்த்தி . 

அவர் சொன்னார் : " ஒரு நிரபராதியைத் தண்டிப்பதைக் காட்டிலும் ஒரு குற்றவாளியைத் தப்ப விடுதல் மேலானது " 

அக் காலத்திலேயே அதிகாரத்தைத் தவறாய்ப் பயன்படுத்தல் , அரசுக்கு எதிரான சதி , பொதுப் பணம் கையாடல் , உயில் மோசடி , கள்ள நாணயம் தயாரித்தல் , பெண் சிசுக் கொலை  முதலான குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 

ரோமானிய வழக்குரைஞர்களுள் பெரும் புகழ் எய்தியவர் சிசெரோ ( Cicero ) தேர்தலில் கையூட்டுத் தந்து வென்றதாக முரேனா என்பவர்மீது தோற்றவர் ஒருவர் தொடுத்த வழக்கில் சிசெரோ முரேனாவுக்கு ஆதரவாகத் திறம்பட வாதாடி அவரை மீட்டார் . 

கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட மிலோ என்னும் பெயருடையாருக்காகவும் அவர் வாதாடியிருக்கிறார் .  

அந்த இரு வாதங்களும் ப்ரோ முரேனா ( முரேனாவுக்காக ) , ப்ரோ மிலோனே என்ற தலைப்புகளில் நூல்களாகி லத்தின் இலக்கியப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன .

Sunday, 19 February 2012

சில பிரஞ்சுப் பழமொழிகள்




1.  ஒன்றும் தெரியாதவனுக்கு எது பற்றியும் சந்தேகம் இருக்காது .


2.  எந்தச் சாராயத்துக்கும் வண்டல் உண்டு .


3. கேட்க விரும்பாதவரை விட மோசமான செவிடர் இல்லை.


4. தாடி வைத்தவரெல்லாம் பாதிரி அல்ல .


5. தேவை அற்றதை வாங்கினால் அவசியமானதை விற்க நேரும் .


6. நல்ல சாராயத்துக்கு விளம்பரம் தேவை இல்லை .


7. பழத்தை அடைவதற்காக மரத்தை வெட்டுவதா ?


8.-- முட்டையை உடைக்காமல் ஆம்லெட் செய்யமுடியாது .


9. பசிக்கிற வயிற்றுக்குக் காது இல்லை.


10.  உழைப்பானது நேரத்தைச் சுருக்குகிறது , வாழ் நாளைப் பெருக்குகிறது.

Friday, 17 February 2012

ஒலியும் எதிரொலியும்



1 - ஆலும் வேலும் பல்லுக் குறுதி .

அழுத்தித் தேய்த்தால் கொட்டும் குருதி .






2 - நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

வெயிலின் அருமை மழைக்காலத்தில் தெரியும் .







3 - திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.

இல்லை , ரொக்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன .




  

4 - பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது .

சேவல் கோழி கூவாவிட்டாலும் பொழுது விடியும் .






5 - செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குறியே !

வண்டமிழ் நாட்டு வாலிபனே , வேட்டி கட்ட வெட்குறியே !