Tuesday, 10 April 2018

ஆத்மா





   கீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியாமற் போகவே, முக்கிய பாத்திரமாகிய கிருஷ்ணனே நூலியற்றியவர் எனத் தவறாகவோ வேண்டுமென்றோ சொல்லப்பட்டிருக்கலாம்; அல்லது கிருஷ்ணன் என்ற பெயருடைய ஒரு மனிதர் பிற்காலத்தில் அதை எழுதியிருக்க, நாளடைவில் பகவானே போதித்தான் என நம்பப்பட்டிருக்கலாம். எல்லா நூல்களும் மக்களின் படைப்பே. ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலைத் தமிழ்ப் புலவர் இறையனார் புனைந்திருக்க, இறைவன் தருமிக்குப் பாடித் தந்ததாய்க் கதை கட்டப்பட்டதல்லவா?

   ஆத்மா பற்றிய கருத்துகள் கடவுளால் புதியனவாய்க் கூறப்பட்ட தத்துவங்கள் என்பது தவறு; அவை பழங்காலத்தில் பல நாடுகளில் பரவலாய் நம்பப்பட்டவையே.

  கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, ரோமானியப் புகழ்பெற்ற வழக்குரைஞர் சிசரோ முதலியோர் அக்கருத்துகளைப் பரப்பினார்கள். இறந்தோரின் ஆத்மாக்கள் நிலத்தடியில் நிரந்தரமாய் வாழ்வதாக ரோமானியர் நம்பியதோடு அவற்றை வழிபடவுஞ் செய்தனர். இறந்த பின்பும் வாழ்வுண்டு என்னும் நம்பிக்கையால்தான் எகிப்தியர் பிணங்களைப் பத்திரப்படுத்தினர்.

  ஆத்மா அழிவற்றது என்ற கருத்துத் தொல் மாந்தரிடம் ஏன் தோன்றிற்று? அன்புக்குரியவர் மறைந்தமையால் வாட்டம் சோகத்தை, பிரிவுத் துன்பத்தை, “அவர் உடலால் அழிந்தாலும் ஆத்மாவால் வாழ்கிறார்” என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டனர். கனவுகளில் அவ்வப்போது அவர்கள் தோன்றியமை அந்த நம்பிக்கைக்கு அடிப்படை ஆயிற்று. நம் காலத்தில் கூட, “நேற்றுக் கனவில் அப்பா வந்தாங்க, வீட்டை விக்க வாணாம்னு சொன்னாங்க” என்று தந்தையைச் சந்தித்த மகிழ்ச்சி முகத்தில் பரவ, மகன் கூறுவதைக் கேட்கிறோம்.

   ஆத்மா பற்றிய கருத்துகளை எதிர்த்த அறிஞர்களும் வாழ்ந்தார்கள். ஆத்மா அழியக் கூடியதே என்றவர்களுள் குறிப்பிடற்குரியவர்கள் ஜூலியஸ் சீசர், ரோமானிய எழுத்தாளர் லுக்ரியஸ், கிரேக்க அறிஞர் எப்பிக்யூரஸ்.

   சாவுக்குப் பின்பு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடும் என்று கருதியோரும் இருந்தனர். ரோமானிய எழுத்தாளர் செநேக்கரா இக்கொள்கையர்.

  உயிர் ஓர் உடலினின்று வேறு உடலில் புகும் என்று எகிப்தியர் நம்பினர். இதை ஆதரித்துக் கிரேக்கத்தில் பரப்புரை செய்தவர் கணக்கு மேதை பித்தகோரஸ். இக்கொள்கை ஆங்கிலத்தில் metempsychosis என்று கூறப்படுகிறது. (கிரேக்க மொழியில் meta – மாற்றம்; empsuke - உயிரில்.) ஆன்மாவை லத்தீன் அனிமா (anima) என்கிறது.
*********
(படம் உதவி - இணையம்)

Wednesday, 28 March 2018

நூல்களிலிருந்து – 17





  

தமிழின் முதல் புதினமெனப் போற்றப்படும்பிரதாப முதலியார் சரித்திரம்மயிலாடுதுறை நீதிபதி (முன்சீப்) .வேதநாயகம் அவர்களால் 1876-ல் இயற்றப்பட்டது. அதிலிருந்து ஒரு பகுதியைப் பதிகிறேன்.

  அதிகாரம் 1. இறுதி: பேசுபவர் கதாநாயகர் பிரதாபர்.

  என் தகப்பனார் ஒரு உபாத்தியாயரை நியமனஞ் செய்து எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டஞ்செய்தார். எங்கள் கிராம காரியங்களையும் குடும்ப காரியங்களையும் என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப் பார்த்துவந்தபடியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும், தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமான போது படிக்கிறதென்றும், படிக்க இஷ்டமில்லாத போது நான் விளையாடுகிறதென்றும் என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக்கூடாதென்றும் ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினேதினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம் சரியாய் நடக்கவில்லையென்று சில உபாத்தியாயர்கள் நீக்கப்பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல் வா போ என்று ஏக வசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப்பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாச முழுவதும் பிரயாசப்பட்டுச் சொல்லிக்கொடுத்தும் சம்பளம் வாங்குகிற சமயத்தில் சம்பளமில்லாமல் நீக்கப்பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்திவந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம்.

  இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி, ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்துகொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, “நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனிமேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடந் தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்” என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபாத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாத போது உபாத்தியாயர் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார். நான் பாடத்தைச் சரியாய்ப் படித்த நேரமுமில்லை, கனகசபை அடிபடாத நேரமுமில்லை.

  ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது அவன் அழுதுகொண்டு, “ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்யவில்லையே! இவ்வளவு பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்” என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி என் கண்ணில் ஜலந் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன், அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக, அவனுக்கு அடிவாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?

Monday, 12 March 2018

மாவீரர் இருவர்



   மகத்தான சாதனை புரிந்த இருவரைக் கிரேக்கப் புராணத்தில் சந்திக்கிறோம்!

Heracles

  ஒருவன் Heracles (லத்தீனில் Hercules). தலைமைக் கடவுள் Zeus-க்கும் மானிடப் பெண்ணொருத்திக்கும் பிறந்த அவனுடைய 12 சாகசங்கள் பரவலாகத் தெரிந்தவை; ஆனால் அவனது முடிவு? சிலரே அறிவர்.

  அவனுடைய மனைவி Deianira–வைக் கவர்வதற்கு முயன்ற Nessus என்பவனை Heracles கொன்றான். அவன் சாகும்முன்பு, Heracles-க்குத் தெரியாமல், தன் ரத்தந்தோய்ந்த அங்கியை அவளிடந்தந்து, “அற்புத சக்தியுடையது; எப்போதாவது உன் கணவன் உன்னைப் புறக்கணித்தால், இதை உடுத்திக் கொள்ளச்சொல்; மனம் மாறுவான்” என்றான். அவள் பத்திரமாய்ப் பாதுகாத்துவந்தாள்.

  சில ஆண்டு கழித்து, Heracles வேறு பெண்ணை மணக்க முனைந்தபோது, Deianira அதைத் திருமணப் பரிசாய் அனுப்பிவைத்தாள்; அணிந்ததுதான் தாமதம், அதில் தடவியிருந்த கொடிய நஞ்சு வெகு விரைவாய் உடல் முழுதும் பரவித் தாங்கொணா வேதனை தரவே, கழற்ற முயன்றபோது, சதையும் பிய்த்துக் கொண்டு வந்த்து. தன் முடிவு நெருங்கிவிட்டதையுணர்ந்த Heracles மரக்கட்டைகளைத் தானே அடுக்கிக் கொளுத்தி மேலேறிப் படுத்தான். தீ நாக்குகள் தீண்டும் முன்பு Zeus தோன்றி மீட்டு அழைத்துச் சென்றார்.

  மற்றவன் Perseus.

Perseus

  அரசன் Aerisius-இன் மகள் Danae. இவள் பிறந்தபோது Appollo கடவுளின் பூசாரி அருள்வாக்கு சொன்னான், “இவளது மகன் தாத்தாவைக் கொல்வான்!” என்று.

  அவளைக் கன்னியாகவே வைத்திருக்கத் திட்டமிட்ட தந்தை ஒரு கோட்டையில் அடைத்துப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தான்.

  Zeus அவளை மனைவியாக்கிக் கொண்டார். Perseus பிறந்தான். கெட்ட செய்தியைக் கேள்விப்பட்ட வேந்தன் ஒரு மரப்பெட்டி தயாரித்துத் தாயையும் சேயையும் அடைத்து ஆற்றில் விட்டான்.
  
  ஒரு தீவில் தரைதட்டிய பெட்டியைக் கண்ட Dictys இருவரையுங் காப்பாற்றிப் பேணிவந்தான். தீவின் கொடுங்கோலன் Polydectes–இன் காமப்பார்வை Danae மீது படிந்தது. அவளை அவன் மணக்க விரும்பியபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் Perseus–ஐ ஒழித்துக்கட்ட எண்ணி Medusa–வின் தலையைக் கொண்டுவரும்படி அவனுக்குக் கட்டளையிட்டான்.

  அவன் திரும்பிவர மாட்டான் என்பது நிச்சயம். சாமான்ய வேலையா அது?

  பின்னிப் பிணைந்து தொங்கும் பாம்புகளாகிய கூந்தலும் நீண்ட வலிய பற்களும் உறுதிவாய்ந்த பருந்து நகங்களும் பொன் இறகுகளுங்கொண்ட பயங்கர அரக்கி Medusa. இவையல்லாமல் அபூர்வ சக்தியொன்று அவளுடைய கண்களுக்கு இருந்தது; பார்ப்பவரைக் கல்லாக்கிவிடும்!

  கடவுள் Athena, முகம் பார்க்குங் கண்ணாடி போல் பளபளப்பாக இழைக்கப்பட்ட கேடயத்தை அவனுக்களித்தது. அவன் Medusa–வின் கண்களை நேரிற் பார்க்காமல், கேடயத்திற் பிரதிபலித்த அவளது தலையைக் குறிவைத்து வெட்டியெடுத்துக் கொண்டான். அவளது சடலத்திலிருந்து வெளிப்பட்ட பறக்கும் Pegasus குதிரை மீது தாவியேறித் திரும்பி வருகையில் ஒரு பாறையில் பிணைக்கப்பட்டிருந்த மங்கை Andromeda–வைக் கண்டான். இளவரசியாகிய அவளை அவளது தகப்பன், மக்களையும் மாக்களையும் கொன்று தின்று அட்டூழியம் புரிந்துகொண்டிருந்த கடல் பூதத்துக்குப் பலியாய்க் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்தப் பூதத்தை Perseus கொன்று அவளை மணந்துகொண்டான்.

  Polydectes ஒழிந்தான், Danae பிழைத்தாள் என்பதைச் சொல்லவேண்டுமா?

  பின்னாளில், ஒரு விளையாட்டுப் போட்டியின்போது, Perseus விட்டெறிந்த இரும்பு வட்டு முதியவரொருவர் மேல் விழுந்து வாழ்வை முடித்தது; அவர் அவனது தாத்தா!

  Perseus, Andromeda, Pegasus என்று பெயர் சூட்டப்பட்ட விண்மீன் கூட்டங்கள் சப்தரிஷி மண்டலத்தின் அருகில் கண்சிமிட்டிக் கொண்டுள்ளன. சற்றுத் தொலைவில் Heracles.
  
(படங்கள் உதவி - இணையம்)

Wednesday, 10 January 2018

ஏன்?



   5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே! இதோ, பக்கத்தில், நீந்திக் கடக்கக்கூடிய சிறு கடலில் உள்ள தீவைத் தமிழர்கள் படித்துத் தங்கள் நாட்டுடன் சேர்த்திருந்தால் இன்று அங்கே நாம் சிறுபான்மையினராய் அவல வாழ்வுக்கு ஆளாகி அல்லல்பட நேர்ந்திராது அல்லவா? அப்படிச் செய்யாதது ஏன்?

   முடியாமைதான் காரணம்.

   சிங்களர்கள் சமமான வீரர்கள். அவர்கள் தமிழகத்துள் நுழைந்து சில பகுதிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

   நூல்: பாண்டியர் வரலாறு. ஆசிரியர்: சதாசிவ பண்டாரத்தார். பக். 79, 80;

   “இலங்காபுரித் தண்டநாயகன் பாண்டி நாட்டின் இராமேச்சரம், குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டு வந்த சிங்களப் படைக்கும் குலசேகரப் பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. இலங்காபுரித் தண்டநாயகன் பெருவெற்றி எய்தி, மதுரை மாநகரைக் கைப்பற்றினான். கீழை மங்கலம், மேலை மங்கலம், தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களும் அவன் வசமாயின.

   பாண்டியனுக்கு உதவியாய் வந்த சோழர் படைக்கும் சிங்களப் படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலிய ஊர்களில் நடைபெற்ற பெரும்போர்களில் சிங்களர் வென்றனர். இவர்களின் வெற்றி அந்நாள்களில் சோழ மண்டலத்திலும் பிற நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டது என்பது காஞ்சி மாநகரை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது.”

   வாசித்தீர்களா? பாண்டியன், சோழன் இருவரும் சேர்ந்தபோதிலும் தோற்றனர். பாண்டிநாடு முழுதும் இலங்கையின் பகுதியாகாமல் தப்பித்ததே தம்பிரான் புண்ணியம்! இந்த அழகில் இலங்கை மீது நாம் படையெடுப்பதாவது, கைப்பற்றுவதாவது!

   என்றாலும் சுமார் நூறு ஆண்டுக்குப் பின்பு, பாண்டியர் படை இலங்கை சென்று பல பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கி நகரங்களைக் கொள்ளையடித்து சுபகிரி என்னும் நகரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றியது. இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும்பொருளை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பிற்று. (மேற்படி நூல். பக். 109).


   உச்சக்கட்டச் சாதனை அவ்வளவுதான். முழுத்தீவையும் வசப்படுத்தப் போதிய படை வலிமையில்லை; கிடைத்த சிறு பகுதியையாவது காலனியாக்குவதற்குத் தேவையான வசதிகளோ organizing திறமையோ இல்லாமற் போயின. 

(படம் உதவி இணையம்)