Wednesday, 16 May 2018

ஔவை சு. துரைசாமி


நூல்களிலிருந்து – 18

  ஔவை சு. துரைசாமி

(பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானவர்களுக்கு நிகரான பெரும்புலவர் நம்மிடையே வாழ்ந்த ஔவை சு.துரைசாமி பிள்ளை. அவரது வாழ்க்கை வரலாறு மறைமலைநகர் காலஞ்சென்ற புலவர் தி.நா.அறிவு ஒளி 1998-இல் எழுதிய “தமிழறிஞர்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைச் சுருக்கிப் பதிகிறேன்.)



  திண்டிவனத்துக்கு அருகில் ஔவையார்குப்பம் என்னுஞ் சிற்றூர் உள்ளது. அவ்வூரில் திரு. சுந்தரனார் அவர்களுக்கும் திருவாட்டி சந்திரமதி அம்மையாருக்கும் 5-9-1902-இல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், அதுவே நம் ஔவை; மற்றது பெண், பெயர் பூமாதேவி.

  திரு.சுந்தரனார் ஊர்க் கணக்கராய்ப் பணியாற்றினார். தமிழில் ஆர்வமும் அறிவும் வாய்ந்தவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள் நூல்கள் பாடியுள்ளார்.

  துரைசாமி தம் பெற்றோர்க்கு ஐந்தாவது குழந்தை. உள்ளூரில் தொடக்கக் கல்வி முடித்துத் திண்டிவனம் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார். அப்போதே தமிழில் ஆர்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார். வேலூர் ஊரிசு கல்லூரியில் மேற்படிப்பு முடித்த பின்பு தஞ்சைக் கரந்தையில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமும் கரந்தைப் பாவரசர் வேங்கடாசலம் அவர்களிடமும் கழக இலக்கியங்களையும் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் கற்றார். ஆழ்ந்த புலமை பெற்றார். சிவநெறிக் கோட்பாட்டுக் கல்வியைத் திரு. கந்தசாமி தேசிகர், தவத்திரு. வாலையானந்த அடிகள் ஆகியோரிடம் கற்றுத் தெளிந்தார். 1930-இல் சென்னைப் பல்கலைக் கழகப் புரவலர் பட்டம் பெற்றார்.

  காவிரிப் பாக்கம், செங்கம், செய்யாறு, போளூர் ஆகிய ஊர்களில் தமிழாசிரியராக இருந்து நனிசிறப்பாகக் கற்பித்தார்.

  கற்றல், கற்பித்தல், நூலாராய்தல், நூலியற்றுதல் என்பன வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தன.

  கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியிற் பணியாற்றிய பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சேர்ந்தார். அங்கே ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ நூல் ஆராய்ந்து வெளியிட்டார். ஐங்குறுநூறு நூலுக்கு மிக அருமையான விரிவான விளக்கவுரை எழுதிப் பிரசுரித்தார்.

  உரை எழுதுவது எளிய செயலன்று. ஒரு நூலை முறையாகக் கற்றுத் தெளியவேண்டும். அந்நூலின் நுட்பமெலாம் ஆராய்ந்தறிய வேண்டும். பொருள் நுட்பம், இலக்கண அமைதி, மரபு, குறிப்புப் பொருள், சொல்நயம், சூழ்பொருள், நூலாசிரியரின் ஆற்றல், நூல்சார் ஏனைய செய்திகள் ஆகிய யாவற்றையும் நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்து தெளிவாக உணர்த்த வேண்டியது உரையாசிரியரின் அரும்பணியாகும்.

  திரு. சு.வையாபுரியார் நற்றிணை ஓலைச்சுவடியை ஔவை அவர்களிடம் அளித்து நன்கு ஆராய்ந்து உரையெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஔவை அவ்வேட்டினைப் பிற ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். மூவாயிரத்துக்குக் குறையாத பாட வேறுபாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தக்க பாடம் எதுவெனத் தெளிந்து அருமையான விளக்கவுரை இயற்றி இரு பெரும் தொகுதிகளாக வெளியிட்டார்.

  சிவனிய நூல் ஞானாமிர்தம் என்பது. இதன் பாடல்கள் இரும்புக் கடலை போன்றவை. இந்நூலையும் ஆய்ந்து ஔவை விளக்கவுரை எழுதினார்.

  புறநானூறு ஓலைச் சுவடியொன்றை ஆராய்ந்தபோது அதற்கு முன்பு வெளிவந்த புறநானூற்று நூலில் காணக் கிடைக்காத பாடத் திருத்தங்கள், பாட வேறுபாடுகளையறிந்து ஆராய்ச்சி உரையெழுதினார். 1947-இல் புறநானூறு முதற்பகுதியும் (1 முதல் 200 செய்யுள்) 1951-இல் இரண்டாம் பகுதியும் வெளிவந்தன.

  ஔவை அவர்களுக்குக் கல்வெட்டு, வரலாறு, தமிழக ஊர்ப் பெயர்கள் குறித்த ஆராய்ச்சியும் இருந்தமையால் கழகக்கால ஊர்கள், இடங்களைத் திட்டமாக அறிந்து தெளிவிக்க முடிந்தது.

  பதிற்றுப் பத்துக்கு உரை எழுத முற்பட்டபோது மலையாள நாட்டில் சுற்றுலாச் சென்று வரலாற்றுச் சிறப்பு உடைய இடங்களை நேரிற் பார்த்தறிந்த பின்பே உரை இயற்றினார்.

  அவரது உரைச் சிறப்பு யாதெனில் சங்க இலக்கியப் பாக்களுக்கு வரைந்துள்ள முன்னுரை எளிமையும் அருமையும் திட்பமும் நுட்பமும் வாய்ந்து பொலிவதேயாம். திணை, துறைகளை விளக்குவதும், தக்க மேற்கோள்களை ஆள்வதும், உணர்ச்சி பொங்க உரை விளக்கம் வழங்குவதும் சொல் நயம், ஆட்சியருமைகளைச் சுட்டுவதும் இவர் உரை மரபாம்.

  மதுரைத் தியாகராசர் கல்லூரியிற் பேராசிரியராய் இணைந்த பின்பு, தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப் புலவர், நந்தா விளக்கு முதலிய ஆய்வுக் கட்டுரைத் தொகுதகள், சேர நாட்டு வேந்தல் என்னும் வரலாற்று நூல், சிந்தாமணி ஆராய்ச்சி, சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி, யசோதர காவிய உரை ஆகிய நூல்களை இயற்றிய ஔவை An introduction to the study of Thirukkural என்ற ஆங்கில நூலும் எழுதியிருக்கிறார்.

  1968-இல் பணி ஓய்வு பெற்ற பின்பு முழுநேரத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டார். ஒரு நாளில் 100 முதல் 100 பக்கம் வரை சோர்வின்றி எழுதியமையால் கை நரம்புகள் வலிவிழந்து எழு ஆற்றாத நிலை ஏற்பட்டது. தாம் சொல்லச் சொல்ல அவற்றை எழுதுவதற்கு உதவியாளரை நியமித்துக் கொண்டு தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

  மதுரைத் திருவள்ளுவர் கழகம் அளித்த “உரை வேந்தர்”, தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை வழங்கிய “சித்தாந்த கலாநிதி”, மதுரைப் பல்கலைக் கழகம் கொடுத்த “பேரவைச் செம்மல்” ஆகிய பட்டங்கள் பெற்ற ஔவை அவர்களுக்குக் கேடயம் அளித்தும் பாராட்டினர், 1969-இல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழி வழங்கப்பட்டது.

  சில நாள் உடல் நலிவுற்றிருந்த ஔவை சு.துரைசாமி 3-4-1981-இல் மதுரையில் இயற்கை எய்தினார். தமிழ்க்கென வாழ்ந்து தாளாண்மைக்கு இலக்கியமாய்த் திகழும் உரைவேந்தர் வாழ்க்கை நிறைவாழ்வின் இலக்கணம்.

  பின்குறிப்பு: இவரது புதல்வர்களுள் ஒருவராகிய ஔவை நடராசன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராய்ப் பதவி வகித்தவர்.

Monday, 30 April 2018

மழை





  எண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்;

  மேகம் கடல் மட்டத்துக்கு இறங்கித் தண்ணீரைக் குடித்துவிட்டு மேலே போய் மழையைத் தருகிறது.

  அப்போது நான் கற்பனை செய்தேன், நடுக்கடலில் மேகக் கூட்டங்கள் படிந்து நீரை உறிஞ்சிக்கொண்டு பறந்து போவதாய்; அது இன்னமும் நினைவிருக்கிறது.

  கல்லாத என் பாட்டி, கேள்வியறிவால் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அவரது கருத்து நீண்ட நெடுங்காலமாய்த் தமிழரின் நம்பிக்கையாய்த் தொடர்ந்து நிலவிய ஒன்று என்பதைப் பிற்காலத்தில் நூல்களைக் கற்கையில் அறிந்தேன்.

   1.   புறநானூறு – பா. 161. (2-ஆம் நூற்றாண்டு)
நீண்டொலி அழுவம் குறைபட முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ
---------------- பெயல்கடன் இறுத்து.
உரை – தொடர்ந்து ஒலிக்கிற கடலின் நீர் குறையும்படி, மொண்டுகொண்டு விரைந்து செல்கிற மேகங்கள் வேண்டிய இடத்தில் திரண்டு மழையை முறையாய்ப் பெய்து.


   2.   சீவக சிந்தாமணி – பா. 32. (9-ஆம் நூற்றாண்டு)
--------- களிற்று ஈட்டம்போல்
கலங்கு தெண்திரை மேய்ந்து கணமழை
உரை – யானைக்கூட்டம் போன்ற மேகத்திரள்கள் அசைகிற தெள்ளிய அலைகளை எழுப்பும் கடலின் நீரை மேய்ந்து.

   3.   நன்னெறி – பா. 4 (17-ஆம் நூற்றாண்டு)
------ கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும்.
உரை – கடுமையான கடலின் நீரை அணுகி மேகமானது முகந்து மழையாக உலகுக்குத் தருகிறது.

நீர்தான் ஆவியாகி மேலே போய் மேக உருவெடுக்கிறது என்னும் உண்மை தெரிந்த பின்பு அந்த நம்பிக்கை தகர்ந்தது; ஆனால் மழை குறித்த வேறிரு மூடக்கருத்துகள் முற்றுமாய் நீங்கிவிடவில்லை.

   1.   மனித ஒழுக்கத்துக்கும் மழைக்கும் தொடர்புண்டு.  
   2.   மழையை மக்கள் வரவழைக்க முடியும்.

அ) வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு
(சிலப். அடைக்கலக்காதை. அடி 145)
உரை – மழை பொய்க்காமல் பெய்யும், வளம் குறையாது கற்புடைய மங்கையர் இருக்கிற நாட்டில்.

ஆ) நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. (மூதுரை – 10)
உரை – ஒரு நாட்டில் நல்லவர் ஒருவர் இருந்தாலே போதும், மழை பெய்யும்.

  சான்றோரும் கற்பரசிகளும் இல்லா நாடு உண்டா? அவர்களுக்காக மழை தவறாமல் பெய்யும் என்றால் எங்கும் வறட்சியே இருக்காது. உண்மை நிலை அதுவல்ல.

  சில சமயங்களில் பொய்த்துப் போய்ப் பஞ்சத்தை உண்டாக்குகிறது; வேறு சில சமயங்களில் அபரிமிதமாகப் பெய்து வெள்ளப் பெருக்கால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்படுத்துகிறது.

  கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
  எடுப்பதூஉம் எல்லாம் மழை

என்னுங் குறள் இந்த எதார்த்தத்தைப் பறை சாற்றுகிறது.

 ஆகவே மாந்தரின் நடத்தைக்கும் மழை பெய்வதற்கும் சிறு தொடர்பும் இல்லை என்பது கண்கூடு. இப்படியிருக்க, விவேக சிந்தாமணி விவேகமற்ற முறையில் கூறுகிறது;

    வேதம் ஓதிடும் வேதியர்க்கு ஓர்மழை
    நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை
    மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை
    மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!

   அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை
   வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை
   புருஷனைக் கொன்ற பூவையர்க்கு ஓர்மழை
   வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.

  கால அட்டவணை வகுத்துக்கொண்டு அதன்படியா மழை பெய்கிறது? தம் கருத்து சரிதானா என்பதைச் சிறிதும் எண்ணிப் பாராமல் எதையாவது எழுதுவது நம் முன்னோர் சிலருக்குப் பழக்கம்.

 ---------- கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

எனக் குறள் கூறுவது உண்மையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? காவிரியை எதிர்பார்க்க வேண்டாமே!

  தேவைப்படும் காலத்தில் மழையைக் கொண்டுவர எவராலும் இயலாது. கழுதைக்குத் திருமணம், கொடும்பாவி இழுத்தல், கழுத்தளவு நீரில் நின்று ஜபம், கூட்டுப் பிரார்த்தனை, பிடிலில் அமிர்தவர்ஷணி ராகம் வாசித்தல் முதலிய எல்லாக் கூத்துகளும் காலக் கேடாய் முடிந்தன.

  நடைமுறைக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் கருத்துகளையும் தலையைச் சுற்றித் தூக்கியெறிந்துவிட்டு சிந்தித்துச் செயல்படுவது சாலச் சிறந்தது.

Tuesday, 10 April 2018

ஆத்மா





   கீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியாமற் போகவே, முக்கிய பாத்திரமாகிய கிருஷ்ணனே நூலியற்றியவர் எனத் தவறாகவோ வேண்டுமென்றோ சொல்லப்பட்டிருக்கலாம்; அல்லது கிருஷ்ணன் என்ற பெயருடைய ஒரு மனிதர் பிற்காலத்தில் அதை எழுதியிருக்க, நாளடைவில் பகவானே போதித்தான் என நம்பப்பட்டிருக்கலாம். எல்லா நூல்களும் மக்களின் படைப்பே. ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலைத் தமிழ்ப் புலவர் இறையனார் புனைந்திருக்க, இறைவன் தருமிக்குப் பாடித் தந்ததாய்க் கதை கட்டப்பட்டதல்லவா?

   ஆத்மா பற்றிய கருத்துகள் கடவுளால் புதியனவாய்க் கூறப்பட்ட தத்துவங்கள் என்பது தவறு; அவை பழங்காலத்தில் பல நாடுகளில் பரவலாய் நம்பப்பட்டவையே.

  கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, ரோமானியப் புகழ்பெற்ற வழக்குரைஞர் சிசரோ முதலியோர் அக்கருத்துகளைப் பரப்பினார்கள். இறந்தோரின் ஆத்மாக்கள் நிலத்தடியில் நிரந்தரமாய் வாழ்வதாக ரோமானியர் நம்பியதோடு அவற்றை வழிபடவுஞ் செய்தனர். இறந்த பின்பும் வாழ்வுண்டு என்னும் நம்பிக்கையால்தான் எகிப்தியர் பிணங்களைப் பத்திரப்படுத்தினர்.

  ஆத்மா அழிவற்றது என்ற கருத்துத் தொல் மாந்தரிடம் ஏன் தோன்றிற்று? அன்புக்குரியவர் மறைந்தமையால் வாட்டம் சோகத்தை, பிரிவுத் துன்பத்தை, “அவர் உடலால் அழிந்தாலும் ஆத்மாவால் வாழ்கிறார்” என்று மனத்தைச் சமாதானப்படுத்திக் கொண்டனர். கனவுகளில் அவ்வப்போது அவர்கள் தோன்றியமை அந்த நம்பிக்கைக்கு அடிப்படை ஆயிற்று. நம் காலத்தில் கூட, “நேற்றுக் கனவில் அப்பா வந்தாங்க, வீட்டை விக்க வாணாம்னு சொன்னாங்க” என்று தந்தையைச் சந்தித்த மகிழ்ச்சி முகத்தில் பரவ, மகன் கூறுவதைக் கேட்கிறோம்.

   ஆத்மா பற்றிய கருத்துகளை எதிர்த்த அறிஞர்களும் வாழ்ந்தார்கள். ஆத்மா அழியக் கூடியதே என்றவர்களுள் குறிப்பிடற்குரியவர்கள் ஜூலியஸ் சீசர், ரோமானிய எழுத்தாளர் லுக்ரியஸ், கிரேக்க அறிஞர் எப்பிக்யூரஸ்.

   சாவுக்குப் பின்பு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடும் என்று கருதியோரும் இருந்தனர். ரோமானிய எழுத்தாளர் செநேக்கரா இக்கொள்கையர்.

  உயிர் ஓர் உடலினின்று வேறு உடலில் புகும் என்று எகிப்தியர் நம்பினர். இதை ஆதரித்துக் கிரேக்கத்தில் பரப்புரை செய்தவர் கணக்கு மேதை பித்தகோரஸ். இக்கொள்கை ஆங்கிலத்தில் metempsychosis என்று கூறப்படுகிறது. (கிரேக்க மொழியில் meta – மாற்றம்; empsuke - உயிரில்.) ஆன்மாவை லத்தீன் அனிமா (anima) என்கிறது.
*********
(படம் உதவி - இணையம்)

Wednesday, 28 March 2018

நூல்களிலிருந்து – 17





  

தமிழின் முதல் புதினமெனப் போற்றப்படும்பிரதாப முதலியார் சரித்திரம்மயிலாடுதுறை நீதிபதி (முன்சீப்) .வேதநாயகம் அவர்களால் 1876-ல் இயற்றப்பட்டது. அதிலிருந்து ஒரு பகுதியைப் பதிகிறேன்.

  அதிகாரம் 1. இறுதி: பேசுபவர் கதாநாயகர் பிரதாபர்.

  என் தகப்பனார் ஒரு உபாத்தியாயரை நியமனஞ் செய்து எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டஞ்செய்தார். எங்கள் கிராம காரியங்களையும் குடும்ப காரியங்களையும் என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப் பார்த்துவந்தபடியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும், தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமான போது படிக்கிறதென்றும், படிக்க இஷ்டமில்லாத போது நான் விளையாடுகிறதென்றும் என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக்கூடாதென்றும் ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினேதினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம் சரியாய் நடக்கவில்லையென்று சில உபாத்தியாயர்கள் நீக்கப்பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல் வா போ என்று ஏக வசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப்பட்டார்கள். ஒரு உபாத்தியாயர் மாச முழுவதும் பிரயாசப்பட்டுச் சொல்லிக்கொடுத்தும் சம்பளம் வாங்குகிற சமயத்தில் சம்பளமில்லாமல் நீக்கப்பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்திவந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம்.

  இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி, ஒரு உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்துகொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக்கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, “நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனிமேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடந் தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்” என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபாத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாத போது உபாத்தியாயர் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார். நான் பாடத்தைச் சரியாய்ப் படித்த நேரமுமில்லை, கனகசபை அடிபடாத நேரமுமில்லை.

  ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது அவன் அழுதுகொண்டு, “ஐயா! என் முதுகு ஒரு அபராதமும் செய்யவில்லையே! இவ்வளவு பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்” என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி என் கண்ணில் ஜலந் ததும்ப ஆரம்பித்தது. நான் ஒரு அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன், அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக, அவனுக்கு அடிவாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?