Wednesday, 10 September 2014

மனைவியே மணாளனின் இயக்குநர்

நான்  இந்தியிலிருந்து  மொழிபெயர்த்து விரிவுபடுத்திய  குட்டிக்கதை)


    இளமையில்  அரியணை   ஏறிய  மன்னனொருவன்  இல்லறத்தில்  ஈடுபட   விரும்பித்  தனக்குத்  தகுதியான  அரச  குமாரியைத்  தேட  முற்பட்டபோதுமுதிய  அமைச்சர்  கூறினார்:

  "வேண்டாம்  அரசரே,    திருமணத்துக்குப்  பின்பு    நீங்கள்  சுதந்தரமாகச்   செயல்படமுடியாதுஅரசியின்   ஆலோசனைப்படி  நடக்க  வேண்டியிருக்கும்.

---  எப்படிச்  சொல்கிறீர்கள்  அமைச்சரேஇவ்வளவு  உறுதியாக?

--- அதுதானே  வழக்கம்.

---  நான்  நம்ப  மாட்டேன்.

---  ஒரு  சோதனை  செய்து  பாருங்கள்;   உண்மை   புலப்படும்.

---  அப்படியே  ஆகட்டும்."

  வேந்தன்  ஆணையிட்டவாறுநகரின்  அரச  மற்றும்   பிரபு  குடும்பத்தாருள்  திருமணம்  ஆனவர்கள்   உரிய  காலத்தில்   அரண்மனையில்   கூடினார்கள். ஏறக்குறைய  ஐம்பது   பேர்.

  " நீங்கள்  எல்லாரும்   கலியாணம்  செய்துகொண்டவர்கள்  தானே?

---  ஆம்,   அரசே.

--- சரிஉங்களில்மனைவி  சொல்லே    மந்திரம்  என  நினைத்துஅவளுடைய   பேச்சைக்   கேட்டு   நடப்பவர்கள்  அனைவரும்   என்  வலப்பக்கத்தில்  வந்து  நில்லுங்கள்;   சொந்தமாகச்  சிந்தித்து   செயல்படுபவர்கள்  எல்லாம்,   இடப் பக்கம்  நில்லுங்கள்என்னை  ஏமாற்ற  முயல்பவர்   கடுந்  தண்டனைக்கு  ஆளாவார்."

    மளமள  என்று  வலப்பக்கம்  போய்   நிற்கத்  தொடங்கினார்கள்ஒருவன்  மட்டும்சிறிது  நேரம்   தயங்கிவிட்டுஇடப்புறம்  நின்றான்.   அரசனுக்கு  வருத்தம்ஆடவர்  சொந்த  புத்தி  இல்லாமல்  வாழ்கிறார்களே!   கொஞ்சம்  ஆறுதல்ஒருவனாவது சுதந்தரமாக  இயங்குகிறானே!

  அவனிடம்    சொன்னான்:

 "உன்னைப்   பாராட்டுகிறேன்;   நீ   எதையும்   உன்  அறிவுப்படி  யோசித்துத்   தானே  செய்கிறாய்?

 ---  இல்லை   மன்னா.

--- அப்படியானால்?

---   என்  மனைவி சொல்தான்  என்  வழிகாட்டி.

---   பின்   ஏன்  அவர்களோடு  சேரவில்லை?

---  கூட்டத்தில்   நிற்கக்  கூடாது  என்று  அவள்   சொல்லியிருக்கிறாள்."

                              ======================= 

(படம்: நன்றி இணையம்)

Thursday, 17 July 2014

நம் நாட்டில் அடிமைகள்




 முன்கால எகிப்திலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அடிமைகள் என ஒரு மக்கட்கூட்டம் வதைபட்டது என வரலாறு தெரிவிக்கிறது. நீதிநெறிக் கதைகளை இயற்றிய ஈசாப் ஒரு கிரேக்க அடிமை.

 பழங்கால யூதரிடமும் அடிமைகள் இருந்தமைக்கு விவிலியம் சான்று பகர்கிறது:

 பழைய ஏற்பாடு - உபாகமம் - அதிகாரம் 15.

 மோசே கூறியது: "உன் சகோதரனாகிய எபிரேய ஆணாகிலும் எபிரேய பெண்ணாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு ஆண்டு உன்னிடத்தில் சேவிக்க வேண்டும்; ஏழாம் ஆண்டு விடுதலை பண்ணி அனுப்பி விடுவாயாக.”

 அதே ஆகமம் - 21 ஆம் அதிகாரம்; இதுவும் மோசேயின் கூற்று:

 (போர்க் கைதிகளுள் ஒரு பெண்ணை விரும்பி மணந்துகொண்ட பின்பு) 

 "அவள் மேல் உனக்குப் பிரியம் இல்லாமற் போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பத்துக்குப் போக விடலாம்"

 ஆகவே மனித விற்பனை யூதர் சமுதாயத்தில் வழக்கமாய் இருந்தது.

 பண்டைய தமிழகத்திலும் அடிமைகள் இருந்தார்களா? நமக்கு வரலாறு இல்லாமையால், இலக்கியங்களைத் துருவ வேண்டியுள்ளது:

 1 -- தொல்காப்பியம் --- பொருள் 25:

   "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்"

என்பதில் அடியோர் என்னும் சொல் அடிமைகளைக் குறிக்கக்கூடும்.

  2 --  திருக்குறள் 1080:

    "எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
  விற்றற்கு உரியர் விரைந்து"

 பொருள் - பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டால் கயவர்கள் தம்மை உடனடியாக விற்றுக்கொள்வார்கள்.

 இதிலிருந்து மனிதர் தம்மை விற்றுக்கொண்டு, வாங்கியோர்க்கு அடிமைகளானது தமிழகத்திலும் உண்டு என்பது தெரிகிறது. கயவர் விரைந்து விற்றுக்கொள்வர் என்றதால், அல்லாதார் வேறு வழி இல்லாதபோது விற்றுக்கொண்டனர் என ஊகிக்கலாம்.

 ஒருவன் தன் தட்டுமுட்டுச் சாமான்களை விற்றபின்னும் முடை தீராவிட்டால், மனைவி மக்களையும் விற்றுவிட்டுக் கடைசியாய்த் தன்னை விற்றுக்கொள்வான். அதுவே இயல்பு; அரிச்சந்திரன் அப்படித் தானே செய்தான்? இந்தக் கதையிலிருந்து வட நாட்டிலும் தன்னை விற்றல் இருந்தது என அறிகிறோம். ஆரியர்கள் தம் அடிமைகளைத் தாசர் என்று சுட்டினார்கள்.

 3 --  திருக்குறள் 220:

     "ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
   விற்றுக்கோள் தக்கது உடைத்து."

 இதன் விளக்கம்:  தாராளமான கொடையினால் வறுமை உண்டாகும் என்றால், தன்னை விற்றாயினும் அதை ஏற்கலாம்.

 மாந்த விற்பனை இருந்தது என்பதை இந்தப் பாடலும் உறுதி செய்கிறது.

 4 --  குறள் 608:

     "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
   அடிமை புகுத்தி விடும்"

 இந்தச் செய்யுள், சோம்பல் வயப்பட்ட மன்னன் தன் பகைவர்க்கு அடிமையாக நேரும் என்று எச்சரிக்கிறது. வேந்தர்களும் அடிமைகளாய் உழன்றனர்.

 சுந்தரமூர்த்தி நாயனார் கதை தெரியுமல்லவா? அவர் மண மேடையில் அமர்ந்து இருந்தபோது ஒருவர் வந்து, "நீ என் அடிமை;  திருமணம் புரிந்துகொள்ள உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அதற்கான சான்று காட்டி அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். தாம் பார்ப்பனராதலால் அடிமை ஆவதில்லை எனச் சுந்தரர் வாதாடிப் பார்த்தார் என்பதிலிருந்து மற்ற மூன்று வருணத்தார் மட்டுமே அடிமைகளாக இயலும் என்று அறிந்துகொள்கிறோம்.

  புதுச்சேரியில் அடிமை முறை வழக்கத்தில் நிலவியது என ஒரு பழைய பிரஞ்சுக் கட்டுரை தெரிவிக்கிறது. அதன் ஆசிரியர் ஒரு வெள்ளையர். அதில் காணப்படும் முக்கிய தகவல்கள்:

  பஞ்சக் காலத்தில் பெற்றோர் தம் குழந்தைகளை விற்றனர்; 1706 -இல் இரு சிறுமிகள் 10 பகோடாவுக்கும் 1719 -இல்  ஐந்து பெண்கள் 18 பகோடாவுக்கும் விலைபோயினர். ஐரோப்பியர் அடிமைகளை வாங்கிச் சேவகம் செய்யக் கற்பித்தார்கள். சில சமயங்களில் மொரீசியஸ் தீவுக்கு அனுப்பினர் எனினும் அடிமை இனம் என ஒரு மக்கட் கூட்டம் இந்தியாவில்  ஒருபோதும் இருந்ததில்லை.

 (பகோடா பழைய நாணயம்; அதன் இன்றைய மதிப்பு தெரியவில்லை)

  இந்தியாவில் பார்ப்பனர் தவிர மற்றவர்களுள் சிலர் அடிமைகளாய் விலை போயினர் என முடிவு செய்யலாம். இப்போதும் கொத்தடிமைகள் மீட்கப்பட்டார்கள் என்று அவ்வப்பொழுது நாளேடுகளில் செய்தி வெளியாகிறது;  அடிமை முறைக்கு ஆயுள் நெடியது.

            =======================

 (படம்: நன்றி இணையம்)

    

Monday, 16 June 2014

துணுக்குக் கோவை


1 --  வான்கோழி --- இது அமெரிக்கப் பறவை;  16-ஆம் நூற்றாண்டில் அங்கே வளர்ப்புப் பறவை ஆயிற்று. அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி  நிலைத்த பின்பு, இங்கு அறிமுகம் ஆனது. இது 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம்.




எனவே, "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" என்று பாடிய  பிற்கால ஒளவையார் அப்போது வாழ்ந்தார் என முடிவு கட்டலாம்.

(மிளகாய், உருளைக் கிழங்கு முதலியவற்றையும் அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு ஐரோப்பியர்தான் கொண்டு வந்தனர்)

2 -- பித்தலாட்டம் -- ஏமாற்று வேலை எனப் பொருள்படும்.

பித்தலாட்டம், இரு வடமொழிச்சொற்களின் கூட்டு: பித்தளா + ஆடகம்.

 பித்தளாவைத் தமிழில் பித்தளை என்கிறோம். இது செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகம். ஆடகம் என்பது தங்கம்;  இரண்டும் ஒரே நிறமாக இருப்பதால், இதுவா அதுவா என ஐயப்பட இடம் உண்டு. இதைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழிகள், பித்தளையை ஆடகம் என்று சொல்லி ஏமாற்றினால், அது பித்தலாட்டம்.

3 -- மடையன் - இச்சொல்லுக்கு உரிய பொருள்: சமையற்காரன். கோவிலில் பிரசாதம் சமைக்கும் இடத்தை மடைப்பள்ளி என்கிறோம் அல்லவா?

சொல்லின் பழைய வடிவம் மடவன். மடமை என்னும் வேரிலிருந்து கிளைத்தது; வேறு கிளை: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை என்றால் அறியாமை என்று பலரும் அறிவர்.

      குறுந்தொகை

பா. 66   
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
(கொன்றை மரங்கள் மடமை உடையன)

 பா. 251:  
மடவ வாழி மஞ்ஞை
(மயில் கூட்டங்கள் அறியாமை வாய்ந்தவை)

இதே அர்த்தம் கொண்ட முட்டாள் என்ற வார்த்தை முற்றாள் என்பதன் மரு.

முற்று + ஆள் = முழுதும் ஆள், அதாவது முழுவதும் உடம்பு. மூளை இல்லை என்பது குறிப்பாகச் சொல்லப்படுகிறது.

 4 --  "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது" என்ற பழமொழியில் மூர்த்தி என்பதற்குச் சிலை என்று பொருள். (குறிப்பிட்ட கடவுளின்) சிலை சிறியது தான், எனினும் அதன் புகழ் பெரியது.

நாளடைவில், மூர்த்தியின் அர்த்தம் விரிவடைந்து, சாமியையே சுட்டுவதாய் மாறிற்று.

ராமமூர்த்தி - ராமன் ஆகிய கடவுள்.


    ++++++++++++++++++++++++++++++++++

Tuesday, 20 May 2014

பிழையான தகவல்கள்




1  --  சிலர்  கூறுவர்செய்தி என்று பொருளுடைய news  என்னும் ஆங்கிலச் சொல்,  north,  east,  west,  south  ஆகியவற்றின் முதல் எழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது எனவும் நான்கு திக்குகளிலிருந்தும் செய்திகள் வருவதால் அந்தச் சொல் மிகப் பொருத்தமானது எனவும்.

    அது ஆதாரம் அற்ற கூற்று.

  புதிய என அர்த்தம் தரும் niwe  என்னும் ஆங்கிலோ சாக்சன் மொழியின் வார்த்தையிலிருந்து உருவானது new  என்று அகராதி தெரிவிக்கிறதுஇதன் இறுதியில் சேர்ந்து news   ஆனது.

  செய்தியைக் குறிக்கிற பிரஞ்சுச் சொல்,  "நுவேல்" (nouvelle);  இதற்கும் புதிய என்பதே பொருள்.



 2 --  சதுரங்க விளையாட்டைச் சுட்டும் ஆங்கிலச் சொல் chess;   இந்த வார்த்தை எப்படி உருவாக்கப்பட்டது என்று ஒரு வார இதழில் அண்மையில் படித்தேன்அதில் எழுதப்பட்டிருந்தது:

      "சதுரங்கக் காய்களின் பெயர்கள் carts,  horses, elephants, soldiers;  இவற்றின் முதலெழுத்துகளைச் சேர்த்து chess  என்கிறோம்"

    இது தவறான தகவல்.

   1  -  காய்களுள் முக்கியமானவை ராஜாவும் ராணியும்ஆங்கிலத்தில் king,  queen;  இவற்றின் முதல் எழுத்துக்களான k -ஐயும் q - ஐயும் விட்டுவிட்டுப் பெயர் வைப்பார்களா?

    2  -  carts  முதலான நான்கு சொற்களும் எந்தக் காலத்திலும் பயன்பட்டதில்லை. சரியான பெயர்கள்,  rooks,  knights,  bishops,  pawns ஆகியவைதான்இவற்றின் எதன் முதலெழுத்தும் chess- இல் இல்லை.

   3  -  அந்த விளையாட்டின் பழைய பிரஞ்சுப் பெயர் esches ;  இதிலிருந்தே chess  என்னும் சொல் தோன்றிற்று. (இப்போது பிரஞ்சில் echecs  என்கிறார்கள்).
                                         =======================