திருமதி மகாதேவி வர்மா இந்தியில் இயற்றிய கவிதை ஒன்றின் தலைப்பு : ஸூக்கா சுமன் = உலர்ந்த மலர். அதை அம் மொழியிலிருந்து நேரடியாய்த் தமிழுக்குக் கொண்டுவந்தேன். அது 2010 ஆகஸ்ட் மஞ்சரியில் வெளிவந்துள்ளது.
அது இது:
மொட்டாய் இருந்தனை குழவிப் பருவத்தில்
ஏ உலர்ந்த பூவே!
முறுவலித்தாய் காற்று உன்னைத்
தன் மடியில் விளையாடச் செய்த போது
மென்மை மிகு எழில் மலராய் முழுவதும் நீ விரிந்தவுடன்
மது தன்னை அவாவி வட்டமிட வந்தது வண்டுக் கூட்டம்!
உறங்குவித்தது உன்னைத் தாலாட்டுப் பாடி.
தோட்டக்காரரின் கவனிப்பு மகிழ்வித்தது உன்னை.
பெருமிதமுடன் வீற்றிருந்தாய் கேளிக்கையில் ஈடுபட்டு.
கவனத்தில் இருந்ததா அப்போது இந்த இறுதிக் காட்சி?
காய்ந்துபோய்ச் சிதறிக் கிடக்கிறாய் மண்மீது தற்காலம்.
வாசனையும் மென்மையும் ஒருங்கே இழந்தாய்.
வாடிப் போயிற்று உன்றன் வனப்பு முகம்.
வருவதில்லை சந்திக்க வண்டாகிய காதலன்.
வைகறையில் வாய்த்த செந்நிறத்தைக் காணோம்.
எல்லாத் தேனும் மணமும்
தந்துவிட்டாய் ஒரே நாளில் தானமாய்.
வள்ளல் மலரே வருந்துவார் யார் உனக்காக?
கொள்ளாதே வேதனை.
இன்பத்தை நிரந்தரமாய்
யாருக்குத்தான் அளிக்கிறது உலகம்?
யாவருமே தன்னலமி.
படைக்கிறான் இறைவன் அப்படி.
உன் போன்ற தியாகிக்கே வருந்தவில்லை உலகம்
எம் போன்ற சாரமிலா மாந்தர்க்கு இரங்குமோ?
No comments:
Post a Comment