அந்தக் காலம் என்பதற்கு வரையறை எதுவுமில்லை. 2000 ஆண்டுக்கு முற்பட்டதும் அந்தக் காலந்தான். நூறு ஆண்டிற்கு முந்தியதும் அந்தக் காலமே. நான் குறிப்பிடுவது என் 6 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தை. (1932-1942)
அப்போது தமிழர்கள் சாதி வாரியாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். (அந்த வாழ்க்கை முறை எப்போது தொடங்கியதோ தெரியாது). ஊர்களில் அக்ரஹாரம், செட்டித்தெரு, வெள்ளாழத்தெரு (வேளாளர் தெரு), கம்மாளர் வீதி, கொசத் (குயவர்) தெரு, வலைத் (வலையர்) தெரு, எடத் (இடையர்) தெரு என்று அவரவர் வாழும் பகுதிகள் பெயர் பெற்றிருந்தன. பலரும் கலந்து வாழ்ந்த பொதுத் தெருக்களும் உண்டு.
சிறுவர்கள் தங்கள் பகுதியில்தான் விளையாட வேண்டும். பள்ளிகளில் எந்த வேறுபாடும் அறியாமல் பழகி நண்பர்களாகிக் கூடி விளையாடுகிற பிள்ளைகளுள் சிலர், விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு ஏவாள் ஆசைப்பட்டது போல, வேறு தெருக்கூட்டாளிகளுடன் விளையாட ஆர்வங்கொண்டு அவர்களின் தெருவுக்கு எப்போதாவது போவதுண்டு. அப்போது மிக்க எச்சரிக்கை தேவை! நமது வீதிப் பெரியவர் யாராவது கடைகண்ணிக்குப் போகவோ வேறு காரணமாகவோ அங்கு வந்தால் அவரது கூர்மையான பருந்துப் பார்வையில் சிக்காமல் ஒளிந்துகொண்டு தப்பிக்கவேண்டும். விளையாட்டு மும்முரத்தில் பெரும்பாலும் அஜாக்கிரதையாய்த்தான் இருந்துவிடுவோம். அவர் தவறாமல் நம்மைக் கவனித்து அடையாளங்கண்டு, "டேய்! நீ வீரப்பிள்ளை மகனாச்சே! இங்கே வந்திருக்கியா? ஒங்க அப்பாகிட்டே சொல்றேன்" அன்று முன்னறிவிப்பு கொடுத்து முடிக்குமுன்பே நாம் எடுக்கிற ஓட்டம் வீடு வந்துதான் நிற்கும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்பதை அவர் நிரூபித்தே தீர்வார். தாம் துப்பறிந்து கண்டுபிடித்த விஷயத்தை அன்றைய தினமே, சூட்டோடு சூடாய், மெனக்கெட்டு, அக்கறையுடன், மெய் வருத்தம் பாராமல், வீடு தேடிவந்து சொல்லிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார். அதன் விளைவால் செமத்தியான அடி விழும் என்பது சர்வ நிச்சயம்.
சாதிப் பெயரால்தான் மக்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள்.
"நமஸ்காரம், பத்தரே, சவுக்கியமா இருக்கீங்களா?"
"இருக்கேன், முதலியாரே, ஒங்க புண்ணியத்திலே."
"கடவுள் புண்ணியம்னு சொல்லுங்க"
என்பது அந்தக் காலத்து வழக்கமான நலம் விசாரிப்பு.
"செட்டியார் எப்ப கடை தொறப்பார்?", "ஒடையாரிடமிருந்து தகவலே இல்லை", "ஒங்களைத் தேடிக்கொண்டு புள்ளே வந்தார்" என்றுதான் எல்லாரும் பேசிக்கொண்டனர். "எந்தப் புள்ளே?" என்று சில சமயம் கேட்க நேரும். அப்போதுதான், "துரைசாமி பிள்ளை" என்று பெயரைச் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கும். யாவர்க்கும் மேல் சாதியாரான பிராமணர்களைப் பற்றி, "அய்யர் வந்தார், அய்யங்கார் வரவில்லை" என்று படர்க்கையில் கூறலாமே ஒழிய, நேரில் பேசும்போது, 'சாமி' என்றுதான் விளிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டவர்கள் நாயுடு, நாயக்கர், முதலியார் என்றுதான் பேசினார்கள், ஏடுகளில் எழுதினார்கள். பி. வரதராஜுலு, ஈ.வே.ராமசாமி, திரு.வி.கல்யாணசுந்தரம் என்று யாரும் கூறவில்லை.
முன்பின் தெரியாதவர்களின் சாதியை அறிந்துதான் பழகினார்கள். "நீங்கள் எந்த சாதி?" என்றோ "நீங்கள் எந்த வர்ணம்?" என்றோ கேட்பது அநாகரிகமாய்த் தோன்றவில்லை. நான் இன்ன சாதி எனப் பதிலளிக்கவும் கூச்சமில்லை.
திருமணம் முதலிய விசேஷங்களுக்குப் பெரும்பாலும் சொந்த சாதிக்காரர்களையும் சிற்சில மேல் வகுப்பாரையும் அழைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்குப் போகிற மேல் சாதியார் அங்கே உண்ணமாட்டார்கள்; எதுவும் பருகவும் மாட்டார்கள்.
எங்காவது தொலைதூரம் நடந்து வியர்த்து விறுவிறுத்துப் போன நிலைமையில் தாகத்தால் தவிக்கும்போது வழியிலுள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்று சாதி பேதம் இன்னமும் மனத்தில் வேரூன்றாத பருவத்துச் சிறுவர்கள் சொன்னால் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் பதில் :
"அவங்க என்ன சாதியோ? அங்கெல்லாம் தண்ணி கேக்கக்கூடாது" என்பதுதான்.
உயிர் போனாலும் போகலாம், உயர் சாதித் தன்மைக்குக் களங்கம் வரலாமோ?!
(ஒரு நாள் அண்டை வீட்டுப் பையன் என்னிடம், "ஒங்க ஆத்தா இன்னைக்கு எங்க வூட்டுலே காப்பி குடிச்சாங்க" என்று சொன்னபோது, "இது ஒரு சேதியா? இதை வந்து சொல்கிறானே!" என்று வியந்தேன். பின்புதான் தெரிந்துகொண்டேன் நாங்கள் அவர்களை விட மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று.)
மிக்க கீழ் சாதியார் குடிக்க நீர் கேட்டால், வாயருகே இரு கைகளையும் சேர்த்து அவர்கள் குழியாய்க் குவித்துக் கொள்ள, அந்தக் குழியில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அவர்களைக் காட்டிலும் ஓரளவு சாதியால் மேம்பட்டவர்களாயின் பித்தளைச் சொம்பிலே நீர் தந்து அவர்கள் எச்சில் படாமல் தூக்கிக் குடித்து விட்டுக் கீழே வைத்த பாத்திரத்தின் மீது கொஞ்சம் நீர் தெளித்துப் புனிதமாக்கித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்!
உணவகம் நடத்துவது பிராமணர்களின் ஏகபோக உரிமை. (மற்ற சாதியார் நடத்தினால் யார் போவார் சாப்பிட?) நடேசய்யர் ஓட்டல், ராமய்யர் காப்பி கிளப், காளியாக்குடி அய்யர் ஓட்டல் என்று பெயர் வைத்திருப்பார்கள். பொதுவான பெயராக ஆரிய பவன், நடராஜ விலாஸ் என்றெல்லாம் இருந்தால் "பிராமணாள் ஓட்டல்" என்கிற கூடுதல் தகவலை விளம்பரப்பலகை தெரிவிக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் "பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்றெழுதி வைத்துள்ள மறைவிடத்தில் அவர்கள் மட்டும் நுழைவார்கள். அவர்கள் சாப்பிடுவதை பிற சாதியார் பார்க்கக் கூடாது என்பது எழுதப் படாத சட்டம். (பிராமணர்-கள்-சாப்பிடுமிடம் என்று சிலர் கிண்டல் செய்வதுண்டு!)
பலகாரமோ, சோறோ வாழையிலையில் பரிமாறப்படும். பரிமாறுகிறவர்களிடம், "சாமி, எனக்கு ரெண்டு இட்லி குடுங்க!", "எனக்குக் காப்பி கொண்டாங்க, சாமி!" என்று கேட்கவேண்டும். உண்ட பின்பு எச்சில் இலையை நாமே மடக்கி எடுத்துப் போய் அதற்கான தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிக் கொள்ளவேண்டும். வெண்கல டம்ளர்களில் வழங்கும் காப்பியை வாயிற்படாமல் தூக்கிக் குடிக்க வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.
சாதிப் பிரிவினைகளை எதிர்த்து முற்போக்குச் சிந்தனையாளர்கள் மேடைகளில் பேசினார்கள்: ஏடுகளில் எழுதினார்கள். "நான் கவுண்டர், நான் மூப்பனார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தமிழன் என்று கூறுங்கள்" என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்,
“தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா” என்று பாடினார்.
"தமிழ் நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் ஒரு புறம் எழுந்தது. தமிழன், தமிழச்சி என்ற புதிய சொற்கள் பேச்சுப் புழக்கத்துக்கு வந்தன. மனதில் சாதியெண்ணம் நிறைந்திருந்தாலும் வெளிப்படையாய் அதைக் காட்டிக்கொள்ளும் வழக்கம் சிறிது சிறிதாய்க் குறையலாயிற்று. பெயருக்குப் பின்னால் சாதி குறிக்கும் சொல்லைச் சேர்த்து எழுதும் நடைமுறை மறையத் தொடங்கிற்று.
(நிலாச்சாரலில் 5/10/09 இல் வெளிவந்த என் கட்டுரை.)
அந்தக் காலம் பற்றிய இது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கட்டுரை. அக்காலம் பற்றி எங்களுக்கு அறியச் செய்தமைக்கு நன்றி.
ReplyDelete