Tuesday, 31 January 2012

கடன்காரர் - குட்டிக்கதை



''ஏன்யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன் வாங்கியது எப்போது?”

ஒரு மாதத்துக்கு முன்னே”.

 எப்போது தருவதாகச் சொன்னேன்?”

 இருபது நாளில்”.

 கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”

ஆமாம்”.

 பின்னே ஏன்யா வந்து கேட்கவில்லை?”

 நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.

 நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து நான் அலைய வேண்டுமா?”

மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள் என்று நினைத்தேன்”.

 நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”

 உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து விட்டேன்? ஆயிரமா, பத்தாயிரமா? இருநூறு தானே?”

 இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா? இருநூறு வாங்கின நான் கேவலமானவன் என்று குத்திக் காட்டுகிறாயா?”

 ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி எறிந்து விடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

 என்னது? எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா. பொருள்தனைப் போற்றி வாழ்என்று ஒளவையார் சொன்னதைப் படித்ததில்லையா?”

 நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக் கொள்வேன்”.

எப்போது?”

நாளைக் காலையிலே”.

கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.

 கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.

வார்த்தை தவற மாட்டாயே?”

 மாட்டேன்.

ஜாக்கிரதை! காத்திருப்பேன்!


(ஆனந்த விகடனில் எழுதியது)

நம் மேதை முன்னோர்



ஜான் குல்பெர்க் ( Jan Gullberg ) 1997 இல் மேதமேட்டிக்ஸ் ( கணிதம் ) என்ற நூலை அமெரிக்காவில் வெளியிட்டார். அதில் பழங் கால இந்தியக் கணித மேதைகள் சிலரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.


பக்கம் 72 - எதிரெண்கள் ( Negative numbers )


தொல் கால பபிலோனிய, எகிப்திய, கிரேக்க அல்லது வேறெந்த நாகரிகமும் எதிரெண்களை அறிந்திருந்தது என்பதற்குச் சான்றில்லை.


இந்தியாவில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், கணக்கு எழுதுவதற்கு அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பை நேரெண்களாலும் ( Positive Numbers ) கடனை எதிரெண்களாலும் குறித்திருக்கின்றனர்.


இந்திய வானியல் வல்லுநர் பிரம்மகுப்தர் (598-665) தம் விண்ணூலில் கணிதம் பற்றிய ஓர் அதிகாரத்தில் எதிரெண்களைப் பற்றித் தெளிவாக எழுதியிருக்கிறார்.



 பக்கம் 91 - ( வட்டம் பற்றிய கணக்குக்கு இன்றியமையாத பை என்ற அளவின் மதிப்பை இந்தியர் கணித்திருந்தனர் என்பதை இந்தப் பக்கம் தெரிவிக்கிறது.)


ஆரியபட்டர் கி.பி.499 இல் வெளியிட்டது : 3.1416...


பிரம்மகுப்தர் (598 இல் பிறந்தவர் ) பயன்படுத்தியது : 3.1622....


பாஸ்கரர் (1114இல் பிறப்பு ) : 3.14156...


ஏன், எப்படி என்பதை மூவரும் சொல்லவில்லை.



நம் முன்னோரின் கணித அறிவு பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம் அல்லவா?

Sunday, 29 January 2012

எழுதுகோலின் வரலாறு



மின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு ஒழிந்துவிடவில்லை. பள்ளிகளிலும் வங்கி முதலிய நிறுவனக்களிலும் படிவம் நிரப்பவும் இன்னமும் பேனாவுக்கு வேலை இருந்துகொண்டுதான் இருக்கிறது. பற்பல நூற்றாண்டாய் எழுதுவதற்கு உலகு முழுதும் மிகுதியாய்ப் பயன்பட்ட, இப்போதும் ஓரளவு உதவும் எழுதுகோலின் வரலாற்றை அறிந்துகொள்வோம். 

எழுத்தைக் கண்டுபிடித்து எண்ணங்களையும் நிகழ்ச்சிகளையும் பதிந்தமை நாகரிகத்தின் முதல் படிகளுள் ஒன்று.  

மெசோப்பொட்டேமியாவில் (தற்கால ஈராக்) கி.மு. 2900 அளவில், ஒரு பக்கம் கூராக்கிய முனை கொண்ட குச்சியால், களிமண் பலகைகளில் எழுதினர். பின்பு முனையை முக்கோண வடிவில் சீவி மேம்படுத்தினர். இதுவே பேனாக்களின் முன்னோடி. இது உருவாக்கிய எழுத்து ஆப்பெழுத்து எனப்பெற்றது. ஈரக் களிமண் பலகைகளில் எழுதிச் சூளையில் சுட்டுப் பாதுகாத்தனர். இவற்றில் இடம்பெற்ற பாடல், சட்டக்குறிப்புகள் முதலியவையே உலகின் முதல் இலக்கியம். 

எகிப்தியரோ சித்திர எழுத்துகளை முதலில் கல்லிற் செதுக்கிப் பிற்காலத்தில் பேப்பரஸ் என்ற செடியின் தண்டுகளிலிருந்து பேப்பர் தயாரித்து அதில் எழுத ஒரு பக்கம் பிரஷ் போல் நசுக்கிய முனை உடைய குச்சியை மையில் தோய்த்துப் பயன்படுத்தினர். அந்த மை புகைக்கரி, நீர், ஒரு விதப் பசை கலந்து செய்யப்பட்டது.  

கி.மு. 2000 அளவில் சீனர்கள் மையும் தூரிகையும் கொண்டு எழுதினார்கள். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தாள் தயாரிக்கக் கற்றார்கள்.  

கிரேக்கர்கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் கற்பலகையில் (ஸ்லேட்) மெழுகு தடவி அதன்மீது குச்சியால் எழுதினார்கள். 300 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்டுத்தோலைப் பண்படுத்தி அதன்மேல் மையில் தோய்த்த பறவையிறகு பேனாவால் (quill pen) எழுதினர். 

பற்பல நாடுகளில் செம்பில் வரையும் பழக்கம் பரவியபோது எழுத்தாணி என்னும் இரும்புக் கருவி உதவிற்று. தமிழகத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத எழுத்தாணியைத் தான் உபயோகித்தனர்.  

களிமண்ணில் எழுதியது, கல்லில் செதுக்கியது, ஆட்டுத்தோலில் சித்திரந் தீட்டியது, இவற்றையடுத்து மை தொட்டுப் பறவையிறகு பேனாவில் தாளில் எழுதிய வழக்கம் ஐரோப்பாவில் 700 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டதாய்த் தெரிகிறது. 1000 ஆண்டுகளுக்குப் பின்பும் இறகு பேனா நடைமுறையில் இருந்தது. 

மையில் தோய்த்து எழுதுகிற எஃகு நிப் (nib) கொண்ட பேனா 18 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்த நூற்றாண்டு இறுதியில் அதே நிப் உடைய ஊற்று பேனா கண்டுபிடிக்கப்பெற்றது. இது மூன்று பாகங்கள் கொண்டது. 

1.அடிப்பகுதி: ஒரு நீளக்குழாய். இதில் மை ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.  

2.நிப் செருகிய சிறு பகுதி: இதைத் திருகி மையூற்றிய குழாயை மூடிவிடலாம். 

3. மேல்மூடி: நிப்புக்குப் பாதுகாப்பு. திருகி மூடவும் திறக்கவும் முடியும். 

ஊற்று பேனா மிகப்பெரிய முன்னேற்றம். மைப்புட்டி தேவையில்லாமற் போயிற்று. விரைவாய் எழுத முடிந்தது. ஆனால் இரு குறைகள் இருந்தன; மை தடித்துப் போனால் (thick) நிப்பில் வராது, உதறி உதறி அக்கம் பக்கமெல்லாம் மைப்புள்ளிகளால் நிறைத்த பின்புதான் எழுதலாம்.சில சமயம் மை கசிந்து விரல்களை, பேனா வைக்கிற சட்டைப்பையைக் கறைப்படுத்தும். 

இந்தக் குறைகள் நீங்கிய புதுவிதப் பேனாவை உருவாக்கியவர் அங்கேரி நாட்டுப் பத்திரிகையாளர் லஸ்லோ பிரோ (Laszlo Biro). செய்தித்தாள்களை அச்சிடும் மை, பேனா மையை விட விரைவாக உலர்வதைக் கவனித்த அவர், "பேனாவுக்கு அது உதவுமே" என்றெண்ணிப் பேனாவில் அதை ஊற்றினார். அந்தக் கன (thick) மை நிப் வழியே சரளமாய் வராமையால் எழுத இயலவில்லை. அதனால் நிப்புக்குப் பதிலாய் பால்பேரிங்கைப் பயன்படுத்தினார். இதுவே பால்பாயிண்ட் பேனா. உலக்முழுதும் பரவிப் பயன்பாட்டில் உள்ள இதை 1938 இல் உருவாக்கி உரிமை (patent) பெற்றார் பிரோ. 

கன மை பெரும்பாலும் கசிவதில்லை. நீர் பட்டால் அழிவதில்லை. வழவழவென்று விரைவாகவும் எழுதுகிறது. ஆதலால் இந்தப் பேனா ஒரு வரப் பிரசாதமாகத் திகழ்கிறது.



(ஆதாரம்: Who invented what? என்னும் ஆங்கில நூல்.)

Friday, 27 January 2012

நக்கீரரின் பெருமை



 புராணக்கதைகள் சிலவற்றைக் கோத்து உருவாக்கிய திருவிளையாடல் படத்தில் தருமி ஒரு பாத்திரம். 

அவன் எப்படிப்பட்டவன்? சொந்தமாகப் பிழையின்றிப் பாட்டெழுதத் தெரியாத அரைகுறைப் புலவன். பிறரது பாடலைத் தனதெனப் பொய் சொல்லி மன்னனை ஏமாற்றிப் பொற்கிழி பெறத் திட்டமிட்டு முயன்ற மோசடிப் பேர்வழி. பாவில் குற்றமுண்டு என்று கேள்விப்பட்டவன் குற்றமில்லை என மறுக்க இயலாமல், 'எவ்வளவு குற்றமிருக்கிறதோ அவ்வளவு குறைத்துக் கொண்டு' பணம் ஈயும்படி கெஞ்சிய கோமாளி. நக்கீரரைப் பற்றி எதுவும் அறியாதவன். 'இங்கே எல்லாமே நீர்தானோ?' என்று கேட்டபின்பு 'பாட்டில் குற்றஞ்சொல்லிப் பெயர் வாங்கும் புலவர்' என்று குறைகூறிவிட்டு வெளியேறியவன். பாட்டில் குற்றஞ்சொல்வது தவறல்ல என்பதையும் நேர்மையற்றவனாகிய தான் பிறரை நோக்கி விரல் நீட்டத் தகுதியில்லாதவன் என்பதையும் எண்ணிப் பார்க்க இயலாத பேதை. அவனுக்கு வயிற்றெரிச்சல்! பேராசையுடன் எதிர்பார்த்த பொருள் கிட்டவொட்டாமல் தட்டிவிட்டாரே என்ற ஆத்திரத்தில் அவரை இகழ்ந்தான். 

தருமி ஒரு கற்பனைப் பாத்திரம். நக்கீரரோ உண்மையாகவே தமிழகத்தில் வாழ்ந்தவர். அவர் எத்தகையவர்? 

சங்கப் புலவருள் தலை சிறந்த மூவர் யார் என்று தமிழறிந்த ஒருவரிடம் வினவின், அவர் சற்றுந் தயங்காமல் சட்டென விடையிறுப்பார் கபிலர், பரணர், நக்கீரர் என்று. நக்கீரர் யாருடைய பாட்டிலுங் குற்றஞ் சொன்னதாய் வரலாறு இல்லை. குறை கண்டு கூறவல்ல புலமை மிக்கவரே எனினும் அப்படியொரு வாய்ப்பு நேரவேயில்லை. 

பத்துப் பாட்டில் ஒன்றான, 188 அடி கொண்ட, நெடுநல்வாடையின் ஆசிரியரான அவரது புகழ் எங்கும் பரவியிருந்தமையால் புதல்வர்களுக்கு அவருடைய பெயரைப் பெற்றோர் சூட்டி மகிழ்ந்தனர் என அனுமானிக்கலாம். 

அவர்களுள் ஒருவர் பெரும் புலவராகித் திருமுருகாற்றுப் படையை இயற்றினார். பத்துப்பாட்டில் ஒன்றெனத் தவறாய்ச் சேர்க்கப்பெற்றிருந்த இது பிற்காலத்தது என ஆய்வாளர் நிறுவியுள்ளனர். இரு நக்கீரர்களுக்கும் குறைந்தது இரண்டு நூற்றாண்டுக் கால இடைவெளியிருக்கலாம். 

8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட களவியல் என்ற இலக்கண நூலுக்கு உரையெழுதிய அறிஞரின் பெயரும் நக்கீரர் என்பதிலிருந்து சங்க கால நக்கீரரின் பெருமை கிட்டத்தட்ட 1000 ஆண்டு வரை உணரப் பட்டிருந்தது என்பதை அறியலாம்.

Wednesday, 25 January 2012

அம்மாவும் விலக்கப்பட்ட கனியும்



( க்லோதீனுடைய வீடு என்னும் பிரஞ்சுப் புதினத்தில் ஒரு பகுதியை நான் மொழி பெயர்த்தேன் . ஆசிரியர் பெண் எழுத்தாளர் கொலேத் 19 ஆம் நூற்றாண்டு )



அம்மாவின் வலிமை நலிவு அடையும் காலமும் வந்தது . அது பற்றி அம்மாவுக்கு ஒரே திகைப்பு ; அவரால் நம்ப முடியவில்லை .



நான் பாரிசிலிருந்து பார்க்க வரும்போதெல்லாம் , பிற் பகலில் , அவரது சிறிய இல்லத்தில் , நாங்கள் இருவரும் தனித்திருக்கையில் , தாம் செய்துவிட்ட ஏதாவது ஒரு தப்பை என்னிடம் ஒப்புக்கொள்வார் .



ஒரு தடவை , கவுனைத் தூக்கித் தொடையைக் காட்டி , " பார் மகளே , இதை " என்றார் . சதை கொஞ்சம் பிளந்து வயலெட் நிறப் புண் காணப்பட்டது .



" என்னம்மா செஞ்சே மறுபடியும் ? "



அப்பாவித்தனமும் குழப்பமும் கல்ந்த கண்களை அகல விரித்து , சொன்னார் : " நீ நம்பமாட்டே . மாடிப் படியிலே விழுந்துட்டேன் . "



" என்னாது ? விழுந்தியா ? "



" ஆமாம் போ ; எறங்கி வந்தேனா , விழுந்துட்டேன் "



" ரொம்ப வேகமா எறங்கினியா ?"



" ரொம்ப வேகமின்னா ? எதை ரொம்ப வேகமிங்கிறே ? வேகமா எறங்கினேன் . மகா ராணி மாதிரி ஆடி அசைஞ்சு எறங்க எனக்கு ஏது நேரம் ? இதையும் பார் . "



காய்த்துப் போன கையுடன் ஒப்பிடுகையில் இன்னமும் வற்றிவிடாத அழகிய மணிக்கட்டில் சூடு பட்டு நீர்க் கொப்புளம் ஒன்று தள தள என்றிருந்தது .



" இது என்னாம்மா ? "



"கெட்டில் சுட்டுட்டது "



' அந்தப் பழங்காலச் செப்புக் கெட்டிலா ? அஞ்சு லிட்டர் புடிக்குமே அது ? "



" அதேதான் . யாரை நம்புவது ? நாப்பது ஆண்டாய் என்னை அதுக்குத் தெரியுமே ! என்ன ஆச்சோ அதுக்கு , தெரியலை . பெரும் பெரும் குமிழியாய்த் தண்ணீ கொதிச்சது. அடுப்பிலேர்ந்து எறக்கினேன் . சுரீர்னு மணிக்கட்டில் நெருப்பு சுட்டது போல இருந்தது . ஏதோ இந்தக் கொப்புளத்தோடு போச்சே ! இருந்தாலும் தொந்தரவு தான் . அதனாலதான் அலமாரியை அப்பிடியே விட்டுட்டேன் "



அம்மாவின் முகம் குபீரெனச் சிவந்தது . பேச்சை நிறுத்திக்கொண்டார் .



"அலமாரியா ? " அதட்டும் குரலில் கேட்டேன் .



கழுத்தில் விழவிருக்கும் கயிற்றுச் சுருக்கில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க விரும்புவது போல் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார் .


"ஒண்ணுமில்லே . ஒரு அலமாரியும் இல்லே . "



"அம்மா , அப்புறம் எனக்குக் கோபம் வந்துடும் ".



" நாந்தான் சொன்னேனே , அலமாரியை அப்படியே விட்டுட்டேன் இன்னு ; நீயும் என்னை விட்டுடு . இருந்த இடத்திலேர்ந்து அலமாரி நகரலை அல்லவா ? அப்புறம் என்ன ? விட்டுத் தள்ளு ."



தேவதாரு மரத்தாலான அலமாரி ; உயரத்துக்கு ஏற்ற அகலம் . கதவைத் துளைத்துப் பின் பக்கத்தால் வெளியேறிய ஜெர்மன் துப்பாக்கி ரவை ஒன்று ஏற்படுத்திய வட்டத் துளை தவிர வேறு எந்தச் சேதமும் இல்லாத அல்மாரி .



" அதை வேறே எடத்திலே வைக்கணுமின்னு நெனைச்சியா ? "



திரங்கிப்போன முகத்திலிருந்து ஒளி வீசிய கண்களால் நோக்கினார்.



" நானா ? அங்க இருக்கிறதே நல்லா இருக்கு ; அப்பிடியே இருக்கட்டும் "



டாக்டராகிய என் தமையனும் நானும் அம்மாவை நம்ப இயலாது என முடிவு செய்தோம் . அண்ணன் தொழில் செய்த ஊரில் அம்மா வசித்ததால் அவன் நாள்தோறும் அம்மாவைப் பார்க்க முடிந்தது .



வெளிக் காட்டாத துயரத்துடன் அவரை அவன் கவனித்துக் கொண்டான் .



அம்மா தம் எல்லா வலிகளையும் எதிர்த்து எங்களை மலைக்க வைக்கும் அளவுக்குப் போராடினார் . சில சமயம் அவற்றை மறந்தே விடுவார் ; வேறு சமயம் அவற்றை முறியடித்துத் தற்காலிக ஆனால் பிரமாத வெற்றி பெறுவார் ; இழந்துவிட்ட ஆற்றலைத் திரும்பப் பெற்றுச் சில நாள் வரை அதைத் தங்க வைத்துக்கொள்வார் .



ஒரு நாள் காலை ஐந்து மணி . என் அறையின் எதிரில் இருந்த அடுப்பங்கரை மேடைமீது நீர் நிறைந்த வாளி வைக்கப்பட்ட ஒலி கேட்டு விழித்துக்கொண்டேன் .



" என்னம்மா செய்றே , வாளியை வச்சுக்கிட்டு ? வேலைக்காரிதான் வந்துவிடுவாளே ?



எழுந்து ஓடினேன் . அதற்குள் அடுப்பு பற்ற வைத்தாயிற்று ; பால் சூடாகிக்கொண்டிருந்தது . பக்கத்தில் என் காலை உணவுக்காக வெந்நீரில் சாக்லேட் கட்டி உருகிக்கொண்டிருந்தது . அம்மா நாற்காலியில் அமர்ந்தபடி காப்பிக் கொட்டையைக் கை மெஷினில் அரைத்துக்கொண்டிருந்தார் .



காலை நேரத்தில் வலிகள் கொஞ்சம் இரக்கம் காட்டும் ; அம்மாவின் கன்னங்கள் மீண்டும் செந்நிறம் பெறும் ; காலை இளம் பரிதியின் உதவியால் ஆரோக்கியத்தை மீட்டுக்கொண்ட அம்மா மகிழ்ச்சி நிறைந்தவராகக் காணப்படுவார்



தேவாலயத்தில் முதல்பூசை மணி ஒலித்துக்கொண்டிருக்க அம்மாவுக்குக் களிப்பு : நாங்கள் தூங்கியபோதே விலக்கப்பட்ட பல கனிகளை நுகர்ந்துவிட்ட ஆனந்தம் .



விலக்கப்பட்ட கனிகள் எவை ?



கிணற்றிலிருந்து தூக்குகிற நீர் நிரம்பிக் கனத்த வாளி , மரக்கட்டைமீது வைத்து அரிவாளால் குச்சிகளாகப் பிளக்கிற விறகு , மண்வெட்டி , முக்கியமாக ஏணி . அதில் அவர் ஏறிப் படரும் திராட்சைக் கொடிகளைக் கொழுகொம்புடன் இணைப்பார் ; செடிகளின் மலர்களைக் கொய்வார்.



வாழ்க்கையில் முன்பு ஒத்துழைத்து உடலுக்கு வலிமை தந்த எல்லா வேலைகளும் பணியாள் இல்லாமலே இன்பமாக வாழ்வதற்கு அவருக்கு உதவிய கிராமப் புற இயற்கையும் இப்போது எதிரணியில் நின்றன . ஆனால் போராடுவதில் இன்பம் காண்பவர் அம்மா என்பது அவற்றுக்குத் தெரியாது இறுதி மூச்சு வரை அந்த இன்பத்தை அவர் அடைவார் .



எழுபத்தொரு வயதில் ஒவ்வொரு காலைப் பொழுதும் அவரை வெற்றி வீராங்கனையாய்த்தான் கண்டது . நெருப்பு சுட்டும் அரிவாள் பட்டும் உருகிய பனியாலோ கவிழ்ந்த நீராலோ நனைந்தும் ஊருக்குமுன் எழுந்து சுதந்திரமாய்ச் செயல்படும் நல்ல தருணத்தை அவர் வாழ்ந்துவிடுவார் .



பூனைகள் கண் விழித்து எழுந்த காட்சி , பறவைக் கூடுகளில் நிகழ்ந்த ஆரவாரம் , பால்காரரும் ரொட்டிக்காரரும் பாலோடும் ரொட்டியோடும் சேர்த்து வழங்கிய ஊர்ச்செய்திகள் என்று அதி காலைத் தகவல்கள் பலவற்றை எங்களுக்கு அறிவிப்பார் .



ஒரே யொரு தடவைதான் , ஒரு நாள் காலை , சில்லிட்ட அடுப்பங்கரையும் சுவரில் மாட்டியிருந்த எனாமல் பிடி குவளையும் அம்மாவின் காலம் நெருங்கிவிட்டதை எனக்கு உணர்த்தின .;



இருந்தாலும் சிற்சில நாள்களில் மீண்டும் அடுப்பு எரிந்தது ; புது ரொட்டி மற்றும் உருக்கிய சாக்லெட்டின் மணங் கமழ்ந்தது . அந்த நாள்கள் எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்தன. அம்மாவும் அலமாரியும் ஒரு நாள் சேர்ந்து விழுந்தார்கள் .யாருக்கும் தெரியாமல் அலமாரியை வேறிடத்தில் நகர்த்தி வைக்க அம்மா முயன்றிருக்கிறார் . 



எந்த வேலையும் செய்யக்கூடாது என்று கண்டித்த அண்ணன் ஒரு முதிய வேலைக்காரியை வீட்டோடு அமர்த்தினான் ,



ஆனால் அம்மாவின் திடம் வாய்ந்த மனத்தின் முன்னால் . கிட்டத்தட்ட சாவுக்குப் பாதி அளவு ஆட்பட்டுவிட்ட உடம்பைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டிப் படைக்கக்கூடிய அந்த இள உள்ளத்தின் முன்னால் , வேலைக்காரக் கிழவியால் என்ன செய்யமுடியும் ?



ஒரு நாள் பொழுது விடியும் முன் நோயாளி யொருவரைக் கவனித்துவிட்டு வந்த அண்ணன் அம்மாவைக் கையுங் குற்றமுமாய்க் கண்டுபிடித்தான் : இரவு உடையில் இருந்த அம்மா , தோட்ட வேலைக்கான கனத்த காலணியை அணிந்து , அவரது நரைத்த சிறு சடை பிடரிக்கு மேல் , தேள் கொடுக்குப் போல வளைந்திருக்க , குனிந்த முதுகும் முக்காலிமீது ஒரு காலுமாய் , இளமைத் தோற்றத்துடன் விறகு பிளந்துகொண்டிருந்தார் , சில்லென்ற பனித் துளிகளையும் தாம் வழங்கியிருந்த எல்லா வாக்குறுதிகளையும் சட்டை பண்ணாமல் .

Monday, 23 January 2012

மூன்றுவிதப்புத்தி




அற்புதப் பொறியாம் மனித மூளையின் அபூர்வப் பணிகளுள் ஒன்று கற்பிப்பதைப் புரிந்துகொண்டு உள்வாங்குதல். இந்தத் திறமையைப் பொருத்தவரை புத்தி மூவகைப்படும்.

1.கற்பூரப்புத்தி: எரிகிற நெருப்புக்குச்சி நெருங்கியவுடன் சூடம் கப்பென்று தீப்பிடித்துக்கொள்ளும். இது போன்ற மூளை எந்தக் கடின விஷயமாயினும் உடனடியாகப் புரிந்துகொண்டுவிடும். திருவள்ளுவர் "பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு" என்றது கற்பூரப்புத்திக்கே பொருந்தும்.

2.கரிப்புத்தி: கரியை நெருப்பாக்கல் எளிதா? சிறிது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் குழலால் ஊதி ஊதிப் பற்றவைக்கவேண்டும். இதை ஒத்த மூளைக்குப் பன்முறை திருப்பித் திருப்பிச் சொல்லித் தான் புரியவைக்கலாம்.

3. கதலிப்புத்தி: கதலி - வாழை. வாழைத் தண்டைக் கொளுத்த எவ்வளவு முயன்றாலும் அது கருகுமே ஒழிய எரியாது. கதலிப்புத்தி உள்ளவர்களுக்குக் கற்பிப்பது கடினமோ கடினம். ஆனால் அது அவர்களின் குற்றம் அன்று. இரக்கத்துக்குரிய அவர்களை ஏளனஞ்செய்தல் பெருந்தவறு.