Monday 27 August 2012

முன்னோடி


 

பயன்பாட்டுக்குக் கார் வருவதற்கு முன்பு பெருஞ் செல்வர்களுக்கு இரட்டைமாட்டு வில் வண்டிகள் உதவின; அவர்கள் பயணிக்கையில், முன்புறமாய் ஒருவர், "ஐயாவோட வண்டி வருது" என அறிவித்துக்கொண்டு ஓடுவார்.  
பாதசாரிகள் ஓரமாய் ஒதுங்கி வழிவிடுவார்கள்; படுத்திருப்போர், அமர்ந்திருப்போர் மரியாதைக்கு அறிகுறியாக எழுந்து நிற்பார்கள். 

முன்னால் ஓடுபவரை முன்னோடி (முன் + ஓடி) என்றார்கள்; முன்னோடும்பிள்ளை என்பதுமுண்டு.  

இதற்கு இணையான ஆங்கிலச் சொல் ப்ரிக்கர்சர் (Precursor ). ப்ரி - முன்; கர்சர் - ஓடுபவர். Forerunner என்பதும் அப்பொருள் உடையது.

முன்னோடி என்னும் சொல் இன்று வேறு அர்த்தத்தில் வழங்குகிறது.  

அறவழிப் போராட்டத்துக்கு முன்னோடி காந்தி, தமிழ்ப் புதினத்துக்கு முன்னோடி பிரதாப முதலியார் சரித்திரம் என ஒரு துறையில் பிறர்க்கு / பிறவற்றுக்கு வழிகாட்டிகளை அச் சொல் குறிக்கிறது.
*******************************************************************

படம் உதவி ; இணையம்

Tuesday 21 August 2012

நாடகத் தமிழ்




இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் எனத் தமிழை மூவகைப்படுத்துகிறோம் எது இயற்றமிழ், எது இசைத் தமிழ் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் நாடகத் தமிழ் பற்றிச் சரியான விவரம் அறியாதார் பலர். நாடகங்களில் இடம் பெறும் உரையாடல்தான் நாடகத் தமிழ் என்று நினைப்பது தவறு.


ஆங்கிலேயரின் தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களது ட்ராமாவை நாடகம் என்றோம்; அதை முன்மாதிரியாய்க் கொண்டு அங்கம், காட்சி என்று பிரித்துப் பாட்டும் உரைநடையுமாய் நாடகங்கள் இயற்றினோம். ஆனால் பழங் காலத்தில் நாடகம் என்பது நாட்டியத்தைக் குறித்தது. இரு சங்க நூல்களுள் நாடகம் என்னும் சொல் இடம் பெற்றிருக்கிறது:


1 - பட்டினப்பாலை அடி 113


பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் ( இதில் பாடலும் ஆடலும் கூறப்படுகின்றன)


2 - பெரும்பாணாற்றுப்படை 55 ஆம் அடி:


நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்து ( நாட்டியப் பெண்டிர் ஆடும் களத்தைச் சொல்கிறது)


பிற்கால நூல்களிலும் நாடகம் என்ற வார்த்தை நடனம் என்கிற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது:



1 - சிலப்பதிகாரம் ( 22 - 142 ) :


நாடக மகளிர் ஆடரங்கு (நடன மாதர் ஆடுகின்ற மேடை)


2 - கம்பர் ( 1494 ) :


நாடக மயில் (ஆடும் மயில்). 

ஆகவே நாடகத் தமிழ் என்பது நாட்டியம் ஆடும்போது பாடுகிற பாட்டு. அந்தப் பாட்டுகளை எப்படிப் புனையவேண்டும், நடனம் எவ்வாறு ஆடவேண்டும் என வழி காட்டும் நாட்டிய இலக்கண நூல்களும் நாடகத் தமிழைச் சேர்ந்தவைதான். கூத்த நூல், சந்தம், சயந்தம், பரதம் முதலிய நாடகத் தமிழ் நூல்கள் அழிந்துவிட்டன. இப்போது ஒன்றுகூட எஞ்சியில்லை.

அபாத்

 

தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தில் வாலாஜாபாத் என்ற ஊரும் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை என்னும் ஊரும் இருக்கின்றன.


வாலாஜா என்பது ஆர்க்காட்டு நவாபாய்ப் பதவி வகித்த முகம்மதலியின் வேறு பெயர். பாரசீக மொழியில் அபாத் என்றால் ஊர் என்பது பொருளாம்.


ஐதரபாத், சிக்கந்தரபாத், அகமதபாத் முதலியவை அபாத் என்று முடிகின்றன.


உசேன் என்பவரின் பெயரால் அமைந்த உசேனபாத் நாளடைவில் உசேனூர் என மருவி இப்போது ஒசூர் ஆகிவிட்டது.


(ஆதாரம்: ரா. பி. சேதுபிள்ளை இயற்றிய ஊரும் பேரும் என்னும் நூல்.)


அபாத் என்பது இந்தியில் ஆபாத் எனப் புழங்குகிறது. இதன் பொருள் மக்கள் வாழ்கிற என்பது.

Monday 13 August 2012

என்னதான் முடிவு? - ஒருநிமிடக் கதை




அறிமுகம் ஆகிச் சில நாளிலேயே அவர் என்னைத் தேடிவந்தார்.  

உங்களிடம் ஒரு யோசனை கேட்கவேண்டும். 

 எதைப் பற்றி? 

என் பையனைக் கல்லூரியில் சேர்ப்பது குறித்து.. 

 அதில் என்ன பிரச்சினை? 

பொறியியலில் சேர்ப்பதா, மருத்துவத்தில் சேர்ப்பதா? 

 மகனின் விருப்பத்தைக் கேட்டீர்களா? 

 அது அப்புறம்; முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். 

பொறியியலைத் தான் நிறைய பேர் விரும்புகிறார்கள்: அமெரிக்கா போகலாம், அதிகம் சம்பாதிக்கலாம். 

ஊகூம், அவனைப் பிரிந்திருக்க என்னால் முடியாது. 

உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும். 

ஆனால் சமுதாயத்தில் மதிப்பு இல்லையே! டாக்டர் என்றால் தெய்வம் போல. 

அது மெய்தான்; மகனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துங்கள். 

அதிலே பாருங்கள், நோய் முற்றி இறந்தாலும் தவறான சிகிச்சை என்று குற்றம் சுமத்தி நிம்மதியைக் கெடுப்பார்கள். 

சாதக பாதகம் எதிலும் உண்டு. முடிவுக்கு வருவது கடினம்தான். மகனைக் கேளுங்கள். 

 பதில் சொல்லக்கூடிய நிலையில் அவன் இப்போது இல்லை. 

ஏன்? அவனுக்கு என்ன?  

ஒன்றுமில்லை, நன்றாய்த்தான் இருக்கிறான். 

 பின்னே? 

 மூன்று வயதுதான் ஆகிறது. மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.

???????

Thursday 9 August 2012

விளம்பர சாமர்த்தியம்

 

எழுபது ஆண்டுக்கு முன் ஒரு காலை வேளை. 

பள்ளிக்கூடத்துக்கு நான் செல்கையில், சிறு கூட்டம் ஒன்று, ஓரிடம் நின்று, அண்ணாந்து சுவரை நோக்கிக் கொண்டிருக்கக் கண்டு, வியப்பு மேலிட, விரைந்து சென்று பார்த்தேன்: 

ஒரு சுவரொட்டியில் பெரிய எழுத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது செய்தி யொன்று:

"காணாமற் போன என் மகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்க்கு ரூபாய் பத்தாயிரம் இனாம்.
இப்படிக்கு,
சிவசங்கரன் பிள்ளை."



புதிரையொத்த அந்த அறிவிப்பைப் பற்றி யோசித்தபடி நடை தொடர்ந்தேன். 

அங்கங்கு அதே மாதிரி சுவரொட்டியும் கும்பலும். 

பள்ளியில் அது குறித்துத் தான் பேச்சு, ஊரிலுந்தான். எல்லாரும் கேட்ட ஒரே வினா: விவரம் எதுவும் இல்லாமல் கண்டுபிடிப்பது எப்படி? விவரங்கள் தெரிந்தால் நிறையப் பேர் முழு மூச்சாகத் துப்பறிய முனைந்திருப்பார்களோ? 10,000 ரூ. ஆயிற்றே! இக்கால மதிப்பு: 10 கோடி!


மறு நாள் காலை. அதே இடத்தில் அதே காட்சி. பழைய சுவரொட்டியின் அருகில் தோன்றியிருந்த இரு சுவரொட்டிகளுள் ஒன்று தெரிவித்த தகவல்:


"உம் மகளைக் கடத்திச் சென்றவன் நானே! என்னை இன்று மாலை அல்ஹாம்ப்ரா டாக்கீசில் சந்திக்கலாம்.
இப்படிக்கு,
மாயா மாயவன்."


இரண்டாவது - திரைப்பட விளம்பரம். 

அப்போதுதான் விளங்கியது மர்மம். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து வெளியிட்ட மாயா மாயவன் என்ற அந்தப் படத்தின் விளம்பரம் போன்ற சுவைமிக்க, புதுமையான, வேறொன்று மற்றெந்தப் படத்துக்கும் செய்யப்படவில்லை. 

கோவில் விழாக் கூட்டமென மக்கள் திரண்டு போய்ப் பார்த்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 

அதில் இடம் பெற்றிருந்தது யாவரையும் குழப்பிய இலவச அறிவிப்புச் சுவரொட்டி! 

(அண்மைக் காலத்தில் தமிழகத்தைப் பரபரப்புக்குள்ளாக்கிய "புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமா?" என்ற விளம்பரம் நினைவுக்கு வருகிறது; ஆனால் அது திரைத் துறைத் தொடர்பில்லாதது.)

Tuesday 7 August 2012

சீனக் குட்டிக் கதை

( கன்பூசியஸ் என்ற ஆங்கில நூலிலிருந்து )


மூன்று தையற்காரர்கள் ஒரே தெருவில் கடை திறந்தனர். தாமே அதிக வாடிக்கையாளர்களைக் கவரவேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பினர்.

ஒருவர் பெரியதொரு விளம்பரப் பலகை நாட்டினார். "இந்த மானிலத்திலேயே சிறந்த தையற்கலைஞன் நானே" என்று அதில் எழுதியிருந்தது.

இதை வாசித்த இரண்டாமவர், இதற்கு மேலே போகவேண்டும் என எண்ணி,  இன்னம் பெரிய பலகை மூலம், "இந்த நாட்டிலேயே மிகச் சிறந்த தையற்கலைஞன் நான்தான்" எனத் தெரிவித்தார்.

மூன்றாமவர் பார்த்தார்; இந்த உலகிலேயே சிறந்தவன் என்று விளம்பரப்படுத்தலாமா எனச் சில நாள் யோசித்தபின் ஒரு சிறு பலகை மாட்டினார். அது அனைவரையும் கவர்ந்திழுத்தது மற்ற கடைகளைக் காலியாக்கி.

என்னதான் அறிவித்தது அது?

"நானே சிறந்த தையற்காரன், இந்தத் தெருவில்."

Friday 3 August 2012

லத்தீன் பழமொழிகள் இரண்டு


மக்களின் பட்டறிவால் பிறப்பவை பழமொழிகள்; அவை எல்லா மொழிகளிலும் உண்டு. 

தமிழைப் போன்று தொன்மை வாய்ந்த லத்தீனின் பழமொழிகளுள் நமக்குப் பரிச்சயமான இரண்டினைத் தருகிறேன்:


1 . வோக்ஸ் பொப்புலி வோக்ஸ் தெஈ ( Vox populi vox Dei )
இதன் பொருள்: மக்களின் குரல் தெய்வத்தின் குரல்.

இதை மக்கள் குரலே மகேசன் குரல் என நாம் சொல்லுகிறோம்.

2. எர்ராரே ஹுமானும் ஏஸ்த்: ( Errare humanum est )
பொருள் : தவறுதல் மனித இயல்பு.

இதனை ஆங்கிலக் கவிஞர் அலெக்சாண்டர் போப் To err is human என மொழிபெயர்த்தார். அவரிடமிருந்து நாம் பெற்றோம்.