Saturday, 27 April 2013

காதல்


பல மொழியினர் தத்தம் கதைகளிலும் நாடகங்களிலும் காதலையும் காதலரையும் போற்றியிருக்கிறார்கள்: அம்பிகாபதி - அமராவதி , லைலா - மஜ்நூன் , அனார்கலி - சலீம் , ரோமியோ - ஜூலியட் முதலான காதல் இணைகள் வாசகர் மனங்களில் நிரந்தரமாக வாழ்கிறார்கள். 

ஷேக்ஸ்பியரின் "வெனீஸ் வணிகன்" நாடகத்தில் வரும் "லவ் இஸ் ப்லைண்ட்" என்ற வசனத்தைத் தமிழில், "காதலுக்குக் கண்ணில்லை" என மொழிபெயர்த்துக் காதல் மதமறியாது, சாதி அறியாது, ஏழை - செல்வர் வேறுபாடு அறியாது, எந்தப் பேதமும் அறியாது என்று விளக்கந்தந்து திரைப்படங்களில் பேசுகிறார்கள், பாடுகிறார்கள்; ஆனால் அதே படங்கள் காதலுக்குக் கண் உண்டு என்பதற்குச் சான்று பகர்கின்றன. 
 
காதல்  

1 - பால் அறியும்: ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்தான் முகிழ்க்கிறது. 

2 - நிறம் அறியும்: ஒரு கருப்புப் பெண்ணை சூப்பர் ஃபிகர் என எவரும் சொல்வதில்லை; காதலனும் கருப்பாய் இருப்பதில்லை. 

3 - அழகு அறியும்: காதலர் அசிங்கமாய் இருக்கக் காணோம். 

4 - உயரம் அறியும்: தலைவனைக் காட்டிலும் தலைவி குள்ளமாக இருக்கிறாள். 

5 - வயது அறியும்: தன்னினும் குறைந்த வயதுடையவளையே ஒருவன் காதலிக்கிறான். 

6 - மண நிலை அறியும்: மணமாகாத ஒருத்தியும் ஒருவனுமே காதலிக்கின்றனர். 

இவற்றால் என்ன தெரிகிறது? காதலுக்குக் கழுகு பார்வை உண்டு, அது தேர்ந்தெடுக்கிறது என்பது புரிகிறது. 

காதல் மிக உயர்வாகச் சித்திரிக்கப்படுகிறது: அது தெய்விகமானது, புனிதம் வாய்ந்தது, ஒரு மனத்தில் ஒருவர்க்கு மட்டும் இடமளிப்பது, காதல் இன்றேல் சாதல் என்றெல்லாம் காதலைப் பற்றிக் கூறுகிறார்கள். ஆனல் அதில் என்ன தெய்விகம் உள்ளது, அது எப்படிப் புனிதம் என யாரும் கேட்பதில்லை, சொல்வதுமில்லை. 

நட்பை யொத்ததே காதல். ஒரேயொரு வேறுபாடு : நட்பு நம்மை ஆணோடும் இணைக்கும், பெண்ணோடும் பிணைக்கும்; ஆனால் ஆணும் பெண்ணுமே காதல் வயப்படுகிறார்கள். நம் பழைய இலக்கியம் காதலை நட்பு என்றே கூறுவதும் உண்டு: 

1 - குறுந்தொகை - 3 - தலைவி கூற்று: 

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 

2 - திருக்குறள் - 1122 - தலைவன் கூற்று: 

மடந்தையொடு எம்மிடை நட்பு. 

நட்பு தெய்விகமானதா? புனிதமானதா? அல்லவே! அது நிரந்தரமாக நீடிக்குமா? நிச்சயமில்லை. ஒரே ஊரில் வாழ்ந்தாலும் நண்பர்கள் பிரிந்துவிடுவது உண்டு; பகைப்பதும் கூடும். நட்பைப் போன்ற காதலும் அப்படித் தான் காலப் போக்கில் மாறலாம். 

முன்பு வயதுக்கு வந்த பெண்களை வீட்டுக்குள் முடக்கினர் . (இது சங்க காலத்தில் இற்செறிப்பு - இல் + செறிப்பு எனப்பட்டது) திருமணத்துக்குப் பின்புதான் பெண்கள் படி தாண்டினர். முறைப்பெண், முறைமாப்பிள்ளை என்று நெருங்கிய உறவில் மணம் நிகழ்ந்தது. காலப்போக்கில் பெண்கள் உயர்கல்வி கற்கவும் அலுவல் புரியவும் உரிமை பெற்றதால் ஆண்களோடு பழக வாய்ப்பு கிடைத்தது. அதனால் இன்றைய இளைஞர்கள் காதலிக்கிறார்கள்ஆனால் ஒவ்வொரு காதலும் கல்யாணத்துக்கு இட்டுச் செல்வதில்லை. அப்படிச் சென்றாலும் இறுதிவரை இணங்கி இணைந்து வாழ்வாரும் உண்டு, இடையில் பிணங்கிப் பிரிந்து போவாரும் உண்டு. ஏமாற்றப்பட்டுச் சீரழியும் காதலிகளும் அநேகர். மேனாட்டாரைப் போல மணமின்றிக் கூடி வாழ்வதும் தலை காட்டுகிறது. 

இவை யெல்லாம் கால மாறுதல்; உலக மயமாதலின் விளைவு. இவற்றைத் தடுக்க இயலாது. 

எதுவும் நன்மையாக முடியுமாயின் நன்றே.

Tuesday, 23 April 2013

தும்மல்


கைக்குழந்தைகள் தும்மும்போது என் கொள்ளுப் பாட்டியார், "நூறு" என்பார்; அடுத்தடுத்துத் தும்மினால், " இருநூறு, முந்நூறு" என்று எண்ணுவார். 

தும்மும்போது வாழ்த்தவேண்டும், நூறு என்றால் நூறு வயது வாழவேண்டும் என்று அர்த்தம் என விளக்குவார். இது அறுபது ஆண்டுக்கு முன்பு; அவருக்குப் பின்பு வேறு யாரும் இப்படி  வாழ்த்தி நான் கேட்டறியேன்; அந்த வழக்கம் இன்னமும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது  தெரியவில்லை. ஆனால் அது மிகப் பழங் காலத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறது. பெரியவர்களையும் வாழ்த்தியிருக்கிறார்கள். 

நமக்குப் புரை ஏறினால், " யாரோ நம்மை நினைக்கிறார்கள்" என்கிறோம் அல்லவா? திருவள்ளுவர் காலத்தில், " எவராவது நம்மை நினைத்தால் நாம் தும்முவோம்" என நம்பினார்கள். 

தும்முகையில் வாழ்த்துதல், தும்மலுக்குக் காரணம் பிறர் நம்மை நினைத்தல் என்று எண்ணுதல் ஆகிய இரு செய்திகளையும் 1317 ஆம் குறள் தெரிவிக்கிறது: 

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 

பொருள்: 

தும்மினேன் வழுத்தினாள் = நான் தும்மினேன், அவள் என்னை வாழ்த்தினாள் (நூறு என்று சொல்லியிருப்பாள் போலும்) 

அழுதாள் யார் உள்ளித் தும்மினீர் என்று = எவளோ உம்மை நினைத்தமையால் தும்மினீர்; யார் அவள் எனக் கேட்டு அழுதாள். 

தன் காதலனை வேறு ஒருத்தி மனத்தால் நினைக்கவும் கூடாது என்பதில் உறுதி கொண்டுள்ளாள் தலைவி.

Wednesday, 17 April 2013

எத்தனை இடையூறு!

இக் காலக் காதலர்கள் சந்திப்பதற்கும் பழகுவதற்கும் இடங்கள் ஏராளம், வசதிகளுக்கும் பஞ்சமில்லை; தடையோ மிகக் குறைவு. கொடுத்து வைத்தவர்கள்! ஆனால் பழங் காலத்தில் அப்படி இல்லை என்பது 122 ஆம் அக நானூற்றுப் பாடலால் தெரிகிறது.

இரவில் வந்து சந்திப்பான் தலைவன், திருட்டுத்தனமாய் (அதனால்தான் அதற்குக் களவு என்று பெயர்). இன்பச் சந்திப்பை எண்ணியெண்ணி எதிர்பார்த்து உறங்காமல் ஆவலுடன் காத்திருப்பாள் தலைவி. அது அவ்வளவு எளிதாய் இல்லை. தன் இக்கட்டை இப்படி வெளியிடுகிறாள்:

"இந்த ஊர், விழா எதுவும் இல்லாதபோதும் லேசில் தூங்காது; அது ஒருவாறு உறங்கிய பின்னும் அம்மா விழித்திருப்பாள் ; அவள் கண்ணை மூடினாள் என்று மகிழ முடியாது; ஊர் காவலர் சுற்றுவர், அவர்கள் அகன்றால், நாய்கள் குரைக்கும், அவை ஓய்ந்தால், மதி தோன்றி எங்கும் ஒளியைப் பரப்பும்; அது மறையுமாயின் ஆந்தைகள் அலறி அச்சத்தைத் தோற்றுவிக்கும்; அடுத்துச் சேவல்கள் கூவத் தொடங்கிவிடும். இவை எல்லாம் முடிந்துவிட்டாலோ, அவர் வரமாட்டார். எத்தனை இடர்ப்பாடு என் காதலுக்கு? 

பாவம் அவள்!
 
அந்தப் பாடல் இதோ...
 
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;

மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;

பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;

இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;

அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;

வளைக்கண் சேவல் வாளாது மடியின், 
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;

எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே;  


 

Thursday, 11 April 2013

முழுக்க நம்பாதீர்கள் 

இது விளம்பர உலகம்: அன்றாடம் பல வகை விளம்பரங்கள் கண்ணைப் பறிக்கின்றன, காதைத் துளைக்கின்றன; 

சுவை நல்குபவை சில; எரிச்சல் ஊட்டுபவை வேறு சில. நுகர்வோரைக் கவர்வதற்காக எத்தனையோ உத்திகள் கையாளப்படுகின்றன; அவற்றுள் அடிக்கடி இடம் பெறும் சொற்கள் புதிய, இலவசம், ஃபார்முலா முதலியவை.  

விளம்பரம் சொல்வது என்ன என்பதைத் தெரிந்துகொள்கிற நாம் அது என்ன சொல்லவில்லை என்பதை ஊகித்து உஷார் ஆவது முக்கியம். 

சில காட்டுகள்: 


     சொன்னது

சொல்லாதது

1.      மனைக்கு மிக அருகில் ரயில் நிலையம் உள்ளது.

அங்கே முக்கிய வண்டிகள் நிற்காது.

2.      ஐந்து நிமிடத்தில் பேருந்து நிலையம்.

காரில் போனால்.

3.      இப்போது அதிக ஊட்டச் சத்துடன்.

இப்படிச் சொன்னாலாவது வாங்க மாட்டீர்களா?

4.      மூன்று கோடி பேர் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

இதை நம்ப லட்சம் பேராவது இருப்பார்கள்.

5.      ஆடித் தள்ளுபடி.

தேங்கிக் கிடப்பதைத் தள்ளிவிடுவது.

6.      பரபரப்பாக விற்பனை ஆகிறது.

அப்படி விற்றால் இந்த விளம்பரம் ஏன் கொடுக்கிறோம்?

7.      ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.

இரண்டுக்கும் சேர்த்துத்தான் விலை.

8.      எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஃபோன் செய்யலாம்.

ஏனோ தானோ பதில்தான் கிடைக்கும்.

9.      இது முடி கொட்டுவதைத் தடை செய்யும்.

தடையை மீறிக் கொட்டினால் நாங்கள் பொறுப்பல்ல.

10.   திருப்தி இல்லையேல் பணம் திரும்பப் பெறலாம்.

நாங்கள் கொடுத்தால்.

சிங்கமும் புலியும்


 

தமிழ்த் திரைப்படங்கள் பரப்புகிற தவறான தகவல்களுள் ஒன்றுசிங்கம் தனியாய் வரும் என்பது; கதைகளில் கூறப்படும் செய்திகளான சிங்கம் காட்டில் வாழும், அதுவே காட்டுக்கரசன், குகையில் வசிக்கும் என்ற செய்திகளும் சரியல்ல.
 
சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரிமயிரைப் பிடித்து உலுக்குதல் என்பது அச்சம் அறியா அதிவீரச் செயலைக் குறிக்கிற ஆங்கிலப் பழமொழி. 

ஆனால் சிங்கம் குடும்பமாக வாழும் விலங்கு. பெண் சிங்கம் வேட்டையாடி இரை வழங்கும்குடும்பம் சேர்ந்து உண்ணும். சிங்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் A pride of lions என்பர். சிங்கம் புல்வெளிகளில் வாழ்கிறது

காட்டுக்கு அரசன் புலிதான்;  அடர்ந்த உள்பகுதியில் அது வசிக்கும் ஆதலால் அதைக் காண்பது அரிது. தனியாக வாழ்வதால் காயம் பட்டாலோ, நோய் உற்றாலோ, முதுமை அடைந்தாலோ இரை தேட முடியாமல் இறந்துவிடும். 

இந்த ஆண்டு இந்தியாவில் 32 புலிகள் உயிரிழந்தன எனவும் உலகு முழுதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது எனவும் 16-5-12 இந்து நாளிதழ் தெரிவித்தது. 
 
படம் உதவி: இணையம்
=======================================================