Tuesday, 29 May 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா -1 (ஆங்கில மூலத்திலிருந்து)

( கன்னி எலெக்த்ரா தன்னைத் துன்புறுத்தும் தாயிடம் )தாயா ! சிறைக் காவலர் என்பது பொருந்தும், 

என்மீது நீதிணிக்கும் அடிமைத் தனத்தையும் 

உன்னிட மிருந்தும் உன்துணைவ ரிடமிருந்தும் 

நான்கேட்க வேண்டியுள்ள வசவுகளையும் நினைத்தால். 

ஏசலாம் என்னை எண்ணப் படியெலாம். 

இழிந்தவள், கொடூரி, நாண மில்லாள், 

இவ்வா றெல்லாம் இருக்கிறேன் என்றால் 

இதுவே சான்று உன்மகள் எனற்கு. 

( என்ற்கு - எனல் + கு = என்பதற்கு )

(படம் உதவி; இணையம்)

Friday, 25 May 2012

யூரிப்பிடீசின் எலெக்த்ரா

( எலெக்த்ரா அவல வாழ்க்கையில் அல்லல் உற வேண்டும் என்ற தீய நோக்கத்தில் அவளை ஒரு பரம ஏழைக்கு மணம்  முடித்தாள் தாய்; எனினும் ஊருக்கு வெளியே, குடிசையில், நல்ல மனைவியாய் வாழ்ந்தாள் அவள். ஒரு நாள்  ஒரேஸ்த்தஸ் வந்து, தமக்கையுடன் கலந்தாலோசித்து, தெய்வத்தை வழிபட எகிஸ்த்தஸ் வருவதை அறிந்துதிட்டமிட்டுக் கொன்று, தூக்கிக் கொணர்ந்த பிணத்தை நோக்கி எலெக்த்ரா  கூறியது)என்தாயில் ஒழுக்கமுள்ள ஒரு மனைவியை அடையலாம் 

என்று கற்பனை செய்தநீ ஒருமுட்டாள். 

ஆ ! பிறனுடைய துணைவிமேல் கண்வைத்து  

அவளை வசப்படுத்தி மணந்தவன், 

தனக்கு விசுவாசமாக இருப்பாள் 

முதல் கணவனுக்கு விசுவாசமாய் இல்லாதவள் 

என நம்பினால் அவனொரு மடையன். 

பரிதாப வாழ்வு வாழ்ந்தாய்நீ, அதை உணராமலே. 

பழிகாரியை மணந்தாய் என்பது உனக்குத் தெரியும்; 

மோசக்காரன் நீ என்பது அவளுக்குத் தெரியும். 

இருவரும் குற்றவாளிகள், ஒருவரால் மற்றவர் கெட்டீர்.


**************************************************************


யூரிபிடீசின் எலெக்த்ரா (தொடர்ச்சி)


( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய் வரச் செய்தனர். அவள் வருவது தெரிகிறது)


ஒரேஸ்தஸ் - அன்னை..நாம் என்ன செய்யவேண்டும்? கொல்வது? 

எலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து 

ஒரேஸ்தஸ் - இல்லை, ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை? 

எலெக்த்ரா  - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை. 

ஒரேஸ்தஸ்- அப்பொல்லோ, எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் 

எலெக்த்ரா  - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி? 

ஒரேஸ்தஸ் - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக? 

எலெக்த்ரா  - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க? 

ஒரேஸ்தஸ் - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு. 

எலெக்த்ரா  - தெய்வக் குற்றம் ஆகும், தந்தைக்கு உதவாவிட்டால். 

ஒரேஸ்தஸ்- அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும். 

எலெக்த்ரா  - என்ன விலை தந்தைக்கு, பழி தீர்க்காவிடில்? 

ஒரேஸ்தஸ் - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு, கடவுளின் பெயரில். 

எலெக்த்ரா  - புனித முக்காலியில் அமர்ந்தா?  

ஒரேஸ்தஸ் - ஒரு நாளும் ஒப்பமாட்டேன், அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை. 

எலெக்த்ரா  - ஆக, கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை. 

ஒரேஸ்தஸ் (நீண்ட யோசனைக்குப் பின்பு) - அப்படியானால் சரி, எப்படிச் செய்வேன்? இவளுக்கும் அதே பொறியை வைப்பதா? 

( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர்.)

(படம் உதவி: இணையம்)

எலெக்த்ரா
கிரேக்க இதிகாசம், இலியட், எலெக்த்ரா நாடகத்துக்கு அடிப்படை. 

அதன் சுருக்கம்:

மன்னர் அகமெம்நோனுக்கு எலெக்த்ரா , கிரிசேர்த்தமிஸ் என்ற இரு புதல்விகளும் ஒரேஸ்த்தஸ் என்னும் மகனும் இருக்கின்றனர்.

( இஃபிஜெனியா என்ற மகள் தெய்வத்துக்குப் பலி கொடுக்கப்பட்டுவிட்டாள் )

அரசரது தலைமையில் கிரேக்கப் படை ட்ரோய் நகரத்தாரை எதிர்த்துப் போரில் ஈடுபட்டிருந்தது;

அது நெடுங்காலம் நீடிக்கவே, அவரது மனைவி க்ளித்தெம்நேஸ்த்ரா, எகிஸ்த்தஸ் என்பவனை  மணந்துகொண்டாள். வெற்றிக் கனி கொய்து அவர் திரும்பி வந்தபோது,  மனைவியும் புதுக்கணவனும், முன் திட்டப்படி அவரைக் கொன்றுவிட்டனர்.

தம்பி பழி வாங்க வேண்டும் என்பது எலெக்த்ராவின் விருப்பம். சிறுவனாகிய அவனது உயிருக்கு அன்னையால் நேரக்கூடிய ஆபத்தைத் தவிர்ப்பதற்காக அவன் வேறு ஊரில் பத்திரமாய் வளர்வதற்கு அவள் கமுக்கமாய் ஏற்பாடு செய்தாள். தக்க வயதில் அவன் வந்து வினை முடிக்க வேண்டும்.

இரு நாடகங்களிலிருந்தும் சில காட்சிகளை, ஆங்கில வழி, மொழி பெயர்த்து வழங்குவேன்.

Monday, 21 May 2012

கிரேக்கத் தொன்மம்
உன்னத தொன்மம் ( புராணம் ) கிரேக்கர்க்கு உண்டு. கிறித்துவம் பரவுவதற்கு முன்பு அவர்கள் எண்ணற்ற தெய்வங்களைத் தொழுதுவந்தனர். தலைமைக் கடவுள் சீயஸ்; இவரது மனைவி ஹீரா, மகன் அப்பொல்லோ ( சூரியன் ). இவர்களுக்கும் வேறு முக்கிய சாமிகளுக்கும் இருப்பிடம் ஒலிம்ப்பியா மலை, சிவன் குடும்பத்துக்குக் கைலாய மலை போல. 

கடவுள்களுக்கு இடையே நட்பு, போட்டி, பூசல், பொறாமை இருந்தன; மனிதர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு உதவதும் உண்டு, உபத்திரவம் புரிவதும் உண்டு. 

தெய்வங்களின் செயல்களை அடிப்படையாய்க் கொண்டு கதைகள் எழுதினார்கள்; ஒவ்வொரு பிரதான கடவுளின் சாகசங்களையும் விவரிக்கிற சுவையான கதைகள் பிறந்தன. 

கர்ணன் போன்று தெய்வ - மனித உறவில் உதித்த அசகாயசூரர் சிலரது வாழ்க்கையும் அவரது மகத்தான சாதனைகளும் தொன்மத்தில் இடம் பெற்றன. அவருள் ஒருவனான ஹெர்குலிஸ் சீயசுக்கும் மானிடப் பெண் அல்க்மெனுக்கும் புதல்வனாய்த் தோன்றி அரும் பெரும் செய்கைகளுக்குக் கர்த்தா ஆனான். புகழ் மேம்பட்ட அவனைப் பற்றிப் பலர் படித்திருக்கலாம். 

கிரேக்கரின் ஒப்புயர்வற்ற கற்பனைச் செழுமை விளைவித்த ருசிகரத் தொன்மப் படைப்புகள் தலைமுறை தலைமுறையாய், ஐரோப்பியக் கலைஞர்களின் உள்ளம்கவர் கருக்களாகி விழுமிய வண்ண ஓவியங்கள் தீட்டப்படக் காரணமாய் இருந்துள்ளன. 

அவை பல நாட்டு அருங் காட்சியகங்களை அணி செய்கின்றன. பாரிசிலுள்ள லூவ்ர் ( Louvre ) அகத்தில் காட்சி அளிப்பவற்றுள் சில:


ஒலிம்ப்பியா, அப்பொல்லோவும் கவிஞனும், பர்னாஸ் மலை, வீனசின் குளியல், பக்குசின் வெற்றி, அப்பொல்லோவும் மர்சியாசும், ஆண்ட்ரோமீடாவின் மீட்பு. 

தெய்வங்களையும் தொன்ம நிகழ்ச்சிகளையும் கிரேக்கச் சிற்பிகள் சிலைகளாய்ச் செதுக்கினார்கள். வெண் சலவைக் கல்லால் ஆன அந்த அற்புத, வியக்கவைக்கும், தத்ரூப உருவங்கள் மாதிரி, வேறெந்த நாட்டினரும் புனையவில்லை என்பது மிகையல்ல. 

லூவ்ரின் ஒரு தனிப் பகுதியில் கண்ணுக்கு விருந்து அளிக்கும் அந்தக் கலைநேர்த்தி மிக்க அழகுப் பதுமைகளைப் பார்ப்பவர்கள் 

கண்டோம் கண்டோம் கண்டோம்

கண்ணுக்கு இனியன கண்டோம்

கண்டறி யாதன கண்டோம்

என்றெண்ணிக் களிப்பது திண்ணம். 

(ஒலிம்பியாவில் இருந்த சீயஸ் சலவைக்கல் சிலையும் ரோட்ஸ் தீவில் 30 அடி உயரமாய் எழுப்பப்பட்டுக் கம்பீரமாய் வீற்றிருந்த அப்பொல்லோவின் வெண்கலச் சிலையும் கால தேவனால் சிதைக்கப்பட்டுவிட்டன.)

Monday, 14 May 2012

மன்னரின் கவிதை
( பிரான்சில் 17 ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூய் மன்னன் ஆண்டபோது நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் சிலவற்றை மதாம் த செவிஞே என்ற பெண்மணி பதிந்திருக்கிறார். கீழ் காணும் செய்தி 1- 12 -1664 இல் எழுதப்பட்டது. இனி மொழிபெயர்ப்பு)கொஞ்ச காலமாய் அரசர் கவிதைகள் இயற்றுவதற்குக் கடுமையாய் முயல்கிறார். 

ஒரு நாள் சிறு கவியொன்றை எழுதினார்; அது அவருக்கே பிடிக்கவில்லை. 

மார்ஷல் கிராமோனிடம் அதைக் காட்டி, " மார்ஷல், இதை வாசியுங்கள்; இவ்வளவு மட்டமான கவிதை யொன்றை நீங்கள் கண்டதுண்டா என்று பாருங்கள். அண்மைக் காலமாக நான் கவிகளை விரும்புகிறேன் என்பதால் பல தரப்பட்ட கவிகளைக் கொண்டுவருகிறார்கள்" என்றார். 

அதை வாசித்துப் பார்த்த மார்ஷல், " நீங்கள் எல்லாவற்றையும் மிகச் செம்மையாய் மதிப்பிடுகிறீர்கள்; உண்மையிலேயே இதைப் போன்ற மடத்தனமான, ஏளனத்துக்கு உரிய ஒரு கவிதையை நான் இதுவரை படித்ததே இல்லை" என்றார். 

மன்னர் சிரித்துக்கொண்டே, " இதை இயற்றியவர் ஒரு தற்பெருமை கொண்ட முட்டாள் என்பது மெய்யல்லவா?" என்று கேட்டார். 

"அவரை வேறு விதமாய் அழைத்தல் பொருந்தாது" 

" நன்று, இவ்வளவு வெளிப்படையாய் நீங்கள் அதைப் பற்றி என்னிடம் கூறியதற்கு மகிழ்ச்சி; அதை எழுதியவன் நான் தான். 

"ஆ! அவசரப்பட்டுவிட்டேன். அதைத் திருப்பித் தாருங்கள்; நான் சரியாய்ப் படிக்கவில்லை" 

" வேண்டாம், மார்ஷல், முதல் உணர்ச்சியே எப்பொழுதும் இயற்கையானது"  

மார்ஷலின் நிலையை எண்ணி அரசர் பெரிதாய்ச் சிரித்தார். வயதான ஓர் அதிகாரிக்குச் செய்யக்கூடிய மிக மோசமான கொடுமை இதுவே என்பது அனைவருடைய கருத்துமாகும். 

சிந்திப்பதை எப்போதும் விரும்புகிற நானோ, வேந்தர் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் உண்மையைத் தெரிந்து கொள்ளமுடியாத எவ்வளவு நெடுந்தொலைவில் அவர் இருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

Thursday, 10 May 2012

அரசனை நம்பி.....


 

நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ள பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'' என்பது. 

ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்வதாக அமைந்துள்ள இதன் விரிவான அர்த்தமாகக் கொள்ளப்படுவது என்ன? 

''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!'' 

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுதான் ஒரு கவிஞர் பழைய திரைப்படம் ஒன்றில் பாடல் புனைந்திருந்தார்.


"அரசனைப் பாத்த கண்ணுக்குப்

புருசனைப் பாத்தா புடிக்காது

அரசனைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டா

புருசனை நெஞ்சம் மறக்காது."

என்பவை அந்தப் பாட்டின் சில அடிகள். 

இப்படிப் பொருள் கொள்வது, பெண்ணை இழிவுபடுத்துகிறது; அவளின் கற்பை ஐயப்பட வைக்கிறது; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது. 

ஆனால், பழமொழியின் உண்மைப் பொருள் தெரிந்தால் மேற்கண்ட இழி கருத்து நீங்கும். என்ன ஐயா.. அந்த மெய்ப்பொருள் என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சொல்கிறேன். 

இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு. 

ஆல மரம் - ஆல்

வேல மரம் - வேல் (ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி)

வேப்ப மரம் - வேம்பு

புங்க மரம் - புங்கன்

ஒதிய மரம் - ஒதியன் (ஒதியன் பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது)

அரச மரம் - அரசன்


குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுற்றினால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கை. 

''அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்'' என்ற பழமொழி அவசரக்காரி ஒருத்தியைக் கிண்டல் செய்கிறது. 

இப்போது உண்மைப் பொருளை ஊகித்திருப்பீர்களே! உங்கள் ஊகம் சரி. அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.


(நிலாச்சாரலில் வெளிவந்த என் கட்டுரை)
(படம் உதவி : இணையம்)

Thursday, 3 May 2012

எகிப்திய கல்வெட்டு ஒன்றிலிருந்து...
ஒரு முதிய அலுவலர் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள

கல்வெட்டொன்று அக்கால எகிப்திய  தொழில்களையும், தொழிலாளர்களின்

 நிலைமையையும் அறிய  உதவுகிறது: 

"உழவரது நிலையை எண்ணிப் பார்த்ததில்லையா நீ? விளைச்சல் வரியை

வசூலிப்பவர் கருமமே கண்ணாய்ச் செயல்படுவார். அவருக்கு

உதவியாளராய்க் கையில் கம்புடன் சிலர், பனங்கருக்குடன் வேறு

சிலர். "கொடு, கொடு. தானியங் கொடு!" என்று அவர்கள் அதட்டுவார்கள்.

உழவரால் தரமுடியவில்லையெனில் அவரைக் கீழே தள்ளிக் கை

கால்களைக் கட்டி வாய்க்காலுக்கு இழுத்துப் போய்த் தலைகீழாய் நீரில்

அமிழ்த்துவார்கள். 

கைத்தொழிலாளர் பாடும் மேம்பட்டதல்ல. தீயின் அருகில் உழைக்குங்

கொல்லரின் கைகள் முதலைத் தோலால் பண்ணப்பட்ட பொருள்கள்

போலக் கரடு முரடாக இருக்கின்றன. கல் உடைப்பவர் விடியலிலேயே

குந்திவிடுகிறார் வேலை தொடங்க; அவருடைய முழங்கால்களும்

முதுகெலும்புகளுஞ் சீர்கெடுகின்றன. முடி வெட்டுபவர் நாள் முழுதும்

மழிக்கிறார்; சாப்பிடும் நேரம் மட்டுந்தான் ஓய்வு. கொத்தரோ வெட்ட

வெளியில் நின்றும் தூண்களிலும் உத்தரங்களிலும் தொற்றிக்கொண்டும்

வேலை செய்வதால் கைகள் காய்ப்பு ஏறிவிடுகின்றன; உடைகள்

அலங்கோலம் அடைகின்றன; ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே

குளிக்கிறார். நெசவாளி வீட்டை விட்டு நகர்வதில்லை. அவருடைய

முழங் கால்கள் வயிற்றில் முட்டுகின்றன. செய்தித் தூதர்

வெளிநாடுகளுக்குப் புறப்படுகிறபோது உயில் எழுதிவிட வேண்டியதுதான். 

காட்டு விலங்குகளும் பகைவர்களும் எதிர்ப்படுவார்களே! எகிப்துக்குத்

திரும்பி வந்தால்கூட அடுத்த கணமே மறு பயணங் கிளம்ப வேண்டி

வரும். சாயந்தோய்ப்பவரின் கைகள் அழுகிய மீனின் வாசனை வீசுகின்றன;

அவருடய கண்கள் களைப்பால் குழி விழுந்து விடுகின்றன. ரொட்டி

சுடுபவர் ரொட்டிகளை அடுப்புக்குள் வைக்கும்போது தலையை உள்ளே

நுழைக்கிறார்; அவருடைய கால்களைப் பிடித்திருக்கிற மகன் கொஞ்சம்

பிடியைத் தளர்த்தினால் தந்தை தீயில் விழுந்து விடுவார். 

ஆதலால் கல்வியைக் கற்றுக்கொள். எல்லாத் தொழில்களையும் நான்

சீர்தூக்கிப் பார்த்துவிட்டேன். படிப்பைவிட மேலானது எதுவுமில்லை."

***********************************************************************************************

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியின் பெருமையை உணர்த்தும் வரிகள். ('மறைந்த நாகரிகங்கள்' நூலிலிருந்து)

சமீபத்தில் வெளிவந்த என்னுடைய ஆறாவது நூலாகிய 'மறைந்த நாகரிகங்கள்' புத்தகத்தைத்  தரவிறக்கம் செய்து படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.