Thursday 30 January 2014

வலிமையின் ஆதிக்கம்


உலகம் வலிமையை ஆதரித்து அதை ஊக்குவதாகவே இருந்துவருகிறது.
வலிமை பல வகைப்படும்: முக்கியமானது உடல் வலிமை; அடுத்துப் பண வலிமை,  சாதி வலிமை,  பதவி வலிமை,  அதிகார வலிமை,  செல்வாக்கு வலிமை, இவை தனிப்பட்டார்க்கு; இவற்றுள் இரண்டு மூன்று சேர்ந்துவிடில் அசைக்க முடியாத ஆதிக்கம் தலைவிரித்தாடும்.நாடுகளைப் பொருத்தவரை, படை வலிமை முதன்மையானது.

சிங்கம் புலி முதலான உடல் வலு மிக்க விலங்குகள் அது குறைந்த மான், ஆடு மாடுகளை விரட்டி,  மடக்கி, பாய்ந்து கவ்விக் கதறக் கதறக் கொன்று பசியாறுகின்றன. பெரிய மீன்கள் சிறு மீன்களை இரையாக்கிக் கொள்கின்றன. மனிதர்களிலும் வலிமை மிகுந்தோர் எளியோரின் உடைமை,  உரிமைகளைப் பறித்துத் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றார்கள். ஓநாயும் ஆட்டுக் குட்டியும் கதை அத்தகைய மனிதரைக் குறித்ததே. தேக பலம் உள்ளவனுக்கு எல்லாரும் அஞ்சுகிறார்கள்; தான் விரும்பியதை அவன் வன்செயல்களால் அடைகிறான்.

   1 -- வல்லான் வகுத்ததே வாய்க்கால்; வல்லவன் ஆடியதே பம்பரம்.
   2 --- தடி எடுத்தவன் தண்டல்காரன்.

என்னும் பழமொழிகள் உடல் வலிமையின் ஆதிக்கத்தை விளக்குகின்றன.

 தண்டல்காரன் = வசூல்காரன்; கடைத் தெருவில் மாமூல் பிடுங்குகிற ரவுடிகள் உடல் வல்லமையைப் பயன்படுத்தி ஆதாயம் பெறுகின்றனர்.

 ஓட்டப் பந்தயம்,  குத்துச் சண்டை,  மற்போர்,  வட்டு எறிதல்,  நீச்சல் முதலான போட்டிகளில் நோஞ்சான்கள் கலந்துகொள்ளவே இயலாது; அவற்றில் அதிக வலிமைதான் வெற்றி வாகை சூடிப் புகழ் எய்துகிறது.
 உடல் வலிமைக்குச் சொன்னவை மற்ற வலிமைகளுக்கும் பொருந்தும் என்பதைக் கண்கூடாகக் காணலாம்; அனுபவத்தாலும் வரலாற்றாலும் அறியலாம்.

"அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவனின் வீட்டு அம்மியை உடைக்கும்" என்னும் பழமொழி அதிகார வலிமையைச் சுட்டுகிறது.

பழங் காலத்தில் வலிய படையினர் பிற நாடுகளுள் புகுந்து, தாக்கி, வென்று உயிர் உடைமைகளுக்குப் பெருஞ் சேதம் விளைவித்தனர். அந்த நாடுகளைச் சூறையாடி, பற்பலரைக் கைது செய்து, கொண்டுபோய் அடிமைகளாய் நடத்திக் கசக்கிப் பிழிந்து, பென்னம்பெரிய கட்டடங்கள், பாலங்கள், கோவில்கள் முதலானவற்றை எழுப்ப அவர்களைப் பயன்படுத்தினார்கள்.

ஆப்பிரிக்க மக்களை வெள்ளையர் பிடித்து, இடுப்பிலும் கழுத்திலும் இரும்புச் சங்கிலி மாட்டிக் கூட்டங் கூட்டமாய்க் கப்பலில் ஏற்றிக் கடத்திச் சென்று அடிமைகளாய் விற்றார்கள். அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஆக்கிரமித்துக் கைப்பற்றி, வலிமையற்ற பூர்வ குடிகளை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்துக் கிட்டத்தட்ட அறவே ஒழித்து, அவர்களின் இடங்களைப் பிடுங்கிக்கொண்டு வாழ்கிறார்கள். ஆசியா, ஆப்பிரிக்காக் கண்டங்களின் பலபல நாடுகளில், தங்கள் ஆட்சியை நிறுவி, அவற்றைச் சுரண்டிக் கொழுத்தார்கள்.

நம் காலத்திலும் படை வலிமை செயல்படுவதைக் காண்கிறோம்: இந்தியாவின் கிழக்கில் 22,000 சதுர மைல் பகுதியைச் சீனா பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது; மீட்க நம்மால் இயலவில்லை. காஷ்மீரின் மூன்றில் ஒரு பாகத்தைப் பாக்கிஸ்தான் வசப்படுத்தி, " ஆஜாத் காஷ்மீர்" என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது; நேரு ஐ. நா. வில் முறையிட்டும் பலனில்லை.

ஈரானும் லிபியாவும் அமெரிக்காவால் சீரழிந்த கொடுமையை அறியாதார் யார்?

 இயற்கைத் தேர்வு (natural selection),  வலுவுள்ளது தங்கல் (survival of the fittest) என உயிரியல் கூறுவது,  இயற்கையானது வலிமையை வளர்க்கிறது என்பதைக் கண்டுதான்.

 இரு காட்டுகள்:

 1 -  இன விருத்திக்கான தருணத்தில், ராணித் தேனீ அடையை விட்டு வெளியே வந்து, பறந்து செல்ல,  எல்லா ஆண் ஈக்களும் தொடர்கின்றன; ஆற்றல் குறைந்தவை பின்தங்க,  வலிமை மிக்க ஒரேயோர் ஆண் ஈ, ராணியை நெருங்குகிறது; இரண்டும் கூடி சக்தி மிகுந்த குழந்தைகளை ஈனுகின்றன.

 2 -   தெரு நாய்களைக் கவனித்திருக்கிறீர்களா? தாய் நாய், தொடக்கத்தில், எல்லாக் குட்டிகளுக்கும் பால் தருகிறது; ஓரளவு வளர்ந்தபின்,  குட்டிகள் பசியோடு தாயை அணுகும்போது, அது ஓடும்;  குட்டிகள் பின்னால் ஓடும்; களைத்துப் போகிறவை அங்கங்கு நின்றுவிடும்; சக்தி அதிகமுள்ள குட்டி ஓடிவரும்; தாய் நின்று அதற்குப் பாலூட்டும்.

வலிமையான சந்ததி உருவாவதற்கு இயற்கை பின்பற்றும் உத்தி!
பலவீனம்,  வல்லமை ஆகியவற்றின் விளைவாக மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு நீடிக்கின்றன; அவற்றைப் போக்கி சமத்துவத்தை மலரச் செய்ய யார்யார் எவ்வளவு பாடுபட்டாலும் வெற்றி கிட்டவே கிட்டாது; ஏனென்றால், வலிமையின் ஆதிக்கம் என்பது இயற்கை நியதி.

  "எளியாரை வலியார் வாட்டினால் வலியாரை தெய்வம் வாட்டும்" என்னும் எச்சரிக்கை ஒரு பயனையும் தருவதில்லை; எளியார் தமக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளத்தான் அது உதவுகிறது.
           +++++++++++++++++++++++


Friday 17 January 2014

மேலும் சில மரு -- (தொடர்ச்சி)


7  -  தொங்குதல் -- தூங்குதல் என்பதன் மரு.

  நாம் தொங்குதல் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறோம்:  பாபிலோனியாவில் இருந்த தொங்கு தோட்டம் உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்று என்பதை அறிவோம்;  தொங்கு சட்ட சபை என்பது   எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க இயலாத சபைசில ஊர்களில் தொங்கு  பாலம் உண்டுதொங்கு ரயில் என்றால் மொனோரயில்.

 பழைய நூல்களில் தூங்குதல் என்னும் சொல்தான் ஆளப்பட்டது.

1  --  குறுந்தொகை - 18 :
"சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு" (சிறிய காம்பில் பெரிய கனி தூங்குவது போல்.)

2 -- புற நானூறு - 22 :
"தூங்கு கையான் ஓங்கு நடைய" (தூங்குகிற கையும் விரைந்த நடையும் உடைய யானைகள்).

3  --  புற நானூறு 163 :
  "பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்" (பழங்கள் தூங்குகிற மரங்கள் நிறைந்த  முதிர மலைக்கு உரியவன்)

  தூங்குதல் என்பதன் பிறவினை தூக்குதல்.

  கலங்குதல் - கலக்குதல்மயங்குதல் - மயக்குதல்விளங்குதல் -  விளக்குதல் என்பவை போல்.

   பிறவினைச் சொல்லான தூக்குதல் மாறவில்லைதன்வினையாகிய  தூங்குதல் மருவிற்று.  தூக்கம் கொள்ளுதலைப் பழங்காலத்தில் உறங்குதல் என்றனர்: 

"உறங்குவது போலும் சாக்காடு" (குறள்)

   ஆங்கிலம் பிரஞ்சு முதலிய மொழிகளில் மரு அதிகம் இல்லைதமிழில் ஏராளம் இருப்பதற்குக் காரணம் நம் எழுத்து மொழியும் பேச்சு  வழக்கும் மிகுதியாக வேறுபட்டிருப்பதுதான். எழுதுவது போலவே தொடக்கத்திலிருந்து தமிழர் பேசிவந்திருந்தால் சொற்களுக்கு ஒரு ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கும்மாறுதல் நேர்ந்திருக்காது.

                         ==================================

Wednesday 8 January 2014

மேலும் சில மருச் சொற்கள்

   முன்பு சிலசில மருச் சொற்களை அறிந்தோம்; இப்போது இன்னும் கொஞ்சம் காணலாம்:

 1 -- அரியலூர் -- அரியிலூர் என்பதன் மரு.
அரி + இல் + ஊர்.
திருமாலுக்கு இல்லமாகிய ஊர். அங்குப் பழைமை  வாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது.

 2 -- அரசலாறு -- அரிசிலாறு என்பது சரியான பெயர்.
 நற்றிணை - 141 :   "அரிசில் அம் அறல்" (அரிசிலாற்றின் தெளிந்த கருமணல்)சங்கப் புலவர் ஒருவரின் பெயர், அரிசில் கிழார்.

  3 -- உழைப்பு - உழப்பு.
   குறள் 1031 : உழந்தும் ...
   திருவிடைமருதூர் மும்மணிக் கோவை:
  " உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
   கழப்பின் வாராக் கையறவு உளவோ?"
   ( உறுதி = நன்மை;  கழப்பு = சோம்பல்;  கையறவு = இழப்பு)

   4 -- எள் -- எண் என்பது மருவியது.
  தொல்காப்பியம் - எழுத்து - பா 308 : " எண் என் உணவுப் பெயர்"  என்கிறது;   எண் என்ற சொல் ஒன்று முதலான நம்பர்களையும் குறிக்கும்;  அந்த அர்த்தத்தில் வரும் சொல் அல்ல இந்த எண், என்பதை விளக்குவதற்காகத் தொல்காப்பியர்,  உணவுப் பெயரைக் காட்டுகிற சொல் என்றார். (அதாவது இப்போதைய எள்).

  பழங் காலத்தில் நெய் என்பது ஆயிலைக் (oil ) குறித்தது;  எண்ணிலிருந்து பிழிந்த நெய்யை எண்ணெய் என்றனர்:  எண் + நெய் = எண்ணெய்.   
 ( இப்போது நல்லெண்ணெய் என்கிறோம்)

    நற்றிணை 328 : " எண்பிழி நெய்யொடு" = எண்ணைப் பிழிந்து எடுத்த  நெய்யோடு.

   புறம் 279 :  "குடுமி எண்ணெய் நீவி" = குடுமியில் எண்ணெய் தடவி.
 நாளடைவில் எண்ணெய் என்பது எல்லா ஆயிலுக்கும் பொதுப் பெயராய் மாறி விட்டது:  தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கு எண்ணெய்;  ஆகையால் எண்ணிலிருந்து பெறப்படும் ஆயிலுக்குத் தனிப் பெயர் தேவைப்பட்டதுநல் என்னும் அடைமொழி சேர்த்து  நல்லெண்ணெய் என்றார்கள்;  அது வெறும் அடைமொழி தானே தவிர,  கெட்ட என்பதற்கு எதிர்ச்சொல் அல்ல.

  5 --  குறுணை  -- குறு நொய் (நொய்யைவிடச் சிறியது) என்பதன் மரு.

  6 --- தேவலை ---  தாவிலை என்பது ஆதிச் சொல்.
 தா என்பது வலிமை, வருத்தம் ஆகிய இரு பொருள் உடைய சொல்.
   " தாவே வலியும் வருத்தமும் ஆகும்" - தொல். -- சொல் - 827 .
 தா + இலை = தாவிலை = வருத்தம் இல்லை. அது தேவலை ஆகிவிட்டது.
           ( தொடரும் )

   -----------------------------------------------------------------------------------

Thursday 2 January 2014

கவிச் சக்கரவர்த்தி கம்பன்


வ. வே. சு. ஐயர் எனச் சுருக்கமாகச் சுட்டப்படும் வரகனேரி வேங்கட சுப்ரமண்ய ஐயர் (1881 - 1925)  தமிழ்த் திறனாய்வாளர்களுள் தலைசிறந்தவர். கரூர் அருகில் உள்ள  சின்னாளப்பட்டியில்  பிறந்து  திருச்சி வரகனேரியில் வளர்ந்தவர். ஆங்கிலம்,  லத்தீன்சமற்கிருதம் முதலான  பல மொழி பயின்றவர். விபத்தில் அவர் அகால மரணம் அடைந்தமை நம் மொழித் திறனாய்வுக்கு மாபெரும் இழப்பு.


1917 இல் அவர் வெளியிட்ட கம்ப ராமாயண ஆராய்ச்சி என்னும் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துத் தருகிறேன்:

 "உலக வாழ்க்கையில் மனிதன் பெறக்கூடிய பேறுகள் பலவற்றுள்ளும் கம்பனுடைய ராமாயணத்தைப் படித்து அனுபவிப்பது மிகப் பிரதானமானவைகளுள் ஒன்று என்பது எம்முடைய அபிப்பிராயம் .... கவிதையில்தமிழ்ப் பாஷையில் மாத்திரமில்லைவேறெந்தப் பாஷையிலுங்கூட,  கம்ப ராமாயணத்துக்கு மேலான கவிதை, எங்குக் காணலாகும்

நமது முன்னோர் கம்பனுக்குக் கவிச் சக்கரவர்த்தி என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சி அல்லஅது உண்மை உரைத்தலே ஆகும். கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடி சாய்த்து வணங்க வேண்டியது தான்!
மேல் நாட்டாருக்குள் கவிச் சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில்,  தாந்தே,  ஷேக்ஸ்பியர்,  மில்டன்,  மொலியேர்,  கதே ஆகிய  இவர்கள்,  கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதான் இருக்கிறார்களே ஒழிய, அவனை மீறவில்லை.

நமது நாட்டிலும் இளங்கோவடிகள்,  துளசிதாஸர்,  காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும்தராசு முனை கம்பன் பக்கம்தான் சாயுமே யொழிய அவர்கள் பக்கம் சாயாது. வால்மீகி, வியாஸர் ஆகிய இவ்விரண்டு கவிகளைத்தான் கம்பனுக்கு இணையாகவோ ஒரு முனை ஏற்றமாகவோ சொல்லலாம்;  ஆனால் வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதையே ஆகிவிடுகிறதுஅதையும் கம்ப ராமாயணத்தையும்  ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. ஆனால் கவிதா ரீதியாக மாத்திரம்  ஒப்பிட்டுப் பார்ப்பதாயிருந்தால், கம்ப ராமாயணம் வியாஸ பாரதத்துக்குச்  சமமாகவாவது இருக்குமேயொழிய எள்ளளவு கூடத்  தாழாது.

ஆகிலும், கவிகளில் ஆதியானவரும் ராமாயணத்துக்கே முதலாசிரியரும் கம்பனாலேயே தன்னால் ஏணி வைத்துப் பார்த்தாலும் எட்ட முடியாது  என்று கூறப்பட்டவருமான  வால்மீகி முனிவரின்  கவிதா சாமார்த்தியத்தை அவனுடைய சாமார்த்தியத்தைவிட  மேலானது  என்று சொல்ல வேண்டாமா என்று  ஓர் கேள்வி  பிறக்கும்ஆனால்  இரண்டு காவியங்களையும் பாரபட்சமில்லாமல், சிரத்தையோடும் பொறுமையோடும், படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது  என்று சொல்லவேண்டியதாய் இருக்கிறது!

இப்பேர்ப்பட்ட மகா காவியத்தை நமது நாட்டில் இப்பொழுது எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தொகை மிகமிகச் சொற்பமானதாய்த்  தான் இருக்கும்.

ரஸம் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நூல்கள் படிப்போரின் தொகை அருகிப் போய்விட்டது; அதிலும் தமிழ் நூல்களின் உண்மையான கவி இன்பம் தேடுவோரின் தொகை ஒரு நூறு வரையில்கூடப் போகுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.. 

கம்பனைப் படித்துப் பொருள் கண்டுபிடிப்பதற்குப் பெரிய இலக்கணப் படிப்பு வேண்டாம்சாதாரணமான தமிழ்க் கல்வியினால் வருகிற செய்யுள் நடை அறிவும் பதச் சேதம் செய்யும் திறமையும் இயற்கையறிவும் உலகானுபவத்தால் வருகிற பாவ (bava ) ஞானமும் இருந்தால் போதும்."

வாசித்தீர்களா?  1917 இன் நிலைமை இது எனில்கிட்டத்தட்ட நூறு ஆண்டுக்குப் பிந்தைய இன்றைய நிலையை ஊகித்துக்கொள்ளுங்கள். தமிழில் ஆர்வமும் வசதி வாய்ப்பும் உடையவர்கள் கம்பனைப் படித்து இன்பம் துய்க்கத் தூண்டுதலாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் இக் கட்டுரை வெளியிடப்பட்டது.


        +++++++++++++++++++++