Wednesday, 23 August 2017

ஊரும் பேரும்

நூல்களிலிருந்து -- 15

     (காலஞ்சென்ற தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை ஏறக்குறைய 60 ஆண்டுக்கு முன்பு இயற்றிய 'ஊரும் பேரும்'   என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதி இதுதலைப்பு: ஆறு)
     தமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத காலந்தொட்டுப் பயிர்த்தொழில் பண்புற நடந்துவருகிறது. பண்டைத் தமிழர் ஆற்றுநீர் பாயும் நிலப்பரப்பைப் பயன்படுத்தி மருத நிலமாக்கினார்கள். மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதி என்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள். காவிரியைப் பொன்னியாறு என்று புகழ்ந்தார்கள்; வையையைப் பொய்யாக் குலக்கொடி என்று போற்றினார்கள். நதியே நாட்டின் உயிர் என்பது தமிழர் கொள்கை. 'ஆறில்லா ஊர்க்கு அழகு பாழ்என்று கருதப்பட்டது.

   முற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும் துறைமுகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. சோழ நாட்டின் பழைய தலைநகரம் உறையூர்காவிரிக் கரையில் அமைந்திருந்தது. பட்டினம் என்னும் சிறப்புப்  பெயர் பெற்ற சோழ நாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில் புகுமிடத்தில் வீற்றிருந்தது; அக்காரணத்தால் அது புகார் என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் பெயர் பெறுவதாயிற்று. அவ்வாறே பாண்டிநாட்டு நதியாம் வைகையின் கரையில், மதுரை என்னும் திருநகரம் அமைந்தது; பாண்டியர்க்குரிய மற்றொரு சிறந்த நதியாகிய பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் விளங்கிற்று.

    கங்கை, கோதாவரி போன்ற பெரிய நதிகள் தமிழ்நாட்டில் இல்லைஆயினும் சிறிய நதிகளைச் சிறந்த வகையிற் போற்றிய பெருமை தமிழ்நாட்டார்க்கு உரியது. ஆற்றுநீரின் அருமையறிந்த தமிழரது ஆர்வம் அன்னார் ஆறுகளுக்கு இட்டு வழங்கிய பெயர்களால் அறியப்படும்.
  பாலாறு என்பது ஓர் ஆற்றின் பெயர்அது தொண்டைநாட்டின் வழியாகச் செல்கின்றது. அதில் தண்ணீர் சுரக்குமே யன்றிப் பெரும்பாலும் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. இன்னும் நீர்வளம் குறைந்த சேது நாட்டின் வழியாகச் செல்லும் ஒரு சிறு நதி,   தேனாறு என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது; அந்நாட்டிலுள்ள ஈசனைத் தேனாற்று நாயகர் என்று சாசனம் கூறும்சுவையுடைய செழுந்தேனைச் சொட்டு சொட்டாக வடித்தெடுத்துப் பயன் பெறுதல் போன்று, இந்நதியின் நீரைத் துளித்துளியாக எடுத்து அந்நாட்டார் பயன் அடைகின்றார்கள். பாலாறு தொண்டை நாட்டிலும் தேனாறு பாண்டி நாட்டிலும் விளங்குதல் போலவே, சேர நாட்டில் நெய்யாறு என்னும் நதி உள்ளதுஅந்நதியின் கரையில் அமைந்த ஊர்  நெய்யாற்றங்கரை என்று வழங்கும். நெல்லை நாட்டிலுள்ள ஒரு சிறு நதியின் தன்மையை வியந்து கருணையாறு என்று அதற்குப் பெயரிட்டுள்ளார்கள். விருத்தாசலத்தின் வழியாகச் செல்லும் நதி மணிமுத்தாறு என்று பெயர் பெற்றுள்ளது.

++++++++++++++++++
படம் உதவி- இணையம்

Friday, 11 August 2017

மரணத்தின் பின்பு

சம வளர்ச்சியற்ற இரு நாகரிகங்கள் சந்திக்க நேர்ந்தால் மிகுதியாக முன்னேறியிருப்பது எதுவோ,  அது மற்றதைத் தன் வசப்படுத்தும்.
ரோமானியர் கிரேக்கத்தின்மீது படையெடுத்து அடிப்படுத்தினாலும் அதன் மகத்தான நாகரிகத்தால் ஈர்க்கப்பட்டு,  அதனுடைய இலக்கியங்கள் தெய்வங்கள் புராணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றை யேற்று மேற்கொண்டனர்: வீரத்தால் வென்றது ரோம்,  கலையால் கிரேக்கம்!

  அது போன்றே,  ஆரிய,  தமிழ் நாகரிகங்கள் கலந்தபோது,  அகம் புறம் அல்லாமல் வேறெதுவும் இல்லாத தமிழர்,  அடிபணிந்து,  வடமொழி இலக்கியங்கள் சாஸ்திரங்கள் தொன்மங்கள் கடவுள்கள் தத்துவம் வேதம் சட்டம் முதலானவற்றைப் போற்றிக் கடைப்பிடித்தனர்,  மொழிபெயர்த்தனர்; அம்மொழியைத் தேவபாடையென உயர்த்திப் புகழ்ந்தனர்;  இன்னமும் அடிமைகளாய்த்தான் வாழ்கிறோம்: சோதிடம்,  நல்ல நேரம் கெட்ட நேரம்,  ராகுகாலம்,  எமகண்டம்,  வாஸ்து,  கோவிலிலும் இல்லத்து நிகழ்ச்சிகளிலும் வடமொழி மந்திரங்கள்,  என்று எத்தனையோ! நம் ஆன்மிக வாழ்க்கைக்கு ஆரியமே அடிப்படை. மறுபிறவிக் கொள்கையும் நம்முடையதல்ல; அது ஆரிய அறிஞர்கள் சிந்தித்துக் கண்ட முடிவு.

 மக்களுக்குள் அழகு,  தோற்றம்,  வாழ்க்கைவசதி முதலானவை வேறுபடுவதேன் என்ற வினாவை எழுப்பி யோசித்தார்கள் அவர்கள்: கடவுள் காரணமல்ல,  அவர் தம்முடைய பிள்ளைகளை ஏற்றத்தாழ்வுடன் படைப்பாரா? ஆகையால்,  அவரவரே காரணம்; பல பிறவிகள் உண்டு; ஒன்றில் செய்த வினைகளின் பலனை அடுத்ததில் அனுபவிக்கிறோம்; புண்ணியம் புரிந்தவன் மேலானவனாய்ப் பிறக்கிறான்,  பாவி தாழ்நிலையில் உழல்கிறான். எனவே,  அடுத்த பிறப்பில் இன்ப வாழ்வை விரும்புவோர்,  இப்போது அறச்செயல்களைச் செய்து புண்ணியம் தேடவேண்டும்.

 அதைத் தமிழறிஞர்கள் ஒப்புக்கொண்டார்கள். இந்தப் பிறவியை இம்மை எனவும் அடுத்த பிறப்பை மறுமை எனவும் இலக்கியங்கள் கூறுகின்றன:

         இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்  - புறம் 134

           (இப்பிறவியில் செய்தது மறுமையில் பயன் விளைவிக்கும்)

        இம்மைப் பிறப்பில் பிரியலம்  - குறள் 115

           (இந்தப் பிறப்பில் நாம் பிரியமாட்டோம்)

        இம்மைச் செய்தன யானறி நல்வினை  - சிலப். 15 - 91

 (மாடலன் கோவலனிடம் சொன்னது: இப் பிறவியில் நீ செய்தவை எனக்குத் தெரிந்து நற்செயல்களே)

        இம்மை மாறி மறுமை ஆயினும்
        நீயாகியர் என் கணவனை
        யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே - குறுந். 49

 (என்று ஒரு தலைவி தலைவனிடங் கூறினாள்: இந்தப் பிறப்பு போய் மறு பிறப்பு வந்தால் நீதான் என் கணவனாக வேண்டும்; நான்தான் உன் நெஞ்சத்துக்கு உகந்தவள் ஆகவேண்டும்).

 ஆரியரில் ஒருசாரார் வேறொரு நம்பிக்கையைப் பரப்பினர்: புண்ணியஞ் செய்தவன் மோட்சவுலகில் அந்தமொன்றில்லா ஆனந்தம் எய்திக் கவலை சிறிதும் இல்லாமல் காலம் கழிப்பான்; பாவம் புரிந்தவன் நரகத்தில் தண்டிக்கப்படுவான். (மோட்ச நரகங்கள் பிற மதங்களிலும் உண்டு).
சிந்திப்போம்: வினைக்கேற்ற பலனைச் சுவர்க்கத்திலோ நரகத்திலோ பெற்றுவிட்டால்,  அப்புறம் மறுபிறவி எதற்கு? நல்வினைக்கு இரு கட்டப் பரிசா? தீவினைக்கு இரண்டு முறை தண்டனையா? அவ்வாறு இருக்க முடியாது அல்லவா? ஆகையால் இரண்டு நம்பிக்கைகளும் முரண்படுகின்றன; இருப்பினும் இரண்டையும் ஏற்றுள்ளோம்.

 ஆராய்ச்சிகள் தோன்றாத பழங்கால நம்பிக்கைகள் அவை;  இப்போது எல்லாத் துறைகளிலும் நிகழ்கின்ற ஆய்வுகளால் புதுப் புது உண்மைகள் அறியப்படுகின்றன பூமியைத் தவிர வேறெங்கும் உயிர் இருப்பதாய் இதுவரை தெரியவில்லை; கற்பனைக்கெட்டாத் தொலைவுக்குக் கருவிகளை யனுப்பித் துருவித் துருவித் தேடியும் இந்திரலோகம்,  கைலாசம்,  வைகுந்தம்,  கந்தர்வர் உலகம், வித்தியாதரர் நாடு,  எமலோகம்,  மேலே ஏழு உலகு,  கீழே ஏழு  என எதுவும் காணப்படவில்லை; அதேபோல்தான் சுவர்க்க நரகங்களும்.

 சிலர் கூறலாம்,  நரக அச்சம் தேவைதான், இல்லாவிடில் உலகில் தீமை மிகுந்துவிடும் என்று. ஆதாரமற்ற கூற்று அது. தண்டனை பெற்றுச் சிறைகளில் காலந்தள்ளும் கோடிக்கணக்கானவர்கள் கடவுள் நம்பிக்கை, நரக நம்பிக்கை உடையவர்கள்தான்; அவர்கள் குற்றம் புரிவதற்கு அவை தடையாய் இல்லை.

 நரகம் சுவர்க்கம் இல்லையென்றால்,  மறு பிறவிக் கொள்கைதான் சரியா? அதுவுந் தவறே. யோசிப்போம்: முற்பிறப்பின் பலனை அடுத்ததில் அனுபவிக்கிறோம் எனில் முதன்முதல் பிறவி ஏனேற்பட்டது? பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் இறக்கின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் உண்டு; அந்தச் சில நிமிடங்களில் பிறவிப் பயனை அவை அடைந்துவிட்டனவா? உயிரின்றி வெளிவருகின்ற குழந்தைகள்,  தாயின் வயிற்றிலேயே,  அதாவது பிறக்காமலேயே,  முன் பிறப்பின் விளைவுகளை நுகர்ந்துவிட்டனவா? விடையற்ற வினாக்கள்! ஆகவே ஒரு பிறவி மட்டுமே உண்டு.
 பின்,  மாந்தரின் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணந்தான் என்ன? ஒரு காரணமும் இல்லை; அது இயற்கை நியதி; எல்லா உயிரினங்களுக்கும் பொருந்துவது:

சிங்கம்,  புலி -------------மான், ஆடு.
யானை,  காண்டாமிருகம் ---------எலி, கீரி.
உடும்பு ----- பல்லி.
பலவண்ணக்கிளி ------------கல்லுக்குருவி.       
செந்தாமரை மலர் ----------------- எருக்கம் பூ.
ஆலமரம் ------ முருங்கை மரம்.

சரி,  செத்தபின் மனிதன் என்ன ஆகிறான்? மண்ணாகிறான்,  மற்ற உயிரினங்களைப் போல.

                   ---------------------

(படம் -நன்றி இணையம்)