Sunday 26 February 2012

நெக்லேஸ் - பிரெஞ்சு சிறுகதை



அவள் ஓர் அழகிய, வசீகரமான ஆனால் விதியின் பிழையாலோ என்னவோ நடுத்தரக் குடும்பத்திலே பிறந்த பெண். கையில் காசு இல்லை. வசதி நிறைந்த உறவினர்க்கு அவள் வாரிசும் அல்ல; எனவே நல்ல பணக்கார இளைஞன் ஒருவனுக்கு அறிமுகம் ஆகி அவனால் காதலிக்கப்பட்டு அவனை மணந்து கொள்ள வழியே இல்லை; ஆகையால் கல்வித்துறை அலுவலகத்தின் சாதாரண எழுத்தர் ஒருவரைக் கைப்பிடித்துத் தொலைத்தாள். 

தான் எல்லா வித மேன்மைகளையும் சகல ஆடம்பரங்களையும் அனுபவிக்கப் பிறந்தவள் என்ற உள்ளுணர்வு காரணமாய் நீங்காத் துயரால் அவள் மனம் புழுங்கிக் கொண்டிருந்தாள். வறுமையைப் பறைசாற்றும் வீடு, அலங்காரமற்ற வெற்றுச் சுவர்கள், தேய்ந்து போன நாற்காலிகள், பார்க்கச் சகிக்காத திரைத் துணிகள் இவையெல்லாம் எளிய குடும்பத்திற் பிறந்த வேறெந்தப் பெண்ணின் கவனத்தையும் கவராமலேயே போயிருக்கும்; இவளையோ அவை சித்திரவதை செய்தன; பொரும வைத்தன. 

அந்த இழிந்த வாழ்க்கை ஆழ்ந்த கழிவிரக்கத்தையும் ஆசைக் கனவுகளையும் உள்ளத்தில் தூண்டிவிட்டது. 

அழகுச் சாதனங்கள் இல்லை; நகை நட்டு இல்லை; எதுவுமே இல்லை. அவள் விரும்பியதோ அதெல்லாம் தான். அதற்காகவே நீ பிறந்திருக்கிறாய்!என்று அவள் உள்ளுணர்வு கூறிக் கொண்டேயிருந்தது. கவர்ச்சிக் காரிகையாகவும் பார்த்தவரைப் பொறாமை கொள்ள வைத்து மயக்கி யாவரையும் ஈர்ப்பவளாகவும் திகழ வேண்டும் என்பது அவளது கொள்ளை ஆசை.

ஒரு பணக்கார நண்பி இருந்தாள்; பள்ளித் தோழி. அவளைப் போய் பார்த்துவிட்டுத் திரும்பும் போதெல்லாம் துன்பக்கடலில் மூழ்குவாள்; ஆற்றாமையும் கழிவிரக்கமும் வாட்ட, தனது வறுமையை எண்ணிப் பலநாள் அழ வேண்டி வரும்; ஆகையால் போவதை நிறுத்திக் கொண்டாள். 

ஒரு நாள் மாலை அவளுடைய கணவன் முகத்தில் வெற்றிப் பெருமிதமும் கையில் ஒரு பெரிய உறையுமாய் வீட்டுக்கு வந்தான்.  

இந்தா, உனக்குத் தான். 

அவள் அவசர அவசரமாய்க் கிழித்து உள்ளிருந்த ஓர் அட்டையைக் கிழித்தாள். அதில் அச்சடிக்கப்பட்டிருந்தது: 

ஜனவரி 18 ஆம் நாள் திங்கள் மாலை தமது மாளிகையில் நடைபெற இருக்கிற பார்ட்டியில் கலந்து கொண்டு தம்மை கெளரவிக்கும்படி லுவாசேல் தம்பதியினரைக் கல்வியமைச்சர் கேட்டுக் கொள்கிறார். 

மகிழ்ச்சியில் திக்கு முக்காடுவாள் என அவள் எதிர்பார்த்ததற்கு மாறாய் ஆத்திரம் கலந்த சோகத்துடன் மேசை மேல் அழைப்பைப் போட்டபடி, “எனக்கு ஏன் இது?” என முணுமுணுத்தாள். 

என்னதுஉனக்கு மகிழ்ச்சி உண்டாகும் என்றல்லவா நினைத்தேன்? எங்கேயும் போகாத உனக்கு இது ஒரு வாய்ப்பாயிற்றே? அதுவும் எப்பேர்ப்பட்ட வாய்ப்பு! இந்த அழைப்பை வாங்குவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்! எனக்கு உனக்குஎன எல்லாரும் அடித்துக் கொண்டார்கள். இது சாமான்யமாகக் கிடைக்கக் கூடியதல்ல. ஊழியர்க்ளுக்கு இதை அரிதாகத் தான் தருவார்கள். அங்கே நீ எல்லா அதிகாரிகளையும் பார்க்கலாம். 

கனல் கக்கிய கண்களால் நோக்கியவள் ஆத்திரத்துடன் கேட்டாள்: 

எதைப் போட்டுக் கொண்டு போவது?” 

அட! அதைப் பற்றி நினைக்கவில்லையே அவன்! 

ஆங்! நாடகத்துக்குப் போகும் போது போட்டுக் கொள்வாயே, அந்த கவுன்! அது ரொம்பப் பொருத்தமாக..... 

அவள் அழுததைக் கண்டு மலைத்துப் போய்ப் பேச்சை நிறுத்திக் கொண்டான். அவளது கடை விழிகளிலிருந்து இரு பெருந்துளிகள் மெதுவாய் உருண்டு இறங்கின. அவன் திக்கியபடி, “ஏன் என்னவாயிற்று உனக்கு?” என்று கேட்டான். 

அவள் மிகச் சிரமப்பட்டுத் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஈரக்கன்னங்களைத் துடைத்தபடி பதிலளித்தாள். 

ஒன்றும் இல்லை. நல்ல உடை இல்லாததால் நான் பார்ட்டிக்கு வர முடியாது. உங்களுடைய சக ஊழியர்களில் யாருடைய மனைவி அழகழகான துணிமணிகள் வைத்திருக்கிறாளோ, அவளிடம் இந்த அழைப்பைக் கொடுத்துவிடுங்கள் 

இதோ பார், மத்தீல்து! விசேஷ தினங்களில் போட்டுக்கொள்கிற மாதிரி நல்ல, அதே சம்யம் எளிய கவுன் என்ன விலையிருக்கும்?” 

தயங்கியவாறே சொன்னாள்: சரியாகத் தெரியவில்லை. ஒரு இரண்டாயிரம் இருந்தால் சமாளிக்கலாம் என்று தோன்றுகிறது”. 

அவன் முகம் வெளுத்தது. கோடைச் சுற்றுலாவுக்காகச் சரியாக அந்தத் தொகையைத் தான் சேமித்திருந்தான். ஒருவாறு மனம் தேறி, “சரி, இரண்டாயிரம் தருகிறேன். அழகான கவுனாகப் பார்த்து வாங்கிக் கொள்என்றான். 

நாள் நெருங்க நெருங்கத் திருமதி லுவாசேல் மகிழ்ச்சி குன்றி அமைதியிழந்து கவலை மிகுந்து காணப்பட்டாள். இத்தனைக்கும் கவுன் தயாராய் இருந்தது. 

கணவன் கேட்டான்:

மறுபடியும் என்ன? மூன்று நாளாய் நீ சரியாயில்லையே!

ஒரு நகையோ நட்டோ போட்டுக் கொள்ள ஒன்றுமில்லையே! வெட்கக் கேடாக இருக்கும் எனக்கு! போகாமல் இருந்து விடுவதே மேல் என்று நினைக்கிறேன். 

நிறையப் பூ வைத்துக் கொள். இந்த சீசனுக்கு அதுதான் நாகரிகம். அழகான ரோஜாப் பூக்கள் கிடைக்கின்றன். 

அவள் இணங்கவில்லை.  

ஊகும். பணக்காரிகளுக்கு நடுவிலே வறுமைக் கோலத்தில் தோன்றுவதைப் போல மானக்கேடு வேறெதுவும் இல்லை. 

அட மக்கு! போய்த் திருமது பொரேஸ்த்தியேவைப் பார்த்து நகை இரவல் கேளேன். இரண்டு பேருக்குந்தான் நல்ல நெருக்கம் இருக்கிறதே! 

மகிழ்ச்சியில் கத்தினாள். 

ஆமாம்! எனக்கு அந்த நினைப்பே வரவில்லையே! 

மறுநாள் நண்பியிடம் சென்று தன் இக்கட்டைத் தெரிவித்தாள். அவள் கண்ணாடி அலமாரியிலிருந்து ஒரு பெரிய நகைப் பெட்டியைக் கொண்டு வந்து திறந்து காட்டி, “வேண்டியதை எடுத்துக் கொள்ளடிஎன்றாள். 

முதலில் கண்ணில் பட்டவை வளையல்களும் ஒரு முத்து மாலையும் கல் பதித்த அரிய வேலைப்பாடு அமைந்த ஒரு சிலுவையுந்தான். கண்ணாடி முன் நின்று ஒவ்வொன்றாய் அணிந்து அழகு பார்த்தாள். கழற்ற மனம் வரவில்லை. 

வேறே எதுவாவது இருக்கிறதா?” என்று அவள் கேட்டதும், ”ஏனில்லை? சரியாகப் பார். உனக்கு எது பிடிக்கும் என்று எனக்குத் தெரியாதே!என்று பதில் கிடைத்தது. 

இதோ! டப்பி ஒன்றுக்குள் கரும் பட்டுத் துணியில் மிக அழகிய வைர நெக்லேஸ்! அளவற்ற ஆசையால் இதயம் படபடக்கக் கைகள் நடுங்கக் கழுத்தில் அணிந்து தன் பிம்பத்தின் முன் பரவச நிலையில் நின்றாள். 

பின்பு தயக்கத்துடன் தொண்டையடைக்க, “இதை....இதை மட்டுமே தர முடியுமா?” என்று கேட்டாள். 

அதற்கென்ன, எடுத்துக் கொள்.”  

நண்பியின் மேல் பாய்ந்து இறுகக் கட்டித் தழுவிய பின்பு நகையுடன் விடை பெற்றாள். 

பார்ட்டியில் வெற்றிக் கொடி நாட்டியவள் திருமதி லுவாசேல் தான். மற்றவர்களை விட அவளே மிக்க அழகியாய், கவர்ச்சிப் பாவையாய், நாகரிக நங்கையாய்த் தோன்றியமையால் களிப்பில் தலைகால் புரியாமல் புன்னகை சிந்திய வண்ணம் காட்சியளித்தாள். ஆடவர் யாவரும் அவளை நோக்கினர். பெயரை விசாரித்தனர், தம்மை அறிமுகம் செய்து கொள்ள விழைந்தனர். மேலதிகாரிகள் எல்லாரும் அவளை அணைத்து ஆட விரும்பினார்கள். அமைச்சரது பார்வையும் அவள் மீது விழுந்தது. 

அவள் ஆடினாள். கிறங்கிய நிலையில், உணர்ச்சி மேலிட மகிழ்ச்சியில் மதி மயங்கி, எதைப் பற்றிய நினைவும் இன்றி, அழகு தந்த வெற்றியிலும் அந்த வெற்றி ஈன்ற புகழிலும் திளைத்தவாறே ஆடினாள். 

கணவனோ நள்ளிரவிலிருந்து ஒரு சிற்றறையில் மூன்று ஆடவருடன் உறங்கிக் கொண்டிருந்தான். இவர்களின் மனைவியரும் ஆட்ட பாட்டங்களில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர். 

அதிகாலை நான்கு மணிக்கு அவள் புறப்பட்டாள். வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்த மேலுடையை அவள் மீது கணவன் போர்த்தினான். விழா ஆடையின் உன்னத தரத்துக்கு மாறுபட்ட, அன்றாட வாழ்க்கைக்கான உடை அது என்பதை நினைத்த அவள், விலையுயர்ந்த மேலாடையணிந்திருந்த மற்ற பெண்களின் கண்களில் படாமல் நழுவி விட விரும்பினாள். 

லுவாசேல் அவளைத் தடுத்து, “இரு, இரு. வெளியே ஒரே குளிர். நான் வண்டியைக் கூப்பிடுகிறேன்,” என்றான். 

காதில் போட்டுக் கொள்ளாமல் படிகளில் விரைவாய் இறங்கினாள். ஒரு வண்டியும் இல்லை. தொலைவில் சென்ற வண்டிகளை உரத்த குரலில் அழைத்துப் பார்த்தனர். நம்பிக்கையிழந்து குளிரில் நடுங்கியபடி ஸேன் ஆற்றை நோக்கி நடந்தனர். ஆற்றங்கரையில் பழைய வண்டி ஒன்று கிடைத்தது.  

சோகத்துடன் வீட்டில் நுழைந்தனர். அவளுக்கு, எல்லாம் முடிந்து விட்டன! அவனுக்கோ பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். 

தன் அழகுத் தோற்றத்தை மீண்டும் கண்டுகளிக்க விரும்பிய அவள் கண்ணாடி முன்னின்று மேலாடையை அகற்றிய அடுத்த நொடி அலறினாள். 

என்ன ஆயிற்று?” கணவன் கேட்டான். 

திகிலுடன் அவனைப் பார்த்துச் சொன்னாள். 

வந்து....வந்து....நகை காணோம்! 

பதறிப் போனான். 

என்னது? என்ன சொல்கிறாய்? எங்கே போயிருக்கும்?” 

இருவரும் தேடினர்; கவுன் மடிப்புகளில், மேலாடையின் மடிப்புகளில், பைகளில், எல்லா இடங்களிலும். 

ஊகூம். காணோம். 

புறப்பட்ட போது இருந்ததா?” 

இருந்தது. ஹாலில் வந்த போது தொட்டுப் பார்த்தேனே. 

தெருவில் விழுந்திருந்தால் சத்தம் கேட்டிருக்கும்; வண்டியில் தான் கிடக்க வேண்டும். 

ஆமாம். அப்படித் தான் இருக்கும். நம்பர் தெரியுமா?” 

தெரியாதே! நீ பார்க்கவில்லையா?” 

இல்லையே


இடிந்து போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

லுவாசேல் மீண்டும் உடுத்திக் கொண்டு, நடந்து வந்த பாதையில் தேடிப் பார்க்கிறேன்,: என்று சொல்லிப் புறப்பட்டான். 

அவளோ உடை மாற்றாமல் கணப்புத் தீயும் மூட்டாமல் சிந்தனையற்ற மனத்துடன் படுக்கவும் பிடிக்காமல் ஒரு நாற்காலியில் விழுந்து கிடந்தாள். 

ஏழு மணிக்குக் கணவன் திரும்பி வந்தான், வெறுங்கையுடன். 

பின்பு காவல் நிலையம் போய் முறையிட்டான்; பரிசு தருவதாக நாளேடுகளில் விளம்பரம் செய்தான்; வண்டி நிறுத்தங்களில் விசாரித்தான்.  

அவள் நாள் முழுதும் அந்தப் பேரிடியிலிருந்து மீள இயலாமல் காத்திருந்தாள். 

கணவன் மாலையில் திரும்பினான், வெளிறிய முகமும், சோர்ந்து போன தோற்றமுமாய். 

நண்பிக்குக் கடிதம் எழுது. நெக்லேஸின் கொக்கி உடைந்து விட்டதென்றும் பழுது பார்க்கத் தந்திருப்பதாயும் தெரிவி. நமக்குக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். 

அவ்வாறே எழுதினாள். 

ஒரு வாரம் ஓடிற்று. அடியோடு நம்பிக்கை அற்றுப் போயிற்று. 

ஐந்து வயது மூப்படைந்தாற்போல் காணப்பட்ட லுவாசேல், “வேறு நகை வாங்கிக் கொடுக்கிற வழியைத் தேட வேண்டியது தான்,” என்றான். 

தொலைத்த நகையைப் போன்ற ஒரு நெக்லேஸைத் தேடிக் கவலையாலும் கலக்கத்தாலும் உருக்குலைந்த நிலையில் கடைகடையாய் அலைந்தனர். கடைசியாய் மனநிறைவு தந்த ஒரு நெக்லேஸை ஒரு கடையில் கண்டனர். 40000 ரூ. விலையுள்ள அதை 1000 ரூ. குறைத்துத் தரக் கடைக்காரர் இசைந்தார். 

மூன்று நாளில் வந்து வாங்கிக் கொள்வதாயும், அதற்குள் விற்று விட வேண்டாம் என்றும் சொல்லிவிட்டுத் திரும்பினர். 

லுவாசேலுக்குப் பூர்வீகச் சொத்து 18000 ரூ. இருந்தது. மீதிக்குக் கடன் வாங்க வேண்டும். இங்கும் அங்கும் வாங்கினான. புரோ நோட்டுக்கும் கந்து வட்டிக்கும் வாங்கித் தொலைத்தான்.  

தன் வாழ்நாள் முழுதையும் பாதிக்கப் போகிறவையும் எதிர்காலம் பற்றியவையுமான கவலைகள், தன்னைப் பீடிக்கவிருக்கிற பயங்கர வறுமை, துறக்க வேண்டிய சுகபோகங்கள் ஆகியவற்றை எண்ணித் துயர வசப்பட்டவனாய்க் கடைக்குச் சென்று நகையை வாங்கி வந்தான். 

திருமதி லுவாசேலிடம் நகையைப் பெற்றுக் கொண்ட போது திருமதி பொரேஸ்த்தியே வருத்தத்துடன், “நீ இதை முன்பே கொடுத்திருக்க வேண்டும்; எனக்குத் தேவைப்பட்டிருக்கலாம் அல்லவா?” என்றாள். 

நல்ல வேளை! திறந்து பார்க்கவில்லை. இவள் பயந்து கொண்டே இருந்தாள். வேறு நகை என்பது தெரிந்தால் அவள் என்ன எண்ணுவாள்? தன்னைத் திருடி என்று கருத மாட்டாளா? 

திருமதி லுவாசேல் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிய போதிலும் அந்த வாழ்க்கைக்குத் தன்னைத் துணிச்சலுடன் தயார்ப்படுத்திக் கொண்டாள். பயங்கரக் கடனை அடைக்க வேண்டும். அடைத்தே தீர்வது என்று முடிவு செய்தாள். 

வேலைக்காரியை நிறுத்தினாள். ஆறாம் மாடியின் ஓர் அறையிற் குடியேறினாள். இல்லத்தரசியின் கடின வேலைகளை மேற்கொண்டாள். பற்றுப் பாத்திரந் துலக்கியதில் ரோஜா நிற நகங்கள் தேய்ந்தன; துணி துவைத்தாள்; நாள்தோறும் குப்பை கொட்டத் தெருவுக்கு இறங்கும் போதும், அங்கிருந்து குடிநீர் பிடித்துக் கொண்டு மேலே ஏறும் போதும் மூச்சுத் திணறும்; மாடிக்கு மாடி நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வாள். வறிய உடையுடன் கடை கண்ணிக்குப் போய்க் காசு காசாய்ப் பேரம் பேசித் திட்டு வாங்கினாள். 

மாதந்தோறும் வட்டி கட்ட வேண்டியிருந்தது. அவகாசம் கேட்பது அவசியம் ஆயிற்று. 

கணவனும் தன் பங்குக்கு மாலையில், இரவில் கூட, கடைக் கணக்கு எழுதுதல் முதலிய பணிகளைச் செய்தான். 

பத்தாண்டுக் காலம் இந்த அவல வாழ்க்கை நீடித்தது. ஒரு வழியாய் எல்லாக் கடன்களும் அடைபட்டன. 

திருமதி லுவாசேல் கிழவிக் கோலமும், ஏழைப் பாமரப் பெண்களைப் போன்ற முரட்டுத் தோற்றமும் அடைந்து விட்டாள். ஒழுங்காய்ச் சீவாத தலையும் ஏனோ தானோ உடையுமாய்க் காலங்கழித்த அவள் சில சமயம், சன்னல் அருகே அமர்ந்து அந்த மாலைப் பொழுது, அழகுத் தேவதையாய்த் தான் பாராட்டப்பட்ட அந்த் பார்ட்டி ஆகியவற்றை நினைவு கூர்வாள். 

நகை தொலையாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? யாரறிவார்? வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது! எவ்வளவு நிலையற்றது! ஓர் அற்ப விஷயம் போதும் நம்மை வானுக்கு உயர்த்த அல்லது பாதாளத்தில் அழுத்த! 

ஒரு ஞாயிறன்று வேலைச் சுமையினின்று விடுபட்டுப் புத்துணர்வு பெறுவதற்காக அவள் உலாவச் சென்ற போது தன் குழந்தையுடன் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண்மணியைத் தற்செயலாய்க் கண்டாள். அந்தப் பெண் திருமதி பொரேஸ்த்தியே தான். அதே இளமை, அதே அழகு, அதே கவர்ச்சி!  

திருமதி லுவாசேல் உணர்ச்சி வசப்பட்டாள். அவளிடம் போய்ப் பேசலாமா? நிச்சயமாகப் பேசலாம். நகையைத் தான் திருப்பிக் கொடுத்தாயிற்றே! 

அவளையணுகி, “வணக்கம், ழான்னுஎன்றாள். 

அவளுக்கோ இவளை அடையாளம் தெரியவில்லை. ஒரு கீழ்மட்டத்துப் பெண் தோழமையுடன் கன்னிப்பெயரைச் சொல்லி அழைத்தது வியப்பை அளித்தது. 

நீங்கள்.......தெரிய............ஆள் மாறாட்டம் என நினைக்கிறேன். 

இல்லை. நான் மத்தீல்து லுவாசேல். 

என்ன! மத்தீல்தா? அடப் பாவமே! இதென்ன கோலம்?” 

ஆமாம். ரொம்பக் கஷ்டம். சாப்பாட்டுக்கே சங்கடம். அதுவும் உன்னாலே! 

என்னாலேயா? எப்படி?” 

இரவல் தந்தாயே வைர நகை! நினைவிருக்கிறதா?” 

ஆமாம். அதற்கென்ன?” 

அதை நான் தொலைத்து விட்டேன். 

என்ன உளறுகிறாய்? அதைத் தான் தந்து விட்டாயே!”. 

இல்லை. அதைப் போல் வேறு நகை வாங்கித் தந்தேன். அதற்காகப் பட்ட கடனை அடைக்க இந்தப் பத்து வருஷம் பிடித்தது. சாதாரணமான நாங்கள் என்ன பாடுபட்டிருப்போம் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும். எப்படியோ முடிந்து விட்டது. இப்போது நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். 

திருமதி பொரேஸ்தியே தொடர்ந்து நடக்காமல் நின்றபடி, “வேறு வைர நெக்லேஸ் வாங்கிக் கொடுத்ததாகவா சொல்கிறாய்?” என்று கேட்டாள். 

ஆமாம். வேறுபாடு உனக்குத் தெரியவில்லையல்லவா? அச்சு அசல் அதைப் போலவே வாங்கினேன். 

பெருமிதம் பொங்கக் குழந்தைத்தனமாய்ச் சொல்லி முடித்தாள். 

திருமதி பொரேஸ்த்தியே உணர்ச்சி மேலிட்டவளாய் நண்பியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கூறினாள்: 

பாவம்டி நீ! என் நகை இமிடேஷன் தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐந்நூறு ரூபாய் பெறும்!”  

 *****************************************************************

(இக்கதையை எழுதியவர் கீ த மொப்பசா(ன்) Guy de Mauppassant 1850-1898.

இவரது உலகப் புகழ் பெற்ற சிறுகதை லாப் பருய்ர் (La Parure - நெக்லேஸ்)

(இந்தக் கதை இடம் பெற்றுள்ள புத்தகம் "மாப்பசான் கதைகள்"

பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்:- சொ.ஞானசம்பந்தன்.


வெளியிட்டோர்:- எம்.வெற்றியரசி

மனை எண் 9, கதவு எண் 26

சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம்.

சென்னை-600088.)

Saturday 25 February 2012

பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு.....




எண்ணற்ற தமிழ்ப் பழமொழிகளுள் இரண்டே இரண்டு மட்டும் பிரெஞ்சிலிருந்து வந்திருக்கின்றன : 

1 - மின்னுவ தெல்லாம் பொன்னல்ல . 

இதை ஆங்கிலம் வழியாய்ப் பெற்றுள்ளோம் . 

12 ஆம் நூற்றாண்டின் பிரஞ்சு மத வாதி அலேந்த லீல் , " பொன்னைப் போன்று மின்னுவதை எல்லாம் பொன்னென்று  கருதாதீர்கள் " என்று எழுதினார் . இதை ஆங்கில எழுத்தாளர் ஜான் ட்ரைடன் மனத்துள் கொண்டு தம் 'மானும் சிறுத்தையும்' ( The Hind and the Panther ) என்ற நூலில் " பலரும் சொல்வது போல் மின்னுவதெல்லாம் பொன்னல்ல " எனச் சுருக்கினார் (1687 ) .


2 - உனக்கும் பேபே , உங்க அப்பனுக்கும் பேபே 


இது புதுச்சேரி மாநில மக்களால் ஒரு பிரஞ்சுக் கதையிலிருந்து உருவாக்கப்பட்டுப் பெரும்பாலும் அவர்கள் மத்தியில் புழங்குகிறது.

கதைச் சுருக்கம் :

ஆடு திருடிய ஒருவன் வழக்கில் சிக்கினான் . தண்டனையிலிருந்து தப்புவதற்காக வழக்குரைஞரை நாடினான் . அவர் சொல்லித் தந்தபடி நீதி மன்றத்தில் ஊமை போல நடித்தான் . எல்லாக் கேள்விகளுக்கும் அவன் பேபே என்றே பதில் உரைத்தமையால் அவனிடமிருந்து எந்த விவரமும் அறிய முடியாத நீதிபதி வழக்கைத் தள்ளிவிடவே அவன் விடுதலையானான்.  

பின்பு தம் கட்டணத்தைக் கேட்ட வழக்குரைஞரிடமும் அவன் பேபே என்றே கூறி அவரை ஏமாற்றினான் . 

உனக்கும் பேபே உங்க அப்பனுக்கும் பேபே என்றால் உனக்கும் நாமம் உன் தகப்பனுக்கும் நாமம் என்று பொருள் .  

ஏமாற்றுக்காரர்களுக்கு உதவுகிற பழமொழியிது .