Wednesday, 27 April 2016

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

"ஆளும் வளரணும், அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி"

  'ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது' என்று கீதையில் பகவான் கண்ணன் சொன்னார் என்பது வைணவர்களின் கூற்றுஆனால்எல்லா நூல்களும் மனிதரின் படைப்பே. இயற்றியவரின் பெயர் தெரியாமற் போகவே, முக்கிய பாத்திரமாகிய கிருஷ்ணனே ஆசிரியர் எனத் தவறாகவோ வேண்டுமென்றோ பரப்பப்பட்டுள்ளது; அல்லது அப்பெயர் தாங்கிய யாரோ ஒருவர் அதை இயற்றியிருக்க, காலப்போக்கில், பகவானே போதித்தான் என்று நம்பப்பட்டிருக்கலாம்; இறையனார் என்னும் புலவர் பாடிய 'கொங்குதேர் வாழ்க்கை'யை இறைவன் பாடித் தருமிக்குத் தந்ததாய்த் திருவிளையாடல் கதை கட்டப்பட்டதல்லவா?


  ஆத்மா பற்றிய கருத்துகள் கீதையில் புதியனவாய்க் கூறப்படவில்லை; அவை பழங்காலத்தில் பல நாடுகளில் பரவலாய்  நம்பப்பட்டவைதான்.


 கிரேக்க அறிஞர்கள் சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, ரோமானியப் பிரபல  வழக்குரைஞர் சிசரோ முதலியோர் அக்கருத்துகளைப் பரப்பிய சிலர்.


  இறந்தோரின் ஆத்மாக்கள் பூமிக்கடியில் தொடர்ந்து வாழ்வதாய் நம்பிய ரோமானியர் அவற்றை வழிபடவும் செய்தனர். செத்தவர் தெய்வமாகிறார்  என்பது இந்துக்களுக்கு மட்டுமே உள்ள நம்பிக்கையன்றுஇறப்புக்குப் பின்னும் வாழ்வுண்டு என்று நம்பித்தான் எகிப்தியர் பிணங்களைப் பத்திரப்படுத்தினர்.


  'ஒருவர் இறுதி மூச்சை விடுகையில், உயிர் பிரிகிறது, பின்னர் உடல் அழிகிறது; ஆயினும், கனவுகளில் அவ்வப்போது வருகிறாரே! செயல்படுகிறாரே! யோசனை சொல்கிறாரே! ஆகவே அவர் எங்கோ வாழ்கிறார், ஆத்மா வடிவில்; எனவே ஆத்மா அழிவற்றது' இதுவே தொல்கால மாந்தரது சிந்தனையின் விளைவு.


 ஆத்மா குறித்த கருத்துகளைப் பழங்கால அறிஞர் சிலர் எதிர்த்தும் உள்ளனர்; ஆத்மா அழியக்கூடியதுதான் என்று கூறியவர்களுள் முக்கியமானவர்கள் கிரேக்க அறிஞர் எப்பிக்கியூரஸ் (பொ.யு.மு. 341 -270), ரோமானிய மாவீரர் ஜூலியஸ் சீசர் (101-44), லத்தீன் எழுத்தாளர் லுக்ரியஸ் (99-55).


  சாவுக்குப் பின்பு ஆத்மா கடவுளோடு ஒன்றிவிடும் என்று கருதியோரும் இருந்தனர்; ரோமானிய எழுத்தாளர் செனேக்கா (பொ.யு4 - 65) இக்கொள்கையினர்.


  உயிர் ஓர் உடலிலிருந்து வேறு  உடம்பில் புகும் என்ற நம்பிக்கை (கூடு விட்டுக் கூடு பாய்தல்) எகிப்தில் நிலவிற்று. இதைக் கிரேக்கத்தில் பரப்புரை செய்தவர் கணித மேதை பித்தகோரஸ் (பொ.யு.மு. 6 ஆம்  நூ.) ஆங்கிலத்தில்  இது மெட்டம்சைக்கோசிஸ் (metempsychosis) எனப்படுகிறது; (இரு கிரேக்க சொற்களின் கூட்டு: meta - மாற்றம்; psucke -உயிர்).


   'எல்லாம் விதிப்படி நடக்கும்' என்னும் தலைவிதித் தத்துவம் கிரேக்கத்தில் ஆழமாய் வேரூன்றியிருந்தது; அதை அவர்கள் மொய்ரா (moira) என்றனர்.


   காற்று முதலான இயற்கையாற்றல்கள், விண்மீன், கோள், விலங்குபறவை, மரம், மட்டை என சகட்டுமேனிக்கு, வரையறை எதுவுமில்லாமல், கண்டது காணாததையெல்லாம் வழிபட்டனர்எகிப்தியர், கிரேக்கர், ரோமானியர்ஆப்ரிக்கர் உள்ளிட்ட தொல்மாந்தர். நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், பூசாரி, மந்திரம், சடங்கு முதலியவையும் உலக முழுதும் பரவி இருந்தவையே.


  4000 ஆண்டுக்குமுன்பு, கோள்களையும் ராசிகளையும் நோக்கி அவற்றுக்குப் பெயரிட்டவர்கள் சுமேரியர்கள்கிரகணங்களை முன்கூட்டி அறிவிக்கும் அளவுக்கு வானூலில் தேர்ச்சி பெற்றிருந்த அவர்கள் உலகுக்கு அளித்த கொடை மணி, நிமிடம், நொடி ஆகிய காலக் கணக்குகள். கோள்களில் கடவுள்கள் உறைவதாய் அவர்கள் நம்பினார்கள்; ஒரு குழந்தை பிறக்கிற நேரத்தில் கோள்கள் இருக்கிற இடத்துக்கு ஏற்பவும் விண்மீனைப் பொருத்தும் அந்தக் குழவியின் வாழ்க்கைப் போக்கு நிர்ணயிக்கப்படுவதாய்  எண்ணி அவர்கள் தோற்றுவித்ததுதான் சோதிடம்.


  பழங்கால மக்கள், பின்னாளில், பெரும்பாலும் கிறித்துவத்தையோ  இசுலாத்தையோ தழுவி விட்டமையால், அவர்களின் முந்தைய மடக் கருத்துகளும் பழக்க வழக்கங்களும் பெரிதும் ஒழிந்தனகண்கண்ட கடவுள்கள் என அவர்கள் போற்றி வழிபட்டவையெல்லாம் கண்காணாமற் போயின அல்லது காட்சிப் பொருள் ஆயின.


  ஒரு காலத்தில் மெய் என்று நம்பப்பட்டவை, அறிவியல் கண்டுபிடிப்புகளால், கற்பனை எனத் தெரிய வரும்போது, நாம் நம் மூளையை இறுகக் கப்பிக்கொண்டிருந்த தவறான கருத்துகளைக் கைகழுவவேண்டும்; இல்லாவிடில்,  ஆள் மட்டுமே வளர்ந்ததாகும்.


                                "கலை உரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
                                  கண்மூடி வழக்க மெல்லாம் மண்மூடிப் போக!"
                                                                                              -- ராமலிங்கர்.
       
                                                         --------------------------------------.
 (படம் உதவி - இணையம்)

Tuesday, 19 April 2016

பத்மாவதி சரித்திரம்


நூல்களிலிருந்து - 6  

தமிழர்கள் காதல், வீரம், அறம், பக்தி முதலிய எப்பொருளாயினும் செய்யுளிலேயே எழுதினர். பிற மொழி இலக்கியங்கள் (லத்தீன், கிரேக்கம், வடமொழி... ) உரைநடையிலும் பிறந்திருக்கின்றன. பாரதம், இராமாயணம், பெருங்கதை, நைடதம் முதலான சமற்கிருத ஆக்கங்களைத் தழுவி செய்யுளில் நூல்கள் உருவாக்கிய நம் முன்னோர் ஏன் முத்ரா ராட்சசம், பஞ்ச  தந்த்ரக் கதைகள் என்னும் உரைநடை இலக்கியங்களை நம் மொழிக்குக்  கொண்டுவரவில்லை?

 பத்தாம் நூற்றாண்டிலிருந்து உரைகள் எழுதப்பட்டன; அவை பிறரது கருத்துகளுக்கு விளக்கங்களே ஒழிய சொந்தப் படைப்புகள் ஆகா

  ஆங்கிலேயர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கு வந்து உரைநடையில் எழுதி வழி காட்ட,  நாம் பின்பற்றினோம். சிறுகதை, புதினம் என்னும் புது வகை அணிகள் தமிழுக்குக் கிடைத்தன

  தமிழின் முதல் புதினங்களுள் ஒன்றான 'பத்மாவதி சரித்திரம்' சென்னைக்  கிறித்தவக் கல்லூரிப் பட்டதாரியான . மாதவையா (1872 - 1925) -வால் இயற்றப்பட்டது; ஆண்டு தெரியவில்லை; அதன் இரண்டாம் பாகம் ஐந்தாம்  அதிகாரத்தின் முன்பகுதியைப் பகிர்கிறேன்.

        குற்றாலக் காட்சி

  இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்களின் மேற்கிளைகள் ஒன்றோடொன்று பின்னி முறுக்குண்டு எப்போதும் குளிர்ந்த நிழலைக் கொடுக்கிற இப்பெரும் பாட்டையின் பக்கங்களில் விசாலமான தோட்டங்களும் பாறைகளுக்குக் கிரீடங்கள் போல் விளங்கும் பங்களாக்களும் இருக்கின்றனஆனந்த நடராஜ  மூர்த்தியைக் கண்ணாரக் கண்டு களித்தவுடன்அப்பரமானந்த வெள்ளத்தில் ஒரு சிறு துளி தம்முள்ளும் புகஅகமகிழ்ந்து, முக மலர்ந்து, உரை நெகிழ்ந்துதள்ளுண்டு தடுமாறி, அம்மூர்த்தியின் திவ்ய குணங்களைச் செந்தமிழ் மணக்கும் பாக்களால் பாடித் துதித்துக்கொண்டு சந்நிதியை விட்டு அரிதில் நீங்கி வெளிவரும் மெய்யடியார்களைப் போலபூங்காவனங்களின் பரிமளங்களைச் சுமந்து மெதுவாக வரும் மந்தமாருதமானது, சரீரத்தின் களைப்பை நீக்கிப் பலத்தை அளித்துமனத்துக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றதுபட்டதோ படவில்லையோ என்று சந்தேகிக்கும்படி, காற்று அவ்வளவு மெதுவாக இருந்தும், மரங்களின் கிளைகளின் மேலே ஆடியசைந்து சப்திப்பதைக் கேட்டு மேல்நோக்கினால், குரங்குகள் மந்தைமந்தையாய்த் தாவித்தாவி ஓடுவதைக் காண்கிறோம்; சூரிய கிரணங்கள் நம்மேல் படாவிட்டாலும், வெயிலைப் பார்க்குங்கால்சமதரிசியான வெய்யவனும் தனக்கு இயல்பான கொடும் வெப்பத்தைக்  கட்டி வைத்துவிட்டு இடத்துக்கேற்றபடி சாந்தமாய்ப் பிரகாசிப்பதாய்த் தெரிய வருகிறது. ஒப்பற்ற போக பூமியாகச் சொல்லப்படும் சுவர்க்கத்தின் கால ஸ்திதி இப்படித்தான் இருக்கும்போலும்! பல கோடி வண்டுகள் ஒருமித்து  ரீங்காரம் பண்ணுவது போன்ற ஓர் இனிமையான ஓசை இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்கிறது

  ஆகா! இதென்ன அற்புதம்! வழி தப்பிச் சுவர்க்கத்தில் தேவ ஸ்த்ரீகளும் தேவர்களும் கிரீடித்து நீராடி விளையாடும் ஆகாயக் கங்கைச் சாரலை அடைந்துவிட்டோமோ? கண்ணுக்கெட்டா மலைச் சார்பினின்று இழிந்து, அதோ, கடன்பட்டார் நெஞ்சம் போலத் தத்தளித்துக்கொண்டிருக்கும் பொங்குமாங்கடல் என்னும் தடாகத்துள் கோவென்றலறி வீழ்ந்து, பின்பு கிளம்பிச் செங்குத்தான இக்குன்றின்மேல் பல கவறுகளாகப் பாய்ந்துகீழுள்ள தடாகத்தில் வீழும் இவ்வருவியைக் கண்டவுடன், தன்னையறியாத சந்தோஷம் மனத்திற் பொங்குகிறது. இக்குன்றின் மார்பும் அடிவாரமும் நவரத்நங்களால் இழைக்கப்பட்டிருக்கின்றனவோ அல்லது வானவிற்கள்தாம் இவ்வாறு பிரகாசிக்கின்றனவோ, தெரியவில்லை. இவ்வழகிய காட்சி வார்த்தைகளால் வர்ணிக்கக்கூடியதல்ல

      ====================================
  (படம் உதவி - இணையம்)