Thursday, 16 January 2020

தீ

  இன்றியமையாத் தேவையாகிய தீயை வேண்டியபோது உண்டாக்குவதற்குப் பழங்காலத்தில் சக்கிமுக்கி என்ற கற்களை ஒன்றோடொன்று பலமாய்த் தட்டி அப்போது பறக்கிற பொறிகளைப் பஞ்சு, துணி முதலான பொருள்களிற் பிடித்து அவற்றை ஊதி ஊதிப் பெரிதாக்கினர் எனப் படித்திருக்கிறோம். மரத்துடன் மரம் உராய்ந்து காடுகளில் நெருப்புப் பிடிக்கிறது அல்லவா? அதைப் பார்த்து அது குறித்து சிந்தித்து அம்முறையைக் கடைப்பிடித்ததும் உண்டு.

  2002 இல் நான் ஆஸ்திரேலியாவுக்கு முதன்முறை போயிருந்தபோது அங்கத்திய பூர்வ குடிகள் மத்து போன்ற ஒரு மரக்கட்டையால் மரத்தட்டு ஒன்றின்மீது தயிர் கடைவது போல் அழுத்தியும் மிக விரைவாகவும் கடைந்து தீயுண்டாக்கியதைப் பார்த்தேன்; ஒருவர் கடைய இன்னொருவர் தேங்காய் நார் போன்ற பொருளில் தீப்பொறிகளைப் பிடித்தார்.

  சங்க காலத் தமிழர்க்கு இந்த உத்தி தெரிந்திருந்தது என்பதை அகநானூற்றால் அறிகிறோம்:

பா 274, அடி 5:
கடைகோல் இறு தீ அடைய மாட்டி

உரை – கடையுங் கோலிலிருந்து எழுந்த சிறு தீயை அது வளர்வதற்கு விறகில் சேர்த்து.

அந்தக் கோல் “தீக்கடைக் கோல்” எனப்பட்டது.

  சிரமத்தைக் குறைக்க எண்ணிய பிற்காலத் தமிழ்ச் செல்வர் ஒரு தடவை பிறப்பித்த தீயை உமியிற் சேகரித்து நிரந்தரமாக வைத்திருந்தனர்; மேலே மேலே உமியைப் போட்டு நெருப்பு அவியாமல் பாதுகாத்தனர். இப்பழக்கம் சுமார் 200 ஆண்டுக்கு முன்பு வரை நீடித்தது. ஏழை எளியவர்கள் அவர்களை யண்டித் தீப் பெற்றுக் கொண்டார்கள். செல்வர்கள் தம் அதிருப்திக்கு ஆளாகிறவர்களுக்குத் தண்டனையாய், “யாரும் இவர்களுக்கு நெருப்புத் தரக்கூடாது” என்று ஆணையிடுவார்கள். மீறுகிறவர்களுக்கும் அது கிடைக்காமற் போய்விடுமாதலால் யாவரும் அடங்கியே வாழ்வர்.

  இந்த அடிமைத் தனத்திலிருந்து மக்கள் மீள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் தீக்குச்சியை உருவாக்கியவர்களும் அதை எல்லார்க்கும் எளிதில் கிடைக்கச் செய்தவர்களுமே.

  தீக் கடைதல் கஷ்டமாய் இருந்தபோது பிணத்தை எரியூட்டுவதற்கான நெருப்பை வீட்டிலேயே பற்றவைத்து ஒரு சட்டியில் சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு நொடியில் கொளுத்த முடிகிற இந்தக் காலத்திலும் கொள்ளிச்சட்டி கொண்டு போகிற வேலையைத் தவிர்க்கலாமே!

Saturday, 4 January 2020

யார் இவர்கள்?

 ரேஷன் கடையில், வங்கியில், வாக்குச் சாவடியில், மக்கள் வரிசையாய் நிற்குமிடத்துக்குக் கடைசியாய் வந்து பிறரை முந்துவதற்கு சகல முயற்சியும் செய்கிறார்கள்.

  கடைகளில் சிலர் பொருள் வாங்கிக் கொண்டிருக்கையில் அப்போதுதான் வந்து “எனக்கு ஒரே யொரு சாமான், கொடுத்துவிடுங்கள்” என்று உத்தரவிடுகிறார்கள்.

  வங்கியில் டோக்கன் பெற்ற பின்பு, இருக்கையில் அமர்ந்து “கூப்பிடட்டும்” என்றெண்ணிப் பொறுமையாகக் காத்திராமல் counter அருகில் கும்பலாய் நின்றுகொண்டு தலையை நீட்டி நீட்டி உள்ளே நோக்குகிறார்கள்; பணம் பெற வருகிறவர்களுக்கு இடந் தராமல் லேசாக உடலை நெளித்து அவர்களை சிரமப்பட வைக்கிறார்கள்.

  பள்ளி, திருமண மண்டபம், வங்கி முதலான பொதுக் கட்டடங்களின் வாயிற் படிகளில் நின்றபடி உரையாடுகிறார்கள்; பிறர் ஏறவோ இறங்கவோ சங்கடப்படுவதை சட்டை செய்வதில்லை.

  சாலை விதிகளைத் துச்சமாய் மதித்துத் தங்கள் வசதிக்கு ஏற்றபடி ஊர்தி செலுத்துகிறார்கள்.

  கைப்பேசியைக் கன்னத்தால் இடுக்கிக்கொண்டு தலையை ஒருபுறஞ் சாய்த்தவாறே இருவீலர் ஓட்டுகிறார்கள். பேச்சில் கவனம் சாலையிலுங் கவனம் என ஈரவதானஞ் செய்கிறார்கள். உயிர்க்கு ஆபத்து விளையக்கூடுமே என்பது பற்றிக் கவலையில்லை. சரி போகட்டும், அவர்களின் உயிரைப் போக்கிக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டுதான்; ஆனால் இதரரை விபத்துக்கு ஆளாக்குவது என்ன நியாயம்?

  போஸ்ட் கண்ட இடமெல்லாம் கால் தூக்கும் நாய் போலப் பூங்கா, சாலையோரம், ரயில் நிலையம் என எங்கே பெஞ்சு பார்த்தாலும் காலை நீட்டிப் படுத்துவிடுகிறார்கள். நால்வர் அமர்வதற்கு உரிய இடத்தை ஒருவரே ஆக்ரமிக்கிறோமே என்னுங் குற்றவுணர்வு சிறிதுமில்லை.

  திரைப்படக் கொட்டகையில் விசிலடித்தும் உரத்த குரலில் விமர்சித்தும் பிறர் அமைதியாய்ப் படம் பார்க்கவிடாமல் அட்டகாசம் புரிகிறார்கள்.

  இவ்வாறும் இன்னம் பல வழிகளிலும் தம்மை மாத்திரமே, தம் சௌகர்யத்தை மட்டுமே மனத்துட் கொண்டு ஒழுகும் இவர்கள்  யார்?

  வேறு யார்? பண்பாடற்ற இவர்கள் திண்ணமாகத் தமிழர்கள் தான்.

&&&&
(படம் உதவி இணையம்)Tuesday, 24 December 2019

நான் பாவியாம்!

  
கிறித்துவர்களின் பரப்புரையைப் பெரும்பாலான பிற மதத்தார் அறிந்திருப்பர்:

  விலக்கப்பட்ட கனியை ஆதாமும் ஏவாளும் உண்டமையால் பாவிகள் ஆனார்கள்; அவர்களது பாவம் அவர்தம் சந்ததியாகிய எல்லா மனிதர்களையும் பற்றிக்கொண்டது. இரக்கங்கொண்ட கர்த்தர் பாவிகளை ரட்சிக்கத் தம் மைந்தனாகிய ஏசுவை உலகுக்கு அனுப்பினார். ஏசுவின் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் மட்டும் பாவம் நீங்கப் பெறுவர்; மரித்தாலும் உயிர்த்தெழுவர்.

  சில வினாக்கள் எழுகின்றன:  யாவற்றையும் படைத்த கர்த்தர் தானே பாவக்கனி மரத்தையும் படைத்தார்? அதை உண்டாக்குவானேன் அப்புறம் அதன் பழத்தைத் தின்னத் தடை விதிப்பானேன்? அவர்கள் தடை மீறுவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா? குற்றம் புரியக்கூடிய சூழலை உருவாக்கிவிட்டுக் குற்றஞ் செய்தவரைத் தண்டிப்பது ஒரு சதித்திட்டம் என எனக்குத் தோன்றுகிறது.

  மனிதச் சட்டம் என்ன சொல்கிறது? குற்றவாளிகளும் அவர்களுக்குத் துணை போனவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் என்கிறது; கடவுளின் சட்டம் இதைவிட மேலானதாக அல்லவா இருக்கவேண்டும்? ஆதி மனிதனின் தவற்றுக்கு பிள்ளைகளையும் சந்ததிகளையும் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?

   யாரோ எங்கோ எப்போதோ இழைத்த குற்றத்தால் நான் பாவியாம்! என்னய்யா இது வேடிக்கை! நான் அந்தப் பாவத்திற் பங்காளி அல்ல! ஆதலால் கிறித்து மீது நம்பிக்கை வைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை; இதுவரை வைக்கவில்லை;  இறுதிவரை வைக்கப் போவதும் இல்லை!

Thursday, 5 December 2019

தீபாவளியும் கார்த்திகை விழாவும்

  மகாவீரர் சமாதியடைந்தபோது சமணர் வரிசையாய் விளக்கேற்றி வைத்ததாகவும் அதைக் காலப்போக்கில் இந்துக்கள் தீபாவளி என்னும் பெயரில் தமது விழாவாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்துக்களின் சொந்தப் பண்டிகையல்ல என்பதால்தான் நாடு முழுதும் தீபாவளி ஒரே மாதிரியாக அனுசரிக்கப்படவில்லை.

  தமிழர்க்கு நரகாசுரன் இறந்த நாள்; தலைமுழுகிப் புத்துடை அணிந்து மகிழ்கின்றனர்; வட நாட்டாரோ இராமன் போரில் வென்று அயோத்திக்குத் திரும்பிய நாள் எனக் கூறி இராம லீலா கொண்டாடுகின்றனர்; கர்நாடகத்தில் தசராதான் முக்கிய விழா;  வங்காளத்தில் துர்கா பூஜை; கேரளத்தில் ஓணம்; இங்குத் தீபாவளிக்கு இடமேயில்லை.

  இட்லர், இடி அமீன், போல்போட் முதலியவர்கள் மக்களைக் கொன்று குவித்த கொடியவர்கள்; அவர்கள் அழிந்த நாளில் யாரும் விழா எடுப்பதில்லை. ஒருவன் எவ்வளவுதான் பாதகனாய் இருப்பினும் அவன் ஒழிந்தமைக்கு மகிழ்ந்து விழாக் கொண்டாடுதல் பண்பாடற்ற செயல்.

  தீபாவளி எப்போது தமிழகத்தில் நுழைந்தது என்பதை அறியோம்; அது பற்றி சங்க இலக்கியங்களில் செய்தி இல்லை; ஆனால் கார்த்திகை விழா குறித்துத் தகவலுண்டு.

  அகநானூறு பா 141. அடி 7-11

“…… மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்
பழுவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருக.”

உரை: சந்திரன் நிறைவடைந்து (பௌர்ணமி) கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிற அன்று, இரவில், தெருக்களில் விளக்குகளை வரிசையாய் ஏற்றி வைத்துப் பூமாலைகளைத் தொங்கிவிட்டு ஊரில் பலருடன் கூடி விழாக் கொண்டாடுவதற்கு வருக.

விளக்கம்: 
அறுமீன் = ஆறு மீன்; கார்த்திகை நட்சத்திரம். உண்மையில் இது ஏழு நட்சத்திரங்களின் கூட்டம்; ஆறுதான் பிரகாசமாய்த் தெரியும். ஆங்கிலத்தில் Pleiades. 
மறுகு = தெரு; 
மூதூர் = முதுமை + ஊர். பழைய ஊர்.

பிற்கால நூலாகிய களவழி நாற்பதும் கார்த்திகை விழாப் பற்றிப் பேசுகிறது.

பா 17. அடி 3:

“கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கு”

பொருள்: 
சாற்றில் = விழாவில்; 
கழி = மிகுதியான

தமிழர் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகிற கார்த்திகைத் தீப விழாதான் உண்மையில் நமக்குத் தீபாவளி. (தீப + ஆவளி = தீப வரிசை)

  அது கோவில் விழாவாக எக்காலத்திலோ மாறிவிட்டது.

&&&&&
படம் உதவி - இணையம்