Thursday, 17 July 2014

நம் நாட்டில் அடிமைகள்
 முன்கால எகிப்திலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அடிமைகள் என ஒரு மக்கட்கூட்டம் வதைபட்டது என வரலாறு தெரிவிக்கிறது. நீதிநெறிக் கதைகளை இயற்றிய ஈசாப் ஒரு கிரேக்க அடிமை.

 பழங்கால யூதரிடமும் அடிமைகள் இருந்தமைக்கு விவிலியம் சான்று பகர்கிறது:

 பழைய ஏற்பாடு - உபாகமம் - அதிகாரம் 15.

 மோசே கூறியது: "உன் சகோதரனாகிய எபிரேய ஆணாகிலும் எபிரேய பெண்ணாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு ஆண்டு உன்னிடத்தில் சேவிக்க வேண்டும்; ஏழாம் ஆண்டு விடுதலை பண்ணி அனுப்பி விடுவாயாக.”

 அதே ஆகமம் - 21 ஆம் அதிகாரம்; இதுவும் மோசேயின் கூற்று:

 (போர்க் கைதிகளுள் ஒரு பெண்ணை விரும்பி மணந்துகொண்ட பின்பு) 

 "அவள் மேல் உனக்குப் பிரியம் இல்லாமற் போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பத்துக்குப் போக விடலாம்"

 ஆகவே மனித விற்பனை யூதர் சமுதாயத்தில் வழக்கமாய் இருந்தது.

 பண்டைய தமிழகத்திலும் அடிமைகள் இருந்தார்களா? நமக்கு வரலாறு இல்லாமையால், இலக்கியங்களைத் துருவ வேண்டியுள்ளது:

 1 -- தொல்காப்பியம் --- பொருள் 25:

   "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்"

என்பதில் அடியோர் என்னும் சொல் அடிமைகளைக் குறிக்கக்கூடும்.

  2 --  திருக்குறள் 1080:

    "எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
  விற்றற்கு உரியர் விரைந்து"

 பொருள் - பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டால் கயவர்கள் தம்மை உடனடியாக விற்றுக்கொள்வார்கள்.

 இதிலிருந்து மனிதர் தம்மை விற்றுக்கொண்டு, வாங்கியோர்க்கு அடிமைகளானது தமிழகத்திலும் உண்டு என்பது தெரிகிறது. கயவர் விரைந்து விற்றுக்கொள்வர் என்றதால், அல்லாதார் வேறு வழி இல்லாதபோது விற்றுக்கொண்டனர் என ஊகிக்கலாம்.

 ஒருவன் தன் தட்டுமுட்டுச் சாமான்களை விற்றபின்னும் முடை தீராவிட்டால், மனைவி மக்களையும் விற்றுவிட்டுக் கடைசியாய்த் தன்னை விற்றுக்கொள்வான். அதுவே இயல்பு; அரிச்சந்திரன் அப்படித் தானே செய்தான்? இந்தக் கதையிலிருந்து வட நாட்டிலும் தன்னை விற்றல் இருந்தது என அறிகிறோம். ஆரியர்கள் தம் அடிமைகளைத் தாசர் என்று சுட்டினார்கள்.

 3 --  திருக்குறள் 220:

     "ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
   விற்றுக்கோள் தக்கது உடைத்து."

 இதன் விளக்கம்:  தாராளமான கொடையினால் வறுமை உண்டாகும் என்றால், தன்னை விற்றாயினும் அதை ஏற்கலாம்.

 மாந்த விற்பனை இருந்தது என்பதை இந்தப் பாடலும் உறுதி செய்கிறது.

 4 --  குறள் 608:

     "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
   அடிமை புகுத்தி விடும்"

 இந்தச் செய்யுள், சோம்பல் வயப்பட்ட மன்னன் தன் பகைவர்க்கு அடிமையாக நேரும் என்று எச்சரிக்கிறது. வேந்தர்களும் அடிமைகளாய் உழன்றனர்.

 சுந்தரமூர்த்தி நாயனார் கதை தெரியுமல்லவா? அவர் மண மேடையில் அமர்ந்து இருந்தபோது ஒருவர் வந்து, "நீ என் அடிமை;  திருமணம் புரிந்துகொள்ள உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அதற்கான சான்று காட்டி அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். தாம் பார்ப்பனராதலால் அடிமை ஆவதில்லை எனச் சுந்தரர் வாதாடிப் பார்த்தார் என்பதிலிருந்து மற்ற மூன்று வருணத்தார் மட்டுமே அடிமைகளாக இயலும் என்று அறிந்துகொள்கிறோம்.

  புதுச்சேரியில் அடிமை முறை வழக்கத்தில் நிலவியது என ஒரு பழைய பிரஞ்சுக் கட்டுரை தெரிவிக்கிறது. அதன் ஆசிரியர் ஒரு வெள்ளையர். அதில் காணப்படும் முக்கிய தகவல்கள்:

  பஞ்சக் காலத்தில் பெற்றோர் தம் குழந்தைகளை விற்றனர்; 1706 -இல் இரு சிறுமிகள் 10 பகோடாவுக்கும் 1719 -இல்  ஐந்து பெண்கள் 18 பகோடாவுக்கும் விலைபோயினர். ஐரோப்பியர் அடிமைகளை வாங்கிச் சேவகம் செய்யக் கற்பித்தார்கள். சில சமயங்களில் மொரீசியஸ் தீவுக்கு அனுப்பினர் எனினும் அடிமை இனம் என ஒரு மக்கட் கூட்டம் இந்தியாவில்  ஒருபோதும் இருந்ததில்லை.

 (பகோடா பழைய நாணயம்; அதன் இன்றைய மதிப்பு தெரியவில்லை)

  இந்தியாவில் பார்ப்பனர் தவிர மற்றவர்களுள் சிலர் அடிமைகளாய் விலை போயினர் என முடிவு செய்யலாம். இப்போதும் கொத்தடிமைகள் மீட்கப்பட்டார்கள் என்று அவ்வப்பொழுது நாளேடுகளில் செய்தி வெளியாகிறது;  அடிமை முறைக்கு ஆயுள் நெடியது.

            =======================

 (படம்: நன்றி இணையம்)