Thursday 26 March 2020

கொரோனா






  Corona Virus Disease என்பது COVID  எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத அவ்வளவு நுண்ணிய உயிரி ஒன்று என்ன பாடு படுத்துகிறது உலகம் முழுவதையும்! “உருவுகண் டெள்ளாமை வேண்டும்”

  கிருமித்தொற்று இருக்குமோ என்று ஐயப்படுகிறவர்களை அரசுகள் ஒதுக்கி வைக்கின்றன. அது quarantine எனப் படுகிறது. இது இத்தாலிய சொல்லாகிய quarantena (40 நாள்) என்பதிலிருந்து பிறந்தது; பிரஞ்சில் quarantaine.

  1721 இல் பிரான்சின் தென் துறைமுகமாகிய மர்சேய் (Marseille) இல் quarantine முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரில் அப்போது பயங்கர Plague நோய் கோரத் தாண்டவமாடி உலகின் மீது படையெடுத்தது.

  அக்காலம் முதல், தொற்று நோயாளிகள் பயணித்த வெளிநாட்டுக் கப்பல்களைத்  துறைமுகத்துள் விடாமல் கடலிலேயே 40 நாள் நங்கூரமிட்டுக் காத்திருக்கச் செய்யும் உலக வழக்கம் தோன்றிற்று.

  அதென்ன கணக்கு 40 நாள்?

  Allopathy யின் தந்தை எனப் போற்றப்படும் Hippocrates (5 ஆம் நூ. பொ.யு.மு.) சில நோய்களுக்கான காலத்தை 40 நாள் என நிர்ணயித்துள்ளாராம்.

&&&&&
படம் உதவி இணையம்


Friday 20 March 2020

நண்பர் மூவர்



  பிரஞ்சு ஆட்சியிலிருந்த திருநள்ளாறு அரசு தொடக்கப்பள்ளியில் நான் பிரஞ்சாசிரியராக 20-12-1952 இல் பணியேற்றேன்.

  பிரஞ்சிந்தியா என அழைக்கப்பட்டு வந்த புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகத்தைப் பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவிடம் 1.11.54 இல் ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்.
 
  ஆட்சிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை யொன்றை வெளியிட்டது;
 
  55-56 ஆம் கல்வியாண்டிலிருந்து பிரஞ்சுக்குப் பதிலாக ஆங்கிலம் கற்பிக்கப்படும்; அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தின் SSLC முறை பின்பற்றப்படும்.

  இந்த அறிக்கை ஒரு வினாவை எழுப்பிற்று:

  என்னைப் போன்ற பிரஞ்சாசிரியர்களின் கதி என்ன? நாங்கள் முதல் வகுப்பிலிருந்து எல்லாப் பாடங்களையும் பிரஞ்சைப் பயிற்றுமொழியாய்க் கொண்டு பயின்றவர்கள்; தமிழறிவு மிகக் குறைவு. நிரந்தரமாகிவிட்ட எங்களை வீட்டுக்கனுப்ப முடியாது; தமிழ்தான் கற்பிக்க வேண்டியிருக்கும் என ஊகித்தோம்: அதுதான் நடந்தது. அரைகுறைத் தமிழை வைத்துக்கொண்டு எப்படிக் கற்பிக்கப் போகிறோம் என்னுங் கவலை மூண்டது.

  பெரும்பாலோர் நோட்ஸ் உதவி கொண்டு சமாளிக்க வேண்டியதுதான் என முடிவு செய்தார்கள். வயதிற் குறைந்த என் போலுஞ் சிலர் புலவர்க்குத் தனிப்பட்ட முறையிற் படிக்கக் கருதினோம். 

  சேந்த்தான்ழ் (Saint Ange), ரெ.நா.சீனிவாசன், நான் ஆகிய மூவரும் ஒரே நாளில் விண்ணப்பம் அனுப்பிப் பாட நூல்களை வரவழைத்தோம்.

  நூலில் புறநானூற்றுப் பாடல் ஏழும் மனோன்மணீயப் பா ஒன்றும் இடம் பெற்றிருந்தன.

முதற் பா
முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு
மரசுடன் பொருத வண்ண னெடுவரை

எனத் தொடங்கிற்று. முரசு, வால் என்ற சொற்களைத் தவிர மற்றவை புதிர்.

  இதை எப்படிப் படிக்கப் போகிறோம் என்ற மலைப்பு ஏற்பட்டது. இயலாத காரியம் என சேந்த்தான்ழ் சொன்னார். சீனிவாசனும் நானும் என்ன ஆனாலுஞ் சரி, கற்றே தீர்வது எனக் கங்கணங் கட்டிக் கொண்டோம். எங்கள் பள்ளித் தமிழாசிரியர் புலவர் .அருணகிரி தைரியங் கொடுத்தார், உதவுவதாகக் கூறினார்; ஆனால் எங்கள் தீய பேறு! தம் சொந்த வூராகிய புதுச்சேரிக்கு மாற்றலாகி விட்டார்.

(அங்கே கம்பன் கழகத்தில் மும்முரமாய்ப் பணியாற்றிக் கம்பன் விழா நடத்திக் கம்பவாணர் என்ற விருதைக் காரைக்குடி சா.கணேசனிடமிருந்து பெற்றார்.)

  சீனிவாசன், “நாமிருவரும் சேர்ந்து படிக்கலாம்என்று யோசனை சொன்னபோது எனக்குப் பகீர் என்றது! காரணம், மிக நல்லவரான அவரிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம்: பேச்சு, பேச்சு, பேச்சு! பேசத் தொடங்கினால் லேசில் முடிக்கவே மாட்டார்! நான் ஏதாவது பொதுக் கூட்டம் முதலிய பொதுநிகழ்ச்சிக்குப் போனால் சீனிவாசன் எங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைக் கவனித்துக் கூடுமானவரை எட்டப் போய் உட்காருவேன்: அவர் உடனிருந்தால் பேச்சாளர் சொல்வதை அல்லது நடைபெறுகிற நிகழ்ச்சியை நான் கேட்க நோக்க விடமாட்டார்; இவர் பேசத் தொடங்கிவிடுவார்!

  இப்படிப் பட்டவருடன் சேர்ந்து படிக்க இயலுமோ? ஆதலால், “ஒருவர்க்கு நேரங் கிடைக்கும்போது மற்றவருக்குக் கிடைக்காது; ஆகையால் சேர்ந்து படிப்பது சாத்தியமில்லைஎன்று கூறித் தட்டிக் கழித்துவிட்டேன்.

  தனித்தனியே படிக்கத் தொடங்கினோம்; அவ்வப்போது ஐயங்களை எழுப்பி, முடிந்தால் தீர்த்துக் கொள்வோம்; முடியாதபோது விட்டுவிடுவோம். எங்களைப் பார்த்து சேந்த்தான்ழும் கற்க ஆரம்பித்தார்.

  ஒரு நாள் நான் படித்துக் கொண்டிருந்தபோது அவர், “புலவர் பட்டத்துக்கு அதிக மதிப்பு கிடையாது; இதற்காக இவ்வளவு கஷ்டப்படுவது தேவையற்றதுஎன்றார்; நான், “பரவாயில்லை, தாய்மொழியை அறிந்துகொள்ள முடியுமல்லவா?” என்று மறுமொழி சொன்னேன். வேறொரு தடவையும் அதே கருத்தை அவர் முன்வைக்கவே, எனக்குக் கோபம் வந்தது; வெளிக்காட்டாமல், “உங்களை யார் படிக்கச் சொல்கிறார்கள்? விரும்பாவிட்டால் விட்டுவிடுங்களேன்என்றேன். பின்பு அவர் தலையிடவில்லை.

  சில நாள் கழித்துச் சொன்னார், “நான் நேரடியாக முதனிலைத் தேர்வுக்குப் படிக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.”

  (புலவர் பட்டம் பெற மூன்று தேர்வுகளில் தேறவேண்டும்: புகுமுகம் (entrance), முதனிலை (preliminary), இறுதிநிலை (final). SSLC அல்லது அதற்கு நிகரான சான்றிதழ் வைத்திருப்போர் (பிரஞ்சாசிரியர்களின் case இதுவே) புகுமுகம் எழுதத் தேவையில்லை. எங்களுக்கு அடிப்படைத் தமிழறிவு தேவை என்பதைத் தெரிந்து நாங்கள் புகுமுகத்துக்குப் படித்தோம்.)

  சேந்த்தான்ழ் சொன்ன புதுத் தகவலைக் கேட்டபோதுதான் அவரது வஞ்சக எண்ணத்தைப் புரிந்துகொண்டேன். இந்தப் படிப்பு வீண் என்றவர் அல்லவா? இப்போது புலவர் பட்டத்துக்கு மதிப்பு வந்துவிட்டதா? படிக்க விடாமல் தடுப்பதுதான் அவரது நோக்கமாய் இருந்திருக்கிறது; தம்மால் முடியாததை வேறொருவர் செய்துவிடக் கூடாது!

    அவர் முதனிலைத் தேர்வுக்குப் படிக்கவே யில்லை; விரைவிலேயே பிரஞ்சுக் குடியுரிமை பெற்று வேலையை ராஜிநாமா செய்துவிட்டுத் தம் சொந்த ஊராகிய புதுச்சேரி போய்விட்டார்.

  சீனிவாசனும் நானும் ஒரே முயற்சியில் புலவர் ஆனோம்; உயர்நிலைப் பள்ளிக்கு உயர்ந்தோம். பத்தாம் வகுப்புக்குத் தமிழ் பயிற்றுந் தகுதி யடைந்து மகிழ்ந்தோம்.

  தாய்மொழியின் சிறந்த இலக்கியங்களைப் படித்துச் சுவைக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எவ்வளவு விழுமியது!

  மூன்று நண்பர்களும் காலமாகிவிட்டார்கள். 

  "நெருநல் உளனொருவன் இன்றில்லை"!

&&&&&