Tuesday, 26 December 2017

நாள்காட்டி
  காலம் என ஒன்று இல்லை; இல்லாத ஒன்றைக் கணக்கிட வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலாய்ப் பழங்காலத்தில் சிலர்க்குத் தோன்றியதென்றால் அவர்கள் எவ்வளவு நுண்ணறிவாளராய் இருந்திருக்க வேண்டும்! பல்வேறு சமயங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளை நிரல்படுத்தவும் நினைவிற் கொள்ளவும் எதிர்காலத் திட்டங்கள் தீட்டவும் அப்படியொரு தேவையிருப்பதை யுணர்ந்து காலமானியை உருவாக்கிய அந்த அறிவாளிகள், இன்றைய ஈராக் நாட்டில் 5000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள்; அக்கால நியூட்டன்கள்!

   பிறை தோன்றும் வேளையைத் தொடக்கமாய் வைத்து, இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள், முப்பது நாள் கொண்டது ஒரு மாதம், பன்னிரண்டு மாதம் ஓர் ஆண்டு என்று அவர்கள் நிர்ணயித்து நாள்காட்டி தயாரித்தார்கள். 60 நிமிஷம் 60 நொடி என்னும் அளவுகளும் உலகுக்கு அவர்களின் கொடைதான்.

   சுமேரிய நாகரிகம் வீழ்ந்தபோது அவர்களது தயாரிப்பும் வழக்கொழிந்தது. அதை யடிப்படையாய்க் கொண்டு பிற்காலத்தில் எகிப்தியர் உண்டாக்கிய நாள்காட்டி சூரியோதயத்தைத் தொடக்கமாய் மாற்றியது. ஆண்டுக்கு 365¼ நாள் எனத் துல்லியமாய்க் கணக்கிட்ட பெருமை அவர்களைச் சாரும். அவர்களின் காலண்டரில் காணப்பட்ட குறையோன்றைப் போக்குவதற்குப் பொ.யு.மு.3-ஆம் நூற்றாண்டில் கோலோச்சிய எகிப்திய மன்னர் Ptolemy II நான்காண்டுக்கு ஒரு முறை, “ஆண்டுக்கு 366 நாள்என்று திருத்தஞ்செய்தார்; leap year இன்று வரை நீடிக்கிறது.

   எத்திசையும் புகழ் மணக்கச் செம்மாந்திருந்த எகிப்திய நாகரிகத்துக்கும் முடிவு வந்தது.

   அதன் பின்னர் ரோமானியர் காலங் கணக்கிட்டனர்; ஆனால் அதற்கான உரிமை மதத் தலைவர்களின் கையிற் சிக்கியமையால், அவர்கள் லஞ்சம் தந்தவர்களுக்குப் பதவிக் காலத்தை நீட்டித்தல், வரி வசூல் அதிகாரிகளுக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ தவணைகளைக் கூட்டல் அல்லது குறைத்தல் முதலிய முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொழுத்தார்கள். (ஊழலுங் கடவுள்தான்: ஆதி யந்தம் இல்லை). எல்லை மீறிய தகிடுதத்தங்களால் வசந்த விழாவை மழைக் காலத்திலும் கோடை அறுவடை விழாவைக் குளிர்பருவத்திலுங் கொண்டாட நேர்ந்தது. தில்லுமுல்லுகளை ஒழித்துக்கட்டக் கருதிய ஜூலியஸ் சீசர், அந்த உரிமையைப் பறித்ததோடு வானியல் வல்லுநரின் உதவியால் 365 நாள் அடங்கிய ஆண்டு கொண்ட காலண்டரை (லத்தீனில் Kalendae), பொ.யு.மு.46-இல் உருவாக்கி, லீப் ஆண்டையும் பின்பற்றச் செய்தார்.

   இதிலும் சில குறைகள் இருந்தமை காலப்போக்கில் தெரியவந்தது. அவற்றை நீக்குவதற்குப் போப்பாண்டவர் Gregory XIII (1502 – 1585), 1582-ஆம் ஆண்டில், இரு திருத்தங்கள் செய்தார்.

1.   அந்த ஆண்டில் 10 நாளைக் குறைத்தார். அக்டோபர் 4-ஆம் தேதி வியாழனுக்கு அடுத்த நாள் 15-ஆம் தேதி வெள்ளி ஆயிற்று.

2.   Kalendae–யில் இரு சுழிகளால் முடிகிற எல்லா ஆண்டுகளும் லீப் ஆண்டாய் இருந்தன. புது ஏற்பாட்டின்படி சுழிகளுக்கு முன்னால் உள்ள எண் 4-ஆல் மீதியின்றி வகுபட்டால்தான் லீப் ஆண்டு; ஆதலால் 1800,1900 முதலானவை லீப் ஆண்டல்ல.


  அவரது பெயரைத் தாங்கிய கிரிகோரியன் காலண்டர் இன்றைக்கு உலகு முழுதும் பயன்படுகிறது; ஆயினும் எங்கும் ஒரே காலத்தில் அமலுக்கு வரவில்லை. கத்தோலிக்க நாடுகள் விரைவில் ஏற்றன; புரோட்டஸ்டண்ட் நாடுகள் தயங்கின; ஒரு கத்தோலிக்கரின் கணக்கை எப்படி ஒப்புக்கொள்வது?

   வேறு வழியில்லாமையால் ஒவ்வொன்றாய்த் திருந்தின:

-    ஹாலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து 1700-இல் மாறின;

-    இங்கிலாந்தும் ஸ்வீடனும் 1752 வரை காலங் கடத்தியதால் 11 நாள் குறைக்க வேண்டியதாயிற்று; 1700-ஐ அவை லீப் ஆண்டாய்க் (366 நாள்) கடைப்பிடித்திருந்தன. இங்கிலாந்தில் 2-9-1752-க்கு அடுத்த தேதி 14-9-1752 என்று அரசு அறிவித்தபோது, அதிருப்தியாளர் கூட்டமொன்று தெருக்களில் கண்டன ஊர்வலம் நடத்திற்று, “எங்கள் 11 நாளைத் திருப்பித் தா!” என முழங்கியவாறு.

-    இருபதாம் நாற்றாண்டு வரைக்கும் தாக்குப் பிடித்த கிரேக்கம், பல்கேரியா, யுகோஸ்லேவியா, ரஷ்யா 13 நாள் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயின. 26-10-1917-இல் வெடித்த ரஷ்யப் புரட்சி ‘அக்டோபர் புரட்சி’ என வரலாற்றில் பதிவாயிற்று. அடுத்த ஆண்டு முதல் அதை நவம்பர் 7-இல் நினைவு கூர்கின்றனர். 24-10-1918-க்கு அடுத்த நாள் 7-11-1918 ஆகிவிட்டது!
  
 (ஆதாரம்: பிரெஞ்சு நூல் Le calendaier , ஆசிரியர் Paul Couderc)
 (படம் - நன்றி இணையம்)

   

Friday, 15 December 2017

தகவல் பலகை


 பாலயோகினியில் பேபி சரோஜா
படம் உதவி - இணையம்

 1.   75 ஆண்டுக்கு முன்பு பாலயோகினி என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் நடித்த சிறுமி பேபி சரோஜா தான் தமிழ் சினிமாவின் முதல் குழந்தை நட்சத்திரம். மரக்குதிரை மீது அமர்ந்து, முன்னும் பின்னும் ஆடியபடி, தன் பொம்மையைப் பார்த்து,

  கண்ணே பாப்பா மிட்டாயி வாங்கித் தருகிறேன் நானே
  சோடா கலருடன் வேண்டிய பட்சணம் வாங்கித் தருவேனே

என அவள் பாடிய காட்சி பார்த்தவர்களைப் பரவசத்திலாழ்த்தி உள்ளத்தைக் கொள்ளை கொண்டமையால் அவளது போட்டோவை வாங்கிக் கண்ணாடி, சட்டம் போட்டுச் சுவரில் மாட்டி அழகு பார்த்தார்கள்.

  அந்தக் காலக் கட்டத்திற் பிறந்த பல பெண்களுக்கு சரோஜா என்று நிறையப் பேர் பெயர் சூட்டினர்; சிலர் பேபி சரோஜா என்றே பெயர் பதிந்தனர். இந்தக் குழந்தைகள் ஒரு பேபியைப் பெற்றெடுத்த பின்பும் ‘பேபி’ சரோஜாவாகவே நீடிக்க வேண்டியிருந்தது.

  திரையுலகில் இ.வி.சரோஜா, பி.எஸ்.சரோஜா, எம்.எஸ்.சரோஜா என மூன்று நடிகைகள் சமகாலத்தில் நடித்தார்கள்.

2.   வாடியென் கப்பக் கிழங்கே!’ எனத் தொடங்கிய தமிழ்த் திரைப்படப் பாடல் நினைவிருக்கும். கப்ப என்பது மலையாளம். தமிழில் குச்சிக்கிழங்கு, மையக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சவாரிக் கட்டை; இந்தியில் சிம்லா ஆலு (சிம்லா உருளைக்கிழங்கு)

  லட்சக்கணக்கான ஆப்ரிக்கரின் அன்றாட உணவாக இந்தக் கிழங்கு பயன்படுகிறது. உலக உற்பத்தியில் முன்னணி நாடு நைஜீரியா.

  ஜவ்வரிசி செய்யப்படுவது இக்கிழங்கிலிருந்துதான்.

3.    கும்மியடி பெண்கள் கும்மியடி
   கொங்கை குலுங்கவே கும்மியடி

என்ற பாடலைக் கேட்டதுண்டு, பார்த்ததில்லை; இன்றுதான் கண்டேன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கொங்கை குலுங்க மங்கையர் ஆடியதை. அநாயாசமாய், ஆனந்த பரவசமாய், சுதந்திரமாய், எது பற்றியுங் கவலைப்படாமல், என்னமாய் ஆடினார்கள்!

4.   மிகச் சிறு சிலந்தியொன்று உண்டு; வலை பின்னாது; நடந்து செல்லும். சுவரில், தரையில், ஈக்கள் மிகுந்துள்ள இடங்களிற் காணலாம். மெதுவாய் நகர்ந்து, ஓர் ஈயைக் குறிவைத்து அடிமேலடி வைத்து நெருங்கி, ஒரே பாய்ச்சல்! பிடித்துவிடும். ஈயின்மேல் புலி போலப் பாய்வதால் அது ‘ஈப்புலி’ எனப்படுகிறது.

5.   புதுச்சேரித் தாவர இயல் பூங்காவைப் பிரஞ்சு ஆட்சி 1826-இல் தோற்றுவித்தது. சுமார் 11 ஹெக்டார் பரப்பளவுள்ள இதில் ஏறக்குறைய 3000 உள்நாட்டு வெளிநாட்டு மரங்கள் வாழ்கின்றன.

6.   பழந்தமிழ் இலக்கியங்களுள் இடம்பெற்றுள்ள சொல் ‘செவி’. நாம் அதைப் புறந்தள்ளிக் ‘காது’க்கு மாறிவிட்டோம். மலையாளம் செவி என்றே சொல்கிறது.

7.   நீதிபதியை ஏன் my lord என வழக்குரைஞர் விளிக்கிறார்?

  ஆங்கில ஆட்சியில் வைஸ்ராய், ஆளுநர், நீதிபதி முதலான உயர்பதவிகளில் பிரபு வம்சத்தில் பிறந்தவர்களே நியமிக்கப்பட்டார்கள். இப்போதும் லார்ட்ஸ் சபை இங்கிலாந்தில் உண்டு: மேற்பகுலத்தார் சபையாதலால் upper house எனப்படுகிறது; தமிழில் ‘மேலவை’

  நீதிபதி லார்டாய் இருந்தமையால் my lord என அழைத்தனர்; அந்த வழக்கம் இன்னமும் தொடர்கிறது. அதைக் கைவிட வேண்டும் என யாரும் சொன்னதாய்த் தெரியவில்லை. 

*********