Saturday 30 June 2012

நண்பர்கள்




திருவள்ளுவர் நட்புப் பற்றித் தொடர்ச்சியாக 50 குறள் இயற்றியதுடன் வேறு சில அதிகாரங்களிலும் 11 பாக்களில் அது குறித்துக் கூறுகிறார். ஆராய்ந்துதான் நட்புக் கொள்ளவேண்டும் என்பது அவரது முக்கிய அறிவுரை.

அது பண்டைக் காலத்தில் எல்லார்க்கும் பெரும்பாலும் பொருந்தியிருக்கும். போக்கு வரத்து வசதியும் தகவல் தொடர்பும் இல்லாத அக் காலத்தில் மக்கள் தம் எல்லாத் தேவைகளையும் நிரப்பிக்கொண்டு ஒரு சிறு பிரதேசத்துக்குள்ளேயே வாழ்ந்திருப்பார்கள். ஆதலால் நட்பாராய இயன்றிருக்கும். நம் காலத்திலுங்கூட கிராமங்களில் நிலைத்து வாழும் உழவர் பெருமக்களுக்குஅந்த வாய்ப்பு கிட்டுகிறது. ஆனால் நகர வாழ்க்கையில் யாருடன் நட்பு பாராட்டலாம் யாரைத் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடிவதில்லை. நட்பு தானாகப் பிறக்கிறது, வளர்கிறது, மாய்கிறது.

"ஐந்து வயதினிலே அறியாப் பருவத்திலேபள்ளியில் உருவாகும் நட்பு நீடித்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. பள்ளி மாறினால், ஏன் வகுப்பு மாறினால்கூட,பழைய நட்பு போய்ப் புது நட்பு தோன்றலாம். கல்லூரி நண்பர்கள் யார்? பள்ளி நண்பர்கள் அல்லவே! கல்லூரி நட்பாவது நிரந்தரமா? அன்று, அன்று.

கல்வி முடிந்த பின்பு அலுவலகத்தில் சக பணியாளர் சிலருடன் நெருக்கம் உண்டாகிறது. விளையாட்டுக் களங்கள், பொழுது போக்குக் கழகங்கள், நற்பணி மன்றங்கள், தொழிற்சாலைகள் இன்ன பிறவும் நட்பு முகிழ்க்கும் கழனிகள்.

பொதுவாக நட்புக்கு இன்றியமையாதவை புணர்ச்சியும் பழகுதலும். அடிக்கடி சந்தித்து அளவளாவிக் கூடிச் செயல்படும்வரை நட்பு தொடரும், வளரும். இன்றேல் சிறிது சிறிதாய்க் குன்றி இல்லாகும். முழு மதி தேய்வதை உவமை காட்டுகிறார் வள்ளுவர். "அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட்என்று ஆங்கிலத்தில் சொல்வர். "பார்வைக்கு அப்பால் மனத்துக்கு அப்பால்என்பது பொருள். இதே கருத்தைப் பிரஞ்சுப் பழமொழி கண்களுக்குத் தொலைவில், இதயத்துக்குத் தொலைவில்எனக் கூறுகிறது. ஆனால் இதற்கு மாறாக மொழிகிறாள் குறுந்தொகைத் தலைவி தன் காதலனைப் பற்றி:


"நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியர்... (பா 228) 

அவர் நெடுந் தொலை நாட்டில் வாழினும் என் மனத்திற்கு அருகில் உள்ளார்என்பது அர்த்தம். 

கற்பனைத் தலைவி தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் மெய்யாகவே அப்படி வாழ இயலும் என்பதைப் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இருவரும் வெவ்வேறு நாடுகளில் உறைந்தாலும் நெஞ்சிற்கு அணியராகவே வாழ்ந்திருக்கின்றனர். உணர்ச்சி மட்டுமே அவர்களைப் பிணைத்திருக்கிறது. அத்தகைய அரிய நட்பைப் பற்றித்தான் திருக்குறள் 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும் 

என்கிறது.


என்னதான் அடிக்கடி சேர்ந்து பழகினாலும் சிலர் நம் நட்பைத் துறக்கின்றனர். காரணம் தெரியாமலே போகக்கூடும்.தக்க காரணத்துடன் பிரிவோர்கூட சிறிது காலம் சென்று மீண்டும் கூடினாலும் பழைய நெருக்கம் மீளாது என்பதை 

நீக்கமற இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும்  

என்ற நன்னெறிப் பாடல் தெரிவிக்கிறது. 

காலப் போக்கில் நண்பன் பகைவன் ஆவதும் எதிரி தோழன் ஆவதும் உண்டு.ஆதலால் யாருடனும் அளவு மீறிப் பழகி நம் பலவீனங்களை வெளிப்படுத்தாமை நன்று. இவன் எதிரி ஆகக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடம் நிலை பெற்றிருப்பது நமக்குப் பாதுகாப்பு. அதேபோல இன்றைய வேண்டாதவன் நாளைய தோழனாகலாம் என்னும் நினைப்புடன் எல்லை கடந்து பகைமை பாராட்டாமல் ஒழுக வேண்டும். பகை நட்பாங் காலம் வரும்என்கிறார் திருவள்ளுவர். 

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்னும் சந்தர்ப்பவாதிகளின் கொள்கை பொதுமக்களுக்கு ஒத்துவராது.

*******************************************************************

Wednesday 27 June 2012

தலைவலியோடு திருகுவலியும் - சிறுகதை




மாறனுக்குப் புது இடத்தில் படுத்தால் தூக்கம் வரவே வராது. ஆதலால் உறவினர் வீடு, விடுதி முதலியவற்றில் இரவு தங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவான். என்றாலும் சிலசமயம் முடியாமற் போய்விடும். 

அப்படித்தான் ஒரு நாள் வெளியூர் நண்பனின் இல்லத்தில் இராத் தங்கும் கட்டாயம் ஏற்பட்டது. 

"தனியறை, வசதியான படுக்கை, குளிரூட்டி எல்லாம் உண்டு; தூக்கம் நிச்சயம் வரும்" என நண்பன் உறுதியளித்தான். 

அவன் தெரிவித்தது தன்னுடைய நம்பிக்கையை. அந்த நம்பிக்கையால் வழக்கமான துன்பம் நேர்வதைத் தடுக்க இயலவில்லை. "பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது" என்ற கதைதான். 

சொந்தக்காரர் வீடாய் இருந்தாலும் தெருவுக்குப் போய் இயற்கைக் காற்றாடச் சிறிது நேரம் கழிக்கலாம். இங்கே அவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது; அவனது தங்கை வேறு இருக்கிறாள்; இந்தச் சூழ்நிலையில் அறையை விட்டு வெளியே போனால்? தவறான நோக்கம் கற்பித்துக் காலிப்பயல் பட்டம் சூட்டிவிடுவார்கள். 

நண்பனும் வசவுக்கு ஆளாவான். 

வேறென்ன செய்யலாம்? 

எதிலோ எப்போதோ படித்திருந்த யோசனைகளை அமல்படுத்த முடிவு செய்தான். 

"ஒரேயொரு பொருளை இடைவிடாமல் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தால் மனங்குவிந்து ஒருமுகப்பட்டுத் தூக்கம் வந்துவிடும்" 

ஒன்றின்மீது மட்டும் கவனஞ் செலுத்துவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது; சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று? 

"ஒன்றுமுதல் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அலுப்புத் தோன்றி உறங்கிவிடுவோம்" 

எண்ணினான்; 500 தாண்டிவிட்டது. தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை மனப்பான்மை ஏற்பட்டு விழிப்புணர்வை மிகுதிப்படுத்தியதுதான் கண்ட பலன்! 

தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் உண்டாகும் சலிப்பு உறக்கத்தைத் தரலாம். அறையில் பெட்டி இருந்தது. ஆனால் அகாலத்தில் தொடர் இல்லையே! 

எழுந்து விளக்கேற்றி அறையிலிருந்த நூல்களுள் ஒன்றை எடுத்தான். வாசிப்பு, "தூக்க மருந்து" என்பது மாணவப் பருவத்துப் பட்டறிவு. தொடக்கத்திலிருந்து வாசித்தால் சுவை ஏற்பட்டுத் தூக்கத்தை விரட்டக்கூடுமாதலால் பாதியைத் திறந்து படிக்கலானான்: 

"நள்ளிரவு. அவள் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தாள். எல்லாரும் தூங்குகிறார்கள் எள்ளளவும் கவலை இல்லாமல், நான் மட்டும் தனியாய், கண்விழித்துப் படிக்க வேண்டியிருக்கிறதே என்னும் எரிச்சலானது மனத்தின் ஒரு மூலையில் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டிருக்க, அவள் படித்தாள். 

சன்னல் பக்கத்தில் கருப்பு உருவம் ஒன்று தோன்றியது. கம்பிகளை ஒலியின்றி எளிதாய் வளைத்து மெதுவாய் உள்ளே இறங்கிற்று. 

கயல்விழியின் முதுகுக்குப் பின்னாலிருந்து அடிமேல் அடி வைத்து முன்னேறிய அந்த நெடிய உருவம் பையிலிருந்து கத்தியொன்றை உருவியது;  பளபள என்று மின்னிய புதுக் கத்தியை ஓங்கியவாறே நெருங்கியது. 

அருகில் வந்தாயிற்று; அவளது பிடரியில் சதக் என்று..." 

ஐயோ என அலறியேவிட்டான் மாறன். புத்தகத்தை எறிந்தான்; உடல் நடுங்கியது, இதயத் துடிப்பு காதில் கேட்டது; விளக்கை அணைக்கவும் அச்சம். சன்னலருகில் போய்க் கதவுகளை அவசரமாய் மூடினான். அந்த உருவம் இந்த அறையிலேயே இருக்குமோ என்ற விசித்திர ஐயம் அவனைக் கிடுகிடுக்க வைத்தது. 

இனி வருமோ தூக்கம்? புத்தகம் வாசித்ததால் புதிய சங்கடமாய்த் திகில் நிலை ஏற்பட்டது. 

அமைதி இழந்து படுக்கவும் பயந்து இரவு முழுதும் உட்கார்ந்தபடியே விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

 ************************************************************

Thursday 21 June 2012

நீரோ





கொடுங்கோல் செலுத்திய ரோமானியப் பேரரசர் பலருள் ஒருவன் நீரோ; தன் தாயையும் மாற்றான் தாய் மகனையும் படுகொலை புரிந்த பாதகன் அவன். 

ரோம் தீப் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தான் என்ற வாக்கியத்தைக் கேட்டுள்ளோம். அது மெய்யா? 

வரலாறு அவ்வாறு கூறவில்லை:

ரோமில் தீ விபத்து நிகழ்ந்தது உண்மை; நீரோ தான் கொள்ளி
 வைத்திருப்பான் என மக்கள் ஐயுற்றார்கள். அவ்வளவுதான்.

Tuesday 19 June 2012

பிரஞ்சு எண்களில் குறைபாடு

 
70 , 80 , 90 ஆகிய எண்களுக்குப் பிரஞ்சில் தனிச் சொல் இல்லாமையால்,


70 ஐ அறுபது பத்து எனவும்

80 ஐ நாலிருபது என்றும்

90 ஐ நாலிருபது பத்து எனவும் கூறுகிறார்கள்.


காட்டு :


78 -- அறுபது பத்து எட்டு. 

87 -- நாலிருபது ஏழு. 

99 -- நாலிருபது பத்து ஒன்பது.


லத்தீன், தமிழ் - ஓர் ஒற்றுமை



லத்தீனும் தமிழும் வெவ்வேறு குடும்ப மொழிகளாயினும் எண்களைக் குறிப்பிடுவதில் ஒரு சிறிய ஒற்றுமை காணப்படுவது வியப்புத் தருகிறது:


தமிழில் ஒன்பதுஒன்று குறைய பத்து என்பதன் சுருக்கம். இது போன்றேஅன்பர் அன்புரசிகன் சுட்டிக்காட்டியபடிலத்தீனில் ஒன்பதை இலக்கத்தால் 1 X என்று குறித்தார்கள். ( எழுத்தால் குறிக்கத் தனிச்சொல் நொவெம் உண்டு)


பத்தொன்பது ---- லத்தீனில், ஒன்று குறைய இருபது என்ற பொருளில் உன் தே விகிந்த்தீ;


பதினெட்டு -- இரண்டு குறைய இருபது எனப் பொருள் தரும் துஓ தே விகிந்த்தீ.

Thursday 14 June 2012

பத்துக் குற்றம்



ஒரு நூலில் தவிர்க்க வேண்டிய குற்றங்கள் பத்து என நன்னூல் 12 ஆம் பா தெரிவிக்கிறது. அவை: 


1 - குன்றக் கூறல் - விரிவாகக் கூற வேண்டியதைக் குறைவாகக் கூறுதல். 

2 - மிகைபடக் கூறல் - துரும்பைத் தூண் எனல். 

3- கூறியது கூறல் - முன் சொன்னதையே மீண்டும் சொல்லுதல். 

4 - மாறுகொளக் கூறல் - முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல். 

5 - வழூஉச் சொற் புணர்த்தல் - பிழையாக எழுதுதல். 

6 --மயங்க வைத்தல் - இதுவா அதுவா என வாசகர் அய்யுறும்படி எழுதுதல். 

7 - வெற்றெனத் தொடுத்தல் - இலக்கிய நயமில்லாத, பொருத்தமற்ற , சாதாரணச் சொற்களைப் பயன்படுத்தல். 

8 - மற்றொன்று விரித்தல் - ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இடையே வேறு பொருளுக்குத் தாவி அதை விவரித்தல். 

9 - சென்று தேய்ந்து இறுதல் - விரிவாய்த் தொடங்கியது போகப் போகக் குறுகிக் கடைசியில் சப்பென முடிதல். 

10 - நின்று பயன் இன்மை - ஆழ்ந்த கருத்தின்றி. வாசகர்க்குப் பயனற்றதை எழுதுதல்.

நன்னூலார் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளான கதை,  கவிதை,  கட்டுரை முதலிய சிறு படைப்புகளுக்கும் இவ்விதி பொருந்தும். 

இக்காலத் தமிழ் நூல்களிலும் ஏடுகளிலும் குற்றங்கள் நிறையவே காணப்படுகின்றன;  இது மொழியைச் சீரழிக்கும் நிலை;  

ஆனால் இது பற்றிக் கவலைப்படாமல் தமிழை எப்படி வேண்டுமாயினும் எழுதலாம் எனக் கருதுகிற, "சுதந்தர", மனப்பான்மை உடையோர்க்குப் பஞ்சமில்லை. 

ஒரே யோர் காட்டுத் தருகிறேன்: 

14-8-11 தினமணி - பக். 8  " நான்மணிக் கடிகை - ஓர் அறிமுகம்" என்பது தலைப்பு. 

பத்தி 2 - வரி 1 :  நான்கு மணிகள் உள்ள ஆபரணம் என்று பொருள். 

அடுத்த பத்தி - வரி 2 :  நான்கு மணிகளால் ஆன ஆபரணம் என்று பொருள்படும்.

Friday 8 June 2012

ஏமாளி இருக்கும்வரை ....


  

முத்துசாமி பெருஞ் செல்வரல்ல என்றாலும் கணிசமானோர் வறுமைக் கோட்டிலும் அதை ஒட்டியும் வதைபடும் இந் நாட்டில் அவரது சொத்தும் வருமானமும் தேவைக்கு மிஞ்சியவையே. 

அவருக்கு ஒரே மகன் கண்ணுசாமி. பட்டதாரி. வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்நிலை எழுத்தர். தந்தையைப் போலவே உழைக்கும் மக்களின் நிறம். 

மகனுக்குப் பெண் பார்க்கத் திட்டமிட்டார் முத்துசாமி. மருமகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நிர்ணயித்துக் கொண்டார்: சிவப்பு நிறம், பத்தாவதற்குக் குறையாத படிப்பு, அழகு, நல்ல குணம், எல்லாவற்றுக்கும் மேலாகப் பெருஞ் செல்வக் குடும்பத்து ஒரே பெண். மற்றவை குறைந்தாலும் பாதகம் இல்லை. இத் தகுதிதான் மிக முக்கியம். அப்போதுதானே நிறைய வரதட்சிணை, சீர், சொத்து முதலியன கிடைக்கும்? 

சட்ட விரோதமாயிற்றே வரதட்சணை வாங்குவது? ஆமாம், சட்ட விரோதந்தான். அது மட்டுந்தான் சட்ட விரோதமா? கொடுப்பதுந்தான். வாங்குவதும் குற்றம், தருவதும் குற்றம் என்று சட்டம் கூறும்போது அளிப்பவனும் வெளியே சொல்லமாட்டான், பெறுபவனும் சொல்லமாட்டான். இரு சாராரும் சட்டத்தை மீறி நடக்கட்டும். வரதட்சணை நீடூழி வாழட்டும் என்னும் நோக்கத்தில் நிறைவேறியது தான் அந்த சட்டமே யொழிய அதை ஒழிப்பதற்காக அல்ல என்பது முத்துசாமிக்கு நன்றாகவே தெரியும். 

சோதிடர் உறுதியாய் சொல்லியிருந்தார்: 

முத்துசாமி, நீங்கள் விரும்புகிறபடி மருமகள் கிடைப்பதற்கு ஆனி 18 கடைசி நாள். அதற்குள் மணவுறுதியாவது செய்துவிடவேண்டும்என்று. 

நாலரை மாத அவகாசமே இருந்தமையால் முத்துசாமி மிகத் தீவிரமாய் செயல்பட்டார். திருமண அமைப்பாளர்கள் மூலமும் தமிழ், ஆங்கில ஏடுகளில் விளம்பரம் வெளியிட்டும் பரபரப்பாய் முயன்றார். 

கெடு நெருங்கிக்கொண்டிருந்தது; ஆனால் பெண் அமைந்தபாடாய் இல்லை. ஓரம்சம் பிடித்திருந்தால் ஈரம்சம் சரியில்லை. எல்லாம் ஒத்திருந்தாலோ, பெண் வீட்டார்க்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை! 

விடாமல் பாடுபட்டும் தோற்றுப்போன முத்துசாமி ஒரு வழியாய்ப் பெண்ணொருத்தியை உறுதி செய்து திருமணத்தை நடத்த செய்தார். உறவினர், நண்பர்க் கெல்லாம் ஒரே வியப்பு! பெண் ஏழையாம்! முத்துசாமி ஏன் தம் குறிக்கோளைக் கைவிட்டார்? 

இதோ அவரே தம் நண்பரிடம் விளக்குகிறார்: 

"எத்தனையோ பெண் பார்த்தேன். அலைந்தலைந்து அலுத்துப் போனேன். சோதிடர் வைத்த கெடுவும் முடிந்துவிட்டது. அவரிடம் முறையிட்டேன். 

அவர், குரு பெயர்ந்துவிட்டதால் கண்ணையன் சாதகப்படி பணக்கார மனைவி கிடைக்க இனிமேல் வாய்ப்பு இல்லை. கூடுவாஞ்சேரியில் தான் உங்கள் மருமகள் இருக்கிறாள். செக்கடித் தெருவில் மேற்குப் பார்த்த ஓட்டு வீடு; பக்கத்தில் மின் கம்பம்; எதிரே இரட்டை வேப்பமரம். இந்த அடையாளங் கொண்ட வீட்டுப் பெண்தான் முடியும். நீங்கள் எதையும் யோசிக்காமல் ஏழை என்று தயங்காமல் அந்தப் பெண்ணை முடியுங்கள்என்று சொன்னார். அவர் வாக்கு அப்படியே பலித்துவிட்டது. சும்மா சொல்லக்கூடாது. அவர் மிகக் கெட்டிக்காரர் 

இதை சாடையாய்க் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தி உள்ளூரச் சிரித்துக்கொண்டார். தம் மகளுக்கு நல்ல வரன் கிட்டாமல் கவன்றுகொண்டிருந்த அவர் கண்ணயன்மீது குறி வைத்தார். முத்துசாமியின் நிபந்தனைகளை அறிந்தார். அவரது சோதிடருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து சரிக்கட்டித் தம் பெண்ணுக்கு மணம் முடித்தார்.  

முத்துசாமி சொன்னதைக் கேட்டபோது அவருக்கு சிரிப்பு வராதா?

Tuesday 5 June 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 3 & 4






எலெக்த்ராவின் தனிமொழி: 

ஒரேஸ்த்தஸ், என்னன்பே, மறைந்தாய்நீ.
வாழ்வ தெப்படி யினிநான்?
உன் இறப்பு என் இதயத் தினின்று
நம்பிக்கையின் இறுதி இழையையும் கிழித்தது.
நம்பினேன் மறுபடிநீ வருவாய் என்று.
தந்தைக்குப் பழிவாங்க  அபாக்கிய சகோதரியைக் காக்க.
எங்கே போவேன் இப்போது?
தகப்ப னில்லை, சகோதர னில்லை, தனியானேன்.

********************************************************************
இளைஞர் இருவர் ஒரேஸ்த்தசின் அஸ்தி என்று சொல்லி வெண்கலப் பாத்திரம் ஒன்றைத் தருகின்றனர். கையில் வாங்கிய எலெக்த்ரா,
இதுதானா மிச்சம் என்வாஞ்சைக் குரிய
ஒரேஸ்த்தசில் இருந்து; இதுமட்டுந் தானுலகில்
எனக்குக் கூரருமையாய் இருந்தவனை நினைவூட்ட.
இப்படி உன்னை வரவேற்பேன் என்று எண்ணினேனா
இறுதியாய் உன்னைப் பிரிந்தபோது - இப்படி
ஒருகைப்பிடி வெறுமை? இதுவாநான்
விடைதந்த பிரியமான குழந்தை?
உயிர்பிழைக்க வெளியூர்க்கு அனுப்பி உன்னைக்
காப்பாற்ற முயன்ற தற்குப் பதிலாய்
நான்செத் திருந்தால் இருந்திருக்கும் எவ்வளவோ மேலாய்.
அன்றே நீயும் மாய்ந்திருப்பாய். இடம்பெற்று
இருப்பாய் தந்தையின் கல்லறையில். அதற்கு மாறாய்
வெளியூரில், இக்கொடிய இறப்பு, இல்லுக்குத் தூரமாய்,
சகோதரிக்குத் தொலைவில். உடம்பைக் கழுவி
ஈமக் கடனுக்காய் உடையணி விக்கவோ
துயர்தரும் மீதியைப் பாசமிகு கைகளால்
சேகரிக்கும் கடமைதனைச் செம்மையாய்ச் செய்யவோ
நானங் கில்லை. அன்புக்கு உரியவனே,
உனக்காகச் செய்ய வேண்டிய தெல்லாம் அந்நியர்
வேலைஆயிற்று. இங்கே வீட்டுக்கு எங்களிடம்
சிறுதூசிப் பாத்திரமாய் நீவரும் வரையில்.
உன்னை வளர்த்தேன் வழக்கமாய்க் கடந்த நாள்களில்.
அன்னையின் குழந்தை என்பதைக் காட்டிலும் அதிகமாய்
என்மகவாய் நீயிருந்தாய்; வேறுயாரும் இல்லையுன்னைக்
கவனித்துக் கொள்ள நானன்றி ; சகோதரியென்
றழைப்பாய் என்னை, வேறுசகோதரி இல்லாததுபோல்.
நீஇல்லை இப்போது, முடிந்தது எல்லாம் ஒருநாளில்;
போயின யாவும் காற்றில் தூசிபோல்;
மாய்ந்தார் தந்தை, மாண்டாய்நீ , பிணமன்றி
நான்வேறு என்ன எல்லாரும் போனபின் என்னைவிட்டு? 
( தூதராய் வந்தவர் ஒரேஸ்த்தசை வளர்த்தவர்; இளைஞர் இருவரும் ஒரேஸ்த்தசும் நண்பனும். மாறுவேடம் நீக்கிய அவர்களைக் கண்டு களிகூர்ந்தாள் எலெக்த்ரா. அரண்மனையுள் சென்ற ஒரேஸ்த்தஸ் தாயையும் புதுக் கணவனையும் கொன்றான்.)
**********************************************************************



Sunday 3 June 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2




( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார்.)



க்ளித்தெம்நேஸ்த்ரா --  

அன்றுமுதல்

 அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்

 தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி

 சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.

 இங்கே யதனால் இரவும் பகலும்

 கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்

 மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி.

 விடுதலை என்றனுக்கு இப்போது; விடுதலை

 அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து.

 என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,

 என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்

 பாம்பாம் இவளிடம் இருந்து மேதான்.

 இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று.

 இனிநான் வாழலாம் அமைதியாய்.



எலெக்த்ரா - நீதி யாகுமா இது?



க்ளித்தெம்நேஸ்த்ரா - நீதி, வழங்கி யாயிற்று அவனுக்கு.

இன்னம் இல்லை உனக்கு.



எலெக்த்ரா - பழிக்கான தேவதையே! கேள்.

பேசு மடிந்தவனுக்காக.



க்ளித்தெம்நேஸ்த்ரா -- அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது;

நன்றாயும் பேசிவிட்டது.