Friday, 26 May 2017

நூல்களிலிருந்து --- 13

சி.வை.தாமோதரம்பிள்ளை


(பழங்காலத் தமிழ் நூல்கள் அழிந்து போகாதபடி, சுவடிகளைத் தேடித்தேடிக் கண்டுபிடித்து அச்சிலேற்றிய அரும் பெரும் பணியை ஆற்றியவர் உ.வே.சாமிநாதையர். அதே பணியில் மும்முரமாய் ஈடுபட்ட இன்னொருவர், யாழ்ப்பாணத்தில் பிறந்து, தமிழகத்துக்கு வந்து, உயர்கல்வி கற்றுப் புதுக்கோட்டையில் நீதிபதியாய் விளங்கிய சி.வை.தாமோதரம்பிள்ளை (1832 - 1901).  இவரது தொண்டின் பெருமையை எஸ்.வையாபுரி பிள்ளை, தம் 'தமிழ்ச் சுடர்மணிகள்' என்னும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். அதன் ஒரு பகுதி இது)

 "முயற்சியில் நேர்ந்த இடையூறுகள் பல.

 முதலாவது ஏட்டுப் பிரதிகள் கிடைப்பது அரிதாயிருந்தது. பரம்பரை வித்வான்களது இல்லங்கள்தோறும் பிரதிகள் தேடுவது அவசியமாயிற்று.  உற்ற நண்பர்கள் அங்கங்கேயிருந்து உதவி புரிந்தனர்; இந்நண்பர்களுக்குப் பிரதிகளை நேரிற்பரிசோதிப்பது பெரும்பாலும் இயலாத காரியமாயிருந்தது; இதனால் ஏடு பெறும் முயற்சி முற்றும் நன்கு நிறைவேற வழியின்றிப் போயிற்று. ஏடுகளுக்கு உரியவர்களும் அவற்றைக் கொடுக்க விரும்பவில்லை.

இரண்டாவதாக, பிரதிகளைப் பரிசோதித்துப் பலபடியாய் ஆராய்ந்து வழுவறப் பிரதி செய்வது. அக்காலம் ஏடு வாசித்தல் வழக்காறற்றுப் புதியதொரு கலையாய்த் தோன்றிவிட்ட காலம்! தற்போது அச்சிற் கிடைக்கும் பல இலக்கியங்கள் பெயர்கூட அறியப்படாமல் இருந்த காலம்! தக்க பாண்டித்தியம் இருந்தாலன்றி நூல்களைப் பதிப்பிடல் இயலாததாம்; அவ்வகைப் பாண்டித்தியம் உள்ள உதவியாளர்கள் பிள்ளையவர்களுக்குக் கிடைக்கவில்லை; இவரே ஏடு பார்த்துப் பிரதி செய்து பொருள் ஆராயவேண்டியதாயிற்று.

 மூன்றாவதாக, நூல்களைப் பதிப்பிடுதலின் செலவு.

 நான்காவதாக, எத்துணையோ சிரமமெடுத்து நூல்களை வெளியிட்டபோதிலும் அதற்குக் கைம்மாறாகக் கிடைத்தது வசவுரைதான்; ஆங்கிலங் கற்ற தமிழ் விற்பன்னர்கள் உதாசீனமாயிருந்தார்கள்; தமிழ் கற்ற பண்டிதர்களிற் சிலர் பொறாமை மிக்குப் பகை காட்டினார்கள்; ஒருசில அறிஞர் தமிழ் நூல்களை வெளியிடத் தங்களுக்குத்தான் தனியுரிமை உண்டென்று கருதினார்கள்; இவர்கள் செய்ததெல்லாம் குறை கூறிக்கொண்டிருந்ததேயாம். பிறரைக் குறை கூறுவதே பாண்டியத்தின் முக்கிய லட்சணமென்ற கொள்கையுடையோரால் தமிழில் இலக்கியச் செல்வம் எந்நாளேனும் பெருகுவதாகுமா? ஆனால் பிள்ளையவர்கள் கண்டனவுரை, வசவுரை முதலிய இடையூறுகளை யெல்லாம் பொருட்படுத்தியவர்களே யல்லர்.  

 தொல்காப்பியம், கலித்தொகை, சூளாமணி யென்பன அவர்கள் தந்த தனிப் பெருஞ் செல்வங்களுட் சிறந்தன. தமிழன்னையின் அருங்கலமாகத் திகழும் இந்நூல்கள் உள்ளவரை இவர்கள் புகழும் நின்று நிலவுவதாகும்".


                        ++++++++++++++++++++++++

Saturday, 13 May 2017

கொழுப்புருண்டை – 2


  
காலையில் வண்டியோட்டி பயண ஆயத்தம் செய்யவில்லை.
பிரபு கேட்டார்:

"எட்டு மணிக்கு வண்டி பூட்டும்படி உங்களுக்கு உத்தரவிட்டோமல்லவா?

 -- ஆமாம், அதற்குப் பின்பு வேறு உத்தரவு கிடைத்தது.

 -- என்ன வென்று?

 --புறப்படக்கூடாது என்று.

--யாருடைய கட்டளை?

--ஜெர்மன் அதிகாரி.

--ஏன்?

--தெரியாது, அவரைக் கேளுங்கள். வண்டி பூட்டத் தடைபோட்டிருக்கிறார். நான் பூட்டவில்லை; அவ்வளவுதான்.

-- அவரே நேரில் சொன்னாரா?

--அவருடைய சார்பில் விடுதி உரிமையாளர் சொன்னார்.

-- எப்போது?

-- நேற்றிரவு; நான் படுக்கப் போனபோது."

 அனைவருங் கவலையில் ஆழ்ந்தனர். அதிகாரியை சந்திக்க முயன்றனர். விடுதியில்தான் இருக்கிறார் எனினும் உரிமையாளரை மட்டுமே அனுமதிப்பாராம். இவரோ ஈளை நோய் (ஆஸ்த்மா) காரணமாய்ப் பத்து மணிக்கு முன்பு எழமாட்டார் என்று ஊழியரொருவர் தெரிவித்தார்.

 என்ன செய்வது? காத்திருந்தனர். பத்து மணிக்கு உரிமையாளர் தோன்றினார்; அவரிடம் விசாரித்தனர். அதிகாரி, தம்மிடம், " நாளை வண்டி கிளம்புவதைத் தடுத்துவிடுங்கள்; என் ஆணையில்லாமல் புறப்படக்கூடாது" என உத்தரவிட்டதாய் அவர் கூறினார். அவர்மூலம் கோரிக்கை வைத்ததில், ஒரு மணிக்கு நேரம் ஒதுக்கினார் அதிகாரி.

 மூன்று பேர் மாடியேறினர்; அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த அதிகாரி எழவில்லை, சலாம்கூட இடவில்லை.

 "என்ன?

---நாங்கள் புறப்பட விரும்புகிறோம், ஐயா.

-- கூடாது.

--காரணந் தெரிந்துகொள்ளலாமா?

--எனக்கு விருப்பமில்லை என்பதுதான் காரணம்.

--ஐயா, உங்கள் மேலதிகாரி நாங்கள் பயணிப்பதற்கு எழுத்துப்பட இசைவு தந்திருக்கிறார். உங்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி நாங்கள் எதுவுஞ் செய்துவிடவில்லை என்றுதான் நினைக்கிறோம்.

-- நான் விரும்பவில்லை, அவ்வளவுதான்; போகலாம்."

 மூவரும் குனிந்து வணங்கிவிட்டுத் திரும்பினர்.

 அனைவருங் கூடி விவாதித்தனர்: கைது பண்ணப் போகிறாரா? பணயமாகப் பிடித்து வைப்பாரோ? பெருந் தொகையைக் கப்பமாய்க் கேட்கும் உத்தேசமாக இருக்குமோ? ஒன்றும் புரியவில்லை.

 இரவு வந்தது. சாப்பிடப் போகுந்தருணத்தில் உரிமையாளர் வந்து, "செல்வி எலிசபெத் ருசே தமது முடிவை மாற்றிக்கொண்டாரா என்று அதிகாரி கேட்டு வர சொன்னார்" என அறிவித்தார். கொழுப்புருண்டை "நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன், விரும்பவே மாட்டேன் என்று கூறிவிடுங்கள்" என்றாள். அவர் போனதும், யாவரும் அவளை சூழ்ந்து மர்மத்தையறிய நெருக்குதல் கொடுத்தனர். நீண்டநேரம் மசியாத அவள், இறுதியில் பிடி தளர்ந்து, சொன்னாள்: "அவனுடன் நான் படுக்க வேண்டுமாம்".

 திடுக்கிட்ட அனைவரும் அவனைத் திட்டினர்; அவளுக்கு ஆதரவாய், ஆறுதலாய்ப் பேசினர். ஆத்திரந் தீர்ந்த பின்பு, மெளனமாய், யோசனையில் ஆழ்ந்தபடி, சாப்பிட்டுவிட்டுப் படுத்தனர்.

 காலையில், நிலைமை மாறவில்லை; ஆனால், கொழுப்புருண்டைக்கு எதிரான மனப்போக்கு எல்லாரிடமுந் தோன்றியிருந்தது. 'இரவில், யாருக்குந் தெரியாமல் சென்று, அதிகாரியின் விருப்பத்தை நிறைவேற்றி யிருந்தால், இப்போது திடீர் அறிவிப்பாக, மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்து அனைவரின் கவலையையும் அவள் நீக்கியிருக்கலாம் அல்லவா?' ஆனால், யாரும் இப்படி வெளிப்படையாய்க் கூறவில்லை.
 மூன்று இல்லத்தரசியரும் தமக்குள் ரகசியமாய்க் கருத்து பரிமாறிக்கொண்டனர்: "நாமெல்லாம் இப்படி இங்கே கிடந்து கிழவியாக வேண்டுமா? அந்த ஆள் நல்லவன்தான்; நம்மில் ஒருத்தியை அவன் கேட்கவில்லையே! மனைவிமாரை அவன் மதிக்கிறான். இவள் ஏன் இணங்கக்கூடாது? இவளுடைய தொழில்தானே அது? நம்மை மீட்பதற்கு வாய்ப்பு கிட்டியிருக்கும்பொழுது இவள் முரண்டு பிடிக்கிறாளே!"

 ஆண்கள் ஒருபுறம் விவாதித்தார்கள். லுவாசோ, அந்த 'இழிமகளின்' கைகால்களைக் கட்டி ஜெர்மானியனிடம் ஒப்படைக்க விரும்பினார்; ஆனால், பிரபு உய்பேர்,சாதுரியமாய் செயல்படுதல் மேலெனக் கருதி, "அவளை மசிய வைக்க வேண்டும்" என்றார்.

 அவளது மனத்தைக் கரைக்க, நயமாய்ப் பேசி, ஆனமட்டும் முயன்றார்கள். 'பிறர்க்கு நன்மை விளைவிப்பதற்காகப் பாவமுஞ் செய்யலாம், கர்த்தர் மன்னிப்பார்' என்பதற்கு ஆதாரமாய் விவிலியக் கதைகளைக் கன்னியர் எடுத்துக்காட்டினர்; பலன்தான் இல்லை, அவள் தன் அறைக்குப் போய்விட்டாள். உச்சக் கட்டத்தை அடைந்தது கவலை. என்ன செய்யப்போகிறாள்? எவ்வளவு சங்கடம், அவள் உறுதி குலையாவிட்டால்?

 இரவுணவு உண்பதற்கு அனைவரும் அவளுக்காகக் காத்திருக்கையில், உரிமையாளர் வந்து, " செல்வி ருசே அதிகாரியுடன் சாப்பிடுவார்; நீங்கள் மேசையில் அமரலாம்" என்று அறிவித்தாரோ இல்லையோ, புரிந்துவிட்டது. மகிழ்ச்சியுடன் உண்டு மனநிறைவுடன் உறங்கினர்.

 காலையில் புறப்படத் தயாரானபோது, கொழுப்புருண்டையைப் பார்க்க விரும்பாமல் எல்லாரும் சொல்லிவைத்தாற்போல் தலையைத் திருப்பிக்கொண்டனர்; ஏமாற்றம் அடைந்த அவள், திருமதி லுவாசோவிடம், 'காலைவணக்கம், மேடம்' என மெல்லிய குரலில் சொன்னபொழுது அவள் தலையை மாத்திரம் லேசாய் அசைத்தாள்; மாசுற்றவள் எனக் கருதி அனைவரும் விலகினர்.

 பயணத்தின்போது, அவள் யாரோ என்பதுபோல, பேச்சு கொடுக்காமல் உதாசீனஞ் செய்தனர். அவளோ, ஏறிட்டுப் பார்க்கத் துணிச்சல் இன்றி, தன்னை வஞ்சகமாய் எதிரியின் கையில் தள்ளிவிட்ட சக பயணிகளிடம் வெறுப்பும் இறுதிவரை திண்மையைக் கடைப்பிடிக்காமல் போனதற்காக நாணமுங் கொண்டவளாய், மனங்குமுறினாள்.

                                                        =======================
   
(படம் உதவி - இணையம்)


Monday, 1 May 2017

கொழுப்பு உருண்டை


(1870 பிரான்சு - ஜெர்மனி போரில், ஜெர்மானியர் ருஆன் என்னும் பிரஞ்சு  நகரைக் கைப்பற்றியபோது பற்பலர் புலம் பெயர்ந்தனர். அப்பொழுது நிகழ்ந்ததாய்க் கற்பனை செய்து, மாப்பசான் இயற்றிய சிறுகதையின் சுருக்கம்)  ஆறு குதிரை பூட்டிய, நான்கு சக்கரங்கொண்ட, ஒரு வண்டியில் பத்துப் பேர் வைகறையில் புறப்பட்டனர். லுஆசோ, கர்ரே லமாதோன், பிரபு உய்பேர் என்னும் மூன்று இணையர், மடத்துக் கன்னியர் இருவர், மற்றும் ஒரு தனி ஆண், ஒரு தனிப் பெண்.

  இந்த இளம்பெண், உடல் பருமன் காரணமாய், கொழுப்புருண்டை என ஊரால் பெயர் சூட்டப்பட்டவள். இவளை அடையாளங் கண்டுகொண்ட மூன்று மனைவியரும் கிசுகிசுத்துக்கொண்டனர்; பொதுமகள் என்னும் சொல்லை அவர்கள் தாழ்குரலில் உச்சரித்தாலும், அவள் புரிந்துகொண்டு தலை நிமிர்த்திசக பயணிகள்மீது அறைகூவல் விடுகிறமுறைப்பான பார்வையைத் தொடுத்தபோது, உடனடியாய் ஆழ்ந்த அமைதி நிலவிற்றுஅனைவரும் தலை குனிந்தனர்ஆனால்சிறிது நேரத்திலேயே, மூவரும் உரையாடலைத் தொடர்ந்தனர். அவள் அங்கிருந்தமை அவர்களைத் திடீர்  நண்பிகளாக்கிவிட்டது;  ' வெட்கங்கெட்ட விலைமாதுக்கு எதிராக, கண்ணியமான இல்லத்தரசிகள் தாங்கள்' என்ற நினைப்பு பெருமிதந்தந்தது. 

 பத்து மணி ஆகியும் இரு காதங்கூட முன்னேறவில்லை; நான்கு காதத்துக்கு அப்பால், தோத்து என்ற ஊரில் பகலுணவு உண்பதாகத் திட்டம்அங்கே இரவுக்குள் போக முடியுமா என்பதே இப்போது ஐயமாகிவிட்டது; பாதையை மூடியிருந்த பனிமண்ணில் உருளைகள் எளிதில் சுழல இயலவில்லைஓரிடத்தில் புதையுண்ட அவற்றைக் கிளப்ப இரண்டு மணி நேரம் ஆனது.

 பசியெடுத்தது. அங்கங்கு வழியிலிருந்த கடைகளில் ரொட்டிகூட இல்லை; கடைக்காரர்கள் உணவுப் பொருள்களைப் பதுக்கிவிட்டார்கள்; பட்டினியாற்  பரிதவிக்கும் படைவீரர்கள் வந்தால் கண்ணிற் பட்டதைப் பிடுங்கித் தின்றுதீர்த்துவிடுவார்களே!

  மூன்று மணி. ஒரு கிராமங்கூடத் தென்படாத அகன்றதொரு சமவெளி நடுவில் வண்டி போனபோது, கொழுப்புருண்டை தனது இருக்கைக்கு அடியிலிருந்து ஒரு பெரிய கூடையை இழுத்துத் தூக்கினாள்அதில் நெருப்பில் வாட்டிய இரு கோழிக்குஞ்சுகள், பழங்கள், தின்பண்டங்கள் என மூன்று நாளுக்குத் தேவைப்படக்கூடிய உணவுப்பொருள்களும் ஒயின் பாட்டில் நான்கும் காணப்பட்டன. ஓர் இறக்கையைப் பிய்த்து ரொட்டியுடன் சேர்த்து அவள் அருந்தத் தலைப்பட்டபோது, எல்லாக் கண்களும் அவள்மீது மொய்த்தன, எச்சில் ஊறிற்று.

  லுவாசோ கூறினார்: "எங்களைக் காட்டிலும் மேடத்துக்கு அதிக முன்யோசனைஎல்லாவற்றையும்பற்றி யோசிக்கிறவர்கள் இருக்கிறார்கள்".

  அவள் நிமிர்ந்து நோக்கி, "சாருக்குக் கொஞ்சம் வேண்டுமா? நீண்ட நேரம்  பட்டினியாக இருப்பது கடினம்" என்றாள்அவர் சலாம் செய்து, "  நான் மறுக்கவில்லை" என்று தொடங்கிமற்றவர்கள்மேல் ஒரு வட்டப் பார்வையை செலுத்தி, "இந்த மாதிரி சமயங்களில் நமக்கு உதவுகிறவர்களைக் காண்பது ஆறுதலாக இருக்கிறது" என்று முடித்தார்.   கிடைத்த தொடையொன்றை மிக்க மன நிறைவுடன் மென்றார். தம் மனைவிக்குக் கொஞ்சம் தர முடியுமா எனக் கேட்டார்அவள், 'நிச்சயமாகஎன்று புன்னகையுடன் சொல்லிவிட்டுத் தந்தாள். கன்னியரிடம் இனிய, தாழ்ந்த குரலில் கேட்டபோது, அவர்கள் உடனடியாய் ஏற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்கள்.

  பசியைத் தாங்கிக் கொண்டிருந்த மற்ற ஐவரையும் பார்த்த அவள், 'கடவுளேஇவர்களுக்கும் நான் தர முடிந்தால்' என்று சொல்லி நிறுத்திக்கொண்டாள்; இழிவு படுத்தியதாக நினைத்துவிடுவார்களோ என்று தயக்கம். லுவாசோ பேசினார்: "இப்படிப்பட்ட சூழ்நிலையில் எல்லாரும் உடன்பிறப்புகள்ஒருவர்க்கொருவர் உதவ வேண்டும்சம்பிரதாயம் பார்க்காதீர்கள்; ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் போகிற வேகத்தில் நாளை மத்தியானத்துக்குள் தோத்தை அடைவோமா என்பது தெரியவில்லை."

 கூடை கிட்டத்தட்டக் காலி; அது இன்னம் கொஞ்சம் பெரிதாய் இல்லாமற் போனதே என்பது பலரது வருத்தம்.

  இரவு கவிந்தது, குளிர் மிகுந்தது; வண்டியோட்டி விளக்கேற்றினார்:  வெளியே ஒளி; உள்ளே கும்மிருட்டு.

 ஒரு வழியாய்த் தொலைவில் வெளிச்சம் தெரியத் தொடங்கிற்று. தோத்துதான்! 14 மணி நேரப் பயணத்துக்குப் பின்பு ஊர்க்குள் நுழைந்து விடுதியின் முன் வண்டி நின்றது.

  யாரோ ஜெர்மன் மொழியில் கத்தினார்; பயணிகள் உட்கார்ந்தே இருந்தார்கள்; வெளியே போனால் கொல்லப்படலாம் என்று அச்சம். வண்டிக்காரர் இறங்கி, விளக்கை எடுத்து வந்து, கதவைத்  திறந்தார். அவரருகேசீருடையில் நின்றார் ஒரு ஜெர்மன் படைத்தலைவர். அவர், கொச்சை பிரஞ்சில், கண்டிப்பான குரலில்இறங்கக் கட்டளை இட்டவுடன் ஒவ்வொருவராய் இறங்கினர்.

  ஊரைவிட்டு நீங்குவதற்கான அனுமதிச் சீட்டை அவர் கேட்டுப் பெற்று வாசித்தார்ஜெர்மன் படையின் உயரதிகாரி கையொப்பமிட்டு வழங்கியிருந்த அதில்பயணிகளின் பெயர், வயது, முகவரி, அங்க அடையாளம், தொழில் குறிக்கப்பட்டிருந்தன. ஒத்துப் பார்த்த பின்பு போய்விட்டார். யாவர்க்கும் நிம்மதி பிறந்தது.

  சாப்பிட அமர்ந்தபோது, விடுதி உரிமையாளர் வந்து, " செல்வி எலிசபெத்  ருசே யார்?" என வினவினார்.

  கொழுப்புருண்டைக்குத் தூக்கி வாரிப் போட்டது.

 "நான்தான்.

--படைத்தலைவர் உங்களிடம் பேச விரும்புகிறார்.

--என்னிடமா?

--ஆமாம்,  நீங்கள்தானே எலிசபெத் ருசே?"

கொஞ்ச நேரம் யோசித்து, ''நான் போகமாட்டேன்" என்றாள்.

பிரபு உய்பேர் அறிவுரை வழங்கினார்: 

  "தப்பு, மேடம்உங்கள் மறுப்பு உங்களுக்குப் பெரிய சங்கடங்களை உண்டாக்கலாம்; நம் எல்லாருக்குமேதான். அதிகாரத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளவே கூடாது. நீங்கள் போவதால் ஆபத்து ஒன்றுமில்லை; விசாரணையில் மறந்துவிட்ட எதையாவது கேட்பதற்காகத்தான் இருக்கும்".

  மற்றவர்களும் சேர்ந்துகொண்டு கெஞ்சினர், வற்புறுத்தினர், வெற்றியும் பெற்றனர்.

  "உங்களுக்காகத்தான் போகிறேன்" என்று அவள் சொன்னவுடன், பிரபுவின்  மனைவி அவளது கையைப் பற்றிக்கொண்டு, "அதற்காக நாங்கள் எல்லாரும் நன்றி செலுத்துகிறோம்" என்றாள்.

   பத்து நிமிடத்தில் திரும்பி வந்தாள், 'கயவன், கயவன்' என முணுமுணுத்தபடி.

 தெரிந்துகொள்ள அனைவர்க்கும் ஆர்வம்; ஆனால் அவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. கர்ரே லமாதோன் அதிகமாய் வற்புறுத்தவே, "இது உங்களுக்குத் தொடர்பில்லாதது, நான் ஒன்றுஞ் சொல்வதற்கில்லை" என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறிவிட்டாள்.

  அதோடு நிறுத்திக்கொண்டுசாப்பிடத் தொடங்கினர். மறுநாள் காலை எட்டு மணிக்குப் புறப்படுவது என முடிவு செய்துவிட்டுப் படுத்தனர். 
    

                                        (அடுத்த பதிவில் முடியும்)
                                 ==============================
 (படம் உதவி - இணையம்)