Wednesday, 22 March 2017

சிறுமி ரோக்கு (முடிவு)

கடிதம் முடிந்தது, பொழுதும் விடிந்தது. கீழே இறங்கி சிவப்புப் பெட்டியை நோக்கி விரைந்து சென்று,மடலை செலுத்தியபின், திரும்பி வந்து கோபுரத்தில் ஏறி, சாவோலையை எடுத்து செல்லப்போகிற அஞ்சலரை எதிர்பார்த்திருந்தார். இப்போது எவ்வளவு நிம்மதி! விடுதலை பெற்றுவிட்ட உணர்வு! தொல்லை நீங்கியதென்ற களிப்பு!

  சில்லிட்ட குளிர் காற்று முகத்தில் பட்டது; வாயைத் திறந்து அதை ஆர்வத்துடன் விழுங்கினார். கீழ்வானம் சிவந்திருந்தது: செக்கச் செவேல் என்று, பனிக் காலத்து சிவப்பு; தரையை மூடியிருந்த பனியில் சூரியனின் இளங் கதிர்கள் பட்டு அந்தத் தரை முழுதும் மின்னியது, கண்ணாடித் துண்டுகள் சிதறிக்கிடந்தாற்போலே.

 எதிரில் விரிந்திருந்த இயற்கைக் காட்சியை நோக்கினார்: இடப்புறம் புல்வெளிகள், வலப்பக்கம் உணவு தயாரிப்பதற்கு மூட்டிய அடுப்பிலிருந்து எழும் புகையை வெளியிடத் தொடங்கிய கூரைகளைக் கொண்ட கிராமம். கீழே ஓடிக்கொண்டிருந்தது ஆறு; அதனருகே சில பாறைகள்; அவற்றில் மோதித்தான் இறக்கப்போகிறார். அந்த அழகிய குளிர்ந்த வைகறையில், முழு வலிமையையும் நிறைந்த உற்சாகத்தையும் மீண்டும் புதிதாய்ப் பிறந்தது போன்ற உணர்வையும் அடைந்தார். ஒளி வெள்ளம் அவரைக் குளிப்பாட்டிற்று, சுற்றி சூழ்ந்தது, புது நம்பிக்கையை அவருக்குள் செலுத்தியது. ஆயிரம் நினைவுகள் ஆக்ரமித்தன. இதே போன்ற காலைவேளைகள், காலடியில் ஓசையிட்ட உறுதியான தரைமீது விரைவான நடை, காட்டு வாத்துகள் உறங்கும் குளங்களின் கரையில் உற்சாக வேட்டைகள், யாவும் நினைவுக்கு வந்தன. அவருக்குப் பிடித்த எல்லா நல்ல விஷயங்களும் வாழ்க்கையின் இன்பங்களும் மனத்தில் புகுந்து, புதிய ஆசைகளை ஊட்டி, அவரது சுறுசுறுப்பான, உரமேறிய உடம்பின் ஆற்றல் மிக்க எல்லாத் தேவைகளையும் விழித்தெழ செய்தன.

 "சாக வேண்டுமா? எதற்காக? ஒரு நிழலுக்கு அஞ்சியா என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்? ஒன்றுமில்லாததற்குப் பயமா? நேற்றிரவு அவளைப் பார்க்கவில்லையே! ஏன்?  வேலை இருந்ததால் மூளை அதில் ஈடுபட்டிருந்தது. இனிமேல் அவள் வராமல்கூட இருக்கலாம் அல்லவா? ஒரு பொழுதுபோக்கு, ஓர் இடப் பெயர்ச்சி, ஒரு பயணம் போதுமே எல்லாவற்றையும் மறக்க! ஏன் இறக்க வேண்டும்?  இளமையும் செல்வமும் நீங்கிவிடவில்லையே!"

 அதோ மெதேரீக்! வெலவெலப்பு உடல் முழுதும் பரவ, அவர் இறங்கித் தபால் பெட்டியை அடைந்தார்.

"காலை வணக்கம், மெதேரீக்!

--காலை வணக்கம், மேயர் ஐயா!

 --நான் ஒரு கடிதத்தைப் பெட்டியில் போட்டேன். அது இப்போது தேவைப்படுகிறது. உன்னிடம் கேட்டு வாங்க வந்திருக்கிறேன்.
 --அதற்கென்ன, ஐயா, தருகிறேன்."

 நிமிர்ந்து மேயரின் முகத்தைப் பார்த்த மெதேரீக் வியப்புற்றார்: கலைந்த தலை, சிவந்த கன்னம், கரு வளையமிட்ட கண்கள், மருண்ட பார்வை. இரவு தூங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம்.

 "உடம்பு சரியில்லையா, ஐயா?

 -- இல்லையில்லை, ஒன்றுமில்லை; கடிதத்தை வாங்க.. கட்டிலில் இருந்து.. வந்தேன். தூங்கிக்கொண்டு இருந்தேனா? அதுதான்"

 முன்னாள் பட்டாளத்தாரின் மூளையில் லேசான சந்தேகம் மின்னிற்று.
ஒருவேளை அதில், ஏதாவது அரசியல் ரகசியம் இருக்குமோ?

 "யாருக்கு எழுதியது?

--புய்த்துவேனுக்கு; காவல்துறை மேலதிகாரி புய்த்துவேன், என் நண்பர்; உனக்குத் தெரியுமே!"

 அஞ்சல்காரர் தேடி எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தார். கொடுத்துப் பெருந்தவறு புரிவதா, கொடுக்காமல் மேயரின் எதிரி ஆவதா என்று தர்ம சங்கடம்.

 அவரது தயக்கத்தைக் கண்ட ரெனார்தே தட்டிப் பறிக்க முயன்றார்; இந்தத் திடீர் செயல், முக்கிய மர்மம் கடிதத்தில் இருக்கிறது என்பதை அஞ்சலர் உறுதியாய்த் தெரிந்துகொள்ளவும் 'என்ன ஆனாலுஞ் சரி, கடமையை செய்வது' என்று அவர் முடிவு எடுக்கவும் உதவிற்று; கடிதத்தைப் பைக்குள் போட்டு மூடிவிட்டு, "முடியாது, மேயரையா, காவல் துறைக்கு அது போவதால் தரமாட்டேன்" என்றார்.

 மேயரின் இதயத்தைப் பெருங்கலக்கம் இறுக்கிற்று. அவர் தாழ்ந்த குரலில் கூறினார்:

 "என்ன இப்படி சொல்கிறாய்? என்னை உனக்கு நன்றாகத் தெரியும்; என் கையெழுத்தைக்கூட உன்னால் அடையாளங் காண முடியும். அந்தக் கடிதம் எனக்குத் தேவைப்படுகிறது, மெதேரீக்.

 - மாட்டேன், ஐயா.

 -- மெதேரீக்! உன்னை நான் ஏமாற்றக்கூடியவன் அல்ல என்பது தெரியாதா? அது எனக்கு வேண்டும் என்று சொல்கிறேனே!.

 -- மன்னியுங்கள், ஐயா, என்னால் முடியாது.

 - ஜாக்கிரதை; நான் தமாஷ் பேர்வழியல்ல. உன்னைத் தொலைதூரத்துக்கு மாற்றல் செய்ய என்னால் முடியும், அதுவும் உடனடியாக. மேயர் என்ற முறையில் இப்போது உத்தரவிடுகிறேன். கொடுத்துவிடு.

 -- மாட்டேன் ஐயா, நான் கொடுக்கக் கூடாது".

 நிதானம் இழந்த மேயர் அவரைப் பிடித்துப் பையைப் பிடுங்கப் பார்த்தார்; ஆனால், அவரோ, சமாளித்துக்கொண்டு, கொஞ்சம் பின்வாங்கி, தம் பருத்த தடியை ஓங்கிக்கொண்டு, ஆனால் ஆத்திரப்படாமல், சொன்னார்: "என்னைத் தொடாதீர்கள் மேயரையா; அடித்தே விடுவேன். என் கடமையைத்தானே செய்கிறேன்? "

 மோசம்போனேன் என்றெண்ணிய ரெனார்தே, சட்டென்று குணம் மாறி, மெல்லிய குரலில், அழாக் குறையாய்க் கெஞ்சினார். "சரி சரி, நண்பரே, அதைத் தந்துவிட்டால், நான் சன்மானம் கொடுப்பேன்;  நூறு பிரான் தருவேன், தெரிகிறதா? நூறு பிரான்!" என்று சொன்னதைக் காதில் வாங்காமல் மெதேரீக் திரும்பி நடக்கலானார். ரெனார்தெ பின்தொடர்ந்தார். "ஆயிரம் வாங்கிக்கொள், ஆயிரம்!"

 அவர் பதில் சொல்லாமல் விரைந்தார். மேயர் தளரவில்லை. "ராஜபோகம் கிடைக்கும்; எது கேட்டாலும் தருவேன். ஐம்பதாயிரம்?..  ஒரு கடிதத்துக்காக... யோசித்துப்பார்.. போதாதா? சரி, ஒரு லட்சம்! புரிகிறதா? ஒரு லட்சம் பிரான்!"

 அஞ்சல்காரர் திரும்பிப் பார்த்தார்; முகத்தில் கடுமை, கண்களில் முறைப்பு: "நிறுத்துங்கள் இந்தப் பேச்சை. இல்லாவிட்டால் நீங்கள் இப்போது சொன்னதை யெல்லாம் நீதித்துறைக்குக் கொண்டுபோவேன்!" என்று அவர் சொன்னதும் ரெனார்தே நின்றுவிட்டார். எல்லாம் முடிந்தது; இனி செய்வதற்கு எதுவுமில்லை. வீட்டுக்கு விரைந்தார், வேட்டைக்குத் தப்பியோடுகிற விலங்கு போலே.

 அவரது நெடிய உருவம் கோபுர உச்சியில் தோன்றிற்று. கொடிமரத்தைப் பிடித்து ஆவேசத்துடன் அசைத்தார்; ஒடிக்க முடியவில்லை; எனவே தண்ணீரில் தலை குப்புறப் பாயும் நீச்சல்வீரரைப் போல் குதித்தார்.

 தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது பாறையில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் உடல் கிடக்கக் கண்டார்கள். பாறையை சுற்றி ஓடிய ஆற்றின் தெளிந்த நீரில், மூளைப் பகுதிகளும் ரத்தமும் கலந்து ரோசு நிற ரிப்பன் போல நீண்டு சென்றன.

=====================


(மாப்பசானின் சிறுகதைகள் என்னுந் தலைப்புடன் 2004 இல் வெளிவந்த என் நூலில் உள்ள கதையொன்றன் சுருக்கம்)

 (படம் உதவி - இணையம்)

Wednesday, 15 March 2017

சிறுமி ரோக்கு - 2

  ஊரிலே யாவரையும் அந்தக் கொலை அசாதாரணமான முறையில் பாதித்துவிட்டது. எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாமையால் மட்டுமல்ல, வீட்டின் கதவுக்கு எதிரே காலணிகள் வந்து சேர்ந்த மாயத்தாலும் மக்களின் உள்ளங்களில் கவலை, இனம் தெரியா அச்சம், மர்மத் திகிலுணர்வு ஆகியவை ஆழமாய் இடம் பிடித்துவிட்டன. கொலையாளி பிணத்தின் அருகில், கூட்டத்தோடு சேர்ந்து நின்றிருக்கிறான், அவன் நிச்சயமாகத் தங்களிடையேதான் வசிக்கிறான் என்னும் நினைப்புகள் அவர்களின் மூளையில் அழுத்தமாய்ப் பதிந்து அவர்களைப் பீதிக்குள்ளாக்கின, கிராமத்துக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டன.

  அந்தத் தோப்பு, ஆவி உலவும் பயங்கர இடம், என நம்பிய மக்கள் அங்கே போக அஞ்சினார்கள். முன்னெல்லாம் ஞாயிறுதோறும் பிற்பகலில் உலாவுவார்கள்; உயர்ந்து பருத்த மரங்களின் அடியில் புல்மீது அமர்ந்தோ ஆற்றோரமாய் நடந்தோ பொழுது போக்குவார்கள்; சிறுவர்கள் பந்து, கோலி முதலிய விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்; சிறுமிகள் சிறுசிறு குழுவாய்க் கூடி, கைகோத்தபடி உலாவுவதும் உரத்த குரலில் பாடுவதுமாகக் காலத்தை உல்லாசமாகக் கழிப்பார்கள். இப்போதோ? ஏதாவது பிணம் கிடப்பதைக் காண நேரலாம் என்ற பயத்தில் யாருமே தோப்பைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

  ரெனார்தே, விசாரணைக் காலம் முழுதும் காவல் துறைக்கு வழி காட்டவேண்டியிருந்தது. என்றைக்கு விசாரணை கைவிடப்பட்டதோ அன்றுமுதல் சிறிதுசிறிதாய் மனத்தளர்ச்சிக்கு ஆளானார். அவரையும் மீறி, நினைப்பு கொலை நிகழ்ந்த நாளுக்குத் தாவிற்று; எல்லாத் துல்லிய விவரங்களும் நினைவுக்கு வந்தன.

   அன்று மாலை, குளிப்பதற்காக ஆற்றை நெருங்கியபோது மெல்லிய ஒலியொன்று கேட்டது; இலைகளை அகற்றிப் பார்த்தார்: வெள்ளை வெளேர் என்று ஒரு நிர்வாணச் சிறுமி கைகளால் நீரை எற்றிக் குளித்துக்கொண்டிருந்தாள்; சற்று நேரத்தில் கரையேறி உடைகளை எடுப்பதற்காக, அவர்  இருப்பதை அறியாமல், அருகில் வந்தாள்; தவிர்க்க இயலாத சக்தியொன்று அவளை நோக்கித் தம்மைத் தள்ளுவதாய் அவர் உணர்ந்து அவள்மேல் பாய்ந்தார்; அவள் விழுந்தாள். உதவிக்குக் குரல் எழுப்ப முடியா அளவு பெரும் பீதி.

 அவள் அழத் தொடங்கியபோது, 'அழாதே, பணந் தாரேன்' என்று சமாதானப்படுத்த முயன்றார்; அவள் கதறிக்கொண்டு ஓடுவதற்கு முற்பட்டபொழுது, 'ஆகா! மோசம்!' என நினைத்து அலறலை நிறுத்தத் தொண்டையைப் பற்றினார். கொலையிலிருந்து தப்ப முயலும் எவரும் பிரயோகிக்கும் அதிகபட்ச பலத்துடன் அவள் போராடவே, கைகளை இறுக்கினார், கொல்வதற்காக அல்ல, சத்தம் வெளிவராமல் தடுக்க. பிஞ்சுக் கழுத்து பலசாலியின் பிடியை சமாளிக்குமா? சில கணங்களில் உயிர் பிரிந்தது. பயத்தில் உறைந்த ரெனார்தே, கலவரமடைந்து,  செய்வதறியாமல், துணிகளை எடுத்துப் பொட்டலமாய் மடித்து ஆற்றின் ஆழப் பொந்தொன்றில் திணித்தார்.

  நாளடைவில், மனநோய்க்கு ஆளாகி, உருவெளித்தோற்றங்களால், இரவில் தூங்க இயலாமலும் பகலெல்லாம் இரவை நினைத்து அஞ்சியும் துன்புற்றார்; மேன்மேலும் சித்திரவதைப் படுவதைவிட சாவதே நல்லது என்று முடிவு செய்தார். எப்படி இறப்பது? இயல்பான, எளிய மற்றும் தற்கொலை என்று கண்டுபிடிக்க முடியாத வழியொன்று தேவை. அவரது புகழ், முன்னோர் சம்பாதித்துள்ள நற்பெயர் ஆகியவற்றுக்குக் களங்கம் வந்துவிடக் கூடாதே! சாவில் மக்களுக்கு ஐயம் ஏற்பட்டால், துப்புத் துலங்காத கொலைக்கும் சிக்கிக் கொள்ளாத சண்டாளனுக்கும் முடிச்சு போட்டு, அவர்தான் கொலையாளி என்று கண்டுபிடிக்கக் கால தாமதம் நேராது.

  தம் ரகசியத்தை இறுதிவரை காப்பாற்றவல்ல, நம்பிக்கைக்கு உரிய ஒரு நண்பரிடம் தம் மன நிலையை விளக்கித் தம் பாதக செயலை ஒப்புக்கொண்டு,  நிம்மதியடைந்து, அதன்பின் தற்கொலை செய்துகொண்டால்?  யாரிடம் தெரிவிப்பது? சரேலென நினைவு வந்தது: ஆம், தாம் நெருக்கமாய் அறிந்துள்ள காவல்துறை அதிகாரி! அவருக்குக் கடிதம் எழுதலாம். ஒளிவு மறைவு இன்றி யாவற்றையும் விவரமாக எழுதவேண்டும்: கொலை நடந்த சூழ்நிலை, தாம் அனுபவிக்கும் வேதனை, சாக முடிவு செய்தமை, இப்படி ஒன்றுவிடாமல் எழுதிவிடுவது. குற்றவாளி தண்டனையைத் தாமே கொடுத்துக்கொண்டார் என்று அறிந்ததும் கடிதத்தைக் கிழித்துவிடும்படி வேண்டிக்கொள்ளலாம்; அவர் நீண்ட நெடுங்கால நண்பர், சூசகமாகக்கூட செய்தியை வெளியிடமாட்டார்.

  எழுதத் திட்டமிட்ட உடனேயே இதயத்தில் ஒரு விசித்திர மகிழ்ச்சி நிறைந்தது; நிம்மதி திரும்பிற்று. அவசரப்படாமல் எழுதுவார்; மறு நாள், கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பெட்டியுள் போடுவார்; கோபுரத்தின் மேல் நின்று அஞ்சல்காரர் வருகையை எதிர்பார்ப்பார். அவர் வந்து போனதும் தலை குப்புறக் கீழே குதித்துவிடுவார். வெளியில் வேலை செய்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் பார்வையில் முதலில் படவேண்டும்; அதற்காக விழா நாளில் கொடி ஏற்றும் மரக் கம்பம் நட்டிருக்கும் பால்கனியில் நிற்கவேண்டும்; பின்பு உரிய சமயத்தில்  அதைத் திடீரென முறித்துக்கொண்டு அதனோடு சேர்ந்து குதிக்கவேண்டும்: விபத்தென்பதில் ஐயம் ஏற்படாது; கோபுர உயரமும் உடல் கனமும் உடனடி சாவை அளித்துவிடும்.

                            (அடுத்த பதிவில் முடியும்)
                          ++++++++++++++++++++++
                     
 (படம் உதவி - இணையம்)


Wednesday, 8 March 2017

சிறுமி ரோக்கு - 1
 அஞ்சல்காரர் மெதேரீக்உரிய நேரத்தில், அலுவலகத்திலிருந்து புறப்பட்டார்; முன்னாள் படைவீரராகிய அவர், எட்ட அடி வைத்து நடந்து, பிரைந்தீய் ஆற்றின் கரையை அடைந்தார்; கரையோடு சென்றால், கர்வலேன் சிற்றூர் வரும்; அங்கேதான் பட்டுவாடா தொடங்கும்.

 இரு கரையிலும் அடர்ந்து நின்ற மரங்கள் உருவாக்கிய வளைவுக் கூரையின் கீழே, அந்தக் குறுகிய ஆறு,  நுரையாடை போர்த்து, குதித்துக்கொண்டு ஓடிற்று; தொலைவில், கரைகள் அகன்று, அமைதி தவழும் குளமொன்றைத் தோற்றுவித்திருந்தன.

 மெதேரீக், எதையும் பார்க்காமல் நடந்தார்; ஒரே நினைப்பு: தோப்பைத் தாண்டிப் போகவேண்டும். அவரது உறுதி வாய்ந்த தடி, அவருடைய நடைக்கேற்றாற்போல், தானும் நடந்தது. ஆற்றைக் கடந்து தோப்பில் கால் வைத்தார். அது மேயருடையது. இரு கி.மீ. நீளத்திற்கு நீண்டிருந்த அந்தத் தோப்பில், நெடுந்தூண்கள்போல், பருத்த மரங்கள் ஒரே நேராய் உயர்ந்தோங்கி நின்றன. மெதேரீக் நடையைத் தளர்த்தித் தொப்பியைக் கழற்றி நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

 அவர் மறுபடியும் விரைய முனைந்தபோது, சில மீட்டர் தொலைவில், மரத்தடியில், புல்லின்மேலே, ஒரு சிறுமியின் உடல் அம்மணமாய் மல்லாந்து கிடக்கக் கண்டார்; கால்விரல் நுனியில் முன்னேறி, விழிகளை அகலத் திறந்து நோக்கினார்: பத்துப் பன்னிரண்டு வயது இருக்கலாம். என்ன இது, தூங்குகிறாளா? இல்லையில்லை, விடிகாலையில் ஒரு பெண் நிர்வாணமாய்ப் படுத்து உறங்குவாளா? இது பிணந்தான்; காயம் எதுவும் இல்லை; எப்படிக் கொன்றிருப்பார்கள்? "ஐயோ, ஒரு கொலைக்கு சாட்சி ஆகிவிட்டேனே !" என்னதான் முன்னாள் போர்வீரர் என்றாலும், உடம்பு நடுங்கியது. மேயரின் இல்லம் நோக்கி ஓடினார். மிகத் தொன்மை வாய்ந்த கோட்டை அது; ஓர் உயரமான கோபுரமும் அதன் உறுப்பு. முன்காலத்தில் அதன்மேல் நின்று சுற்றுவட்டாரத்தைக் கண்காணித்தனர். புரட்சிக்கு முந்தி, நாட்டில் கோட்டை கொத்தளங்களுடன் வாழ்ந்த பிரபு பரம்பரையில் தோன்றியவர் மேயர். பெயர் ரெனார்தே. காளை வலிமை கொண்ட அவர்க்குக் கிட்டத்தட்ட நாற்பது வயது; ஆறு மாதத்துக்கு முன்பு மனைவியை இழந்தவர்.