Saturday 22 February 2020

தாகூரும் ஒகம்போவும்


நூல்களிலிருந்து – 25 
தாகூரும் ஒகம்போவும்



(சாகித்ய அக்காதெமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன், “உலகை வாசிப்போம்” என்ற தம் நூலில் வெளிநாடுகளில் படைப்பாளிகளுட் சிலரையும் அவர்களுடைய நூல்களையும் அறிமுகம் செய்துள்ளார். 115 -122 பக்கங்களில் இடம்பெற்றுள்ள மேற்படி தலைப்பிலான கட்டுரையின் முக்கிய பகுதிகளை இங்குப் பதிகிறேன்.)

  லத்தீன் அமெரிக்காவில் தாகூரையும் இந்திய இலக்கியங்களையும் தேடித்தேடி வாசிக்கிறார்கள்; தாகூருக்கு விழா எடுக்கின்றனர், கருத்தரங்குகள் நடத்துகிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தாகூர் இரண்டு மாத காலம் அர்ஜெண்டினாவில் தங்கியிருந்ததாகும்.

  1924 இல் சாந்திநிகேதனை உருவாக்க நிதி திரட்டுவதற்காகத் தாகூர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். எதிர்பாராமல் உடல் நலமற்றுப் போகவே அர்ஜெண்டினாவில் சிகிச்சைக்காகத் தங்க நேரிட்டது. எழுத்தாளரும் இளம் பெண்ணுமான விக்டோரியா ஒகம்போ இதைப் பற்றி அறிந்து தாகூரும் அவரது உதவியாளர் லியோனார்டும் தங்கிக் கொள்ளத் தனி மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்து தந்தார்.

  20 வயதில் திருமணமான ஒகம்போ கணவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாகப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் மனவேதனையும் தயரமும் நிரம்பிய நிலைமையில் தான், அவர் கீதாஞ்சலியை வாசித்தார்; தமது மனவுணர்ச்சிகளைத் தாகூர் அப்படியே பிரதிபலித்துள்ளதாகக் கருதினார்; ஆகவே அக்கவிதைகளைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கண்ணீர் சிந்தினார்.

  தாம் ஆதர்சக் கவியாகக் கருதிய தாகூருக்கு நேரில் சேவை செய்யும் வாய்ப்புத் தம்மைத் தேடிவந்தபோது உடனே ஏற்றுக் கொண்டார். தாகூருக்குப் பிடித்தமானது போல ஆற்றங்கரையை ஒட்டிய மாளிகையை வாடகைக்கு அமர்த்தினார். ஒகம்போவின் பணியாளர்கள் இங்கும் வேலை செய்தார்கள். தாகூருக்கான உடை, எழுதுபொருட்கள், இசைத் தட்டுகள் அத்தனையும் வாங்கித் தந்து உபசரித்தார். சிறப்பு நாற்காலி ஒன்றையும் வாங்கிக் கொடுத்தார்; அதிலமர்ந்து தாகூர் எழுதினார். இந்தியாவிற்குத் திரும்பியபோது நாற்காலியைத் தம் பரிசாக உடன் அனுப்பினார். அது தாகூரின் மியூசியத்தில் இன்றுமிருக்கிறது.

  தாகூர் – ஒகம்போ நட்பு ஆழமானது. தம்மை அவர் காதலித்தார், தம்மை அடையும் வேட்கையும் அவருக்கிருந்தது என்று ஒகம்போ தம் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்; ஆனால் தாகூரைத் தம் ஆசானைப் போலவே ஒகம்போ நடத்தினார். தாகூர் மறையும் வரையில் இருவர்க்குமிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. கடிதங்கள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளன.

  தாகூர் ஒகம்போவை விஜயா என இந்தியப் பெயர் சூட்டி அழைத்தார்; அவளது அன்பையும் அழகையும் வியந்து கவிதைகள் எழுதினார்; புரபி என்ற அக்கவிதைத் தொகுப்பை அவளுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

  1941 இல் தாகூர் இறந்தபோது அவருடனான தம் நட்பு குறித்து ஒகம்போ விரிவான அஞ்சலிக் கட்டுரை எழுதி வெளியிட்டார். ஒகம்போ வழியாகத் தாகூர் லத்தீன் அமெரிக்க எழுத்துலகில் முக்கிய எழுத்தாளராய் அறிமுகமாகிக் கொண்டாடப் பட்டார். தாகூரின் கவிதைகளையும் சொற்பொழிவுகளையும் ஸ்பானிய மொழியில் பெயர்த்து வெளியிட்டார். தாகூரின் அழகியலும் உணர்ச்சிப் பெருக்கும் நிரம்பிய கவிதைகள் புதுவகை அனுபவத்தை லத்தீன் அமெரிக்க வாசகர்களுக்கு அளித்தன. தாகூரின் நாடகங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டன.

  ஒகம்போ தாகூர் பற்றி ஒரு நூல் இயற்றியுள்ளார்; அது வங்காள மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

  அர்ஜெண்டினாவில் தாகூர் தங்கியிருந்த மாளிகை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது; வாடகைக்கு விடப்பட்ட நிலையிலும் அங்கே தாகூரின் உருவப் படம் மாட்டிவைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

&&&&&

Tuesday 11 February 2020

பிறந்த நாள்




  இன்று என் 95 ஆம் பிறந்த நாள். கிட்டத்தட்டப் பத்தாண்டுக் காலமாய்க் கட்டுரைகள், ஆய்வுகள், பிரஞ்சிலிருந்து மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றை இலக்கியச் சாரலில் பதிந்து வருகிறேன். வேறு சில பதிவர்களின் படைப்புகளை நோக்க என் எழுத்துகள் எண்ணிக்கையிலும் வகைமையிலும் (variety) குறைவுதான். எழுத வேண்டும் என நான் எண்ணியவற்றுள் மிகப் பெரும்பாலானவற்றை எழுதி முடித்துவிட்டேன்; இன்னங் கொஞ்சந்தான் பாக்கி.

  என் படைப்புகளை வாசித்த அன்பர்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி; தொடர்ந்து கருத்துரைத்து ஊக்கிய வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், அய்யா G.M.B., கரந்தை ஜெயக்குமார் ஆகியோர்க்குப் பிரத்யேக நன்றி.

&&&&&

Tuesday 4 February 2020

அளவைகள் (தொடர்ச்சி)


மீண்டும் மனக் கணக்குக்குப் போவோம்:

  அரசு பள்ளிகளில் எழுத்துக் கணக்கு மட்டுமே உண்டு என்பதைத் தெரிந்து கொண்ட சில பெரியவர்கள் மாணவர்களைக் கேலி செய்வதற்காகவே கணக்கு தருவார்கள்.

 டேய், எந்த க்ளாஸ் படிக்கிறே?”

 -நாலாவது

-எங்கே ஒரு கணக்குப் போடு பார்ப்போம், ஒரு டஜன் வாழைப்பழம் முப்பது காசு. ஒரு பழம் என்ன விலை?”

  நாங்கள் திருதிரு என்று விழிப்போம். தாள் பென்சில் தேடுவோம். அவர்கள் கிண்டல் தொனியில்பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாதுடாஎன்று சொல்லி அட்டகாசமாய்ச் சிரிப்பார்கள்.

  பன்னண்டு ரெண்டு இருபத்து நாலு.
  பன்னண்டு அரை ஆறு.
  ரெண்டரை காசுடாஎன்பார்கள். அப்புறமும் எங்களுக்குப் புதிர்தான்.

  சில sadists பெரியவர்கள் நாங்கள் முடியைப் பிய்த்துக் கொள்ளும்படியான சிக்கல் மிக்க கணக்குகளைத் தருவார்கள்.

ஒரு காட்டு:

காலே அரைக்கால் காசுக்கு
நாலே அரைக்கால் வாழைக்காய்
காசுக்கு எத்தனை காய்?

காலே அரைக்கால் என்பதென்ன? நாலே அரைக்கால் என்றால் எவ்வளவு? இதுவே தெரியாது; கணக்காவது போடாவது?

  இந்த மாதிரி கணக்குகளின் விடையை மட்டும் சொல்லவே மாட்டார்கள். சொல்லிவிட்டால் அப்புறம் இதை வைத்து இம்சிக்க முடியாமல் போய்விடுமே! இப்படிப் பட்டவர்களின் கண்களில் சிக்காமல் பதுங்கிவிடுவோம்.

  நம்ப முடியாத பின்னங்களை எல்லாம் நம் முன்னோர் எண்களாகக் கொண்டிருந்தார்கள்.

காட்டுகள்;

இம்மி   1/2150400
அணு   1/165580800

இந்த அணுவையும் atom என்பதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இதை நூறு பங்காய்ப் பிரித்து மேலுஞ் சிறிதாக்கலாம். இதற்குக் கோண் என்று பெயர். ஆகவே

கோண் = 1/16558080000

கம்பர்: இரணியன் வதைப் படலம்: 37.

அணுவினைச் சத கூறிட்ட கோணிலும்..”
சத கூறு இட்ட = நூறு பாகமாய்ப் பிரித்த.

அரை என்ற சொல் தொல்காப்பியத்தில் உள்ளது. பா. 165

அரைஎன வரூஉம் பால்வரை கிளவி

(பால் வரை கிளவி = பாதியைக் குறிக்குஞ் சொல்)

அந்நூல் மிகப் பெரிய எண்களைக் குறித்துங் கூறுகிறது:

அம் பல்என வரூஉம் இறுதி
அல்பெயர் எண் ….

உரை: அம் பல் என முடிகிற பொருட்பெயர் அல்லாத எண்கள்.

அவை: குவளை, தாமரை, சங்கம், வெள்ளம், ஆம்பல்.

இவை கோடிக்கும் அதிகமானவை என்று கூறப்படுகிறது.

  சிறு பொருள்களுக்கு அளவைகளாய் எள் (எள் அளவும் ஐயமில்லை) கடுகு (கடுகளவும் குறையாது) தினை (தினைத் துணை நன்றி) முதலியவை பயன்பட்டன.

  பெரிய அளவுக்குப் பனைமரம் உதவிற்று. “பனைத் துணையும்” (குறள் 1282)

  குன்றிமணி ஒரு மரத்தின் விதை; இது கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை நகை நிறுக்கப் பயன்பட்டது.

  மஞ்சாடி = 2 குன்றிமணி

கா என்னும் அளவை பண்டைக் காலத்தில் புழக்கத்திலிருந்தது.

கா என் நிறையும்” (தொல். எழுத்து. பா. 169)

பழமொழிகாப் பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.

  கிலோகிராம் வருவதற்கு முன்பு புழங்கிய நிறுத்தலளவைகள்:

1 பலம் = 35 கிராம்
5 பலம் = 1 சேர்
8 சேர் = 1 வீசை (1400 கிராம்)
8 வீசை = 1 மணங்கு

  விறகு நிறுத்தலளவையின் அலகு குண்டு.

  1 குண்டு = சுமார் 25 கிலோ

  பழைய அளத்தல் அளவைகள்:

ஆழாக்கு (1/8 படி), உழக்கு (1/4 படி), படி, மரக்கால் (4 படி), பறை (6 மரக்கால்), கலம் (2 பறை).

  குறுணி நெல் என்றால் ஒரு மரக்கால் நெல்; பதக்கு = 2 மரக்காலளவு; முக்குறுணி = 3 மரக்கால் அளவு)

  உழக்கை நாழி என்றும் சொன்னார்கள்:

  உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் (நல்வழி 28)

  எண்பது ஆண்டுக்கு முன்புவரை நெல் கடைகள் இருந்தன. சில ஊர்களில் இப்போதும் நெல்லுக்கடைத் தெரு என்ற பெயரில் தெருவுண்டு. அக்கடைகளில் நெல் வாங்கலும் விற்றலும் நடைபெற்றன. தொழிலாளர்கள் தாங்கள் கூலியாகப் பெறும் நெல்லை இங்கே விற்றுப் பணம் பெறுவார்கள்; கைக்குத்தல் அரிசிக்காக நெல் வாங்குபவர் உண்டு.

  கடையில் இரு வித மரக்கால்கள் இருந்தன; நெல் விற்பதற்குச் சிறியது, வாங்குவதற்குப் பெரியது. இரண்டும் சரியான மரக்காலைக் காட்டிலும் கொஞ்சந்தான் வேறுபடும், பார்வைக்குப் புலப்படாது.

  திரைப்படப் பாடல் கேட்டிருக்கிறோம். “எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவா ரிந்த நாட்டிலே?” எனத் தொடங்கும் பாட்டில்முக்காப் படியைப் பக்காப் படியா அளக்கிறான்என்று வரும்.

  இந்த மோசடி பழங்காலத்தில் பெருவாரியாக நடந்திருக்கும்.

  தொல்காப்பியம் அகத்திணை 28 ஆம் பா, “கொடுப்பது குறையின்றிக் கொள்வது மிகையின்றிவாணிகஞ் செய்யும்படி சொல்கிறது.

  பட்டினப்பாலை அடி 10 – 14

கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாது
பல் பண்டம் பகர்ந்து….”

(பொருள்மிகை கொளாதுபெரிய அளவையால் வாங்காமல்
குறை கொடாதுசிறிய அளவையால் தராமல்
பல் பண்டம் பகர்ந்து பல பொருள்களை வியாபாரம் செய்தனர்)

  ஏமாற்று வேலையில்லாத ஊரைக் கற்பனை செய்துள்ளனர்.

  தொல்காப்பியர் காலத்திலேயே கலம் என்ற அளவை புழக்கத்தில் இருந்துள்ளது:

அத்திடை வரூஉம் கலம்என் அளவே (168)

 அது நம் காலம் வரை பயன்படுவது வியப்புக்குரிய செய்தி அல்லவா?



பறை என்பது மரத்தாலான கனமான பெட்டி; திறந்திருக்கிற மேற்புறத்தில் ஓர் இஞ்ச் அகலத்தில் இரும்புப்பட்டை பொருத்தியிருக்கும்; அந்தப் பட்டை வரை நெல்லைக் கொட்டுவர். கும்பமாய்க் கொட்டி ஒரு மர உருளையைப் பறை மேல் வைத்துக் கிடை மட்டத்தில் (horizontally) உருட்டினால் பட்டைக்கு மேலேயுள்ள அதிகப் படி நெல் சரிந்துவிடும்.

  இரு புறமும் மரத்தாற் செய்த கைப்பிடி யுண்டு. இரண்டு பக்கத்திலும் இருவர் நின்று கைப்பிடிகளைப் பிடித்துத் தூக்கி மூன்றாமவர் திறந்து காட்டுகிற சாக்கில் கொட்டுவர்; இரு பறை கொட்டியவுடன் மூட்டையை நகர்த்திவிட்டு வேறு காலி சாக்கைத் திறந்து கொட்ட வசதியாகப் பிடிப்பார்கள்.

  நில அளவைகளும் நீண்ட நெடுங்காலம் பயன்பட்டவையே.

100 குழி – 1 மா
20 மா – 1 வேலி

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்.”
(புறம் 184: 1,2)

உரை - முற்றிய நெல்லை அறுவடை செய்து யானைக்கு உணவளிக்கக் கவள உருண்டை தயாரித்தால் ஒரு மாவுக்குக் குறைந்த வயலின் விளைச்சலும் பல நாளுக்குப் போதுமானதாகும்.

வேலி ஆயிரம் விளைகநின் வயலே
(புறம் 391)

உரைஉன் வயலில் ஒரு வேலிக்கு ஆயிரம் கல நெல் விளையட்டும்.

  முன் கால அளவைகளைக் குறித்த தகவல்களை இக் கட்டுரை வழங்குகிறது.

&&&&&