Tuesday 28 August 2018

லாவணி





   சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழக ஊர்கள் சிலவற்றுள் ஆண்டுதோறும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டது. (பேச்சுமொழியில் “காமுட்டி”). ஒரே ஊரில் இரண்டு மூன்று தெருக்களில் விழா எடுப்பதுண்டு.
  
   மாசிப் பிறையன்று நடுத்தெருவில் ஆளுயர மூங்கிற் காலொன்றை நட்டுக் கொடியேற்றி நான்கு மூலைகளிலும் காலூன்றிச் சிறு பந்தலமைத்துத் தென்னங்குருத்துத் தோரணங்களைத் தொங்கவிட்டு அலங்கரிப்பார்கள். இரு வார விழாவில் சில நாள்கள் லாவணி என்னுங் கலை நிகழ்ச்சி நடைபெறும். (அது மராட்டிச் சொல்லாம்; பொருள் தெரியவில்லை.)

   மன்மதனை சிவன் எரித்தான் எனப் புராணங் கூறுகிறதல்லவா? அதை நம்புகிறவரும் “மன்மதன் எரியவில்லை, சிவனைக் காட்டிலும் அவன் பெரிய கடவுள்” என்று கருதுகிறவரும் பாட்டின் மூலம் விவாதம் புரிவதே லாவணி. புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு விவாதிப்பார்கள். (பாமர மொழியில் “எரிஞ்ச கட்சி எரியாத கட்சி போட்டி”).

   மாலை நேரம். பந்தலுக்கு வெளியில் இரு பெஞ்சுகள். ஒன்றில் எரிந்த கட்சிப் பாடகர் ஒருவரும் மற்றதில் எதிராளியும் அமர்ந்து கையில் வைத்துள்ள டேப் என்னும் இசைக் கருவியை அடித்தபடி மாறிமாறிப் பாடுவர். சுமார் மூன்று மணி நேரம் நீடிக்கும். நடுவர் இல்லை, தீர்ப்பும் இல்லை.

  எரிந்த கட்சிக்காரர்தான் தொடங்குவார். பிள்ளையார் முதலிய கடவுள்களுக்கு வணக்கஞ் சொல்லிப் பாடுவார். அவர் முடித்ததும் இவர் ஆரம்பிப்பார்.

  என் நினைவிலிருந்து சில அடிகள்:

-    மங்கலமே மிகுந்த மாசிப் பிறையதனில்
மகரக் கொடியதனை நாட்டி நாட்டி
சங்கையில்லாமல் டேப்பு துந்தனா தாளத்தோடு
சரமண்டலி மோர்சிங் கூட்டிக் கூட்டி

-    காமன் கதை பாடவந்த ஆரம்பத்தில்
நாமகள் என்றொரு பெண்ணைத் துதித்தென்ன?
நாவிலவள் குடியிருப்பாள் என்பதென்ன?
நாலு பேர் அறிய அதைக் கூறு மாதோ.

கல்விக் கரசிதமிழ்ச் செல்வியென் றொரு பெண்ணைக்
கைதொழு தீரேயந்த மங்கை மங்கை
மறையவன் நாவிலவள் உறைவது நிஜமானால்
மலஜலங் கழிப்பது எங்கே யெங்கே?
மாதவிடாய் வரும் பொழுது உதிர வெள்ளம்
வாய்வழி யொழுகாதா அங்கே யங்கே?

-    மாரனைக் கடவுள் என்றித்
தாரணியிலே துதிப்பது ஆருங்காண்?
  எழுந்து வாருங்காண்
  எனக்குப் பதில் கூறுங்காண்.
பாரெனைத் திரும்பியிந்தப்
  பாவலா வரிசை யெல்லாம் போடாதே
  பாடப் பயந்து ஓடாதே
  பாவலர்க் கிது கூடாதே யிந்தப்
பனங்காட்டு நரி சலசலப்புக் கஞ்சி நடுங்கி வாடாதே.


   அக்காலத் தமிழ்த் திரையுலக முடிசூடா மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த திருநீலகண்டர் படத்தில் லாவணிக் காட்சியொன்று நகைச்சுவை நல்கும் விதமாய் இடம்பெற்றது.
   சில அடிகள் இன்னம் மறக்கவில்லை.

முதல்வர்சிவனுக்குக் கழுத்துக் கருத்த விதம் ஓது ஓது.

மற்றவர்  - ஆலகால விஷத்தை அள்ளிக் குடிக்கும்போது
           அமுக்கிப் பிடித்ததினால் அண்ணே அண்ணே

           அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்
           அறியச் சொல்லு என்றன் முன்னே முன்னே.

முதல்வர்அந்தக் கணபதிக்குத் தொந்தி பெருத்த விதம்
           கொழுக்கட்டை தின்றதினால் தம்பி தம்பி.

   இரு தரப்புக்கும் பயன்படக்கூடிய பாட்டு நூல்கள் விற்றன. வாங்கிப் படித்து மனனஞ் செய்து சூழ்நிலைக்கேற்பப் பாடுவார்கள். சில சமயம் சொந்தமாய் இட்டுக் கட்டிப் பாடுவதும் உண்டு. (ஒப்பாரியில் பெண்கள் அவ்வப்போது சுயமாய்ப் பாடியது போல.)

   ஒரு தடவை கரும்பாயிரம் என்பவர் (பார்வையிழந்தவர்) எரிந்த கட்சி பாடினார்:
     ஆனைமா முகனே கணநாதா
     ஐங்கர னாகிய மிகப் போதா
என்று அவர் தொடங்கியது நினைவில் இருக்கிறது. எதிர்ப் பாடகர் குதிரைவண்டிக்காரக் குப்புசாமி, தம் பாடலின் இடையே,
     இன்னமும் தெரியலையா
     ஏங்காணும் பொட்டையரே?
என்று சொந்த சரக்கை எடுத்து விட்டவுடன் எதிர்ப்பும் ஆதரவுமாய்க் கூச்சல் குழப்பம் ஏற்பட்டன. பெரியவர்கள் தலையிட்டுத் “தனிப்பட்ட தாக்குதல் கூடாது” என்று கூறித் தகராறு முற்றாமல் அமைதி நிலவச் செய்து நிகழ்ச்சி சுமுகமாய்த் தொடரச் செய்தார்கள்.

   இறுதி நாளில் (பௌர்ணமி) நடு மூங்கிற் காலை எரிப்பார்கள். (மன்மதன் எரிந்தான்!) விடியும்வரை தெருக்கூத்து நிகழும். மறுநாள் பந்தல் பிரிக்கப்படும்.

   ஊர்திகள் இல்லாக் காலம். மக்கள் தெருவில் அமர்ந்து இடையூறு எதுவுமின்றி நிம்மதியாய் சுவைத்து மகிழ்ந்தார்கள். வானொலி தொலைக்காட்சி பிறக்கும் முன்பு பொழுதுபோக்குகளுள் ஒன்றாக லாவணி பயன்பட்டது.

(படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)

      

Friday 10 August 2018

செய்திகள் பலவிதம்


1.ப்ரதி என்ற வடசொல் முன்னொட்டு ஒவ்வொரு என்னும் பொருளும் எதிர் என்னும் வேறு பொருளும் உடையது:


காட்டுகள்:
ப்ரதி மாதமும் – ஒவ்வொரு மாதமும்
ப்ரதி தினமும் – ஒவ்வொரு தினமும்
ப்ரதிவாதி – எதிர்வாதஞ் செய்பவர்

ப்ரதிபலன் – ஒரு நன்மைக்கு எதிர் பலன்.

2. அமோகம் என்பதும் வடமொழிதான். மோகம் = ஆசை; மோகம் = ஆசையில்லாமை. அமோக விளைச்சல் என்றால் இன்னம் வேண்டும் என ஆசைப்படத் தேவையில்லா அளவு விளைச்சல்.

3. முருகனுக்கு வேறு பெயர் விசாகன். இந்த வடசொல்லுக்குப்பறவை மேல் பயணிப்பவன்என்று அர்த்தமாம்.


4. இந்திய மாநிலங்களுள் ஒன்று, சத்தீஸ்கர். இந்த இந்திச்சொல்அறுபது வீடுஎன்று பொருள்படும்.

5. மலையாள மொழியில் புழ என்றால் ஆறு (நதி). ஆழப்புழ, மலம்புழ, பாரத புழல கேரளத்தில் இருக்கின்றன.

6, ஒலியின் அலகு bel. தொலைபேசியை உருவாக்கிய Alexander Graham Bell–இன் நினைவைப் போற்றுவதற்காக அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

7. Black market என்ற சொற்றொடர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது. சீனி, மண்ணெண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருள்களின் விலை எக்கச்சக்கமாய் ஏறிற்று. அவற்றை வேறிடத்தில் பதுக்கிவிட்டு வணிகர்கள், ‘சீனி இல்லை, மண்ணெண்ணெய் இல்லைஎன்றெழுதிய அட்டைகளைக் கடைகளில் தொங்கவிட்டார்கள். திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு வாங்கித்தானே ஆகவேண்டும்? கடைக்காரரிடம் ரகசிய பேரம் பேசி விலை நிர்ணயித்து சரக்கு பெற்றனர்.


-    Black market-இல் தான் வாங்க வேண்டும்.
-    எல்லாம் black-இல் கிடைக்கிறது.

என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்வது சகஜமாயிற்று.

8.   பிரான்சின் தலைநகராகிய பாரீசின் பல்கலைக் கழகங்களில் பயிலும் பிரெஞ்சு மாணவர்கள் தங்களுக்குள் உரையாட ஒரு தனிமொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அர்கோ (argot) என்று பெயர். அது பிரெஞ்சிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டு: வேலை: பிரெஞ்சில் தீரவாய் (travail) அர்கோவில் புலோ (boulot)
அர்கோ – பிரெஞ்சு அகராதி உண்டு.

9.   குச்சிலு என்ற தெலுங்குச் சொல் நாட்டியக்காரரைக் குறிக்கும். அவர்கள் வாழ்ந்த ஊர் குச்சேலாபுரம் விஜயவாடாவுக்கு அருகில் உள்ளது. அங்குத் தோன்றிய நடனம் குச்சிப்புடி (14-ஆம் நூற்றாண்டு)

10. தெலுங்கிலக்கியம் 11-ஆம் நூற்றாண்டில் முகிழ்த்தது. நன்னய்யா என்பவர் வடமொழி மகாபாரதத்தைத் தழுவி ஒரு பகுதி இயற்றினார். ஆதலால் அவர்ஆதிகவிஎனப் பாராட்டப் படுகிறார். 13-ஆம் நூற்றாண்டில் திக்கண்ணாவும் அடுத்த நூற்றாண்டில் எர்ரண்ணாவும் மீதியைப் பாடி முடித்தனர்.

நன்னய்யா
11. நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்பது சரியா? சரிதான். நல்ல என்பதற்குக் கொடிய, கடுமையான முதலிய வேறு பொருளும் உண்டு.

நல்ல மழைபலத்த மழை
நல்ல பசிதீவிரப் பசி
நல்ல உதைசெமத்தியான உதை
நல்ல பாம்புகொடிய பாம்பு

இது போன்றே நல்லா என்ற வினையெச்சமும் பல பொருள் தரும்.

ஒடம்பு நல்லா காயுது.
நல்லா வருது வாயிலே.

12. தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் என்று எண்ணிச் சொன்ன முதலறிஞர் யார்? யாராவது ஒரு தமிழராய்த் தான் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அது தவறு. அவர் ஓர் இத்தாலியர், பெயர் வீரமாமுனிவர். தம் இலக்கண நூலாகிய தொன்னூல் விளக்கத்தில் எழுதியுள்ளார்.

வீரமாமுனிவர்
13. வியப்பு மேலீட்டால் மூக்கில் விரல் வைப்பது நம் காலத்தில் இருக்கிறது. இந்த வழக்கம் தலைமுறை தலைமுறையாக, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது என்பதை நற்றிணையால் அறிகிறோம்.

தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட ரகசியத் தொடர்பு ஊருக்கு அம்பலமாகிறது. பெண்கள் சிலர் கூடி இது பற்றி மூக்கில் விரல் வைத்துக் கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள்.

பா. 149. அடி 2
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

14. எங்கள் ஊராகிய காரைக்காலுக்கு 1940-க்குப் பின்புதான் பேருந்து வந்தது. ராமலிங்கம் என்ற பெயரைத் தாங்கிய ஒரு வண்டி காரைக்காலையும் நாகூரையும் (தெற்கே ஏழு மைல்) இணைத்தது. அதற்கு முன்பு நடந்துதான் போய்வந்தனர்
மூவர்நால்வராய் இருந்தால் வாடகைக் குதிரை வண்டியில் பயணித்தனர்.

15. காரைக்காலில் எண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு அரசு மகப்பேறு மருத்துவமனை இயங்கத் தொடங்கிற்று. ஒரு கர்ப்பிணி கூட வராமல் ஈயோட்டிக் கொண்டிருந்தனர். வீட்டிலேயே மருத்துவச்சியின் உதவியால் குழவியீன்ற காலம். ஆண் டாக்டர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளப் பெண்கள் விரும்பவில்லைஇங்கு வந்து பிரசவம்  பார்த்துக் கொள்கிறவர்களுக்கு ஒரு சேலை இனாம் என்ற அறிவிப்பு உடனடியாய்ப் பலன் தரவில்லை.


(படங்கள் உதவி - இணையம்)