Sunday, 17 March 2013

என்ன உலகம்!


சக்கரைப் பொங்கல் சாப்பிட ஆசையாய் இருக்குது, ஆத்தா. 

எனக்கும் ஆசைதான், செஞ்சு தர, காசு இல்லியே! இந்த வயசுலே பாடுபடவும் என்னாலே முடியலே. ஏதோ நீ குடுக்கிறதை வச்சு வயிறு கழுவுறோம். 

சரி, சரி; மனக் கஷ்டப்படாதே. நம்ப நெலமை எனக்குத் தெரியாதா? என்னமோ வாய் தவறிக் கேட்டுட்டேன். 

தப்பே இல்லை; ஆசைப்படுறதை நல்லா தின்கிற வயசுதானே? ஒன்னோட கஷ்ட காலம் ஆய் செத்துட்டா, அப்பன் இருந்தும் புண்ணியம் இல்லை.  

அப்பாவைப் பாத்து ரொம்ப நாள் ஆவுது, ஆத்தா. 

ஏன் பாக்கணும் அந்தப் பாழாப் போனவனை? பாத்து என்னா ஆவப்போவுது? என்னோட உயிர் மாதிரி நெனச்சிருந்த பொண்ணைக் குடுத்தேன். என்னா பாடுபடுத்தினான், படுபாவி பயல்? கொஞ்ச அடியா கொறைஞ்ச அடியா? எல்லாத்தையும் தாங்கிக்கிட்டாள் புண்ணியவதி. நாலு வருஷம் நாலு யொகமாத்தான் இருந்திச்சு அவளுக்கு. 

பாட்டி புலம்பித் தீர்த்தாள் ஒருபாட்டம். 

போதும், போதும். கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன கதை! 

என் மனம் ஆறலியே! கட்டை வேகிற வரைக்கும் ஆறாது. 

நேரமாச்சு; வேலைக்குப் போயிட்டு வரேன். 

கிளம்பினான் சின்னப்பன் தேநீர்க் கடைக்கு. 

தந்தை சிங்காரம் பக்கத்துச் சிற்றூரில்தான் வாழ்கிறான்; எலும்புருவ மனைவியையும் மூன்று வயது மகனையும் மாமியார் வீட்டுக்கு விரட்டியவன் அவள் இறந்தபோது வந்தவன்தான்; இந்த ஏழு ஆண்டுகளில் பிள்ளையைப் பார்க்கக்கூட அவனுக்கு ஆசை தோன்றவில்லை; பாசம் முளைக்காத பாலையே அவன் மனம். 

துன்பம் தொடர்கதையாவது அரிதல்ல: பாதை தவறிய அரசு வேன் அந்தக் கடையையா முட்டவேண்டும்? ஏதோ நல்ல காலம்! உயிர்ச் சேதம் ஏற்படவில்லை; காயங்களுடன் தப்பின நால்வருள் சின்னப்பன் ஒருவன். 

இழப்பீட்டுத்தொகை 2000 ரூ. பெற அவனையும் பாட்டியையும் நற்பணி மன்ற உறுப்பினர் நகரத்துக்கு அழைத்துச் சென்றார். தகப்பன் உயிருடன் இருப்பதால் அவனுக்குத்தான் கிடைக்கும் எனத் தெரிந்தது.

அவனது பொறுப்பற்ற போக்கையும் சிறுவனை வளர்க்கப் பாட்டி பட்ட அல்லல்களையும் அலுவரிடம் விவரித்தனர். பொறுமையாய்க் கேட்கும் பண்பு வாய்ந்த அந்த அபூர்வ மனிதர் இரங்கினார்தான்; ஆனால் பயன்? 

சட்டம் சட்டந்தான்; அது வளைந்து கொடுக்குமோ, ஏழைக்கு?

Thursday, 14 March 2013

மெய்யும் பொய்யும்


 

உண்மை பேசவேண்டும் என்று அனைத்து அற நூல்களும் போதிக்கின்றன; ஆனால் பொய் உரைக்காமல் யாரும் வாழ்வதில்லை, வாழ முடிவதில்லை. இதை மனத்துள் கொண்ட திருவள்ளுவர், பொய்யை இரு வகைப் படுத்தி, பிறர்க்கு நன்மை பயக்கின்ற பொய்யை வாய்மையாய்க் கொள்ளலாம் என்றார்; ஆனால் மற்றவர்களின் நன்மையைக் கருத்தில் கொள்ளாமல் தன்னலப் பொய்களைப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோர்க்குப் பஞ்சமில்லை. 

அவர்கள்: 

1 - வழக்குரைஞர்கள் - பொய் சாட்சி உருவாக்கும் அவசியம் இவர்களுக்கு ஏற்படும்; 

2 - வணிகர்கள் - வர்த்தக விளம்பரங்களில் அண்டப் புளுகுகள், ஆகாசப் புளுகுகள் இடம்பெறக் காண்கிறோம். 

3 - தரகர்கள் - ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் எனத் திருமணத் தரகர்கள் தமக்குச் சாதகமாய் ஒரு பழமொழியே படைத்துள்ளனர். 

உண்மையை (முழுதும் அல்லது பகுதி)க் கூறாமல் மறைப்பதும் ஒரு வகைப் பொய்தான்; ஆயினும் அது எல்லார்க்கும் அவ்வப்போது தேவைப்படுகிறது. 

"எல்லா உண்மைகளும் சொல்லத் தக்கவை அல்ல" என்று ஒரு பிரஞ்சுப் பழமொழி எச்சரிக்கிறது 

ஒளிக்க வேண்டிய மெய்யை அம்பலப்படுத்துவார்க்கு நேரும் இக்கட்டை இயம்புகிறது,  "யதார்த்த வாதி வெகு ஜன விரோதி" என்னும் சமற்கிருதப் பழமொழி.

Thursday, 7 March 2013

முற்காலப் பயணம்


 

பேருந்து தோன்றாத, மிதிவண்டிகூட அரிதாய்த் தென்பட்ட, எண்பது ஆண்டுக்கு முந்தைய காலத்தில், அன்றாட வேலைகளுக்கு மக்கள் நடந்தே சென்றார்கள்; பத்து கிலோமீட்டருக்குள் அலுவல் முடிந்துவிடும். 

( சாலை விபத்து நிகழ இயலாத காலம்!) 

செல்வர்கள் தத்தம் தரத்துக்கு ஏற்ப, சொந்த ஒற்றைமாட்டு வண்டி, இரட்டைமாட்டு வண்டி, குதிரை வண்டி பயன்படுத்தினர். 

வாடகைக்கு மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி கிடைத்தது; அவசரத் தேவைக்கும் நோயாளிகளையோ இயலாதவர்களையோ ஏற்றிச் செல்லவும் அது உதவிற்று. சுற்றுலா , அலுவல் நிமித்தப் பயணம் முதலியவை பற்றிய கற்பனைகூட யார்க்கும் உதிக்கவில்லை. நீண்ட தொலை போகவேண்டிய கட்டாயம் எப்போதாவது ஏற்பட்டால் தொடர்வண்டி (ரயில்) கைகொடுத்தது. 

புனிதத் தலங்களுக்குக் கூட்டமாய்க் கூடிப் பாத யாத்திரை செய்தனர். 

அக்கம்பக்க ஊரில் பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்க முதியோர், சிறுவர் உட்படச் சில குடும்பங்கள் சேர்ந்து பயணிப்பது எப்படி? மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்துகொள்வர். 

( இப்போதுபோல் இரண்டொருவர் போய்ப் பார்த்தோ, யாரும் பார்க்காமலோ, திருமண முடிவு செய்தால் உறவினர்களின் பகை உண்டாகும்) 

வண்டிப் பயணம் வசதி அற்றது: கால்களை மடக்கி முடக்கி உட்காரவேண்டும். சாலை உணவகம் முளைக்காத காலம் ஆகையால் உணவும் குடிநீரும் வாழையிலை ஏடுகளும் கொண்டு செல்வார்கள்; புளிச் சோறும் தயிர்ச் சோறும் தான் மெனு, மாறாத மெனு. வண்டிகள் வரிசையாகப் போகும்; உரையாடிக் கொண்டே பயணிப்பார்கள். 

சாப்பாட்டு நேரம் வந்துவிட்டதா? குளம் அல்லது ஆறு கண்ட இடத்தில் இறங்குவார்கள். (அப்போதெல்லாம் ஏராள நீர்நிலைகள் மக்களின் தேவையை நிறைவு செய்தன; நாளடைவில் அவை கட்டடங்களாய்ப் புதுப் பிறவி எடுத்துவிட்டன) 

ஆளுக்கொரு இலையைக் கையில் தாங்கிக்கொண்டு அதில் பரிமாறும் உணவை நின்றபடியே உண்பர். (கையேந்தி பவன் அப்போது தோன்றியதுதான்) 

எச்சில் இலைகளை எங்கே வேண்டுமானாலும் எறிந்துவிட்டுக் குளத்து / ஆற்று நீரில் கை அலம்பிக்கொள்வர். இது அக்காலப் பிக்நிக்; இதற்கெனத் தனியாய்த் திட்டமிடல் இல்லை; பயணத்தின் இடையே இடம்பெறும். 

( தாள், ப்லாஸ்டிக் முதலியவற்றைக் கண்ட இடத்தில் வீசும் தற்காலப் பழக்கம் வாழையடி வாழையாய்த் தொடர்கிறது. குறை கூறக் கூடாது, நாம் திருந்தவில்லை, முன்னேறவில்லை என்று; முன்னோர்க்கு மதிப்பளித்து அவர்களின் வழியைப் பின்பற்றுகிறோம்.)

Friday, 1 March 2013

புதுச்சேரி மாநிலம்


 
என் மாநிலம் பற்றிய சில செய்திகளை இங்கே பதிகிறேன். 

மாநிலம் என்கிறோமே தவிர அதிகார பூர்வப் பெயர் யூனியன் பிரதேசம் (Union Territory )  இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்களுள் புதுச்சேரியும் ஒன்று. யூனியன் பிரதேசத் தலைவர் துணைநிலை ஆளுநர் எனப்படுகிறார்.  

யூ. பிரதேசங்களில் சட்டப் பேரவை, சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளனர்; ஆனால் சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. பேரவை கூடி விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பவேண்டும்:  

நாடாளுமன்றம் ஏற்றால் சட்டமாகும். என் மாநிலத்தில் 30 சட்ட மன்ற உறுப்பினர்கள், 5 அமைச்சர்கள் இருக்கின்றனர்; தில்லி மக்களவைக்கும் மாநிலங்கள் அவைக்குமாக 2 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றற்கொன்று தொலைவில் உள்ள நான்கு பகுதிகளாய்ச் சிதறிக் கிடக்கிறது. 

1. புதுச்சேரிப் பகுதி -- கடலூர்க்கு வடக்கில், திண்டிவனத்துக்குத் தெற்கில், விழுப்புரத்திற்கு மேற்கில், கடலை ஒட்டி அமைந்துள்ள இதன் மக்கள் தொகை: 9 ½  லட்சம். இப் பகுதி தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. அரியாங்குப்பத்துக்கு அருகில் அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகள் பொ. யு. மு. முதல் நூற்றாண்டில் ரோமானியருடன் வாணிகத் தொடர்பு இருந்ததை வெளிப்படுத்தின; அங்குக் கிடைத்தவை ரோமானிய மாமன்னன் அகஸ்டசின் உருவம் பொறித்த நாணயங்கள், மதுச் சாடிகள் முதலியவை.
 
வரலாறு எழுதாத தமிழினத்தில் தோன்றி, 1736 முதல் 1961 வரைக்குமான 25 ஆண்டுக்கு, தம் நாட்குறிப்பில் பலப்பல வரலாற்று நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்திய ஆனந்த ரங்கப் பிள்ளை ( 1709 - 1761 ) யைப் பெற்ற பெருமை இப் பகுதிக்கு உண்டு; நகரின் மையப் பகுதியில் அவரது இல்லம் இருக்கிற தெரு அவருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது. அவருடைய நாட்குறிப்பு 12 தொகுதிகளாய் அச்சிடப்பட்டிருக்கிறது; தமிழ், தெலுங்கு, மலையாளம், வடமொழி, பிரஞ்சு, போர்த்துகீசியம் எனப் பலமொழி அறிந்த அவர் பெருஞ் செல்வராயும் வாணிகராயும் விளங்கியதோடு பிரஞ்சுக்காரர்க்கு மொழிபெயர்ப்பாளர் பணியும் ஆற்றினார். 

கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய தம் முப்பெரும் பாடல்களை இயற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலையைப் பெற்றமை ஆங்கிலேயரின் கைக்கு எட்டாமல் இங்கே நிம்மதியாய்த் தங்கியிருந்த பத்தாண்டு காலத்தில் தான் ( 1908 - 1918 ) . இந்திய சுதந்தரப் போராட்ட வீரர் அரவிந்தர், வெள்ளையரின் அடக்குமுறைக்குத் தப்பி, வங்கத்திலிருந்து இங்கு அடைக்கலம் புகுந்து (1910 ) காலப் போக்கில் ஆன்மிகத்தில் ஆர்வமுற்று ஆஸ்ரமம் அமைத்து நிரந்தரமாய் வாழ்ந்து மறைந்தார். 

இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத, ஆறு மொழி கொண்ட அறிவிப்புப் பலகையை நகரின் சில இடங்களில் பார்க்கலாம்: தமிழ், தெலுங்கு (ஏனாம் மொழி), மலையாளம் (மாயே), இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு (இங்கு வாழும் பிரஞ்சுக் குடிகளின் மொழி) 

2 - காரைக்கால் பகுதி - புதுச்சேரி நகரத்திற்குத் தெற்கே, 150 கி. மீ. தொலைவில் இருக்கிற இதன் நான்கு எல்லைகள்: வடக்கில் தரங்கம்பாடி, தெற்கில் நாகூர், மேற்கில் பேரளம், கிழக்கில் கடல். 

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதவதி என்ற காரைக்காலம்மையார், முதல் பக்தி நூல்களான மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை ஆகியவற்றை இயற்றியவர். அவை சைவ சமயத் திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன. காரைக்கால் நகருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் எழுப்பப்பட்டிருக்கும் தெர்ப்பாரண்யேஸ்வரர் (தமிழில் நள்ளாறன்) கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவராலும் பாடப்பெற்ற பெருமை கொண்டது. 

இந்த ஆலயத்தின் சனீஸ்வரன் தொடர்பான சனிப்பெயர்ச்சி விழா 2 ½  ஆண்டுக்கு ஒரு தடவை நிகழும்போது தமிழகம் முழுதிலிருமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். காரை நகரின் வடக்கெல்லையாகிய கோவில்பத்து என்னும் சிற்றூரில் உள்ள பார்வதீஸ்வரன் கோயில் சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்புப் பெற்றது. 

3 - ஏனாம் பகுதி ( Yanam ) - 55 000 பேர் வாழும் இது ஆந்திரத்தில் காக்கினாடாவுக்குத் தெற்கே, புதுச்சேரிக்கு 900 கி. மீ. அப்பால் இருக்கிறது.

4 - மாயே பகுதி ( Mahe ) - கேரளத்தின் கோழிக்கோட்டுக்கு வடக்கில் 42 000 மக்களைக் கொண்ட இதற்கும் புதுச்சேரிக்கும் இடையே 500 கி. மீ. தொலைவு. 

இவையன்றி வங்கத்தில் கொல்கொத்தாவுக்கு 30 கி . மீ. தூரத்தில் உள்ள சந்தன் நகர் என்னும் பகுதியும் சேர்ந்து பிரஞ்சிந்தியா என்ற பெயரில் பிரெஞ்சுக்காரரிடம் அடிமைப்பட்டுக்கிடந்தன. தமிழில் சந்திர நாகூர் எனச் சுட்டப்பட்ட அப் பகுதி விடுதலைப் போராட்டத்தில் மிகத்தீவிரமாய் ஈடுபட்டமையால் ஆட்சியாளர் வாக்கெடுப்பு நடத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். பெருவாரி மக்கள் சுதந்தரத்துக்கு ஆதரவாய் வாக்களித்ததால் 1955 இல் இந்தியாவுடன் இணைந்தது. 

மற்ற 4 பகுதிகளும் 1962 இல் விடுதலை பெற்றன. 
 
(படம் உதவி; இணையம்)
============================================