Tuesday, 25 September 2018

நூல் விமர்சனம் (புதிய வேர்கள்)
  திருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது.

  இப்போதெல்லாம் நிறையப் பெண்கள் தம் அனுபவங்களை, சிந்தனைகளைக் கதை, கவிதைகளில் வெளியிடுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. “அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதெற்கு?” என்று எதுகை மோனையோடு ஆண் வர்க்கம் வினவி மகளிர்க்குக் கல்விக் கண் திறக்காமல் காலங்காலமாய்ப் பார்த்துக் கொண்டது. கீழ் மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பது மனுவின் கட்டளை; பெண் தாழ்ந்தவள், ஆதலால் கல்வி மறுக்கப்பட்டது. எத்தனையோ முற்போக்காளரின் முயற்சியால் பெண் கல்வி பரவிற்று; அதன் நல்ல விளைவுகளைப் பற்பல துறைகளிற் காணமுடிகிறது.

  அம்மாவின் ஆசை, அன்னையர் தினம் ஆகிய இரு கதைகளும் தாய்மார்களின் பாசம் நிறை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தன் வைராக்கியத்தை நிறைவேற்ற வேண்டும் ஆனால் அதற்காக மகனுக்குப் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தக்கூடாது என அறிவுபூர்வமாகச் சிந்திக்கிறாள் முதல் தாய்; வைராக்கியம் நிறைவேறாமலே போய்விட்டால் கூட வருந்தமாட்டாள். மகனின் நல்வாழ்வு தானே முக்கியம்? பிள்ளைகளுக்காக எத்தியாகமுஞ் செய்யத் தயங்காத பெரும்பாலான நற்றாய்களின் பிரதிநிதி அவள். அவளது குண சித்திரம் நன்கு தீட்டப்பட்டுள்ளது. இரண்டாந்தாய் உணவைக் கூடப் புறக்கணித்துவிட்டு மகனது அழைப்புக்காக ஏங்கித் தவியாய்த் தவிக்கிற நிலை நமக்குப் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது. “பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்”. புதல்வனைக் காட்டிலும் மகள் பாசமுடையவள் என்ற மறுக்கவியலா உண்மை போகிற போக்கில் குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளமை நயம்.

  இவற்றோடு தொடர்புடையது “தண்டனை”. இதிலும் அன்னை மனங்களின் விழுமிய பண்புகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. குற்றவாளியின் தாயினது நெஞ்சம் துருவி ஆராயப்பட்டுள்ளது. இக்கதை சிறந்த படைப்பு.

  “ஒரு சொட்டுக் கண்ணீர்” தமிழ் மனைவியர் பற்பலரின் இரங்கற்குரிய நிலைமை பற்றியது. வாழ்க்கைத் துணையைக் கொடுமைப்படுத்துவதற்குப் படித்தவர்கள்கூடத் தயங்குவது இல்லை. இக்கதையின் கருவுடன் தொடர்பு கொண்டது இறுதிப் படைப்பு. கூட்டு வாழ்க்கை சிதைந்துபோய்த் தனிக்குடும்பம் அவசியமாகிவிட்ட இன்று, இருவருஞ் சம்பாதித்தால்தான் சுக வாழ்க்கை சாத்தியம். மனைவி மட்டும் அக வேலை, புற வேலை என இரண்டு சுமையைத் தாங்குகிறாள். எவ்வளவு துன்பம் என்பதை ஆண் எண்ணிப் பார்ப்பதில்லை. யாவற்றிலும் வெள்ளையரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றுகிற நம் ஆடவர், அவர்கள் குடும்பப் பணிகளில் பங்கேற்பது போல, தாமும் செயல்பட்டுத் துணைவியின் பாரத்தை முடிந்த அளவு குறைக்கவேண்டும்.

  “புதைக்கப்படும் உண்மைகள்” கதையுஞ் சிறப்பானதே. திருப்பங்களுடன் கூடியதாயும் அதிகார வர்க்கத்தின் தகிடுதத்தங்களைத் தோலுரித்துக் காட்டுவதாயும் அமைந்த இது, “பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை” என்னும் முக்கால மெய்யை நம் மனத்தைத் தொடுமாறு உணர்த்துகிறது.

  “பெண் பார்க்கும் படலம்” நகைச்சுவை ததும்பும் படைப்பு. கன்னத்தில் அறைவது போல் பளார் பளார் என வினாத் தொடுக்கும் முற்போக்குக் கன்னியரை இதிற் சந்திக்கிறோம். “நான் மாப்பிள்ளை, நாங்கள் பையன் வீட்டார், உயர்ந்தவர்கள்” என்னுஞ் செருக்குடன் பெண் பார்க்கச் செல்லும் சில ஜன்மங்களின் தலைக்கனத்தை அவர்கள் குறைக்கிறார்கள்.

  யாவற்றிலும் மேம்பட்டது “புதிய வேர்கள்”. இதைத் தொகுப்பின் தலைப்பாக வைத்தமை மிகப் பொருத்தம். அவலம், நகை, வாஞ்சை என பல ரசங்களை வாரி வழங்கும் இது ஒரு கை தேர்ந்த படைப்பாளியை அடையாளங் காட்டுகின்றது. பிறந்த வீட்டைப் பிரியும்போது ஏற்படும் துயரும் வேதனையும் வாசகர் நெஞ்சத்தை உருக்குகிற விதமாய், யதார்த்தமாயும் துல்லியமாயும் புலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

  சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய எண்ணம் சாமர்த்தியமாய், பொருத்தமாய்ப் புகுத்தப்பட்டுள்ளது, நல்ல உத்தி. இதை வாசிக்கையில் சங்கப் பாடலொன்று நினைவுக்கு வந்தது.

  சிறுமியொருத்தி புன்னை விதையூன்றி நீர் வார்த்து வளர்த்தாள். அவள் பருவமெய்தினாள், அது மரமாயிற்று. அதன் நிழலில் வந்து நின்றான் தலைவன், தலைவியை எதிர்பார்த்து.

  அவனிடந் தோழி கூறினாள்;

  “ஐயா, இம்மரம் தலைவியின் வளர்ப்பு. அவளிடம் ஒரு நாள் தாயார் கூறினார், “நீ வளர்க்கிற புன்னை உனக்குத் தங்கை” என்று. அன்றிலிருந்து தலைவியும் உடன்பிறப்பாகவே கருதியுள்ளாள். தங்கையை அருகில் வைத்துக் கொண்டு உன்னோடு பேசி, சிரித்து, மகிழ அவளால் முடியுமா? வெட்கமாக இருக்காதா? ஆதலால் வேறு ஒரு மரத்தின் நிழலுக்குப் போ.”

  நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
  அம்ம நாணுதும் நும்மொடு நகையே.
  (நற்றிணை 172)

  நுவ்வை – தங்கை

  தாவரங்களுடனும் உறவு கொண்டு இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனிய தகவலை இப்பாட்டு தருகிறது; அதே மாதிரி உறவை இந்தக் கதைத் தலைவியும் வளர்த்திருக்கக் காண்கிறோம்.

  பெரும்பாலானவை குடும்பக் கதைகள். சிறு சிறு மர்மங்கள் வாசிப்புச் சுவையைக் கூட்டுகின்றன. தரமான நகைக்கும் பஞ்சமில்லை.

  ஒரு காட்டு:

  “பசி மயக்கத்தில் பார்வை மங்கியது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணெதிரே எமனின் எருமை வாகனம் நிற்பது போல் தோன்றவே, பயந்து கண்களைக் கெட்டியாக மூடிக்கொண்டார்.

  “என்னமோ தெரியலடா. கண்ணைத் தொறந்து என்னைப் பார்க்கிறதற்கே உங்கப்பா நடுங்குறாரு.” என்று முதல் மனைவி தன் பையனிடம் சொன்னபோதுதான் நிற்பது எமன் வாகனம் அல்ல என்ற விஷயம் அவருக்கு விளங்கியது.”

  சமுதாய மற்றும் பொருளியல் சிக்கல்கள் குறித்துச் சிந்திக்க வைக்குங் கருத்துகள் இல்லை; ஆனால் ஆற்றொழுக்கான நடையும் கருத்துத் தெளிவும் உயிரோட்டம் மிக்க உரையாடல்களும் போற்றற்குரியன. சந்திப் பிழை வாக்கியப் பிழை அறவே இல்லாமல் எழுதியிருப்பதற்கு ஆசிரியை பாராட்டப்பட வேண்டியவர். பெரிய எழுத்தாளர்களே சறுக்குகிற இடம் இது. மனவுணர்வுகளை நன்கு வெளிக்கொணரும் ஆற்றல் மிக்க இவர் மேன்மேலும் முன்னேறித் தலைசிறந்த படைப்புகளை ஈன வாழ்த்துகிறேன்.  

Friday, 14 September 2018

பெனீசியர் தமிழரா?
  
நாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Antiquite என்ற வரலாற்றுப் பிரஞ்சு நூல் தெரிவிக்கிறது. (பக். 71 – 76). முக்கியமானவற்றை மொழிபெயர்த்துப் பதிகிறேன்.

  நடுநிலக் கடலின் கீழ்க் கரையில், இன்றைய லெபனான் நாட்டின் மேற்குப் பகுதியில், 3000 ஆண்டுகளுக்கு முன்பு செமித்திய இனத்தாருள் ஒரு பிரிவினர் வாழ்ந்தனர். அவர்களது நாட்டின் தலைநகர் சீதோன் (Sidon); ஆதலால் சீதோனியர் என விவிலியம் அவர்களைச் சுட்டுகிறது; கிரேக்கரோ பெனீசியர் என்றனர்; சிவப்பர் என்று அதற்குப் பொருள். இந்தச் சொல்லிலிருந்து அவர்களின் நாட்டுக்குப் பெனீசியா (Phoenicia) என்று பெயர் வந்தது.

  தங்களது மலைப் பிரதேசத்தில் உழவுத் தொழில் செய்ய முடியாத அவர்கள் கடல் வாணிகத்தை மேற்கொண்டார்கள். மேல் தளத்துடன் கூடிய பெருங்கப்பல்களைக் கட்டி அவற்றின் மூலம் ஏற்றுமதி இறக்குமதி செய்தனர்.

  மெல்லிய கண்ணாடிப் பொருள்களையும் செஞ்சாயந் தோய்த்த துணிகளையும் தயாரித்து அக்கம்பக்க நாடுகளில் விற்றனர்; அங்கிருந்து கோதுமை, பொன், குதிரை முதலியவற்றைக் கொண்டு வந்தனர்.

  கண்ணாடியை உருக்கிக் குழாய் வழிக் காற்றைச் செலுத்திப் பொருள் உருவாக்கும் தொழில் நுட்பத்தை அவர்களிடமிருந்துதான் உலகம் கற்றுக்கொண்டது.

  தாம் போகிற நாடுகளில் சிறு சிறு பகுதிகளை ஆட்சியாளரிடங் கோரிப் பெற்று அங்கே காலனிகள் அமைத்து வாணிக நிலையங்களை நிறுவினர். காலப்போக்கில் கடல் வாணிகம் அவர்களது ஏக போகமாயிற்று.

  மானிடக் கண்டுபிடிப்புகளுள் தலை சிறந்த ஒன்று அவர்களுடையது; அதுவே நெடுங்கணக்கு . பொ.யு.மு. 1200-க்கு முன்பே அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். அக்காலச் சுமேரியரும் எகிப்தியரும் சிக்கலான எழுத்துமுறையைக் கையாண்டனர். பெனீசியரோ 22 தனித்தனி எழுத்துகளை உருவாக்கி, வலமிருந்து இடம் எழுதினர். முதலெழுத்துக்கு அலீஃப் எனவும் இரண்டாவதுக்கு பெத் எனவும் பெயர் சூட்டினர். யூத அரபு மொழிகளின் முதலெழுத்து அலீஃப் தான்; இவையும் வலமிருந்து இடமாய் எழுதப்படுகின்றன. இவற்றின் நெடுங்கணக்குக்கு மூலம் பெனீசியருடையது.

  பெனீசியரது எழுத்துகளைக் கிரேக்கர் காப்பியடித்துச் சிற்சில மாற்றங்களைத் தம் மொழி மரபுக்கேற்பச் செய்துகொண்டு இடமிருந்து வலமாய் எழுதினர். முதலெழுத்துக்கு அல்ஃபா என்றும் இரண்டாம் எழுத்துக்கு பீடா என்றும் பெயர் வைத்தனர். அல்ஃபா பீடாவிலிருந்து alphabet என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது.

  ரோமானியர் கொஞ்சங் கொஞ்சம் மாற்றி a b c d முதலான எழுத்துகளைப் பயன்படுத்தினர். இவை ரோமன் எழுத்து எனப்படுகின்றன. இதுதான் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் அனைத்து மொழிகளையும் எழுத உதவுகிறது.

  எளிய எழுத்து முறையை உலகத்துக்குத் தந்த பெனீசியரின் பெருமையே பெருமை!

  வரலாறு இப்படியிருக்கத் திரு. மலையமான் 16.7.18 தினமணியில் “தாய்லாந்தில் தமிழ் முழக்கம்” என்ற தலைப்புக் கொண்ட கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:

  “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வணிகர் நிலநடுக்கடல் பகுதிக்குச் சென்றார்கள். அவர்களை பினீஷியர் என்று வரலாறு குறிப்பிட்டது. (வணிகர் என்ற சொல்லின் திரிபே பினீஷியர் என்பது).”

  இரண்டு கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார்:

1. தமிழர்கள்தான் பினீஷியர்.
2. வணிகர் என்ற சொல் பினீஷியர் எனத் திரிந்தது.

  முதற்கருத்தை “வரலாறு குறிப்பிட்டது” என்றாரே! எந்த வரலாற்று நூல் அப்படிச் சொல்கிறது? எந்தப் பக்கத்தில்? ஆசிரியர் யார்? என்கிற விவரங்களைத் தர வேண்டாமோ? வரலாறு விளம்புகிறது, புவியியல் புகல்கிறது எனப் பொத்தாம் பொதுவாய்க் குறிப்பிட்டுவிட்டு யார் வேண்டுமானாலும் எந்த அபத்தங்களையும் எழுதலாமோ?

  இரண்டாங் கருத்துக்கு என்ன சான்று? எந்த மொழியில் அறிஞர் கூறினார்? எந்நூலில்? இவற்றையும் அவர் தெரிவிக்கவில்லை.

  தவறான தகவல்கள் எத்தனை யெத்தனை மாணவர்களின் மூளையிற் பதிந்து தேர்வுகளில், நேர்காணல்களில், அவர்களைப் பிறர் நகைப்புக்கு ஆளாக்கும்?

  எழுத்தாளர் சிந்திக்கட்டும்!
&&&&

(படம் உதவி - இணையம்)

Thursday, 6 September 2018

திசை எட்டும் இதழில் என் நேர்காணல்சமீபத்தில் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள் என்னுடன் நடத்திய நேர்காணல் ‘திசை எட்டும்’ 56-வது இதழில் வெளியானது.   

மொழியாக்கமெனும் படைப்புக்கலை
பஞ்சாங்கம்

ஆசிரியர் சொ.ஞானசம்பந்தம் 1926-ல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். பிரெஞ்சுக் காலனி ஆட்சியின் கீழ் மேல்நிலைக் கல்வி வரை எல்லாப் பாடங்களையும் பிரெஞ்சு மொழி மூலம் கற்றவர். துணை மொழிகளாக ஆங்கிலமும், லத்தீனும் கூட கற்றுக்கொண்டார். பிரெஞ்சுக் காலனி என்பதனால் வியட்நாமில் ஓராண்டும் பாரீஸ் பெரு நகரத்தில் மூன்று ஆண்டும் பணி ஆற்றிய பிறகு காரைக்காலில் அரசுப்பள்ளி ஆசிரியராக அமர்த்தப்பட்டார். ஒன்றிரண்டு ஆண்டில் 1954 புதுச்சேரி மாநிலம், இந்தியப் பெருந்தேசத்துடன் இணைக்கப்பட்ட சூழலில் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு கல்வித்திட்டத்தின் கீழ் வந்தன. எனவே தமிழில் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தயங்காமல் தமிழையும் முறைப்படிக் கற்றுப் புலவர் பட்டம் பெற்றுத் தமிழாசிரியராகித் தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இன்றும் 92 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தவறாமல் குறிப்பிட வேண்டிய ஒன்று, இந்த வயதிலும் முழுமையான பகுத்தறிவுவாதியாகத் தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்தையே (மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்) பகுத்தறிவுப் பாதையில் செலுத்திச் செல்லக்கூடிய அளவிற்கு உறுதியான ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய மகள் கலையரசியின் புதிய வேர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் அவர் பேச்சைக் கேட்கும் அரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னவுடன் கூட்டத்தில் எல்லாரும் எழுந்து நிற்க ஆயத்தமாகும்போது, ‘யாரும் தியானத்தில் இல்லையேஎன்று சமயம் பார்த்து அடித்த அடி அவரை உடனே எனக்கு யாரென்று காட்டியது. மேடையில் பேசும்போதும், ‘தமிழன் தமிழன் என்று இப்பொழுது சொல்கிறீர்களே, நாங்கள் சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்தில் ஏது தமிழன்? சூத்திரன், சூத்திரச்சி என்றுதான் வழக்கிருந்தது; என் காதுபடக் கேட்டிருக்கிறேன். எல்லா இழிவுகளையும் மாற்றியது தந்தை பெரியார்தான்என்று அன்றைக்கு அவர் பேசியது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  68 வயதில் இந்திமொழியைக் கற்று அதிலும் பட்டம் வாங்கி வைத்திருக்கிறார். மொழிகளைப் படிப்பதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஆர்வமுடன் தொடர்ந்து இயங்கியுள்ளார். இவ்வாறு வெளியே பெரிதும் தெரியாமல் பன்மொழி அறிஞர்களாக விளங்கித் தமிழிலக்கியத்திற்கு அறிவுக் கொடை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரைதிசை எட்டும்வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். அவர் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்துக்கள் பலவும் மஞ்சரி இதழில் வெளிவந்துள்ளன. இதற்குமேல் பிரெஞ்சு இலக்கிய வரலாறு, இலத்தீன் இலக்கிய வரலாறு, மறைந்த நாகரிகங்கள் என்று மிக அரிதான நூல்களையும் தமிழுக்குத் தந்துள்ளார்.  

இனி வாசகர்கள் பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் உரையாடலை வாசிக்கலாம்.

மொழிபெயர்க்கிற இந்த அரும்பணியில் ஈடுபட உங்களுக்கு எது தூண்டுகோலாக அமைந்தது?

  அப்படிச் சிறப்பாகப் பெரிய தூண்டுதல் என்று சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை. என்னுடைய இலக்கிய ஆர்வத்தால் அதில் நானே விரும்பி ஈடுபட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்பொழுதிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கினீர்கள்?
 
  ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றும்போதே மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டேன்.

பிரஞ்சு மொழியிலிருந்து மாப்பசான் கதைகளைப் பெரிதும் மொழிபெயர்த்துள்ளீர்கள். அதற்கென்ன காரணம்?

  எனக்கு பழைய பிரஞ்சு மொழிதான் பழக்கம். இன்றைக்குள்ள பிரஞ்சு மொழியில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது; இது முதற்காரணம். மற்றொன்று மாப்பசான் உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர். சிறுகதை வடிவத்தில் அவர் செய்து காட்டியுள்ள சாதனை, படைப்பாளிகள் வாசகர்கள் விமர்சகர்கள் என யாரையும் பிரமிக்க வைப்பவை. நானும் பிரமிப்போடு அவர் எழுத்துக்களை வாசித்துள்ளேன். அதனால் தமிழுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டேன்.

மொழிபெயர்க்கும்போது கதைகளைத் தேர்ந்தெடுக்க எந்த வகையான முறையைக் கையாளுவீர்கள்?

  முதலில் அந்தக் கதை நம்முடைய பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று பார்ப்பேன். இதில் எச்சரிக்கையாக இருப்பேன். ஏனென்றால் மாப்பசான் கதைகளில் ஆபாசமெனக் கருதப்படுகிற பகுதிகளும் வரும். இதுவரை சொல்லப்படாததாகப் புதிதாகத் தோன்றுகிறதா என்றும் பார்த்து தேர்வு செய்வேன்.

பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க முயலும்போது நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?

  அப்படிச் சிக்கலாக எனக்கு எதுவும் படவில்லை. இரண்டு மொழியிலும் முறையாகக் கற்றுத் திறமை இருந்ததால் பெரிதாகச் சிக்கல் இல்லை. சில நேரங்களில் அகராதிகளின் துணையோடு சரியான சொற்களையும் மரபுத் தொடர்களையும் கண்டடைந்து திருப்தி தரும்படி மொழிபெயர்த்துவிடுவேன்.

மொழிபெயர்க்கும்போது நீங்கள் கையாளும் உத்தி என்ன? அதாவது ஒரு பத்தியைப் படித்து உள்வாங்கிக்கொண்டு, பிறகு அதை உங்கள் நடையில் உங்கள் மொழியில் எழுதிவிடுவீர்களா? அல்லது வரிக்கு வரி வாசித்து அதை அப்படியே மொழிபெயர்ப்பீர்களா?

  முதலில் நான் என்ன செய்வேன் என்றால், முழுவதுமாகக் கதையைப் புரிந்து வாசித்து முடித்துவிடுவேன். இந்தக் கதையை மொழிபெயர்க்கலாமென்று தேர்ந்தெடுத்தவுடன் வாக்கியத்துக்கு வாக்கியம், இன்னும் சொல்லப் போனால் சொல்லுக்குச் சொல், ஒரு சொல் கூட விடாமல் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டே வருவேன்; இப்படி மொழிபெயர்த்தவுடன் என் மொழிபெயர்ப்பை முதலில் இருந்து கடைசி வரைக்கும் வாசிப்பேன்; வாசிக்கும்போதே நல்லஓட்டமா இருக்காஎன்று கவனித்து, அதற்குத் தகுந்தவாறும், தமிழ் மொழி மரபிற்கு ஏற்றவாறும் இருக்கிறதா என்று கவனித்து அதற்கேற்றவாறு திருத்தம் செய்வேன்.

இதற்கொரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்?

  இப்போது, ‘அழுத்தமாகச் சொன்னார்என்று எழுதியிருந்தால், அதைஅடித்துச் சொன்னார்என்று எழுதும்போது தமிழ் ஓட்டம் வந்து வாய்க்கிறது இல்லையா? இப்படித்தான் ஒழுங்குபடுத்துவேன்.

எழுதிய நூல்கள்:

1. மாப்பசான் சிறுகதைகள் 
2. பிரெஞ்சு இலக்கிய வரலாறு
3. இலத்தீன் இலக்கிய வரலாறு
4.  சிங்க வேட்டை - A.Daudet இயற்றிய குறும் புதினம்
5. மறைந்த நாகரிகங்கள்
6. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?
7.   Arthur Rimband-ன் தேர்ந்தெடுத்த கவிதைகள்