Wednesday, 30 January 2019

சதுரங்கம்

  வடமொழியில் சதுரங்கம் எனப்படும் chess ஆட்டத்துக்குத் தமிழிற் பெயரில்லை. இது தோன்றிய நாடு இந்தியாவா சீனாவா பாரசீகமா என உறுதியாய்த் தெரியவில்லை. எதுவாக இருப்பினும் ஆசியாதான் என்று நாம் பெருமை உறலாம். இது 6-ஆம் நூற்றாண்டிலிருந்து விளையாடப் படுகிறதாம்.

  போர்டு பார்த்திருப்பீர்கள். மொத்தம் 64 கட்டங்கள்: கருப்பு வெள்ளை என இரு நிறங்கொண்ட அவை அடுத்தடுத்துக் காணப்படும். ஒவ்வொரு கட்டத்துக்கும் பெயருண்டு: a8, c6, h3 என்று ஓர் எழுத்தும் ஓரெண்ணுஞ் சேர்ந்து அந்தப் பெயர் அமைந்துள்ளது.
  காய்கள் 32: வெண்ணிறத்தில் 16, கருப்பில் 16. ராஜா (1), ராணி (1), பிஷப் (2), ரூக் (2), பான் (8) ஆகியவை காய்களின் பெயர்களும் எண்ணிக்கையும். எந்தக் காய் அதிக ஆற்றல் கொண்டதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? ராஜா என்று தானே? அதுதான் இல்லை. அதற்குக் குறைவான, ஆகக் குறைவான சக்தியே உண்டு. ஒரு கட்டம் மட்டுமே அது நகரும். எத்தனைக் கட்டங்களுக்கும் போகவல்ல ராணிதான் எல்லாக் காய்களுக்கும் மேலான ஆற்றல் உடையது.

  காய்களின் ஆங்கிலப் பெயரின் முதலெழுத்தால் அவற்றைச் சுட்டுகிறார்கள். K, Q, B, N, R, P. குதிரையின் பெயர் Knight; இதன் தலைப்பெழுத்தாகிய K ராஜாவைக் குறிப்பதால், இரண்டாம் எழுத்தாகிய N பயன்படுகிறது.

  ஓராட்டத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்குமான எல்லா நகர்வுகளையும் எழுத்திற் பதிக்க முடியும். Qf4 என்றால் ராணி f4 கட்டத்துக்கு நகர்ந்தது என்று பொருள்; குதிரை d7 கட்டத்துக்குப் போயிற்று என்பதை Nd7 தெரிவிக்கிறது.

  காய்கள் வெவ்வேறு விதமாக இயங்கும். எந்தக் காயும், அது ராணியே ஆனாலும், தன் பாதையைத் தடுக்குங் காயைத் தாண்டிச் செல்லக் கூடாது; அது எதிரியின் காயாக இருப்பின், அதை அடிக்க விரும்பினால் அடித்துவிடலாம். (தாய ஆட்டத்தில் வெட்டுவது என்போம்). குதிரைக்கு மட்டும் தடையில்லை, தாண்டிக் குதித்துவிடும்.

  எதிரி ராஜா எங்கும் நகர இயலாதவாறு முடக்கி check and mate சொல்ல முடிந்தால், வெற்றி; முடக்கிவிட்டோம் check and mate சொல்ல வாய்ப்பில்லை என்ற நிலைமை ஏற்பட்டால், பட்ட பாடெல்லாம் வீணாகிவிடும். ஆட்டம் draw. இதை stale mate என்பர். ஐந்து வித draw-களுள் இது ஒன்று.

  ராஜாவுக்கு மட்டும் செக் சொல்லப்படும். அதை வெட்டக்கூடிய கட்டத்துக்கு நம் காயொன்று நகர்ந்து, “ராஜா அடிபடும்என்று எச்சரிப்பதே check என்று சொல்வது. அது தப்பிக்க மூன்று வழிகள் இருக்கின்றன:

Check சொன்ன காயை ராஜாவோ வேறு காயோ வெட்டுவது;
-    ராஜா வேறு கட்டத்துக்கு நகர்வது;
-    ஒரு காயை ராஜாவின் முன்னால் வைத்து அதை மறைப்பது.

  இவற்றுள் ஏதாவதொரு வழியிருக்குமே யானால் check மட்டும்தான் சொல்வார்கள்; ராஜா அடிபடாது, ஆட்டந் தொடரும். எந்த வழியும் இல்லாமற் போகும்போதுதான் check and mate என்று சொல்லி ஆட்டத்தை முடிப்பார்கள்.

  ஆட்டத்தில் மூன்று கட்டம் உண்டு;

1.   தொடக்கம் – opening;
2.   நடுவாட்டம் – middle game;
3.   இறுதியாட்டம் – end game.

  தொடக்கத்தை opening என்பர். தமிழில் திறப்பு. பலவிதத் திறப்புகள் உண்டு. அவற்றுட் சில: British opening, Ruy Lopez, Queen’s gambit, King’s Indian opening.

  கருப்புக் காய்காரர் கைக்கொள்ளக் கூடிய தற்காப்புகளும் பல. காட்டுகள்: Slav Defence, French Defence, Grunfeld Defence.

  ஒவ்வொரு காய்க்கும் எதிரே ஒரு பான் என்ற முறையில் இரு தரப்புப் படைகளும் அணிவகுத்து நிற்கின்றன. வெள்ளைக் காய்காரர் தொடங்கவேண்டும், அவர்தான் தாக்குபவர், தற்காத்துக் கொள்பவர் மற்றவர். ராஜாவின் முன்னால் நிற்கும் பானையோ, ராணி முன்னுள்ள பானையோ இரு கட்டம் முன்னோக்கி நகர்த்தித் தொடங்குவது வழக்கம். முதல் 10 நகர்த்தல்களுக்குப் பின்வருவது நடு ஆட்டம். அது எத்தனை நகர்த்தல்கள் எனக் கூறல் இயலாது.

  குதிரைகளும் பிஷப்புகளும்தான் முதலில் போரிடும். அதிற் சில காய்கள் மடியும். அடுத்து ராணி களமிறங்கும்.

  இறுதியாட்டத்தில் ரூக்குகள் இயங்கும். பான்கள் ஆட்டத்தின் மூன்று கட்டங்களிலும் செயல்படும். இவை முன்வைத்த காலைப் பின் வைக்கா; மற்ற காய்கள் முன்னேறலாம், புறமுதுகிடலாம்.
  சதுரங்கத்தில் பயன்படும் கலைச் சொற்கள் சிலவுள: முக்கியமானவை castling, en passant, exchange, fianchetto, file, fork, pin, promotion, trap.

  உலகப் போட்டி 1886-இல் தொடங்கிற்றாம்; அதில் வென்று உலக முதல் champion ஆனவர் ஜெர்மனியின் Wilhelm Steinitz. பெரும்புகழ் பெற்ற சில மேதைகள்: Philidor, Morphy, Anderssen, Capablanca, Alekhine, Botwinnik.

  25 ஆண்டுக் காலம் ரஷ்யர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அவர்களிலிருந்தே தொடர்ச்சியாய் champions தோன்றினர்: Botwinnik – Smyslove – Tal – Petrosian – Spasski.

  இவரை 1972-இல் முறியடித்தார் அமெரிக்காவின் Bobby Fischer. மீண்டும் ரஷ்யர்கள் Karpov – Gasparov.

  நம் விஸ்வநாதன் ஆனந்த் 5 ஆண்டு சேம்ப்பியன். 2014 முதல் நார்வேயின் Magnus Carlsen.

  உலகப் போட்டியை நடத்துகிற அமைப்பு FIDE எனச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. விரிவு: Federation Internationale Des Echecs. இது பிரெஞ்சு. பொருள்: சர்வ தேச சதுரங்கக் கூட்டமைப்பு.

  தற்கால இந்தியச் சேம்ப்பியன் ஒரு தமிழர்: பெயர் அரவிந்த் சிதம்பரம். –ONGC-யில் பணிபுரியும் இவர் ஜம்முவில் நிகழ்ந்த போட்டியில் வென்று பட்டம் பெற்றார் (18.12.2018). யாரிடமுந் தோற்கவில்லை யென்பது குறிப்பிடற்குரிய செய்தி; 7 பேரை முறியடித்தும் 6 பேருடன் draw செய்தும் சாதனை படைத்துள்ளார்.

  இருவர் மட்டுமே ஆடக்கூடிய சதுரங்கத்தில் அதிர்ஷ்டத்துக்கு இடமில்லை. முழுக்க முழுக்க அறிவுக்கு வேலை. மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட்டுத் தன் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள இந்த ஆட்டம் உதவும்.

  சதுரங்கம் ஆடக் கற்பிக்கும் நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. நம்முடன் ஆட யாரும் இல்லையெனில் கணினியை எதிர்த்து ஆடலாம்.

  1985-இல் நடைபெற்ற உலகப் போட்டியில் Karpov - Gasparov ஆடிய 48 ஆட்டங்களும் அடங்கிய நூல் வெளிவந்துள்ளது.

  Gasparov பல்வேறு போட்டிகளில் வெவ்வேறு ஆட்டக்காரர்களை யெதிர்த்து ஆடிய 73 ஆட்டங்கள் கொண்ட நூல் கிடைக்கிறது.

  My 60 memorable games என்ற தலைப்பில் Fischer ஒரு நூல் இயற்றியுள்ளார்.

  விளக்கப் படங்களுடனும் விமர்சனங்களுடனும் வெளிவரும் இந்த மாதிரி நூல்களை வாங்கி அந்த ஆட்டங்களை ஆடிப் பார்த்துப் பற்பல நுட்பங்களை அறிந்து நம் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

  Chess problems அடங்கிய நூல்களும் உண்டு. மூன்று நகர்த்தல்கள் (வெள்ளை 2, கருப்பு 1) மட்டுமே செய்யவேண்டியுள்ள இறுதிக் கட்டம் தரப்பட்டிருக்கும். Mate in two என்பது பெயர். வெள்ளை ஒரு காய் நகர்த்தும், கருப்பு ஒரு காய்; இப்போது வெள்ளை check and mate செய்யவேண்டும். அது அவ்வளவு எளிதாக இருக்காது. நிறையச் சிந்திக்க வேண்டியிருக்கும். விடை கண்டுபிடிப்பது மூளைக்குச் சிறந்த பயிற்சி.

  சதுரங்கம்: பொழுதுபோக்குக்குப் பொழுதுபோக்கு! மூளைக்குப் பயிற்சி!

(படங்கள் உதவி - இணையம்)

4 comments:

 1. ஒரு சந்தேகம் பான் எனப்படும் காலாட்படை காய் எந்தபாதிப்பும் இல்லாமல் எதிரியின்முதல்கட்டத்துக்கு தாவினால் அதற்குபலம் கூட்டிக் கொள்ளலாமென்கிறார்களே அது சரியா

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஆமாம் , அந்தக் காய் ராணி ஆகிவிடும் .இதை promotion என்பார்கள் . ஒரே சமயத்தில் இரு ராணிகள் இருக்கக்கூடும் . ஆனால் முதல் கட்டத்துக்குப் போவது மிக மிகக் கஷ்டம் .

   Delete
 2. விளக்கம் வியக்க வைத்தது ஐயா...

  ReplyDelete
 3. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . என் கட்டுரையின் இறுதிப் பகுதியில் , " இப்போது வெள்ளை mate செய்யவேண்டும் " என்றிருக்கவேண்டியது ; mate என்ற சொல் விடுபட்டுவிட்டது .

  ReplyDelete