Friday, 28 June 2013

கலித்தொகைக் காட்சி 2


தலைவனுடன் தலைவி ஓடிவிட்டாள். (இதை இலக்கியம் உடன்போக்கு என்று சுட்டும்). மகளைத் தேடி அலைந்த தாய், வழியிற் சந்தித்த அந்தணரிடம், "என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் சேர்ந்துபோகக் கண்டீரா? " என வினவினாள். அவர் விடை இறுத்தார்:

"கண்டேன்; அவளைக் குறித்து வருந்தாதீர்.

மலையில் விளைந்த சந்தனத்தால், அந்த மலைக்கு என்ன பயன்?
பூசுபவர்க்கு அல்லவோ இன்பம்?

நீரில் தோன்றிய முத்தால், நீர்க்கு என்ன நன்மை
அணிபவர்க்குத்தான் அது பயன்படும்;

யாழில் பிறந்த இசை, யாழ்க்கு என்ன இனிமை பயக்கும்
மீட்டுபவரைத்தானே மகிழ்விக்கும்?

அதுபோல் நீர் பெற்ற மகள், தான் தேடிக்கொண்ட துணைவனுக்கே உரியவள்"

கருத்தை விளக்க எவ்வளவு எளிய, தேர்ந்த காட்டுகள்!ஆர்வம் உள்ளோர் வாசித்துச் சுவைக்க:

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே.
( பா 9 )

=============================

Saturday, 22 June 2013

கலித்தொகைக் காட்சி - 1


மூன்று காட்சிகளைக் கலித்தொகையிலிருந்து எடுத்துக் காட்டுவேன் ; பழைய இலக்கியத்தைப் படிக்க விரும்பியும் இயலாதவர்களுக்குப் பயன்படலாம்:

பழைய அக நூல்களுள் பாலைநிலம் வர்ணிக்கப்படுகிறது. பாலை என்றதும் சகாராவை நினைத்துக்கொள்ளாதீர்கள். தமிழகப் பாலை, மழை இன்றி வறண்டு கிடக்கும் பகுதி; மழைவளம் பெற்றால் புத்துயிர் எய்தும்.
கலித்தொகை 10 ஆம் பாட்டின் வர்ணனையில் பொருத்தமான உவமைகள் அடுக்கி வருவது ஓரழகு:

மரங்கள் நிற்கின்றன: வறுமை வாய்ப்பட்ட இளைஞனின் தோற்றம் போல் வாடிய கிளைகள்;

கருமியின் செல்வம் போலச் சேர்ந்தார்க்கு நிழல் தரவில்லை; பிறர்க்குத் தீமை இழைத்துப் பழி கொண்டான் இறுதிக் காலத்தில் அவனும் குடும்பமும் கெடுவது போன்று வேரும் கிளைகளும்  வெம்பின. கொடுங்கோல் அரசனின் குடை நிழலில் பரிதாப வாழ்க்கை நடத்தும் குடிகளைப் போல உலர்ந்துபோன மரங்களை உடைய பாலை:

பாட்டை வாசித்து ஒலியின்பம் நுகரலாம்:

வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல்
வேரொடு மரம்வெம்ப ...

இதை உந்துதலாய்க் கொண்டு ஆண்டாள் பாடினார்:

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் ...

என்று அவர் மேகத்திடம் வேண்டினார் . (திருப்பாவை - 4 )


Friday, 7 June 2013

பல்லி சொல்


 

பஞ்சாங்கத்தில், பல்லிசொல்லுக்குப் பலன் போட்டிருக்கிறது; அதை நம்புவோர் பற்பலர். மாந்தர் உரையாடிக் கொண்டிருக்கையில், கூரைப் பல்லி கத்துவதைக் கேட்டு, "பல்லி சொல்லிட்டுது!" என்று பரவசம் அடைவார்க்குப் பஞ்சமில்லை. இவர்களது கருத்துக்கு ஆதரவாய், பல்லி நல்ல சேதி தெரிவித்துவிட்டதாம். இந்த நம்பிக்கை பழங்காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது இலக்கியங்களால் தெரிகிறது. 

கலித்தொகை - 11 

மனைவயின் பல்லியும் பாங்குஒத்து இசைத்தன.
(தலைவர் வருவார் என்னும் நற்செய்தியைப் பல்லிகளும் கூறின.) 

நற்றிணை - 246 

நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்.
(தலைவரின் வருகையைத் தெரிவித்துப் பல்லி நம்மைத் தேற்றுகிறது) 

சத்திமுற்றப் புலவர் 

இந்தப் பிற்காலப் புலவர் 

நனைசுவர்க் கூரைப் பனைகுரல் பல்லி
பாடுபார்த்து இருக்கும் என்மனைவி 

என்றார்; " நான் திரும்பி வருவதைப் பல்லி முன்கூட்டி அறிவிக்கும் என்பதை எதிர்பார்த்து இருக்கும் என் மனைவி" என்று பொருள். 

கைப்பேசி இல்லாத காலத்தில், பல்லிதான், குடுகுடுப்பைக்காரர் போல, நல்ல செய்தி சொல்லி மக்களை மகிழ்வித்திருக்கிறது. 

இப்படிப்பட்ட உபகாரிக்குச் சில சமயம் தன் எதிர்காலம் தெரியாமல் போய்விடுவது பரிதாபம் அல்லவா? அதைத்தான் பின்வரும் பழமொழி வெளிப்படுத்துகிறது: 

ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில் விழுமாம் துள்ளி.

--------------------------------------------