Monday 28 October 2013

மருச் சொற்கள்


தமிழில் சில சொற்கள் காலப் போக்கில் தம் உருவத்தில் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றை மருச் சொற்கள் என்கிறோம். கீழ்க் காணும் பட்டியல் அவற்றுள் சிலவற்றை எடுத்துக்காட்டும்:

நேயம் - நேசம்.     
தொகுப்பு - தோப்பு.  
பண்டி - வண்டி.
வாயில் - வாசல்.    
இரும்பொன் - இரும்பு. 
அரிக்கும் சட்டி - அரிக்கன்சட்டி.

பெருமகன் என்னும் ஆண்பாற் சொல் பெருமான் எனவும் பெருமகள் என்ற பெண்பாற் சொல் பெருமாள் எனவும் சுருங்கின;   இந்த வார்த்தை பிற்காலத்தில் ஆணாகிய திருமாலைச் சுட்டவேபெண்பாலுக்கு வேறு சொல் படைத்தனர்: அது பெருமாட்டி.

காலப் போக்கில்பெருமான்பிரான் ஆயிற்றுபெருமாட்டிபிராட்டி ஆகியது.

பெருமகன் - பெருமான் - பிரான்.   
பெருமகள் - பெருமாட்டி - பிராட்டி.

                    ++++++++++++++++++++++



Tuesday 22 October 2013

திருக்குறளின் காலம்



ங்க காலம் எனப்படுவது பொ.யு.மு. 2-ஆம் நூற்றாண்டு முதல் பொ.யு. 2-ஆம் நூற்றாண்டுவரை உள்ள 400 ஆண்டுகள் என உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்போது இயற்றப்பட்ட  நூல்கள் என்று பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவற்றுள் சில பிற்காலத்தவை என்பதை ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளனர். (பத்துப் பாட்டில் திருமுருகாற்றுப்படைஎட்டுத் தொகையுள் கலித்தொகைபரிபாடல்ஐங்குறு  நூறு). இருந்தாலும் அவை யாவும் சங்க நூல்கள் என்னும் பழக்கம் நீடிக்கிறது.

அவற்றுள் திருக்குறள் இல்லை;   இதுவும் நாலடியார் முதலான வேறு நூல்களும் (மொத்தம் 18)  பதினெண் கீழ்க் கணக்கு எனப் பெயர் சூட்டப்பட்டுசங்கம் மருவிய நூல்கள் எனப்படுகின்றன;   அதாவது சங்க காலத்தை  அடுத்துத் தோன்றியவை.

திருக்குறள் குறித்து விநாசிலிங்கம் செல்வநாயகம் (1907 - 1973),   என்ற இலங்கைத் தமிழர்,  தம் "தமிழ் இலக்கிய வரலாறு" நூலில் என்ன எழுதியுள்ளார் என்பதை வாசிப்போம்:

"மீன்இறைச்சிகள் முதலியவற்றை மக்கள் விரும்பி உண்ட காலம் சங்க காலம்;    அவற்றைக் கடியும் திருக்குறள் சங்க காலத்துக்குப் பிற்பட்டது.
சங்கச் செய்யுள்களில்,   உயர்திணையில் வராத "கள்"  விகுதியும் "எல்லாம்"  என்னும் சொல்லும் குறளில் உள. அவற்றில் வாரா ஆநின்றுமாட்டு (உருபு)கால் (விகுதி)விடு (துணைவினை), கில் (இடைச்சொல்)வட சொற்கள் இதில் உண்டு.”

(என் குறிப்பு: சங்கப் பாக்களில் யானைகள்மரங்கள் எனவும் காடுகள் எல்லாம்எல்லா ஊர்களும் எனவும் அஃறிணையில் மட்டுமே அந்த இரு சொற்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. திருக்குறளிலோ மற்றையவர்கள் (பா 283) ,   இரப்பாரை எல்லாம் (1067)   என உயர்திணையிலும் அவை வருகின்றன.

சில காட்டுகள்: மாட்டு (1110),   குன்றிக்கால் (140),    சாகிற்பின் (780 ) - சா-கில்-பின்.

சில வடசொற்கள்:  பாவி (168), தவம் (262),  நாமம் (360),  நாகம் (763).


**************************************************


                                                

Wednesday 16 October 2013

திருவள்ளுவராண்டு


உலகத்தில் மிகப் பெரும்பாலாரால் பின்பற்றப்படுவது கிரிகோரியன் நாள்காட்டிப்படி அமைந்த ஆண்டு. இப்போது நடப்பது 2013.   கிறித்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அது.

தமிழர்க்கெனத் தனியான ஆண்டு இல்லாமையால்,  ஆரியர்களின் ஆண்டுகளான,   பிரபவ முதல் அட்சய வரை  உள்ள அறுபது ஆண்டுகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. சோதிடக் குறிப்பு,  திருமண அழைப்பு,  நாளேடுகள்,  ஆங்கில நாள்காட்டியிலும்கூட அவை இடம் பெறுகின்றன. இப்போதைய ஆண்டின் பெயர் விஜய.

தமிழர்களுக்குத் தனியாண்டு தேவை என்று கருதியவர்கள் திருவள்ளுவராண்டைத் தோற்றுவித்தார்கள்.

இதுபற்றி அறிக்கை ஒன்றை வாசித்தேன். அதில் கீழ்க்காணும் விவரங்கள் உள்ளன:   

        1  --    தமிழர்க்குத் தமிழில் தொடர் ஆண்டு இல்லாத குறையை உணர்ந்த தமிழறிஞர்கள்,    சான்றோர்கள்,   புலவர்கள்,  1921 ஆம் ஆண்டு,    சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்,    தமிழ்க்கடல் மறைமலையடிகள்  தலைமையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்கள் கூடி ஆராய்ந்தார்கள்.

           2  --  திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது,  அதையே தமிழாண்டு எனக் கொள்வது;   திருவள்ளுவர் காலம் கி. மு. 31 ;   தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. 1921 இல் எந்த மாதம்,  எந்தத் தேதியில் ஆராய்ச்சி நடந்தது?    கூட்டத்தின் முடிவை அறிக்கையாகவோ கையேடாகவோ வெளியிட்டார்களா?    ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்குச் சான்று தரவேண்டாமோ?

அது ஒரு கற்பனையான நிகழ்ச்சி என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது.

 மறைமலையடிகள் வரலாறு என்னும் தலைப்பில் அவருடைய மகன் திருநாவுக்கரசு 868 பக்கம் கொண்ட ஒரு விரிவான நூலை 1959 இல் வெளியிட்டிருக்கிறார்;  அதில் 773 ஆம் பக்கத்தில் காணப்படும் தகவல் கீழ் வரும்:

        "அடிகள் திருவள்ளுவரையே தமிழர்க்குரிய ஆண்டுக் கணக்கீட்டின் முதல்வராகக் கொண்டார். அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு முப்பத்தொரு ஆண்டுகள் முற்பட்டவர்

அடிகளின் கருத்துப்படி என்பதைக் கவனிக்க வேண்டும்;   ஆராய்ச்சிப்படி என்று சொல்லப்படவில்லை. கருத்து வேறு,    ஆராய்ச்சி முடிவு வேறு அல்லவா?

மேற்கண்ட நான்கு வரிகள் மட்டுமே திருவள்ளுவராண்டு பற்றிக் கூறுகின்றன;  மற்றபடி,   பச்சையப்பன் கல்லூரிக் கூட்டம்,    ஏராள அறிஞர்கள் கூடி ஆராய்ந்தமை முதலியவை குறித்து எதுவும் இல்லை.

ஒருகால்,  ஆசிரியர்,   'அது சாதாரண விஷயம்,  அதைப் பற்றி விவரிக்கத் தேவை இல்லை' எனக் கருதி அதைப் புறக்கணித்திருப்பாரோ?  மாட்டார். ஏனெனில் அவர் அந்த நூலில்,   மிக மிகச் சாதாரணச் செய்திகளைக்கூட விரித்து எழுதி இருக்கிறார்.

ஒரு காட்டு (பக்கம் 260 ) :

"அடிகள் மாளிகை பெரியது. ஆதலின் மண்ணெண்ணெய் விளக்குகள் பல உண்டு. கிழமைக்கு ஒரு முறை மாலையில் அவைகளை அவர் நன்றாகக் கழுவித் துடைத்துத் துப்புரவு செய்வார். விளக்கின் எண்ணெய்க் கூடுகளையும் அவ்வாறே தூய்மை செய்வார். திரிகளை எல்லாம் கத்தரிக்கோலால் அளவாகக் கத்தரிப்பார். மண்ணெண்ணெயை வடிகட்டி விளக்குக் கூடுகளில் நிறைப்பார்"

வாசித்தீர்களா?  வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற வேண்டிய அருஞ்சாதனையா,  இது?   இப்படிப்பட்ட உப்புசப்பற்ற தகவல்களைக்கூட விரித்து உரைக்கும் ஆசிரியர், அடிகளின் தலைமையில் நடந்ததும் தமிழச் சமுதாய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கத் தக்கதுமான ஆராய்ச்சி மாநாட்டை மெளனிக்கமாட்டார்.

மேலும்,  அடிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக,   " 29 - 2- 1919 இல், சென்னை இராயப்பேட்டை பாலசுப்ரமணிய பக்த சபையின் விழா,   அடிகள் தலைமையில் நடந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (பக்.347 )   அடுத்த நிகழ்ச்சியாய்,  "அடிகள் என்னை அழைத்துக்கொண்டு பல்லாவரத்தினின்றும் 16  - 12  1921 இல், யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டனர்" என்று உள்ளது. (பக். 349)

ஆக,  1920 ,  1921 ஆண்டுகளில் மறைமலையடிகள் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவரது தலைமையில் 1921 இல் ஆராய்ச்சி நிகழ்ந்தது என்பது கற்பனையாகத்தான் இருக்கவேண்டும்.

இதுகாறும் கூறியவற்றால்,  மறைமலையடிகள் யாரையும் கலந்தாலோசியாமல்,  விவாதிக்காமல்,  தாமும் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல்,  தம்மிச்சையாய்,  திருவள்ளுவர்    கி.மு. 31 இல் பிறந்தார் எனக் கருதினார் என்பதும் அதைப் பிடித்துக்கொண்டு,  திருவள்ளுவராண்டை யாரோ தோற்றுவித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகின்றன.

ஆராய்ச்சி நடந்தது மெய்தான் என்பதற்கு யாரேனும் ஆதாரம் காட்டுவாரானால்,    அதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். 

                                                         ++++++++++++++++++++++

 

 

Wednesday 9 October 2013

லெமூரியா

இந்தியப் பெருங்கடலில்,   குமரிகண்டம் என்றொரு விசாலமான நிலப் பரப்பு  நெடுங் காலத்துக்குமுன் இருந்ததாகவும் அது பின்பு கடலுள் மூழ்கிவிட்டதாயும் சிலர் கூறுவர்,  எழுதுவர்;   அதற்கு ஆதாரமாகத் தமிழ் இலக்கியக் குறிப்புகளைக் காட்டுவர். அந்தக் கண்டத்தில்தான் மனிதன் தோன்றினான்,   அவன் தமிழன்அவன் பேசிய தமிழே உலகின் முதல் மொழி என்றும் பறை சாற்றுவர்.

முந்தைய நாளினில் அறிவும் இலாது 
மொய்த்தநல் மனிதராம் புதுப்புனல் மீது 
செந்தா மரைக்காடு பூத்தது போலே 
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

என்ற பாரதிதாசனின் கவிதை அடிகள் இந்தக் கருத்தைத் தெரிவிக்கின்றன.   8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட களவியல் என்னும் இலக்கண நூலின்   ஆசிரியர் இறையனார் என்பவர். அதற்கு உரை எழுதியவர்தான் தமிழ்ச் சங்கங்கள் மூன்று இருந்தன எனவும் முதலிரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்த கடற்கோளினால் அழிந்தன எனவும் விவரித்தார். உரையின் காலம் 9 ஆம் நூற்றாண்டு. சங்க இலக்கியங்கள் இதுபற்றிப் பாடவில்லைஅவற்றுக்குப் பின் தோன்றிய நூல்களோ 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், சம்பந்தரோ இதைக் குறித்து எதுவும்  சொல்லவில்லை. 9ஆம் நூற்றாண்டுக்காரருக்கு எப்படித் தெரிந்தது?   சான்று எதையாவது காட்டினாராஇல்லை.

ஒரு கடற்கோளைச் சிலப்பதிகாரம் (8 ஆம் நூற்றாண்டு) கூறுகிறது:

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது 
பஃறுளி  ஆற்றுடன்  பன்மலை அடுக்கத்துக்
குமரிக்  கோடும்  கொடுங்கடல்  கொள்ள   
(காடுகாண் காதை)

இதன் பொருள்: கடலானது,   தன்மேல் பாண்டியன் வேலை எறிந்ததால் அவன்மீது பகை கொண்டுபஃறுளி என்ற ஆற்றோடு பல பக்கமலைகளை உடைய குமரி மலையையும் மூழ்கடித்தது.

மேலை நாட்டு ஆய்வாளர் சிலர்,   கடலுள் மூழ்கிய ஒரு கண்டம் பற்றிக்   கருத்து அறிவித்து அதற்கு "லெமூரியா" எனப் பெயரிட்டனர். அதற்குக் குமரிகண்டம் என்றும் பெயருண்டு எனவோ அதில் வாழ்ந்தோர் தமிழர் எனவோ அவர்களின் மொழி தமிழ் எனவோ யாரும் சொல்லவில்லைஆனால் தமிழறிஞர் சிலர் அதைப் பிடித்துக்கொண்டு லெமூரியா தான் குமரிகண்டம் என்று சாதிக்கிறார்கள்.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை,  " இலெமூரியா அல்லது  குமரிகண்டம்" என்ற 90 பக்கம் உடைய சிறு நூலில் அப்படியொரு கண்டம்  இருந்தது என்பதை நிரூபிக்க முயலுகிறார்;   ஆனால் தக்க ஆதாரங்கள் காட்டவில்லை;   தவறான தகவல்களையும் தருகின்றார்.
                                         
எடுத்துக் காட்டுகள்:

    1  --  பக். 25  -- மனிதர் தோற்றம் முதலில் ஏற்பட்டது தென் இந்தியாவிலோ   அதன் அருகிலேயோ தான். (கிழக்கு ஆப்பிரிக்காவில்தான் மனிதன் தோன்றினான் என்பது உலக அறிஞர்களின் ஒருமனமான முடிவு)

     2  --  பக். 39 -    அறிவியலறிஞர்கள்கிட்டத்தட்ட மனிதரது அமைப்பும் மூளை உருவும் உடைய லெமூர் என்ற உயிர்வகை ஒன்று,   உலகின்  நடுக்கோட்டுப் பகுதியைச் சுற்றி இருப்பதைக் கூர்ந்து நோக்கி அந்த லெமூர்களில் இருந்தே மனிதர் ஏற்பட்டிருக்கவேண்டும் என்று தீர்மானித்தனர்... லெமூர் என்ற அவ்வுயிரின் பெயரையே அடிப்படையாகக்   கொண்டு இலெமூரியா என அறிஞர் பெயர் வகுத்தனர்.   (சிம்பஞ்சி--chimpanze --  குரங்குதான் மனிதனின் மிக நெருங்கிய உறவு என்பது நிறுவப்பட்டுள்ள உண்மை)

(லெமூரும்  அதன்  குட்டியும்)

  3  --  பக்- 46 -  இலெமூரிய நாகரிகக் காலம் இன்றைக்கு 20 000 ஆண்டுகளுக்கு முற்பட்டு 50 000 ஆண்டுகள் வரையில் ஆகும். (சான்று எதுவும் காட்டவில்லை).

   4 --   பக். 55 .   ஒருகால் உலகெங்கும் பரவி இருந்த இலெமூரியாக் கண்டம் படிப்படியாகச் சிதைவுற்று இறுதியில் கடலில் மூழ்கியது (இதற்கும் ஆதாரம் எதையும் கூறவில்லை)

    5  -- பக்.44  .  ஆஸ்திரேலியா உலகின் இழுப்பு வன்மைக்கு உட்பட்ட காரணத்தால் உலகின்மீது வந்து விழுந்த ஒரு விண்வீழ் மீனின் சிதைந்த பகுதியேயாம்;   அம்மீன் விழுந்த தாக்கு வன்மையினாலேதான் அதுவரை இருந்த இலெமூரியா கடல் வாய்ப்பட்டது.  (எவ்வளவு உறுதியாகக் கூறுகிறார்! சான்று தந்திருக்க வேண்டாமோ?)

 இப்படி குமரிகண்ட ஆதரவாளர்கள் முழுதுந் தவறான அல்லது ஒரு பகுதி பிழையான ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்;  ஆதாரம் இல்லாமலேகூடத் தகவல் தருகிறார்கள். குமரிகண்டத்தை விடுத்து லெமூரியாவுக்குப் போவோம்.

    1868 இல்பிரபல ஜெர்மன் உயிரியல் மற்றும் விலங்கியல் அறிஞர்   எர்னஸ்ட் ஹேக்கேல் (Hernst  Haeckel)   ஆதி மனிதர்களுக்கும் பசிஃபிக் தீவுகளில் வாழும் கருப்பின மக்களுக்கும் நெருங்கிய உறவு உண்டென உறுதியாய் நம்பினார்;   அப்பகுதியில் காணப்படும் கிபன் (gibbon)  என்ற குரங்கின் கருவுக்கும் மனிதக் கருவுக்கும் இடையே உள்ள வியப்புக்கு உரிய ஒற்றுமையைக் கண்டு உலகின் அந்தப் பிரதேசத்தில் ஒரு கண்டம் இருந்திருக்கிறது எனவும் அது இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டது எனவும் அது லெமூரியா எனவும் முடிவு கட்டினார். நம் பண்டைய மூதாதையர் கிபன் குரங்குகளை ஒத்திருந்தனர் என்பது அவரது கருத்து.
 இதோ இன்னொரு லெமூரியா! 

  பிரான்க் ஜோசப் (Frank  Joseph )  என்பவர் 2006 இல் வெளியிட்ட, "லெமூரியாவின் இழந்த நாகரிகம்" (The  Lost  civilization  of  Lemuriya)  என்னுந் தலைப்புக் கொண்ட 330 பக்க நூலில்லெமூரியாக் கண்டம் பசிபிக் பெருங்கடல் இருக்கிற இடத்தில் இருந்தது எனவும் அதில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழியிலிருந்து வந்ததே சமஸ்கிருதம் எனவும் கூறுகிறார்.

     மூழ்கிய கண்டங்கள் பற்றி மேலும் தகவல்கள் உண்டு:

   1  -  அட்லாண்டிஸ் -- கிரேக்கத் தத்துவ அறிஞர் பிளேட்டோ அட்லாண்டிக் பெருங் கடலில் ஒரு கண்டம் அமிழ்ந்துபோயிற்று எனவும் அதன் பெயர்  அட்லாண்டிஸ் எனவும் கூறினார். பேரறிஞர் ஒருவரின் கூற்றை அலட்சியப்படுத்த முடியுமா?   அது குறித்து அறிஞர்கள் விவாதித்தனர்;   அது தவறு என முடிவு கட்டினர்.

   2 --  மு -- அகஸ்டஸ் லெப்ளோன்ழோன் (Augustus  Le  Plongeon )   என்ற 19 ஆம்  நூற்றாண்டு எழுத்தாளர் அட்லாண்டிக் பெருங்கடலில் மு என்னும் கண்டம்  இருந்து பின்னாளில் மூழ்கிற்று என ஒரு நூலில் தெரிவித்தார். அதைப் பற்றி ஆராய்ந்த ஜேம்ஸ் சர்ச்வாண்ட் (James  Churchwand)  அது பசிபிக் பெருங்  கடலில்  இருந்ததாகவும் அங்கேதான் மனிதன் தோன்றியதாயும் கூறினார்.

   இப்படி ஆளாளுக்கு எதை எதையோ எழுதியுள்ளனர். 

                                               -------------------------

Thursday 3 October 2013

சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியரும்




ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்அதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பது பரவலாக அறிந்த செய்தி. அவரைப் பற்றிய பின்வரும் தகவலும் பலப்பலர்க்குத் தெரிந்திருக்கும்:

சேர மன்னன் சேரலாதனின் அவைக்கு வந்த ஒரு சோதிடர்,   அவனது இளைய மகனைப் பார்த்து,   " இவனே அடுத்த வேந்தன் ஆவான் என்பதற்கான அறிகுறி தெரிகிறது" என்று சொன்னதைக் கேட்ட இளங்கோ,  "மூத்தவன் இருக்க நான் அரசனாவது முறையல்ல,   துறவு பூணுகிறேன்" என்று தெரிவித்துவிட்டுத் துறவி ஆயினார்.

இதற்கு எந்த எழுத்தாதாரமும் இல்லாமையால் இது ஒரு கற்பனை எனத் தெரிகிறது.

சிலப்பதிகாரத்தின் பதிகப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:

         குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
         குடக்கோச் சேரன் இளங்கோ அடிகட்கு

இதன் பொருள்:
அரச போகத்தைத் துறந்துகுணவாயில் என்ற ஊரிலுள்ள கோவிலில் தங்கி இருந்த மேற்கு நாட்டுச் சேர மன்னனின் தம்பியாகிய அடிகளுக்கு.
சோதிடரின் ஆரூடம் பற்றி இது பேசவில்லை. இளங்கோ தாமாகவே துறவி ஆனார் என்றுதான் விளங்குகிறது.

சேரலாதனுக்குப் பின்பு மூத்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் அவனையடுத்து இரண்டாம் மகன் செங்குட்டுவனும் பிறகு மூன்றாம் மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆண்டனர் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.

பதிற்றுப்பத்து என்பது சங்க எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று. பல சேர வேந்தர் பற்றிய பாடல்கள் அதில் உள்ளன. செங்குட்டுவனைக் குறித்துப் பரணர்,   தாம் இயற்றிய 227 அடிப் பாட்டில்,   அவனது வீரதீரம்அருமைபெருமை,   கொடைத் திறன் முதலியவற்றைப் போற்றியும்  அவனைப் பலபட வாழ்த்தியும் உள்ளார்;   அவன் கடல் போரில் வென்றான் எனத் தெரிவிக்கிறார்ஆனால் வட நாட்டுப் படையெடுப்புகனக விசயர்,   கண்ணகிக்குக் கல் ஆகியவை பற்றிய சிறு குறிப்பும் கூறவில்லை. இந்திய வரலாற்று நூல்களிலும் இது இடம் பெறவில்லை. ஆகையால் கண்ணகி கதை,   கற்பனை எனத் தெரிகிறது.

பரணரின் பாட்டுக்கு ஒரு பதிகம் உள்ளது:

      கடவுள் பத்தினிக் கல்கோள் வேண்டி
          ஆரிய அண்ணலை வீட்டி

என்கிறது அது. கண்ணகிக்குக் கல் கொண்டு வருவதற்கு ஆரிய மன்னனை வென்று என்பது அதன் பொருள். பதிகம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. அது கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்குமுன்  இயற்றப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சி விரிவுரையாளர் டி. வி. சதாசிவ பண்டாரத்தார் கருத்து.  இன்ன காலம் என யாராலும் வரையறுக்க இயலவில்லை. ஆகவே இந்தப் பிற்கால இடைச்செருகல் தள்ளப்பட வேண்டிய ஒன்று.

ஆய்வறிஞர் எஸ். வையாபுரி பிள்ளைதம் "காவிய காலம்" என்ற நூலில்,   சிலப்பதிகாரம் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது எனப் பலப்பல ஆதாரங்களைக் காட்டி,    நிறுவுகிறார்.

 10 ஆம் நூற்றாண்டு அரசன் ராஜராஜனைத் தலைவனாய் வைத்து 20 ஆம் நூற்றாண்டு கல்கி,  "பொன்னியின் செல்வன்" எழுதினாற் போலயாரோ பெயர் தெரியாத புலவர் ஒருவர்,    2 ஆம் நூற்றாண்டு மன்னன் செங்குட்டுவனை நாயகனாய்க் கொண்டுசிலப்பதிகாரம் இயற்றியுள்ளார்.


                                           +++++++++++++++++++++++++++