Thursday, 24 September 2015

அறிவுக் கூர்மை
     ஒரு முற்பகல் வேளையில், அரேபிய மன்னன் நகர்ச் சோதனைக்காக மாறு வேடத்தில், குதிரையூர்ந்து சென்றுகொண்டிருக்கையில், சாலையோரம் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளியொருவன் அவனை நோக்கி, "ஐயா,  என்னால் நடக்க முடியாது; தயவு  செய்து என்னை ஏற்றிக் கொண்டு போய் என் வீட்டு வாயிலில் இறக்கி விடுங்கள்"  எனக் கெஞ்சுங் குரலில் வேண்டினான்.

      இலக்கை அடைந்ததும், அவன் சொன்னான்: "இனி நீங்கள் இறங்கி உங்கள் வழியே போகலாம்.

    - என்ன?  குதிரையை விட்டுவிட்டா?

    - பின்னே? நீங்கள் கேட்டுக்கொண்டதற்காகப் பரிதாபப்பட்டு ஏற்றி வந்தால் குதிரையை அபகரிக்கப்  பார்க்கிறீர்களா?

     -வல்லடியாக அல்லவா இருக்கிறது! நீதிபதியிடம் போவோம்."

    அரசன் குதிரையை ஓட்டி மன்றத்தை அடைந்தான். அங்கே சிலர் நின்றுகொண்டிருந்தனர்; விசாரணை நடந்தது.

    வாதி -- "ஐயா, நான் எண்ணெய் விற்பவன்; இந்த இரும்பு வியாபாரி என்னிடம் சில்லறை கேட்டார்; தந்தேன்; பதிலுக்குத் தொகை கொடுக்க மறுக்கிறார்."

     பிரதிவாதி --"இவர் சொல்வது பொய், ஐயா; நான் என்  நாணயங்களைத்தான் வைத்திருக்கிறேன்".

      நீதிபதி -- "அவற்றை இந்தப் பலகைமேல் வைத்துவிட்டுப் போங்கள்; நாளை தீர்ப்பளிப்பேன்".

      அடுத்த வழக்கு:

      வாதி -- "ஐயா,  நான் எழுத்தாளன்; இந்த என் அடிமைப் பெண்ணை அந்த உழவர் சூழ்ச்சியாய்த் தம்மிடம் இழுத்துக்கொண்டார். மீட்டுத் தாருங்கள்"

      பிரதிவாதி -- "இல்லை, ஐயா; இவள் நெடுங் காலமாக என் அடிமை".

       பெண் -- "ஆமாம்,  நான்  இவருடைய  அடிமைதான்."

       நீதிபதி : "இவள் இங்கு இருக்கட்டும்; இருவரும் நாளை வாருங்கள்".

      கடைசி  வழக்கு:

            மன்னன் தன் வாதத்தை முன்வைத்தான்; மாற்றுத் திறனாளி எதிர்வாதம் செய்தான். குதிரையைக் கொட்டிலில் கட்டச் செய்த நீதிபதி தீர்ப்பை மறு நாளுக்கு ஒத்திவைத்தார்.

      அந்த  நாள் வந்தது.

   சில்லறையை இரும்பு வாணிகரிடம் தந்த நீதிபதி, எண்ணெய் வியாபாரி குற்றவாளி என்றும் அவருக்குக் கசையடி தரப்படும் என்றும் கூறினார்.

       "எழுத்தாளர் தம் அடிமைப் பெண்ணை மீண்டும் பெறுவார்; மற்ற இருவரும் தண்டனை அடைவார்கள்"  என்றார்.

      வேந்தனையும் எதிராளியையும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்ற நீதிமான், அங்கே நின்ற ஆறு குதிரைகளுள் தம்முடையதைத் தொட்டுக் காட்ட உத்தரவிட்டார்; முதலில் அரசனும் பின்னர் மற்றவனும் அடுத்தடுத்துச் சென்று ஒரே குதிரையைக் காட்டினர்.

     மாற்றுத் திறனாளியிடம், "நீர் பொய்யர், குற்றவாளி; தக்கவாறு தண்டிப்பேன்" எனச் சொல்லிவிட்டுக் குதிரையை ஓட்டிப் போக வாதிக்கு அனுமதி வழங்கினார்.

         மறு நாள் மாலை. நீதிபதியை அழைத்து வரச் செய்த மன்னன் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றான்.

        "உங்களை எதற்காக வரவழைத்தேன் என்பதைச் சொல்கிறேன். நேற்றுக் குதிரை வழக்கின் வாதி நான்தான்; மாறு வேடத்தில் இருந்தேன். சிக்கலான அந்த வழக்குகளை எப்படி ஆராய்ந்து உண்மை கண்டுபிடித்தீர்கள்  என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன், அந்த ஆவலைத் தணிக்கக் கோருகிறேன்." என்றான்.

       நீதிபதி,  "நீங்கள் என்னைப் பொருட்படுத்தி இவ்வாறு கேட்டதற்குப் பெருமை அடைகிறேன், அரசே" எனச் சொல்லிவிட்டு விளக்கினார்:

      "ஒரு கிண்ணத்தில் போதிய நீர் ஊற்றி நாணயங்களை அதில்  போட்டு வைத்தேன்; அதிக நேரம் ஆகியும் துளிக்கூட எண்ணெய் மிதக்கவில்லை; ஆகவே எண்ணெய்  வியாபாரியின் பணமல்ல என முடிவு செய்தேன்.

       ஒரு பெரிய மைப்புட்டியிலிருந்து  சிறியதொரு புட்டியில் மை ஊற்றி நிரப்பும்படி அந்தப் பெண்ணிடம் சொன்னேன்; அவள் தடுமாறாமல், சிந்தாமல், சிதறாமல் ஊற்றவே, அந்த வேலையை அவள் நெடுநாள் செய்து பழகியிருக்கிறாள் எனவும் எழுத்தாளரின் அடிமைதான் எனவும் கண்டுகொண்டேன்.

    பிரதிவாதி அடையாளம் காட்டியபோது குதிரையிடம் சலனம்  எதுவுமில்லை; நீங்கள் நெருங்கியதும் தலையையும் வாலையும் ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திற்று. உண்மை விளங்கியது."

      அரசன், "ஆகா! எவ்வளவு அறிவுக் கூர்மை! உங்களை நீதிபதியாக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்"  என்று பாராட்டித் தக்க சன்மானம் வழங்கினான்.
    


                                           *****************
(படம்: நன்றி இணையம்)

Thursday, 17 September 2015

புத்திசாலி


   

  கல்வியால்  அறிவு  பெருகும்  என்பது  பொதுவான  உண்மை;  ஆனால்  கல்லாரிடமும்  இயற்கையாகவே    நுண்ணறிவு  காணப்படலாம்;   படிக்காத  மேதைகளும்  பாரினில்  உண்டு.

     ஒரு படகோட்டி   எந்தச்  சிக்கலான  பிரச்சினைக்கும்    தீர்வு  காணக்கூடிய அறிவுச்  சாதுரியம்  உள்ளவன் என்று  பெயரெடுத்திருந்தான்;   அவனது  புகழ்  அக்கம்பக்கம்  பரவி   அரசனுடைய  செவிக்கும்  எட்டியது.

    சோதித்துப்  பார்க்க   விழைந்த  அவன்   ஒரு  நாள்பரிவாரஞ் சூழயானை  ஊர்ந்து  ஆற்றங்கரையை  அணுகினான்படகோட்டிக்குத்   தன்  கண்களை  நம்ப   இயலவில்லைகடவுளுக்கு  நிகராக  மக்கள்  போற்றும்    மன்னனை  இதோஇப்படிஇவ்வளவு  அருகில்  காண்பதென்றால்தரையில்  விழுந்து வணங்கி  எழுந்து   பய  பக்தியுடன்  கைகட்டி  நின்றான்.

     இறங்கி வந்த  வேந்தன் ,  " நீ  புத்திசாலி,   எந்தப்  பிரச்சினை  தீர்வதற்கும்  வழிகாட்டக்கூடியவன்   என்று  கேள்வியுற்று  வந்திருக்கிறேன்என்றான்.

    "அரசரே,   நான்  படிக்காதவன்ஏதோ  எனக்குத்  தோன்றுகிற  யோசனையைச்  சொல்லுவது  உண்டு.

     --  அதைச்  சோதிக்கத்தான்  வந்தேன்.   இந்த  யானையின்  எடை  என்ன  என்பதை  உன்னால்  சொல்ல முடியுமா?

     -- முடியும், அரசே.

    --  முடியுமா?   எப்படி  நிறுப்பாய்?

    --  எந்தத்  தராசிலும்  நிறுக்க  முடியாதுவேறு  வழி  இருக்கிறதுமன்னரே.

    --  சொல்  அதை.

    --  யானையைப்  படகில்  ஏற்றிக்  கொஞ்ச  தூரம்  போய்  நிறுத்தி   அந்த  இடத்தில்  கம்பு  நட்டு அடையாளம்  வைத்துக்கொண்டுதண்ணீரில்  எந்த  அளவு  படகு  மூழ்கியிருக்கிறது  என்பதைக்  கோடு  போட்டுக்   குறித்துக்  கொள்ளலாம்அப்புறம்   நிறைய  செங்கல்லைப்    படகில் நிரப்பி   அந்த  இடத்துக்கு  ஓட்டிப் போய்க்  கோடுவரை  அமிழச் செய்யலாம்;   செங்கல்  எண்ணிக்கையை  ஒரு   கல்லின்  எடையால்  பெருக்கினால்   யானையின்  எடை  தெரியும்  என்று  நினைக்கிறேன், அரசரே"

       வியப்பில்  ஆழ்ந்த  வேந்தன்,  " என்ன  ஒரு  நடைமுறை   அறிவு!"  எனப்  புகழ்ந்து, "நீ  உண்மையிலேயே  பெரிய  புத்திசாலிதான் "   எனக்  கூறித்  தக்க  சன்மானம்  வழங்கி  மீண்டான்.


                    ---------------------------------------------------------------

Monday, 7 September 2015

குருவுக்கேற்ற சீடன்


  


  நம் காலத்து  சாமியார் பலர்,  பெருமளவில் பணஞ் சேர்த்து,  சொகுசாக வாழ்வது போலத்தான்  பழங்காலத்திலும் நிகழ்ந்திருக்கிறது . என்ன ஒரு வேறுபாடு?  இப்போது பத்திரமாகச் சேமித்து வைக்க வழிகளுண்டு ; முன்பு இல்லை.

  அப்போதைய சாமியாரொருவர், காவியுடை  தரித்து, அறப் போதனை செய்துகொண்டு, அருள் வாக்கு கூறித்  தட்சணை பெற்றும்   யாகம் பூசை என்று சொல்லிக்  கணிசமாகக் காணிக்கை வாங்கியும்  பொருள் திரட்டித் தங்கக் கட்டிகளாய் மாற்றி  ஒரு சிறு துண்டில் பொதிந்து  இடுப்பில் செருகிக்கொண்டு வாழ்ந்தார். சிறு தொகையை இன்பந் துய்க்கச் செலவிட்டுப் பிறவிப் பயனை அடைவதுண்டு.
    எந்த ரகசியமும் எப்படியோ வெளியில்  கசிந்துவிடும்துறவியின்  கமுக்கச் செயலைத்  தற்செயலாய்க் கண்டுபிடித்த  இளைஞனொருவன், பொன்னைக்  கைப்பற்றத் திட்டந் தீட்டினான். ஒரு  நாள், அவரை அணுகி, ஆறுறுப்புத்  தெண்டனிட்டு எழுந்து, "கலிகாலக் கண்கண்ட தெய்வமே! எனக்கு இந்த இள வயதிலேயே  உலகத்தின்மேல்  வெறுப்பு ஏற்பட்டு  விட்டது;  பற்றெல்லாம் அற்றுப் போனது; போகிற  கதி நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காக  உங்களை குருநாதராகக் கொண்டு பணிவிடை  செய்து, புண்ணியம் பெருக்கிக்  காலங் கழிக்க விரும்புகிறேன். அருள் கூர்ந்து என்னை அடிமையாக ஏற்று ரட்சிக்க வேண்டும்" என வேண்டினான்.

  " உன் பெயர்  என்ன?

  --- முத்து,  குருவே.

  --- பெற்றோர்  எங்கே  இருக்கிறார்கள்?

  --- நான் அநாதை, குருவே;  அதனால்தான் வாழ்க்கையில்  விரக்தி.

  ---- என்ன வேலை செய்தாய்?

  ---- கூலி  வேலை, குருவே.

  --- சரி , எனக்கும்  சீடன் தேவைதான்; என்னுடன் இரு.

 --- குருதேவா, உங்கள்  அனுமதி  என் பாக்கியம்; உங்கள்  கருணைக்குப்  பாத்திரனாக  இருப்பேன், குருவே."

   இருவரும்  சேர்ந்து வாழ்ந்தனர். சாமியார்க்கு மன நிறைவு உண்டாகும்படி குற்றேவல்  செய்து  அவரது  நம்பிக்கையை  விரைவிலேயே  பெற்றான்  சீடன். குறி  மட்டும்  தங்கத்தில்;  ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான்.

   ஒரு  நாள், பக்தரொருவர் வழங்கிய பகலுணவை உண்டுவிட்டுத் திரும்பி வருகையில், வழியில் கிடந்த வைக்கோல்  ஒன்றைச்  சாமியார் அறியாமல் எடுத்துத் தலைமேல் வைத்துக்கொண்டான்; இருப்பிடம்  அடைந்தபின், முத்துவைக்  கவனித்த சாமியார், "இதென்ன தலைமேல்  வைக்கோல்?" எனக் கேட்டபோது, அவன் திடுக்கிட்டாற்போல் நடித்து, "ஐயையோ! அபச்சாரம்! நாம் சாப்பிட்ட வீட்டில்  மாடு வைக்கோல் தின்றுகொண்டிருந்தது அல்லவா? நான் கை கழுவ அங்கே போனபோது அதில்  ஒன்று பறந்து  வந்து என் தலையில் ஒட்டிக்கொண்டது போலிருக்கிறது. எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன்உண்ட  வீட்டுக்கு  இரண்டகம் செய்யலாமா? குருவே, உத்தரவு  கொடுங்கள்; போய் வைக்கோலை  மாட்டிடம் போட்டு  வருகிறேன்" என்றான்.

     சம்மதித்த சாமியார், அவனைக் குறித்து  மிக  மேலான நல்லெண்ணம் கொண்டுவிட்டார்: "கேவலம் ஒரு  துரும்பு! அதைக்கூட உரியவரிடம்  சேர்க்க நினைத்து அவ்வாறே  செய்பவன் எவ்வளவு உத்தமன்! என்னிடமே பொருட் பற்று இருக்கிறதே! நம்பத் தகுந்த தலைசிறந்த சீடன் கிடைத்துள்ளான்."

    சில நாளுக்குப் பின்பு, செல்வத்தைச்  சீடனிடம் ஒப்படைத்துவிட்டு, ஆற்றில் குளிக்க நிம்மதியாய்ப் போனார் சாமியார்.

   முடிவைக்  கூற வேண்டுமா, என்ன?


              ++++++++++++++++++++++++++++++++++++
(படம் உதவி: இணையம்)