Tuesday, 22 November 2016

பெரியவர் மோன்ழிலே


    ( பிரஞ்சு சிறுகதை மன்னர் மொப்பசான் எழுதியது; ஜனவரி 1997 மஞ்சரியில் வந்தது)

எங்கள் அலுவலகத்துப் பெரியவர் மோன்ழிலே பணி மூப்பர்பண்பாளர்; எங்களுக்குத் தெரிந்து அவர் பாரீசை விட்டு வெளியே சென்றதேயில்லை.   

 நாங்களோ, கோடை தொடங்கியதும், எல்லாரும் சேர்ந்துஞாயிறுதோறும்புற நகர்களுக்குப் போய்ப் புல்லில் உருண்டு புரள்வது அல்லது கழுத்துவரை நீரில் மூழ்கிக் கிடப்பது வழக்கம்.  
 
    ஒரு நாள்நாங்கள் சொன்னோம்:   

"அதை அனுபவித்துப் பாருங்கள், ஐயா; ஒரு முறை புற நகருக்கு வாருங்களேன்,  எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு".

    அவர் பதிலளித்தார்:   

 "போயிருக்கிறேனேஇருபது ஆண்டுக்கு முன்பு;   அப்பப்பா, போதும்அது போதும்".

    "அப்படியா? அதைப் பற்றி சொல்லுங்களேன்".

     "அதற்கென்ன, சொல்கிறேன். உங்களுக்கு புவாலேனைத் தெரியுமல்லவா, பழைய எழுத்தர்?".

    "அவரா,   நன்றாகத் தெரியுமே!".

    "அந்த ராஸ்கலுக்குப் புற நகர் கொலோம்பில் ஒரு வீடு உண்டு;   ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அங்கே வரும்படி பல முறை அழைத்துக்கொண்டிருந்தான்; 'வா, மோன்ழிலே, அருமையான வாக்கிங்  போகலாம்' என்று சொன்னான்.   

    ஒரு காலைவேளையில் கொலோம்பை அடைந்தேன்; அலைந்து திரிந்து ஒரு சந்தின் கடைசியில்இரு சுவர்களுக்கு இடையே,    ஒரு பழங்கதவைக் கண்டுபிடித்து மணியடித்தேன்கதவு திறந்தது: விகாரமான, பழந்துணிகளால் மூடப்பட்ட,   அழுக்கேறிய, அருவருப்பான உருவமொன்று நின்றது; தலைமுடியில் கோழி இறகுகளை செருகியிருந்த அது என்னை விழுங்க விரும்பியதுபோல் தோன்றியது.  
 
 --- என்ன வேண்டும்?   

 -- புவாலேன்.   

 -- அவரிடம் உங்களுக்கு ஆகவேண்டியது?   

அந்த சிடுமூஞ்சியின் விசாரணை என்னை நெளீய வைத்தது. திணறியபடி சொன்னேன்: "வந்து... அவர் வரச் சொன்னார்".

-- ஓஹோ,  சாப்பாட்டுக்கு வருபவர் நீங்கள் தானா?

-- ஆம்.   

 வீட்டின் உள்பக்கம் திரும்பிய அவள், " புவாலேன்இதோ உன் நண்பர்" என்று கடுகடுத்த குரலில் கூறினாள்.   

    அவன் வந்து என் கையைக் குலுக்கிய பின்பு,  தோட்டம் என அவன் பெயர் சூட்டியிருந்த ஓர் இடத்துக்கு அழைத்து சென்றான். ஒரு சிறு பரப்பு: சுற்றியிருந்த உயரமான வீடுகள் காரணமாய்,  ஒரு நாளில் இரண்டொரு மணி நேரம் மட்டுமே வெயில்படும்; அங்கே சில பூச்செடிகள் சாவுப்படுக்கையில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தன.  
 
    அவன்,  "நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்என் மனைவியைப் பார்த்தாயல்லவா?   அவள் ஒருமாதிரி பெண்உனக்குப் புரிந்திருக்குமே! இன்றைக்குநான் உன்னை அழைத்திருப்பதால், எனக்குத் தூய ஆடை அளித்திருக்கிறாள்அதில் கறைகிறை பட்டதோ, தொலைந்தேன்அதனால்,   இந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற உன்னை நம்பியிருக்கிறேன்" என்றான்.   

    இசைந்தேன். கோட்டைக் கழற்றி, சட்டைக் கைகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு,   முழு வலிமையுடன் ஒரு விதப் பம்ப்பைக் கையாளத் தொடங்கினேன். அது விசிலடித்தும் புஸ் எனப் பெருமூச்சு விட்டும் காசநோயாளிபோல் கரகரப்பான ஓசையெழுப்பிக்கொண்டு மெல்லிய நீர்த்தாரையைப் பீய்ச்சிற்று. ஒரு தடவை பூவாளியை நிரப்பப் பத்து நிமிடம் தேவைப்பட்டது. நான் தொப்பல்!

புவாலேன் எனக்கு ஆணையிட்டான்: "இங்கே... இந்த செடிக்கு... இன்னம் கொஞ்சம்.. போதும்.. அந்த செடிக்கு.."

    பூவாளி ஓட்டை;    மலர்மேல் பட்ட நீரைவிட என் காலில் கொட்டியது  அதிகம். கால்சட்டையின் அடிப்பகுதி நனைந்து சேற்றைப் பூசிக்கொண்டது;    இப்படி பல தடவை நீர் பாய்ச்சுவதும் கால்களை நனைத்துக்கொள்வதுமாய் இருந்துவிட்டு, கடைசியில் ஓய்ந்துபோய் வேலையை நிறுத்தினேன்.  
     
    திருமதியின் குரல் தொலைவிலிருந்து கேட்டது: "வருகிறீர்களா   சாப்பாடு தயார்!"

 வீட்டில் வெயில் தகித்தது;  அரபு நாட்டு வெந்நீர்க் குளியலறைகூட அந்த சாப்பாட்டறையைக் காட்டிலும் வெப்பம் குறைந்துதான் இருக்கும்!

    மேசைமீது மூன்று தட்டு;   முள்கரண்டிகள்,  ஸ்பூன்கள்; நடுவே ஒரு சட்டியில் மாட்டுக்கறி + உருளைக்கிழங்கு கஞ்சி. உண்ணத் தொடங்கினோம்.    

    வெளிர் சிவப்பு நிறத் தண்ணீரால் நிரம்பிய ஒரு கண்ணாடிக் கூஜா என் பார்வையைக் கவர்ந்தது. சங்கடத்தில் நெளிந்த புவாலேன் அவளிடம், "ஏன், விசேஷ நாளில், சுயமான செந்திராட்சை மது கொஞ்சம் தரமாட்டாயா?" என்று கேட்டான்.  
 
கோபத்துடன் அவனது முகத்தை வெறித்துப் பார்த்தாள்: "எதற்குஇரண்டுபேரும் போதை தலைக்கேறி இன்று முழுதும் என் வீட்டில் கத்திக்கொண்டு கிடப்பதற்கா? விசேஷமாவது,  ஒண்ணாவது!"

    அவன் மவுனமானான். கஞ்சிக்கு அப்புறம், பன்றிக் கொழுப்புடன் தயாரித்த உருளைக்கிழங்கு கொண்டுவந்து வைத்தாள். உரையாடாமலே அதை உண்டு முடித்தோம். "அவ்வளவுதான்; எழுந்திருங்கள்" என்றாள். 
  
    அவன் மலைத்துப்போய் அவளை நோக்கி, " என்னது? அந்தப் புறாகாலையில் உரித்தாயே, அது?" எனக் கேட்டான்; அவள் இடுப்பில் கைகளுடன் பதில் அளித்தாள்: "போதாதாசாப்பிட்டது? நீ யாரையாவது அழைத்து வந்தால், வீட்டில் இருப்பதையெல்லாம் தின்று தீர்த்துவிடவேண்டும் என்று அர்த்தமாஇரவு நான் எதை சாப்பிடுவேன்?"

 நாங்கள் எழுந்தோம். நண்பன் என் காதைக் கடித்தான்: "ஒரு நிமிஷம்;   வருகிறேன்".

    சமையல் அறைக்குள் நுழைந்த மனைவியைத் தொடர்ந்தான். உரையாடல் என் காதில் விழுந்தது.   

    -- இருபது பிரான் தாயேன்.   

 ---என்ன செய்யப்போகிறாய்இருபது பிரானை வைத்துக்கொண்டு?   

 --தெரியவில்லை; என்ன செலவு வருமென்று முன்கூட்டியே சொல்ல முடியாது. கையில் பணம் இருப்பது நல்லது.  

 எனக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் இரைந்தாள்: "முடியாது; தர மாட்டேன். அந்த மனிதர் நம் வீட்டில் சாப்பிட்டிருப்பதால் அவர்தான் செலவு செய்ய வேண்டும்".

    புவாலேன் வந்தான். வாக்கிங் கிளம்பினோம். பண்பாடு காக்க விரும்பிய நான்,    அவளுக்கு முன்னால் குனிந்துதிக்கியபடி சொன்னேன்:

    "மேடம்,  நன்றி;   இனிய விருந்தோம்பல்".

அவள் பதிலுக்கு,  "சரி சரிதிரும்பி வரும்போது அவர் நிதானத்தில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும், தெரிகிறதா?" என்றாள். நாங்கள் புறப்பட்டோம். கொளுத்தும் வெயிலில்ஆற்றங்கரையை அடைந்தோம். என் பசி தீரவில்லை;   "ஏதாவது சாப்பிட வேண்டும்" என்றேன். ஒரு குடிசையுள் அழைத்து சென்றான்: அது ஒரு சாராயக் கடை; மாலுமிகள் நிறைந்திருந்தார்கள்.   

    "பார்வைக்கு இப்படி இருக்கிறதேயொழிய, அருமையான இடம்" என்றான். சாப்பிட்டோம், ஒயின் பருகினோம்இரண்டாம் கிலாசிலேயே அந்தப் பயலுக்குப் போதை தலைக்கேறிவிட்டது; ஒயினில் அவள் ஏன் நிறைய நீர் கலந்திருந்தாள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவன் சொற்பொழிவாற்றத் தொடங்கினான்; எழுந்தான்சர்க்கஸ் வேலைகள் செய்ய முனைந்தான்; கைகலப்பில் ஈடுபட்ட இருவர்க்கிடையில் மத்தியஸ்தம் செய்ய முற்பட்டான்கடை உரிமையாளர் மட்டும் தலையிட்டிராவிட்டால் எங்கள் இருவரையுமே நொறுக்கியிருப்பார்கள்.   

அவனைக் கைத்தாங்கலாய்ப் பக்கத்துத் தோப்புக்குக் கூட்டிச் சென்று படுக்க வைத்தேன். நானும் படுத்தேன்,   தூங்கிவிட்டேன்.  
 
 நான் விழித்தபோது இரவு கவிந்திருந்தது. அவனை உலுக்கி எழச்செய்தேன். கிளம்பினோம். கும்மிருட்டுவழியைக் கண்டுபிடித்துவிட்டதாய் சொன்னான். இடம் வலம் என மாறிமாறித் திரும்பி அழைத்துப் போனான். வானமும் தெரியவில்லைதரையும் தெரியவில்லை. எங்கள் மூக்கு உயரத்துக்கு நீண்டிருந்த, ஈட்டி போன்ற கழிகள் நிறைந்த ஒரு சிறு காட்டில் அலைந்தோம்; அவை திராட்சை செடிகளுக்கு நட்டிருந்த கொம்புகளாய் இருக்கலாம். நடந்தோம்நடந்தோம், அங்கேஇங்கே திரும்பியும் தடுமாறியும் கைகளை நீட்டிக்கொண்டும்  குருட்டுப்போக்கில் நடந்தோம்வெளியேறும் வழி தெரியவில்லை. அவன் உதவி கோரித் தொண்டை கிழியுமாறு கத்தினான்;  நானும் பலங்கொண்ட மட்டும் குரலெழுப்பினேன்.   

    நல்ல காலமாய் கிராமவாசியொருவர் எங்கள் குரல் கேட்டு வந்து வழி காட்டினார்.   

வீடுவரை புவாலேனை அழைத்துச் சென்ற நான்வாயிலில் விட்டுவிட்டு  நழுவப் பார்த்தேன். திடீரெனக் கதவு திறந்ததுகையில் மெழுகுவர்த்தியுடன் தோன்றியவளைக் கண்டதும் எனக்குக் குலை நடுங்கிற்று.    

 "அயோக்கியா! எனக்குத் தெரியுமேநீ அவரைப் போதையிலேதான் அழைத்து வருவாய் என்று" எனக் கத்தினாள். எடுத்தேன் ஓட்டம்.   

    இப்போது தெரிகிறதா,  நான் ஏன் மணம் செய்துகொள்ளவில்லை என்பதும் புறநகர்க்கு ஏன் போவதில்லை என்பதும்".   

                 -----------------------------------------------------


Monday, 14 November 2016

முதுமையிலும் இன்பம்

நூல்களிலிருந்து -- 10

மூப்பியல் மருத்துவ வல்லுநர் பேராசிரியர் வ. செ. நடராசன் இயற்றிய 'முதுமையிலும் இன்பம்' என்னும் நூல் வழங்கும் அறிவுரைகளிற் சிலவற்றைப் பகிர்கிறேன்:
  "முதுமைக் காலத் துன்பத்தைத் தள்ளிப்போட சுமார் 50 அகவையிலிருந்தே தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

     1 -- சத்துணவு -- முதுமையில் பசியும் சுவையும் குன்றுவதால் உணவின் அளவும் குறைகிறது; உணவு சத்து உள்ளதாயின்குறைவாக உண்டு,   நிறைந்த பயனடையலாம். முதுமைக்கென்று தனியான உணவு எதுவுமில்லை.

    2 -- உடற்பயிற்சி -- வயதான காலத்தில்மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுஅவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளைத் தவறாமலும் ஒழுங்காகவும் செய்துவந்தால், குருதி அழுத்தம் தவிர்த்து, எலும்பு வலிமை, நல்லுறக்கம் முதலிய நன்மைகளை அடையலாம்.

     3 -- மருத்துவப் பரிசோதனை -- முதுமை ஒரு நோயன்று; அது ஒரு பருவமே. வயதாக ஆக, பசி குறைதல், தூக்கக் குறைவு, நினைவாற்றல் மங்குதல்முதலிய குறிப்பிடத்தக்க சங்கடங்கள் உண்டாகும்; அவை முதுமையின் விளைவே என்றெண்ணி அலட்சியப்படுத்தாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை  பெறவேண்டும்.

     4  -- மன நலம் -- முதுமையில் உடல்நலம் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை மனநலமும். வயது ஏற ஏறமூளைத் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். காட்டாக, 70 வயதுக்காரருக்கு மூளையின் எடை சுமார் 65% தான் இருக்கும்; அதனால், மனச்சிதைவு, மனத் தளர்ச்சி முதலான நோய்கள் வர வாய்ப்புண்டு.
    
நடுத்தர வயதிலேயே நல்ல பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல், இசை கேட்டல், நண்பர்களுடன் அளவளாவுதல் முதலியவை நற்பலன் தரும்தியானம் மனத்தை ஒருமுகப்படுத்துவதால் அது சிறந்த டானிக். தனிமையில் முடங்கிக் கிடப்போர்க்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு மிகுதியாக ஏற்படக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. முதுமையின் எதிரியாகிய தனிமையை எப்பாடுபட்டாவது தவிர்ப்பது மிக மிக அவசியம்.
   
முதியவர் பலர் நிறைய மருந்துகளை உட்கொள்ளுகின்றனர். நோய்கள் பல இருப்பினும் எவை மிகுதியாய்த் தொல்லை தருகின்றனவோ அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து மருந்து தின்னலாம்; மருத்துவர் ஆலோசனைப்படியே செய்யவேண்டுமேயொழிய தாமாகவே மருந்து உட்கொள்ளக்கூடாதுஅவரைக் கேட்காமல் மாத்திரையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது; திடீரென்று நிறுத்துவதும் தவறு. முதுமையை வெல்ல முடியும் என்று பல மருந்துகள் கடைகளில் விற்பனை ஆகின்றன; அவை எல்லாமே தீமையை விளைக்கக்கூடியவை.  முதுமையை மருந்தினால் வெல்லவே முடியாது; அது இயற்கையாக அகவை அடிப்படையில் வருவது."

                                                       ***************************

 (படம் உதவி - இணையம்)


Thursday, 3 November 2016

ஏக்கம்

Du Bellay

துய் பெல்லெ (Du Bellay) ஆன்ழூ நகரை அடுத்த லிரே என்னும் சிற்றூரில் 16-ஆம் நூற்றாண்டில் பிறந்த பிரஞ்சுக் கவிஞர்;  31-ஆம் அகவையில், உறவுக்காரப் பாதிரியார் ஒருவருக்கு உதவியாளராய், ரோம் நகருக்கு சென்று, நான்கு ஆண்டுக் காலம் தங்க வேண்டியிருந்தது. தகவல் தொடர்பு வசதிகள் இல்லாக் காலமல்லவா? நாடு கடத்தப்பட்டது போல் உணர்ந்த அவர், அப்போது 191 கவிதைகள் (Sonnets) இயற்றினார். அங்கதமும் கையறுநிலையும் பாடுபொருளாய்க் கொண்ட அவற்றுள் ஒன்றை மொழிபெயர்த்துப் பகிர்கிறேன்:


                 1 --    பாக்கியவான்! யுலிசீஸ் போலவோ
          பொன்தோலை மீட்டவன் போன்றோ
          அரும்பயணம் ஒன்றனைச் செய்தபின்னர்
          அனுபவமும் பட்டறிவும் ஆர்ந்தவனாய்த் 
          திரும்பிவந்து உற்றாரின் நடுவினிலே
          எஞ்சிய தன் வாழ்நாளைக் கழிக்கிறவன்.


             2 --      எப்போது மீண்டுங் காண்பேன், அந்தோ!
           என்சிறிய கிராமத்தின் அடுப்புப்புகை எழும்புவதை?
           எக்காலம் மறுபடி பார்ப்பேன் என்எளிய
           இல்லத்தின் தோட்டத்தைஅதுஎனக்கு
           ஒருமானிலம் மட்டுமா, அதற்கும்மேலே!


            3  --      எனக்கதிகம் பிடிக்கிறது முன்னோர் எழுப்பிய வசிப்பிடம்
           மிரட்டுவதுபோல் தோன்றுகின்ற ரோமானிய மாளிகையினும்;
           முரட்டுசலவைக் கல்லைவிட மென்மைமிகு ஸ்லேட்;


             4--       லத்தீன் டைபரைப் பார்க்கிலும் பிரஞ்சு லுஆர்;
          பேலட்டைன் குன்றைவிட சின்னஞ்சிறிய லிரே;
          கடற்சூழலைக் காட்டிலும் ஆன்ழூவின் அமைதி.


விளக்கம்:
            யுலிசீஸ் -- ஹோமரின் இதிகாசமாகிய 'ஒடிசி' யின் நாயகன்; ட்ராய் போரில் வென்றபின் கப்பலில் நாடு திரும்புகையில் பல வித இன்னல்களை சமாளிக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

            பொன்தோல் - கிரேக்கப் புராணக் கதை: ஒரு தெய்விக செம்மறியாடு, பொன்னிறத் தோலும் பெரிய இறக்கைகளும் கொண்டிருந்தது. அது இறந்த பின்பு, ரோமம் அடர்ந்த அதன் தோலை ஒரு பூதம் காவல் காத்தது. அதை மீட்டுக் கொண்டுவர வேண்டிய பணி Jason  என்பவனுக்குக் கட்டளையாய் இடப்பட்டது; அவன் கடற்பயணம் செய்து, வினை முடித்தான்.

            சலவைக்கல் ரோமில் பயன்பட்டதுஸ்லேட் ஓடுகளால் கூரை  வேய்வது பிரான்சில் பழக்கம்.

           டைபர், லுஆர்: ஆறுகள்.

           பேலட்டைன் - ரோம் நகர் இதன்மீது நிர்மாணிக்கப்பட்டது.

---------------------
(படம் உதவி - இணையம்)