Wednesday 24 July 2019

காரைக்கால் அம்மையார்





  நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலை ஒட்டி அமைந்துள்ள சிறு நகரம் காரைக்கால். இங்கு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்காலம்மையார் என்ற சிவ பக்தையின் வரலாற்றை ஐந்நூறு ஆண்டு கழித்து இயற்றப்பட்ட பெரிய புராணம் விவரிக்கிறது. அந்த வரலாற்றுக்குச் சான்றாக இரு பாக்கள் காட்டப்படுகின்றன.

முதல் காட்டு – 9-ஆம் நூற்றாண்டில் சுந்தரமூர்த்தி நாயனார் தம் “திருத்தொண்டத் தொகை”யில் 63 அடியார்களைப் பட்டியலிட்டுள்ளார். அதில், “பேயார்க்கு அடியேன்” என்று அவர் குறிப்பிட்டிருப்பது காரைக்காலம்மையாரைத்தான் என்கிறார்கள்.

  ஊர்ப்பெயரும் இல்லை, அம்மையார் என்ற சிறப்புப் பெயரும் இல்லை. பின் எப்படிப் பேயார் என்றால் காரைக்காலம்மையார் என்கிறார்கள்? பொருந்தவில்லையே!

  பேய் பூதம் என்று பெயர் சூட்டிக் கொள்வது பழைய காலத்து வழக்கம்:

  1. பேய் ஆழ்வார் ஒரு வைணவப் பெரியார்.
  2. பேய் மகள் இளவெயினி ஒரு புலவர். புறநானூற்றில் இவரது பாடல் இருக்கிறது.
  3. பேயனார் ஐங்குறுநூற்றில் 100 பாடல் பாடியவர்.
  4. பூதத்து ஆழ்வார் பற்றி அறிவோம்.
  5. பூதப்பாண்டியன் புறம் 71-ஆம் செய்யுளை இயற்றியவர்.
  6. நப்பூதனார் முல்லைப்பாட்டின் ஆசிரியர்.

  ஆதலால் சுந்தரரின் பேயார் யாரோ ஒரு சிவபக்தர். அவருக்கு எந்தச் சிறப்பும் இல்லாமையால் பெயரை மட்டும் சுந்தரர் சொன்னார். அவர் சாதாரண அடியார்களுக்கெல்லாம் அடைமொழி தந்திருக்கிறார்;

  அ) ஒலிபுனல் சூழ்ந்த சாந்த மங்கை
        நீல நக்கற்கு அடியேன்:

  ஆ) வரிபொழில் சூழ்ந்த குன்றையார்
        விறல் மீண்டாற்கு அடியேன்:

  இ) இலை மலிந்த வேல் நம்பி
        எறிபத்தற்கு அடியேன்:

  ஈ) வார்கொண்ட வனமுலையாள் உமை
        பங்கன் கழலே மறவாது கல்லெறிந்த
        சாக்கியற்கும் அடியேன்.

  இறுதியில் சொன்ன சாக்கிய நாயனார் புரிந்த அருஞ்செயல் என்ன? கடவுள் சிலை மீது கல் வீசியது!

  இவ்வாறு பலரை விரிவாய்ப் போற்றிய சுந்தரர் சிவனை நேரிற் கண்ட மகிமை பொருந்தியவரும் அவனால் ‘அம்மை’ எனப் போற்றப்பட்டவருமான ஒருவரைப் பேயார் என்ற ஒற்றைச் சொல்லால் சுட்டுவாரா? மாட்டார்; எனவே பேயார் என்பவர் காரைக்காலம்மையார் அல்ல.

  இரண்டாம் காட்டு – தமது “திருத்தொண்டர் திருவந்தாதி”யில் நம்பியாண்டார் நம்பி (10 ஆம் நூ.)

  நம்பன் திருமலை நான்மிதியேன் என்று தாளிரண்டும்
  உம்பர் மிசைத்தலை யால் நடந் தேற உமை நகலும்
  செம்பொன் உருவன் என் அம்மை எனப்பெற்றவள் செழுந்தேன்
  கொம்பினுகும் காரைக் காலின் மேய குலதனமே

என்று பாடியுள்ளார்.

இதன் கருத்து – இறைவனின் திருமலையாகிய கைலையை நான் காலால் மிதிக்க மாட்டேன் என முடிவு செய்து கால்களை மேலே தூக்கிக்கொண்டு தலையால் நடந்து ஏற அதைப் பார்த்துப் பார்வதி சிரிக்க “என் தாய்” என்று சிவன் சொல்லிப் பெருமைப் படுத்தினார். அத்தகைய சிறப்புப் பெற்றவர் காரைக்காலில் தோன்றினார்.

  இதை வாசித்ததும் சில வினாக்கள் எழுகின்றன;

  1. உமை ஏன் சிரித்தாள்? அவளும் கடவுள்தானே? அவளுக்குத் தெரியாதா வருபவர் ஒரு மாண்புமிகு சிவபக்தை யென்பது?

  2. மலையுச்சியில் மூவருக்கிடையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை அவர்களுள் யாரும் வெளியிட்டதாய்ப் புராணங்கூட இல்லை; அப்படியிருக்க நம்பிக்கு எப்படித் தெரிந்தது? அருகிலிருந்து பார்த்தவர் போலல்லவா வர்ணித்திருக்கிறார்?

  ஆகவே இதெல்லாம் அவரது கற்பனை என்பது திண்ணம்.

  சான்றுகளாய் முன் வைக்கப்பட்ட இரண்டிலும் கதையில் முக்கியத் திருப்பம் ஏற்படுத்திய மாம்பழம் பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லை; ஆதலால் சேக்கிழார் முழுக்க முழுக்க ஒரு கற்பனை வரலாற்றை ஜோடித்துள்ளார் எனத் தெரிகிறது.

  பேயார் மூன்று சிறு நூல்களை இயற்றியுள்ளார்;

  - திரு இரட்டை மணிமாலை (10 பா).
  - திருவாலங்காட்டுத் திருப்பதிகம் (10)
  - அற்புதத் திருவந்தாதி (100)

(தம் நூல்களுக்கு அவரே திரு என்றும் அற்புத என்றும் அடைமொழி சேர்த்திருக்கமாட்டார்.)

  ஆக மொத்தம் 120 பாடல்களில் அவர் தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் எந்த ஒன்றையுங் குறித்த சூசகமாகக்கூடத் தெரிவிக்கவில்லை. இறைவனை வேண்டியவுடனேயே இரு மாங்கனிகள் அடுத்தடுத்துக் கிடைத்தமை மகத்தான அதிசயம் அல்லவா? அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி செலுத்தவில்லை; சிவனை நேரிற் பார்த்தமையும் தாய் எனத் துதிக்கப்பட்டமையும் சாதாரண விஷயமா? இது பற்றிக்கூட அவர் மகிழ்ந்து முக்கண்ணனைப் போற்றவில்லை.

  எல்லாம் கற்பனை என்பதற்கு இதுவுஞ் சான்று.

  பாட்டுகளில் வேறு என்னதான் சொல்லியிருக்கிறார்?

  கைலாசபதியின் அருளைப் பெறாமல் தாம் துன்புற்றதைத் தெரிவித்திருக்கிறார்!

  திருவந்தாதி முதற்பா:

  பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
  சிறந்து நின்சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
  மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
  எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?

பொருள் – நான் பிறந்து பேசத் தெரிந்த காலம் முதல் பக்தி மிகுந்து உன் திருவடிகளையே நினைக்கிறேன். கரு நிறங்கொண்ட தொண்டையை உடைய தேவர் தலைவனே, நீ எப்போது என் துன்பத்தைத் தீர்ப்பாய்?

இரண்டாம் பா.

  இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
  ……..

பொருள் – அவர் என் துன்பத்தை நீக்காவிட்டாலும் என்மீது இரக்கப்படாவிடினும்…

நான்காம் பா.

  ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டால்
  கேளாதது என்கொலோ?

பொருள் – நான் என் அல்லலைப் பல தடவை முறையிட்டும் இறைவன் கேளாமல் இருக்கிறான்.

44-ஆம் பா.

  தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
  எனக்கே அருளாவாறு என்கொல்?

பொருள் – எனக்கு அருள் செய்யாமல் இருப்பது ஏன்?

  இறுதிவரை இறவனருள் கிட்டவேயில்லை; கிடைத்திருந்தால் மகிழ்வுடன் நன்றி தெரிவித்திருப்பார். இப்படிச் சோகப்பாட்டுப் பாடிய ஒருவர் கடவுளின் பெறற்கரிய பேறு பெற்றவர் என்று கதை கட்டியிருக்கின்றனர்.

  முக்கியமான தொன்றைக் கவனிக்க வேண்டும். 44-ஆம் பாட்டில் தம்மை அடியன் என ஆண்பாலில் சுட்டியுள்ளார்; ஆகவே நூலாசிரியர் ஓர் ஆண்.

61-ஆம் பா.

  அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
  இன்றும் திருவுருவங் காண்கிலேன் – என்றுந்தான்
  எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன்
  எவ்வுருவோ நின்னுருவம் ஏது?

பொருள் – சிறு வயதில் உன் உருவம் எது என்று தெரியாமலே உன்மீது பக்தி கொண்டேன்; வயதான இப்போதும் அதை நான் காணவில்லை. உன் இறைவனின் உருவம் எது என்று வினவுகிறவர்களுக்கு என்ன விடை சொல்வேன்? உன்னுருவம் எப்படிப்பட்டது?

  கடவுளை நேரிற் கண்டவர் இவ்வாறு பாடுவாரா?

  காரைக்காலின் வடக்கெல்லையில் உள்ளது கோவில்பத்து என்ற சிற்றூர். பழைய பெயர் திருத்தெளிச்சேரி. இங்குள்ள பார்வதீஸ்வர ஸ்வாமியைத் தரிசிக்க வந்த சம்பந்தர் (7 ஆம் நூ.) தேவாரம் பாடியிருக்கிறார். கொஞ்ச காலத்துக்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்த, சிவனால் அம்மை என விளிக்கப்பட்ட புனிதவதியார் பற்றிக் குறிப்பாகக்கூட அவர் எதுவுஞ் சொல்லவில்லை.

  காரைக்காலுக்கு 5 கி.மீ. மேற்கேயுள்ள திருநள்ளாற்றுக்கு சம்பந்தர் வந்திருக்கிறார்; அப்பரும் வந்தார். அந்த வட்டாரத்தில் அம்மையாரின் பெருமை தலைமுறை தலைமுறையாகப் பேசப்பட்டு வந்திருக்கும்; அவரைப் பற்றி உள்ளூர் பக்தர்கள் அந்த இருவரிடமும் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்; ஆனால் அவர்களுடைய பாடல்களில் அம்மையாரைப் பற்றிப் பேச்சில்லை.

  அவர்கள் காரைக்காலுக்கு வரவேயில்லை.

  மேற்சொன்ன செய்திகள் யாவும் அம்மையார் ஒரு கற்பனை பக்தை என்பதற்கு அதிகப்படியான சான்றுகள்.

  ஒரு பொருள் குறித்து 10 பாட்டுப் பாடினால் அந்தத் தொகுப்பு “பதிகம்” எனப்படும். தமிழில் இயற்றப்பட்ட முதல் பதிகம் திருவாலங்காட்டுத் திருப்பதிகம்: ஆகையால் அது “மூத்த திருப்பதிகம்” எனப் போற்றப்படுகிறது. சைவ நூல்களைத் திருமறைகளாய் தொகுத்தவர்கள் அதையும் அதைச் சேர்ந்த மற்ற இரு நூல்களையும் அல்லவோ முதல் திருமுறையாக வைத்திருக்க வேண்டும்? அவற்றைப் பதினோராம் திருமுறையில் தனிச்சிறப்புத் தந்தல்ல, பலர் எழுதிய நூல்களோடு சேர்த்துப் பத்தோடு பதினொன்றாக வைத்துள்ளனர்: காரணம் அவற்றின் ஆசிரியர் ஒரு சாதாரண புலவர்.

  ஒருவர் தம் கருத்துகளைப் பாட்டாக இயற்றி அவற்றைப் பிறரது நூல்களில் நுழைத்துவிடுவதுண்டு. அதன்படி பேயாரின் நூல்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் யாரோ ஒருவர் தம் பாட்டொன்றைச் செருகியிருக்கிறார். (பதிகத்தைப் பதினொரு பாட்டாக்குவது மோசடியல்லவா?) அந்த மூன்று பாக்களிலும் “காரைக்காற் பேய்” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. மேலும் சிவகதி என்னுஞ் சொல்லைப் பார்க்கிறோம். மூலமாகவுள்ள 120 பாக்களில் ஓரிடத்திற்கூட சிவன் என்ற சொல் இடம்பெறவில்லை!

  பேயார் காரைக்கால்வாசி யென்றால் அருகிலுள்ள தில்லையைத் தான் பாடியிருப்பார். தில்லைதான் சைவர்களுக்கு முக்கிய தலம். தில்லைக் கூத்தனின் “எடுத்த பொற்பாதம்” தானே அப்பரின் மனங் கவர்ந்தது? தொலைதூரத்தில் உள்ள திருவாலங்காட்டைப் பாடியிருப்பதால் பேயார் அந்தப் பகுதியில் வாழ்ந்தவர் என ஊகிக்கலாம்.

  முடிவுரை

  1. காரைக்காலம்மையார் என்று ஒருவர் வாழ்ந்ததில்லை.

  2. இரு இரட்டை மணிமாலை முதலியவற்றை இயற்றியவர் பேயார்; திருவாலங்காட்டுவாசி.

&&&&&
(படம் உதவி இணையம்)

Saturday 13 July 2019

மாங்கனித் திருவிழா




  
ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நிகழும் காரைக்கால் மாங்கனித் திருவிழா காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கிறது.

  முதல் நாளில் இரு முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். முற்பகலில் புனிதவதிபரமதத்தன் திருமணம்; மாலையில் பூப்பல்லக்கில் மணமக்கள் ஊர்வலம்.

  இரண்டாம் நாள் காலை முதல் நள்ளிரவு வரை நடைபெறுகிற பல நிகழ்வுகளில் மிக மிக முக்கியமானது இறைவன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஊர்வலமாய் வந்து புனிதவதியின் இல்லம் நோக்கிச் செல்வது. அவருக்குப் பிச்சையாண்டவர் என்று பெயர். அவரது சப்பரத்தைத் திரளான பக்தர் கூட்டம் சூழ்ந்து நடக்கையில் அங்கங்கு மாடிகளிலிருந்து மக்கள் அவர்களை நோக்கி மாம்பழங்களை எறிவார்கள்; அவற்றைப் போட்டி போட்டு இடித்துத் தள்ளித் தாவிப் பிடித்து பக்தர்கள் உண்பார்கள்; அது ஆண்டவன் பிரசாதம்!




  புனிதவதியின் வாழ்க்கை வரலாறு பெரிய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது:

  காரைக்காலில் புனிதவதி யென்றொரு சிவ பக்தை வாழ்ந்துவந்தார். சிவனடியார்களைப் போற்றுவதும் அவர்களுக்கு உணவு அளித்துப் பேணுவதும் அவரது விருப்பமான வழக்கம்.

  அவருக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தனுக்கும் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை காரைக்காலிலேயே தங்கி வாணிகம் செய்துவந்தார். ஒரு நாள் அவர் இரு மாங்கனிகளை ஆள்மூலம் வீட்டுக்கு அனுப்பினார்.

  புனிதவதியின் மகிமையை உலகுக்கு உணர்த்த வேண்டி சிவபெருமான் ஓர் இரவலன் கோலத்தில் அவரில்லஞ் சார்ந்து யாசித்தபோது அவர் அன்புடன் அன்னமிட்டு ஒரு மாங்கனியைக் கறியாக வைத்தார்.

  பின்பு பரமதத்தன் வந்து சாப்பிட்ட போது தமக்குப் பரிமாறப்பட்ட பழத்தையுண்டு அதன் சுவையில் சொக்கி மற்ற கனியையும் தின்ன ஆசையுற்ற அதைக் கேட்டார். அதை எதிர்பார்க்காத புனிதவதி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து உள்ளே போய் இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கடவுளை வேண்டக் கையில் ஒரு கனி விழுந்தது; அதைக் கணவர்க்குக் கொடுத்தார். தின்ற அவர், “அதைக் காட்டிலும் இது மிக அற்புதச் சுவையுடையதாக இருக்கிறதே! இது வேறு ரகப் பழம்; இது ஏது? சொல்என்று கட்டளையிட்டதும் மனைவி நிகழ்ந்தவற்றைக் கூறினார். அவர் நம்பாமல்எங்கே? என் எதிரில் வேறு கனி வரவழைத்துக் காட்டுஎன்றதும் மீண்டும் அற்புதம் நிகழ்ந்தது.

  தம் மனைவி தெய்விக ஆற்றல் உள்ளவர் என்பதை யறிந்துகொண்ட பரமதத்தன் அவருக்குக் கணவனாய் இருக்கத் தனக்குத் தகுதியில்லை என முடிவு செய்து வேற்றூர்க்குப் போய்விட்டார்.

  இனிமேல் தாம் வாழ்வதில் அர்த்தமில்லை எனக் கருதிய புனிதவதி, தமது சதையை உதிர்த்துவிட்டு எலும்பு உருவாகிக் கடவுளைத் தரிசிப்பதற்காகக் கைலை மலையில் தலைகீழாய் நடந்து ஏறினார், கண்டார். அவரால்அம்மைஎன்று சுட்டப்பட்டார். ஆதலால்அம்மையார்என்ற பட்டப்பெயர் பெற்றார்.



  கதையைச் சுருக்கமாகக் கூறினேன்.

  காரைக்காலில் கு. மலைப் பெருமாள் பிள்ளை என்ற பெருஞ் செல்வர் வாழ்ந்தார். எண்பது வேலி நன்செயும் பத்து வீடுகளும் அவரது சொத்து. அவர் வள்ளலாகவும் திகழ்ந்தார். நாள்தோறும் ஐந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய அவர் ஏற்பாடு பண்ணியிருந்தார். ஊரில் இயங்கும் அரசு தாய்சேய் மருத்துவமனை அவர் தமது செலவில் எழுப்பியளித்ததுதான்.

  அவர்தான் காரைக்காலம்மையார்க்கு ஒரு சிறு கோவில் கட்டிக் குளமும் வெட்டி மாங்கனித் திருவிழா நடப்பதற்கு ஆவன செய்தவர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விழா நிகழ்கிறது.

  அவர் 1932-இல் காலமானார்.

*******

(குறிப்புஇந்த ஆண்டிலிருந்து மூன்று நாள் விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 14-7 இல் திருமணமும் ஒரு நாள் விட்டு 16-7 இல் பிச்சையாண்டவர் ஊர்வலமும் நிகழும்.)

(படங்கள் உதவி - இணையம்)