Friday, 27 May 2016

தனியே அவர்க்கோர் குணம்


நூல்களிலிருந்து - 7

 (தமிழரைப் பற்றிப் பேச அல்லது எழுத நேர்ந்தால், பெரும்பாலானவர்கள், ஆகா, ஓகோ என்று தக்க ஆதாரமின்றி வானுக்கு உயர்த்திப் புகழ்வது வழக்கம். நடுநிலைத் திறனாய்வால் கண்ட முடிவுகளை அச்சமின்றித் தயக்கமின்றி வெளிப்படுத்தியவர் எஸ்.வையாபுரியார்; அடுத்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள க.ப.அறவாணன் அவர்கள்.

  தமிழர் என்றோர் இனமுண்டு
  தனியே அவர்க்கொரு குணமுண்டு

எனப் பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கர்; எது அந்தக் குணம் என்று ஆராய்ந்து முடிவு  கூறுகிறார் அறவாணன்.

  அவரது கட்டுரையொன்றை ஆய்வுக் கோவை 2004  என்னும் நூலிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன்.)

முனைவர் க.ப.அறவாணன்


    தனியே அவர்க்கோர் குணம்


  தமிழ் இலக்கியங்கள் பொதுவாகவும் அற இலக்கியங்கள் குறிப்பாகவும் தமிழர் நடத்தைகளை எந்த அளவில் பாதித்தன? 'போதிய அளவு பாதிக்கவில்லை அல்லது தமிழர்கள் இலக்கியங்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்த அளவிற்குப் பெரும்பான்மை, தமிழ் மக்களின் கண்ணாடியாக விளங்குவதில்லை' என்பனவே இக்கட்டுரையின் கருதுகோள்.

  உடலோடு ஒட்டிய அங்கங்கள், உடல்மேல் மாட்டிய ஆடைகள், இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. தோலின் நிலைமை வேறு, ஆடையின் நிலைமை வேறு. தோல் உடலின், உயிரின் ஒன்றிய அங்கம்; ஆடை அத்தகையது அன்று. தமிழரைப் பொறுத்தவரை, இலக்கியங்களும் அறங்களும் சமயங்களும் அவை சொல்லும் கோட்பாடுகளும் தமிழரின்  அங்கம் ஆனதில்லை; அவை வெறும் அலங்கார ஆடை மட்டுமே.

  சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய அற இலக்கியங்கள், திருக்குறள், இவற்றின் பின் தோன்றிய அற இலக்கியங்கள், அவற்றில் சொல்லப்பட்ட வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள், கடந்த நூற்றாண்டுகளில் பெரிய அளவு மக்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை; அற இலக்கியங்கள் மட்டுமன்றிகம்ப ராமாயணம், வில்லி பாரதம் முதலிய இதிகாசங்களும் சிலம்பு, மணிமேகலை முதலாய காப்பியங்களும் பெரிய புராணம், கந்த புராணம் முதலாய புராணங்களும் இன்ன பிறவுங்கூட இலக்கிய அரங்குகளிலும் கோயில் மேடைகளிலும் பயன்படுத்தப்பட்டன; அவை மக்களால் சுவைத்து இரசிக்கவும்பட்டன; ஆனால், மக்கள் வாழ்க்கையோடு செரிமானம் ஆகவில்லை; இரத்தத்தில் கலக்கவில்லை; நாடி நரம்புகளில் ஏறவில்லை. தமிழருடைய கடந்த நூற்றாண்டு வாழ்க்கையில் கிடைத்திருக்கும் சான்றுகளை வைத்து ஆராயும்போது மேற்கண்ட இலக்கியங்கள் எதுவும் அவர்களை அசைத்ததாகத் தெரியவில்லை. சான்றாகக் கள் குடித்தல், புலால் தின்னுதல், அதற்காக உயிர்களைக் கொல்லுதல்ஆண் பெண் பாலுறவுச் சிக்கல்கள், பரத்தையர் பெருக்கம், பொய்ஏமாற்று, திருட்டு முதலாய சமுதாயக் குற்றங்கள் குறைந்தனவாகத் தெரியவே இல்லை; நாளும் பெருகி வருகின்றன.

  இலக்கியங்கள்வழிப் பரப்பப்பட்ட சமுதாய அறங்கள் மட்டுமன்றி, இந்தியச் சமயங்கள் வழியாகப் பரப்பப்பட்ட அறங்களும் மக்களைச் சென்றடையவில்லை. சான்றாக, கி.பி. 3 முதல் 6  வரையிலான 300 ஆண்டுகளில், தமிழகத்தில் சமண  பெளத்த மதங்கள் மேலோங்கியிருந்தன; அவற்றின் நெறிகள் இலக்கியம், நடைவழிப் பயணம், மக்களிடம் கதை சொல்லிப் பிரச்சாரம் செய்தல்வழி மேற்கொள்ளப்பட்டன; விளைவாகச் சமண பெளத்தச் சடங்குகள், கோயில்கள், சிலை வழிபாடுகள் ஆகியன பெருகின; அந்த அளவுஅம்மதச் சான்றோர் பரப்பிய ஜைன அறமோ பெளத்த அறமோ பெருகவில்லை, நிலைக்கவில்லை என்பதைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தமிழருடைய தொடர் வரலாறு இன்றுவரை நிறுவிவருகிறது; விலக்காக ஆங்காங்கே சில  ஊர்களில் இருக்கும் மத நெறிகளைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் நெறிகளாகக் கொள்ள முடியாது.

  சைவர்கள் தேவாரங்களையும் திருவாசகத்தையும் போற்றினர்; வைணவர், திவ்வியப் பிரபந்தத்தைப் போற்றினர்; ஆனால் இவை இறைவனை நோக்கிய போற்றிகளாக மட்டும், பக்தி போதை தரும் இறைவனின் அருட்செயல்களைப் பற்றிப் பேசுவனவாக மட்டும்  அமைந்துள்ளன. இப்பாடல்களில் அறக் கூறுகளின் பங்கு மிக மிகக் குறைவு. கிறித்துவ விவிலியத்தையும் அதில் உள்ள நீதி மொழிகளையும், இசுலாமியரின் திருக்குறானையும் அதிலுள்ள பல்வேறு நெறியுரைக்கும் கருத்துகளையும் ஒப்பிடும்போதுதேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றுள் அடங்கியுள்ள அறக்கருத்துகள்  மிகக் குறைவு; எனவே இவற்றால் மக்களிடம் அறநெறிகள் பரவவில்லை; பக்தி உணர்வுமயமாதல் மட்டுமே பெருகிற்று.

  ஆக, இலக்கியங்கள், அற இலக்கியங்கள், இந்திய சமயங்கள், இந்திய சமய இலக்கியங்கள் மக்கட் சமுதாயத்தை அறக் கோட்பாட்டில் பெரிதாக மாற்றி அமைத்துவிடவில்லை. ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுசட்டம் மேற்கண்டவற்றின் இடத்தைப் பெற்றுக்கொண்டது. வெளிப்படையான தண்டனை முறைகள் காவல் துறையினராலும் நீதித் துறையினராலும் வழங்கப்படுவதால், ஓரளவு இச்சட்டங்கள் மதிக்கப்படுகின்றன; ஆனால் சட்டங்களை மதிக்காத மக்கள் என்றே தமிழர்கள் மற்றவர்களால் கணிக்கப்படுகின்றனர். சிங்கப்பூர் முதலிய நாடுகளை ஒப்பிடும்போது அக்கணிப்பு சரி என்றே கருதத் தோன்றுகிறது. 

 கற்றவர்களிடம் இலக்கியம் சொல்லும் செய்தி (message) கொய்யாப் பழத்தின் தோல் போல அங்கமாவதில்லை; புளியம்பழம், தோல் வேறு சதை வேறாக இருப்பதுபோல், படித்த இலக்கியக் கருத்துரை வேறு, வாழ்வு வேறாக அயன்மையுற்று வாழ்கின்றனர்.

  சமுதாய ஒழுங்குகளைப் பயிற்றுகின்ற, நடைமுறைப்படுத்த விரும்புகின்ற மதங்களையும் தத்துவங்களையும் இசங்களையும் புறக்கணிக்கும் குணம் உடையவர்களாகவே தமிழர்கள் வரலாறு நெடுகத் தென்படுகின்றனர். சான்று: பெளத்தம், சமணம், கம்யூனிச இயக்கம், பெரியார் இயக்கம். மாறாக, தலைமை வழிபாட்டிலும் உணர்ச்சிவயத்திலும் தங்களை நிலைநிறுத்தும் மதங்களையும் கோட்பாடுகளையும் இயக்கங்களையுமே பின்பற்றுகின்றனர். சான்று: பக்தி இயக்கம், வேத சமயம், சினிமாக் கதாநாயகர்களை முன்னிறுத்தும் அரசியல் இயக்கங்கள்.


        +++++++++++++++++++++++++++++++++++++
(படம் உதவி - இணையம்)Thursday, 19 May 2016

கிரேக்க இதிகாசங்கள்

Homer

 தொல்பழங்காலக் கிரேக்க நாகரிகத்தை அறியப் பெரிதுங் கைகொடுப்பவை இலியட், ஒடிசி என்னும் இதிகாசங்கள்; அவற்றை இயற்றியதாக நம்பப்படும் ஹோமரைப் பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட ஒன்றுமில்லையெனலாம்.

  அவர் பிறந்த ஊர் எது என்பது மர்மம்: ரோட்ஸ், சலாமிஸ், ஏதென்ஸ் எனப் பல நகரங்கள் சொந்தங்கொண்டாடின; புகழ் மிகுந்த கவிஞரொருவரைப் பெற்றெடுத்த பெருமையை அடைவதற்கான போட்டி.

  இதிகாசங்களின் நடையை ஆராய்ந்தவர்கள், அவர் பொ.யு.மு. 850-800  காலக்கட்டத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தனர்; அவர் பார்வையற்றவர் எனப்படுகிறது; இதுவும் ஐயத்துக்கு உரியதே. எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் படைப்புகள் ஹோமருடையவைதானா என்பதே வினாக்குறியாக இருக்கிறது.

 உலகின் பிற நாடுகளில் போலவேகிரேக்கத்திலும் பழங்காலத்தில் வாய்மொழிப் படைப்புகள்தான் தோன்றினஇலியடும் ஒடிசியும் கதைப் பாடல்களாகப் (தேசிங்குராஜன் கதை போல்) பிறந்து சில  நூறாண்டுக்காலம் தலைமுறை தலைமுறையாய்ப் பாடப்பட்டு வந்தன என்றும் அவ்வப்போது மாற்றங்களை அடைந்துள்ளன எனவும் அவற்றைச் செய்யுள் வடிவ இதிகாசமாக்கியவர் ஹோமர் என்றும்  திறனிகள் கூறுகிறார்கள்;

           இலியட் சுருக்கம்

   ஸ்பார்ட்டா  மன்னர் அகமெம்னோன்; அவரது தம்பி மெனெலாசின் மனைவி ஹெலென் நிகரற்ற பேரழகி. அவளை ட்ராய் (Troy) இளவரசன் பாரிஸ்  என்பவன், அழைத்துச் சென்றுவிட்டான். மீட்பதற்காக   அகமெம்னோன் தலைமையில் கிரேக்கத்தின் பெரும்பாலான ராஜ்யங்கள் திரண்டன. கப்பல்கள் தயார்; சாதகமாய் வீசாத காற்றைத் திசை திருப்புவதற்காக, அருள்வாக்காளர் ஒருவர் சொன்ன யோசனைப்படி, தலைவரின் மகள் இஃபிழெனியாவைத் தெய்வத்துக்குப் பலியிட்டனர்அனுகூல நிலை ஏற்படவே, கப்பற்படை ட்ராய் நோக்கிக் கிளம்பிற்று. பத்தாண்டுக் காலம் போர் நீடித்தது.
   வெற்றி தோல்வி  நிர்ணயிக்க இயலாத நிலையில், கிரேக்கப் பெரு மறவன் அக்கிலஸ், ட்ராய் மாவீரன் ஹெக்டோருடன் பொருது வென்று கொன்று வீழ்த்தினான்ஹெக்டோரின் ஈமச்சடங்குடன் இதிகாசம் முற்றுகிறது.

    24 தொகுதிகள் கொண்ட இலியட்,  போரின் தொடக்கத்தையும் முடிவையும் சொல்லவில்லை;   இறுதியாண்டு நிகழ்ச்சிகளைக்கூட முழுமையாய் விவரிக்காமல் ஒரு பகுதியை மாத்திரம் பாடுகிறது.

  அகழாய்வு தெரிவிக்கிறது, போர் நிகழ்ந்தது உண்மையே எனவும்  அக்கால வணிகர்கள் போய் வந்த முக்கிய பாதையை ட்ராயிடமிருந்து கைப்பற்றுவதற்கே கிரேக்கர் படையெடுத்தனர் எனவும்ஆனால்  உண்மைக்  காரணத்தை மறைத்துக் கற்பனைப் புராண நிகழ்ச்சிகளை  நுழைத்துள்ளனர்.
   ஒடிசியும் 24 தொகுதிகள் உடையது. கிரேக்க மன்னன் ஒடிசியுஸ், ட்ராய் போர் முடிந்த பின்பு, தன் நாடாகிய இத்தாக்காவுக்குக் கப்பலில் திரும்பிச் செல்கையில் எதிர்ப்பட்ட இடுக்கண்களை சமாளித்து வெற்றிகரமாய்ப் பயணத்தை முடித்தான்; அதற்குப் பத்தாண்டு ஆயிற்று.

 அவன் திரும்பி வரமாட்டான் என நம்பிய சிலர்அரண்மனையை ஆக்கிரமித்து அட்டகாசம் புரிந்துகொண்டிருந்தனர். ஒடிசியுஸ் அவர்களை எதிர்த்து சமர் செய்து கொன்றொழிக்க வேண்டியிருந்தது. பின்னரே மனைவியுடனும் மகனுடனும் இணைந்தான்.

     இரண்டு இதிகாசங்களிலும் மொத்தம் 27583 அடிகள் உள்ளனவாம்.


                  &&&&&

Friday, 6 May 2016

கிரேக்க வரலாறு


 இன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம், பொருளாதார வீழ்ச்சியுற்று, கடன் சுமை தாங்காமல், திண்டாடித் திணறிக்கொண்டிருக்கிறது. அது ஒரு காலத்தில், மானிட வரலாற்றின் தொடக்கக் கட்டத்தில், எய்தியிருந்த புகழ் என்ன! பெருமை என்ன! ஹோமர், சாக்ரட்டீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், ஆர்க்கிமீடிஸ், பித்தகோரஸ் முதலிய  கவிஞர், எழுத்தாளர், சிந்தனையாளர், கலைஞர்மறவர் எனப் பலப்பல துறைகளிலும் உச்சிக் கொம்பில் வீற்றிருந்து, பிற நாட்டார்க்கு முன்னோடிகளாய்த் திகழ்ந்த தவப்புதல்வர்களால் பொலிந்த நாடல்லவா  அது?


 அந்தத் தலைசிறந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வோம்: பழங்காலத்தில், வடக்கிலிருந்து வந்து கிரேக்க நாட்டுக்குள் புகுந்து பரவிக் கைப்பற்றிப் பல நூற்றாண்டுக்காலம் ஆட்சி செலுத்தியவர்கள் அக்கியர் (Acheans). அவர்களின் தலைவர் அகமெம்னோன் (Agamemnon), பொ.யு.மு. 12-ஆம் நூற்றாண்டில், ஆசியக் கண்டத்தின் ட்ராய் என்ற நகரை எதிர்த்துப் படையெடுத்துப் போரிட்டு வென்றாராம்; அந்தப் போரைப் பாடுவன ஹோமரின் இலியட், ஒடிசி ஆகிய இதிகாசங்கள்; இவை ட்ராய் போருக்கு  மூன்று நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்டவை.

   அக்கியரின் தலைநகராய் மிளிர்ந்த மைசீனி (Mycenae)  வழியாய்ப் போய்வந்த அக்கால வணிகக் கூட்டங்களுள் முக்கியமானவர்கள் க்ரீட்டியர். க்ரீட்டி என்னும் தீவுவாசிகளாகிய அவர்கள்மேம்பட்ட நாகரிகமொன்றுக்கு சொந்தக்காரர்களாய்த் திகழ்ந்தார்கள்; அவர்களது உடையிலிருந்து வாழ்க்கைமுறைவரை எல்லாவற்றையும் பார்த்து வியந்த அக்கியர்அவர்களைப் பின்பற்றித் தாங்களும் நாகரிக முன்னேற்றம் பெற்றனர்; அவர்களைப் போன்றே தாங்களும் வாணிகர்களாக, கடலோடிகளாககலைஞர்களாக உயர்ந்தனர்.
 பொ.யு.மு. 11-ஆம் நூற்றாண்டில், டொரியர் (Dorians) என்னும் கூட்டத்தார், நாட்டினுள் நுழைந்து, கண்ணிற்பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கி, கொளுத்தியழித்துக் கோரத் தாண்டவமாடித் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்கள். சுதந்தரத் தாகங் கொண்ட அக்கியருள் ஒரு பகுதியினர் வெளியேறி, இப்போதைய துருக்கியின் கடற்கரைகளில் வாழிடங்கள் அமைத்து வசிக்கத் தொடங்கினார்கள்; அங்கேதான், கிரேக்கரின் சொந்த நாகரிகம் முகிழ்த்தது.


   மேற்கொண்டும் மக்கள்அவ்வப்போது தாயகத்தை விட்டுக் கூட்டங் கூட்டமாய்க் கிளம்பிப் போய் நடுநிலக்கடலின் கரைகளிலும் ஊர்களைத் தோற்றுவித்தார்கள்; (ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்தை ஒப்பிடலாம்). ஒவ்வொன்றும் சுதந்தர நாடாய்ப் பரிணமித்தது; முக்கியமானது, 'பெரிய கிரேக்கம்' என்றழைக்கப்பட்ட நாடு; தென் இத்தாலிஅதையடுத்துள்ள சிசிலித் தீவு ஆகியவை அதில் அடங்கியிருந்தன


 இவ்வாறு புவியியல் ரீதியாய்ப் பிரிந்து வாழ்ந்த மக்கள், மதத் துறையில்  மட்டும் தாயகத்துடன் இணைந்திருந்தார்கள். நான்கு ஆண்டுக்கு ஒருமுறை, முழுமுதற்கடவுள் சீயசுக்காக (Zeus) கொண்டாடப்பட்ட ஒலிம்ப்பிக் விழாவில் எல்லா நாட்டு கிரேக்கர்களும் தாயகத்துக்கு வந்து மகிழ்ச்சி பொங்கக் கலந்துகொண்டார்கள், பங்கெடுத்தார்கள்ஐந்து நாள் தொடர்ந்து பற்பல மதச் சடங்குகளும் விளையாட்டுப் போட்டிகளும் அப்போது நிகழ்ந்தன.


   கிரேக்கம் குன்றுகளும் மலைகளும் நிறைந்த தேசம்அவை மக்களை ஒன்றுசேர விடாமல் பிரித்தனஆகையால் அங்கங்கு உருவாகிய ஊர்கள் தமக்கென சொந்த ஆட்சியை நிறுவிக்கொண்டன. தேவையானபோது, எல்லாவூர்த் தலைவர்களும் கூடித் தங்களுள் ஒருவரை மன்னராக்கினர்.  இவர்மத விழாக்களுக்குத் தலைவர்படைத்தளபதி, நீதிபதி என முக்கிய அலுவல்களை மேற்கொண்டார்.  தமிழரசர் மூவரும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டதைப்போல், எல்லா கிரேக்க நாடுகளும் பகைமை பாராட்டித் தாக்கிக்கொள்வது சகஜமாய் இருந்தது. அவற்றுள் வலிமை மிக்கனவாய்த் தலைதூக்கிய நாடுகள் இரண்டு:

  1 -- ஸ்பார்ட்டா (Sparta)   2 -- ஏதென்ஸ் (Athens).


   டொரியர் உருவாக்கிய ஸ்பார்ட்டா, வீரத்துக்கு முதலிடம் தந்து, பள்ளிகளில் ஏட்டுக்கல்வியுடன் போர்ப்பயிற்சியும் கற்பித்து ராணுவத் துறையில் தன்னை மிஞ்சிய கிரேக்க நாடில்லை என்ற பெருமையைப் பெற்றது.


   ஏதென்ஸ்படைப்புத்திறனையும் கலைகளையும் வளர்த்ததுஎழுத்தாளர்கள், கவிஞர்கள்நாடக ஆசிரியர்கள் தோன்றிப் புகழொளி வீசினார்கள். எழில்மிகு கட்டடங்களும் கண்கவர் சிலைகளும் எழும்பி நாட்டை அணிசெய்தன; உழவும் கடல்வாணிகமும் செழித்தமையால் வளம் பெருகியது.

 பாரசீகப் போர் --  ஆசியாவின் மேற்குப்பகுதி முழுதையும் கைப்பற்றி மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்து ஆண்டுகொண்டிருந்த பாரசீகத்தின்  அரியணையில், பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டில், ஏறினான்வீரத்திற் சிறந்த முதலாம் டேரையஸ் (Darius). கிரேக்கத்தைப் பிடித்து சொந்தமாக்கிக்கொள்ள எண்ணிய அவன்மறவர்கள் நிரம்பிய அறுநூறு கப்பல்களுடன் வந்து, ஏதென்சுக்கு வடக்கில் 42 கி. மீ. தொலைவிலுள்ள மாரத்தான் சமவெளியை அடைந்துஅங்கே அவர்களை இறக்கினான். ஸ்பார்ட்டாவின் உதவி, உரிய காலத்தில் கிடைக்காமல் போனதால்ஒரு மிகப்பெருஞ் சேனையை ஏதென்ஸ் தனியாய் எதிர்கொள்ள நேர்ந்ததுஆனாலும்மேம்பட்ட அணிவகுப்பாலும் சாமர்த்தியமான போர் உத்தியாலும் வெற்றி வாகை சூடியது. (பொ.யு.மு. 490). மடிந்த பாரசீகர் போக, மற்றவர் கலமேறித் தப்பிச் சென்றனர். இந்த மகத்தான வீரதீரச் செய்தியைத் தலைநகர்க்கு அறிவிக்கஒரு கிரேக்க மறவன்,  42 கி. மீ. தொலைவையும் ஓடியே கடந்தான்இந்த சாதனையை நினைவுகூரும் முகத்தான்இப்போதைய ஒலிம்ப்பிக் போட்டிகளில், மாரத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.


   தாங்களும் வலிமை வாய்ந்த கடற்படையை உருவாக்கிக்கொள்ளுதலின் அவசியத்தை அனுபவ பூர்வமாய் உணர்ந்த கிரேக்கர், உடனடியாய் அதில் ஈடுபட்டு விரைவாக நீந்தக்கூடிய கப்பல்களைக் கட்டினர்.


   485-இல் டேரையஸ் இறந்த பின்பு, ஆட்சிக் கட்டில் ஏறிய மகன் செர்சேஸ் (Xerxes) தந்தையின் தோல்விக்குப் பழிவாங்கி, அவமானத்தைத் துடைத்துக்கொள்ளும் எண்ணத்துடன், மாபெரும் கடற்படையை (1200 கப்பல்கள்!) அணிதிரட்டி வந்தான்.

  இந்தத் தடவை, ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் விடுத்த கூட்டழைப்பினையேற்றுப் பல கிரேக்க நாடுகள் உதவிக்கு விரைந்தன. பாரசீகரைத் தடுத்து  நிறுத்துவதற்கு ஏற்ற இடம் எனக் கடலுக்கும் மலைக்கும் இடையில் உள்ள தெர்மோப்பீலீ என்னும் குறுகிய கணவாய் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வழியை  அடைத்துக்கொண்டு, ஸ்பார்ட்டா மன்னன் லிஓனிடாஸ் (Leonidas) தலைமையில் முந்நூறு வீரர்கள் நின்றார்கள். யானையைக் காளை நெடுநேரம் சமாளிக்க முடியாதுதான்; இருந்தாலும்மனந்தளராமல், முன்வைத்த காலைப் பின்வைக்காமல்எதிரியின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்கள், கடைசி மறவன் இறக்கும்வரை (பொ.யு.மு.480).


  பிற்காலத்தில் அங்கு ஒரு கல்லறை எழுப்பி அதில் பொறித்துவைத்தனர்:

   "வழிப்போக்கரே, போய் ஸ்பார்ட்டாவிடம் கூறுங்கள், அதன் சட்டத்துக்குக் கீழ்ப்படிந்து நாங்கள் எல்லாரும் இங்கே உயிர்த்தியாகம் புரிந்தோம் என்று".


   தடையைத் தகர்த்த பாரசீகர், ஏதென்சைப் பிடித்து, நாட்டை நாசப்படுத்திப் பழி தீர்த்து மன நிறைவடைந்தனர். அடுத்துசலாமிஸ் (Salamis) தீவுக்கு வடக்கில் நிகழ்ந்த கடற்போரில், கிரேக்கரின் செயல்திறன் மிக்க கலங்கள், அளவிலும் எண்ணிக்கையிலும் பெரிய  பகைக் கப்பல்கள் செம்மையாக இயங்க இயலாதவாறு அவற்றை நெருக்கி முடக்கி மூழ்கடித்தன. பின்னர் எதிரிகளைத் தாக்கி வென்று நாட்டிலிருந்து விரட்டினர். தலைக்குனிவுடன்  செர்சேஸ் நாடு திரும்பினான் (479) .


   பெரிக்ளீஸ் (Pericles)--  பொ.யு.மு. 449-429.      பெரிக்ளீசின் இருபது ஆண்டுக்கால ஆட்சி ஏதென்சின் பொற்காலம். சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அவர், வனப்பு வாய்ந்த கட்டடங்களாலும் கலைநயம் மிக்க சலவைக்கல் சிலைகளாலும் ஊரை அழகுபடுத்தினார்; மத விழாக்களைக் கோலாகலமாய் நடத்தினார். எழுத்தாளர்கள், நாடகப் படைப்பாளிகள், வரலாற்றாசிரியர்கள், தத்துவவாதிகள் எனப் பல துறை வல்லுநர்கள் தோன்றி  நாட்டுக்கு மகத்தான பெருமை சேர்த்தார்கள்கிரேக்கம் முழுதுக்கும் ஏதென்ஸ் தலைநகராய் உயர்ந்தது. மன்னராட்சியாய் இல்லாமல், ஒருவித மக்களாட்சியே அப்போது நடைபெற்றது. பொதுமக்களின் சபை  என்ற ஓர் அமைப்புமாதத்தில் மூன்று நான்கு  தடவை கூடி, சட்டங்களை இயற்றியது; அவற்றை அமல்படுத்த அலுவலர்கள் இருந்தார்கள். சீட்டு குலுக்கி, சபை அவர்களைத் தேர்ந்தெடுத்தது. ஓராண்டு மாத்திரமே அவர்கள் பதவி வகிக்கலாம். நீதிபதிகளும் சீட்டு  மூலமே நியமிக்கப்பட்டார்கள்.


  உள்நாட்டுப் போர்  -- ஏதென்சின்மீது பொறாமையுற்ற ஸ்பார்ட்டா தாக்குதல் தொடுத்தது. கிரேக்க நாடுகள் யாவும் இரு அணியாய்ப் பிரிந்து பத்தாண்டுக் காலம் (431-421) மோதிக்கொண்டன. இறுதியில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தாகி, அவரவர்களும் கைப்பற்றிய பகுதிகளைத் திருப்பித் தந்துவிட்டார்கள்.


    413-இல், ஸ்பார்ட்டா மறுபடியும் படையெடுத்து ஏதென்சுக்கு சொந்தமாய் இருந்த பல பகுதிகளை ஆக்ரமித்ததுடன், கடலாதிக்கத்தையும் வசப்படுத்திற்றுஎட்டாண்டு தற்காத்துக் கொண்டிருந்த ஏதென்ஸ் தன் படைகளை அடியோடு இழந்து அடிமைப்பட்டது (404).


  ஏகபோகத் தலைமையைப் பெற்ற ஸ்பார்ட்டா, பாரசீகத்தின் பக்கம் பார்வையை செலுத்திப் படையெடுத்தது; ஆனால், தோற்றுஆசியாவின் கிரேக்கப் பகுதிகளைப் பாரசீகத்திடம் பறிகொடுத்தது.


  கிரேக்கத்தின் இன்னொரு ராஜ்யமான தீப்ஸ் (Thebes), ஸ்பார்ட்டாவின் ஆதிக்கத்தை எதிர்த்தமையால் மூண்ட போரில் (371-362) ஸ்பார்ட்டா அடிபணிந்து தலைமையை இழந்தது.


 உள்நாட்டுப் போர்களால் எல்லா கிரேக்க அரசுகளும் வலிமை குன்றி, சீரழிந்து, தாழ்நிலை அடைந்ததன் விளைவு எதிர்பார்க்கக்கூடியதே! அந்நியராட்சிக்கு அடிமைப்படல்!


 கிரேக்கத்துக்கு வடக்கத்திய நாடாகிய மாசிடோனியாவின் வேந்தர் ஃபிலிப் (360-336) வலிமை வாய்ந்த தரைப்படை, குதிரைப்படைகளைப் பயன்படுத்தி கிரேக்க அரசுகளை ஒவ்வொன்றாய் வென்று  கடைசியில் நாடு முழுதையும் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தார். சாம்ராஜ்யத்தின் எல்லையை இந்தியாவரை நகர்த்தினார் அவருடைய மகன்நானிலம் வியக்கும் அலெக்சாண்டர் (336 -323). இவரால் கையகப்படுத்தப்பட்ட சிரியா, எகிப்து முதலான  நாடுகளிலும் கிரேக்க நாகரிகம் பரவிற்று. அந்த மாபெரும் நிலவரைக்கு (kingdom)த் தலைநகராய்த் திகழ்ந்தது ஏதென்ஸ் அல்ல, அலெக்சாண்டர் தம் நினைவை நிலைநிறுத்துவதற்கு எகிப்தில் தோற்றுவித்த அலெக்சாண்ட்ரியா.
   அங்கு இலக்கியம், அறிவியல், கலை ஆகியவற்றின் வளர்ச்சிக்காக  ஒரு விசாலமான கட்டடம் கட்டினர்; அதனொரு பகுதியாய்ப் பெரிய நூலகமொன்று இயங்கியது. தாவரவியல் பூங்காஉயிரியல் பூங்காவானாராய்ச்சி நிலையம் முதலியவை பராமரிக்கப்பட்டன. வடிவ கணிதத்தின் தந்தை யூக்லிட் (Euclid), பிரபல எழுத்தாளர் தியோக்ரிட்டிஸ் (Theocritis) அங்கு வாழ்ந்தனர்.


    முடிவு --  பொ.யு.மு. முதல் நூற்றாண்டில், கிரேக்க சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய ரோமானியர், சுதந்தர வேட்கை, நாட்டுப்பற்று, அழகுணர்ச்சிபகுத்தறிவுச் சிந்தனை முதலிய நற்பண்புகளுக்கு ஊற்றாகிய அந்த விழுமிய நாகரிகத்தைப் பார்த்து, வியப்பு மேலிடநாம் வெள்ளையர்களைக் காப்பியடிப்பதுபோல, எல்லாத் துறைகளிலும், அதைப் பின்பற்றியதுடன்பின்னர் தாம் வசப்படுத்திய ஐரோப்பாவிலும் பரப்பினர். இவ்வாறுவெள்ளைக்காரர்களின் நாகரிகத்திற்கு கிரேக்க நாகரிகமே அடிப்படையாயிற்று.


    படையால் வென்றனர் ரோமானியர், பண்பாட்டால் வென்றனர் கிரேக்கர்!


       ==============================