Sunday 21 April 2019

வரலாற்று நிகழ்வுகள் – 2





  1) ஒன்பது ஆண்டுக்காலம் தமிழக முதல்வராய் நல்லாட்சி நடத்திக் கர்மவீரர் என்றும் கறை படாத கைக்குச் சொந்தக்காரர் என்றும் கல்விக் கண் அளித்தவர் என்றும் ஏழை பங்காளர் என்றும் மக்களால் போற்றப்பட்ட காமராஜருக்கு ஒரு மறுபக்கம் உண்டு.

  ஆட்சிக் கட்டில் ஏறுவதற்கு முன்பிருந்தே அவர் தமிழகக் காங்கிரஸ் தலைவராய்ப் பணியாற்றினார். பெரும்பாலான அரசியல் தலைவர்களையும் ஆட்சியாளர்களையும் போல அவரும் தம்மை மீறி யாரும் மேலே வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்.

  அப்போதெல்லாம் தேர்தலுக்கு சீட் தரும் உரிமை அந்தந்த மாநிலத் தலைவர்களிடம் இருந்தது. மாற்றுக் கருத்துக் கொண்ட காங்கிரஸ்காரர்களுக்குக் காமராஜர் வாய்ப்பு மறுத்தமையால் கட்சிப்பற்று இருந்தபோதிலும் பற்பலர் வெளியேறினர். அவர்களுள் ஒருவர் .பொ.சி. எனச் சுருக்கமாய்ச் சுட்டப்பட்ட .பொ.சிவஞானம். இவர் விடுதலைப் போரில் தீவிரமாய் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகி. ஆனால் ராஜாஜி பக்தர். கட்சியிலிருந்து விலகிய இவர், “தமிழரசு கழகம்என்னுந் தனிக்கட்சி கண்டார். காரைக்குடி சா.கணேசன்சட்டை போடாத காங்கிரஸ்காரர்என்று புகழப்பட்டவர். (காந்தியடிகள் சட்டை போடாமையால் இவரும் போடுவதில்லை). இந்தத் தியாகிக்கும் சீட் கிடைக்கவில்லை; ராஜா சர் முத்தையா செட்டியாருக்குக் கிடைத்தது. இவர் நீதிக் கட்சிப் பிரமுகராய் இருந்து காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்தியவர்! சா.கணேசன் விலகி ராஜாஜி தோற்றுவித்திருந்த சுதந்திரா கட்சியில் சேர்ந்தார். இவ்வாறு நீங்கியவர்களுள் மேலும் சில பிரபலங்கள்; எல்.எஸ்.கரையாளர் (காமராஜருக்கு முன்னர்த் தமிழகக் காங்கிரசின் தலைவராய்ப் பணிபுரிந்தவர்); பாகனேரி ஆர்.வி.சுவாமிநாதன் (இந்திரா காங்கிரசின் தலைவராய் ஆனார்), K.S.வெங்கடகிருஷ்ணா ரெட்டியார், V.K.ராமசாமி முதலியார் (காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்). இந்தக் கட்சி 1957 தேர்தலில் காங்கிரசின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டு 25 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை அடைந்தது. ஆளுங்கட்சி காங்கிரஸ், எதிர்க்கட்சியும் காங்கிரஸ்! அத்தேர்தலில் முதன்முறையாய்ப் பங்குகொண்ட தி.மு.. 15 இடங்களில் வென்று மூன்றாம் இடத்துக்கு வந்தது.

  இப்படிக் கட்சியின் வலிமை தமிழ்நாட்டில் குறைந்துகொண்டே வந்தமைக்குக் காமராஜர் ஒரு காரணம்.

  இன்னொரு காரணம் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்தரத்தை நசுக்குவதற்குக் காங்கிரஸ் மும்முரமாய்ச் செயல்பட்டமை.

  பெரியார் பொன்மொழிகள்” என்ற நூலுக்காகப் பெரியாருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை! “ஆரிய மாயை”க்காக அண்ணாதுரைக்கு ஆறு மாதம்; “காந்தியார் சாந்தியடைய” என்னும் புத்தகம் இயற்றிய ஆசைத்தம்பிக்கு (பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்) சிறை. புலவர் குழந்தையின் “இராவண காவியம்” என்னும் காப்பியத்துக்குத் தடை; வெளியிடக்கூடாது, விற்கக்கூடாது, வைத்திருக்கக்கூடாது.

  இவ்வாறு தி.க., தி.மு.க.காரர்கள் மீது வழக்குக்கு மேல் வழக்காய்ப் போட்டு அலைக்கழித்த கட்சிக்கு மக்கள் விடைகொடுத்து அனுப்பினார்கள். அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இப்போது அதே திமுகவிடம் சில இடங்களைக் கோரிப் பெற்று அதனுடைய தயவில் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

 2) திருச்சி ரேஸ் கோர்ஸ் திடலில் தி.மு.க.வின் மாநில மாநாடு 1955-இல் நிகழ்ந்தபோது இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்தன:

I) புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுத்தமை: கட்சியின் தொடக்கம் முதல் (1949), பொதுச்செயலாளராய்ப் பதவி வகித்தவர் அண்ணாதுரை. (கட்சிக்குத் தலைவர் கிடையாது). ஜனநாயக முறையில் கட்சி இயங்கவேண்டும் என்பதற்காக, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, புதுப் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற புதிய விதியின்படி இரா.நெடுஞ்செழியனைப் பதவியில் அமர்த்தினார்கள்.

  அவரை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் பேசிய மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் சொந்தங் கொண்டாடிய விதம் சுவையாக இருந்தது.

1.தஞ்சை மாவட்டச் செயலர்:
    எங்கள் மாவட்டத்தில் பிறந்தவர்.

2.கடலூர்:
    நாராயணசாமியாய்ப் பிறந்தவரை நெடுஞ்செழியனாய் மாற்றியது எங்கள் மாவட்டத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

3.மதுரை:
    பாண்டியன் பெயரைச் சூட்டிக் கொண்டமையால் எங்களவர்.

4.கோவை:
    எங்கள் மாவட்டத்துப் பெரியாரின் சீடர்.

5.காஞ்சிபுரம்:
    எங்கள் மாவட்டத்தின் அண்ணாவுக்குத் தம்பி.

6.சேலம்:
    எங்கள் மாவட்டத்தின் மாப்பிள்ளை.

7.சென்னை:
    எங்கள் மாவட்டத்தில் வசிப்பவர்.

  இறுதியில் வழிமொழிய அண்ணாதுரை எழுந்தபோது பந்தலை அதிரச் செய்தது கைதட்டல்.

  அவர் கூறினார்:
  “நான் அதிக நேரம் பேசவேண்டும் என்ற உங்கள் விருப்பத்தைப் பலத்த கைதட்டல் மூலம் வெளிப்படுத்தினீர்கள். நன்றி. நாளை இறுதி நிகழ்ச்சியில் விரிவாகப் பேசுவேன். இப்போது சுருக்கமாகச் சொல்கிறேன்:

  “தம்பி வா, தலைமை தாங்க வா, உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என உறுதி கூறுகிறேன், வா.”

  இப்போது கைதட்டல் முன்னதை மிஞ்சிற்று.

  ஈராண்டுக்குப் பின்பு வேறு பொதுச்செயலரைத் தேர்வது எளிதாக இல்லை. ஏற்பட்ட மிகக் கடுமையான போட்டி கட்சியைப் பிளவுபடுத்திவிடும் எனத் தோன்றியமையால், “நானே இருக்கிறேன்” என்று அண்ணாதுரை சொல்லிப் போட்டியைத் தவிர்த்தார். கடைசிக்காலம் வரை அப்பதவியில் நீடித்தார்.

  ஜனநாயக முயற்சி அற்ப ஆயுளில் மாண்டது.

II) 1957-இல் நடைபெறவிருந்த நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களில் கட்சி போட்டியிடலாமா கூடாதா என்பதை முடிவு செய்வதற்கான வாக்கெடுப்பு.

  ஒன்றரை மீட்டர் உயரமுள்ள இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறுத்தப்பட்டன. போட்டியிட வேண்டும் என்பதற்கான சீட்டை ஒன்றிலும் வேண்டாம் எனத் தெரிவிப்பதற்கான சீட்டை மற்றதிலும் போடவேண்டும். எல்லார்க்கும் தரப்பட்ட சீட்டுகளை விரும்பிய பெட்டியில் பகிரங்கமாய்ப் போட்டனர். வேண்டும் என வாக்களித்தவர்களே மிகுதி.

  கழகம் நாடாளுமன்றத்துக்கு இருவரையும் சட்டசபைக்கு 15 பேரையும் அனுப்பிற்று. முக்கியமானவர்களுள் சம்பத், தில்லிக்கு; அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி சென்னைக்கு.

  1962-இல் சட்டசபைக்கு 50 பேர் போனார்கள். அண்ணாதுரையும் அன்பழகனும் தோற்கக் கருணாநிதி வென்று இறுதிக்காலம் வரை எல்லாத் தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடியவர் என்னுந் தனிப்பெருமையைப் பெற்றார்.

  1967-இல் ஆட்சியைக் கைப்பற்றி அண்ணாதுரை முதலமைச்சரானார்.

&&&&&&


Wednesday 10 April 2019

வரலாற்று நிகழ்வுகள் – 1



  இளந்தலைமுறை அறியாத வரலாற்றுத் தகவல்கள் சிலவற்றை இங்குப் பதிகிறேன்.

காந்தி

  1. சுதந்தரப் போராட்டத்தின்போது ஆட்சியை எதிர்த்து மக்களைத் திரட்டி சாத்வீக முறையில் கிளர்ச்சிகளைத் துணிவுடன் நடத்தி எத்தனையோ தடவை சிறையேகி மகத்தான தியாகம் புரிந்து மகாத்மா எனவும் தேசப்பிதா எனவும் பலவாறு புகழப்பட்ட காந்தியடிகள் நாட்டு விடுதலைக்குப் பின்பு கொஞ்சங் கொஞ்சமாய் செல்வாக்கை இழந்தார்.

  “காங்கிரசைக் கலைத்துவிடுங்கள்” என்று அவரிட்ட கட்டளைக்கு எந்தத் தலைவரும் செவிசாய்க்கவில்லை; அதனால் அவர் கட்சியிலிருந்து விலகி, “நான் செல்லாக் காசு ஆகிவிட்டேன், இப்போது நான் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் கூட அல்ல” என மனம் நொந்து அறிக்கை வெளியிட்டார்.

  2. சென்னை மாநிலத்தில் (அப்போது மதராஸ் ராஜ்யம்: தமிழ்நாடு + ஆந்திரா) 1952 சட்டப்பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், தி.க., தி.மு.க. உட்பட எட்டுக் கட்சிக் கூட்டணி காங்கிரசை எதிர்த்துக் களத்தில் நின்றது.

  கூட்டணியை உருவாக்கிய சாதனையைப் புரிந்ததில் பெரும் பங்கு பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.ஜீவானந்தத்துக்கு உண்டு. (ஜீவா எனச் சுருக்கமாக அழைக்கப்பட்டவர்.)

ப. ஜீவானந்தம்

   காங்கிரஸ் 152, கூட்டணி 164 என வெற்றி பெற்றன.

  ஆட்சியமைக்க யாருக்கு உரிமை? சர்ச்சை எழுந்தது. கட்டுக்கோப்பான ஒரே கட்சி என்பதால் காங்கிரஸ்தான் ஆளத் தகுதியுடையது என்று ஒரு சாரார் கூறினர். “காங்கிரஸ் முழுத்துணி, கூட்டணி ஒட்டுப்போட்ட துணி” என்றார்கள் அவர்கள். மறு சாரார், “மானத்தை மறைக்க ஒட்டுப்போட்ட துணியே பெரியது” என்று சொல்லிப் பெரும்பான்மை பலமுள்ள கூட்டணியே ஆள வேண்டும் என விவாதித்தனர்.

  நடுவண் அரசு ஒரு சூழ்ச்சி செய்தது. சிறுபான்மைக் கட்சியை வைத்துக்கொண்டு ஆட்சியமைப்பதற்கான ராஜதந்திரம், திறமை, அறிவுக்கூர்மை ராஜாஜி ஒருவர்க்கே உண்டு என்று எண்ணி, அரசியலிலிருந்து விலகியிருந்த அவரைக் காங்கிரசின் சார்பில் மேலவை உறுப்பினராய் நியமித்தது. (அப்போது மேலவை இருந்தது; எம்.ஜி.ஆர். ஆட்சியில் கலைக்கப்பட்டது.) அவரை ஆளுநர் அழைத்து அரசமைக்கக் கோரி அதற்கான கால அவகாசந் தந்தார்.  

  மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரை அழைத்தது ஜனநாயகப் படுகொலை எனவும் ராஜாஜி கொல்லைப்புறமாய் நுழைந்தவர் எனவும் விமர்சனம் செய்யப்பட்டது.

ராஜாஜி

   ராஜாஜி என்ன செய்தார்? குதிரை பேரம் நடத்தினார். கூட்டணியில் அங்கம் வகித்த 19 உறுப்பினர் கொண்ட தொழிலாளர் கட்சித் தலைவர் ராமசாமி படையாட்சியையும் ஐவர் அடங்கிய பொதுநலக் கட்சித் தலைவர் மாணிக்கவேல் நாயகரையும் ஆளுக்கொரு அமைச்சர் பதவியளிப்பதாய் ஆசை காட்டிக் காங்கிரசுக்கு ஆதரவாளர்களாய் மாற்றி மந்திரிசபை அமைத்தார். கூட்டணி 164 – 24 = 140 ஆய்க் குறைந்து போனமையால் ராஜாஜிக்கு சட்டசபையில் வெற்றி கிடைத்தது. அவர் முதலமைச்சரானார்.

  இந்திய அரசியலில், பதவி தந்து ஆளை இழுக்கிற வேலையை (அது ஒரு வகை லஞ்சம்) ராஜாஜிதான் தொடங்கிவைத்தார்.

  ராஜாஜியை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன. ராஜாஜி, “நான் கம்யூனிஸ்டுகளுக்கு A முதல் Z வரை எதிரி” என்றும் “கழகங்களை ஈ எறும்பு போல் நசுக்குவேன்” என்றுங் கொக்கரித்தார்; ராமசாமி படையாட்சி, “நான் ஒரு கோடி வன்னியர்க்குத் தலைவன், தி.மு.க.வை ஓட ஓட விரட்டுவேன்” என முழங்கினார்.

  எதேச்சாதிகாரமாய் ஆட்சி நடத்திய ராஜாஜிக்கு எதிராய்க் காங்கிரசிலேயே கலகக் குரல் கேட்கத் தொடங்கிற்று. எம்.எல்.ஏ.க்கள் தங்களை அவர் எதிலும் கலந்தாலோசிப்பதில்லை எனப் புகார் செய்தனர். அவர், “ஏசுவும் புத்தரும் யாரைக் கேட்டுக்கொண்டு செய்தார்கள்?” என வினவினார்.

  ஏசுவுக்கும் புத்தருக்கும் தாம் சமமானவர் என்று அவர் மதிப்பிட்டிருந்தார். அவர்கள் சுதந்தர மனிதர்கள்; ஆனால் தாம் மக்களுக்கும் சட்டசபைக்கும் பதில் சொல்ல வேண்டியவர் என்னும் வேறுபாடு அந்த மூதறிஞர்க்குத் தோன்றவில்லை; அந்த அளவுக்கு ஆத்திரம்.

  புதிய கல்வித் திட்டம் ஒன்றை அவர் அமல்படுத்தினார். அதன்படி மாணவர்கள் அரை நாள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும், மற்ற நேரங்களில் அவரவரது குலத் தொழிலைப் பெற்றோரிடம் கற்கலாம் என்று அத்திட்டம் கூறியது.

  பலத்த எதிர்ப்பு உள்ளும் புறமும் எழுந்தது. “குலக் கல்வித் திட்டம்” என்று அதற்குப் பெயர் சூட்டி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தின. இரு பக்கத் தாக்குதல்களையும் சமாளிக்க இயலாமல் ராஜாஜி பதவி விலக, காமராஜர் (1954) முதல்வரானார். அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. ராமசாமி படையாட்சியும் மாணிக்கவேலரும் அமைச்சர்களாய்த் தொடர்ந்தார்கள்.

காமராஜர்

***********