Saturday, 22 April 2017

பத்து தகவல்கள்1 – காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம் என்கிறோமே! சரியா? தோட்டம்போலவா அவை இருக்கின்றன?

---- இங்கு, 'தோட்டம்' என்பது மலையாளச் சொல்;  estate என்பதைத் 'தோட்டம்' என்கிறது அம்மொழி; அதை நாம் ஏற்றுப் பயன்படுத்துகிறோம்.

  அப்படியானால், நம் தோட்டத்தை அது எப்படி சொல்கிறது?   "பூந்தோட்டம்".


தொட்டபெட்டா


 2 --  கர்நாடகத்தில், தொட்டபெட்டா என்றொரு மலைக்குப் பெயர். பெரிய மலை என்பது அதன் பொருள். தொட்ட = பெரிய; பெட்டா = மலை.


3 -- மாஃபா பாண்டியராஜன் என்பவர் முன்னாள் அமைச்சர்; இந்நாள் சட்டப்  பேரவை உறுப்பினர். அவரைக் குறிப்பிடும் அடைமொழி இரண்டு பிரஞ்சு சொற்கள்: ma foi;  அதன் சரியான உச்சரிப்பு: மாஃபுஆபொருள்: 'உண்மையாக'  (really)  என்பது. இப்பெயரில் அவர் ஏதாவதொரு அமைப்பை நிறுவியிருக்கலாம்அதனால் அந்த அடை.


4 --  இத்தாலிய சொல் corriere  பிரஞ்சுக்குப் போய், courier ('குரிஏ')  என மாறிற்று.  அஞ்சல் துறை ஏற்படாததற்கு முன்பு, கடிதங்களைக் கொண்டுபோன  ஆளை, ஊர்தியை அது சுட்டியது. அதன் உறவுச் சொற்கள்: குரீர் (courir) ஓடுதல்கூர்சு (course)  ஓட்டம். அதை ஆங்கிலம் ஏற்று, 'கூரியர்' ஆக்கிற்று.

தமிழிலும் கூரியர் என்ற வார்த்தையுண்டுஅறிவுக் கூர்மை உடையவர் என்று அர்த்தம்; இதன் எதிர்ப் பதம்: மந்தர்.


  5 --  போர்த்துகீசிய சொற்கள் Porto Novo -  புதிய  துறைமுகம் என்பது அவற்றின் பொருள். கடலூர்த் துறைமுகம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தபொழுது, போர்த்துகீசியர் தமது வாணிக வசதிக்காகஅதற்குத்  தெற்கே, 35 கி.மீ. தொலைவில், புதுத் துறைமுகம் தோற்றுவித்து, அதற்குத்  தம் மொழியில் பெயர் சூட்டினர். தமிழர் அதைப் பரங்கிப்பேட்டை என்றனர்; சென்னையில் உள்ள Saint Thomas Mount  ஐப் பரங்கிமலை ஆக்கினர்பரங்கி என்பது எல்லா நாட்டு வெள்ளையரையும் சுட்டுகிற பொதுச்சொல்:

    வெள்ளைப் பரங்கியை துரையென்னும் காலமும் போச்சே!
  என்று பாடினார் பாரதியார்.

 பரங்கிக்காய்க்கும் இச்சொல்லுக்கும் தொடர்புண்டா என்பதைத் தெரிந்தவர்  எழுதுங்கள்.


 6 --  திகம்பரம் என்னும் பிராகிருதச் சொல்நிர்வாணம் எனப் பொருள்படும்; திக் = திசை; அம்பரம் = ஆடை; 'திக்கே உடைஎன்பதுஆடை இல்லை என்பதை வேறுவிதமாகக் கூறுவது.

 ---சமணத் துறவிகளுள் ஒருசாரார் அம்மணமாய் வாழ்ந்தனர்ஆடையையும் துறப்பதே முழுமையான துறவு என்பது அவர்தம் கொள்கைஅவர்கள், 'திகம்பரர்' எனப்பட்டனர். கர்நாடகத்தில், சிரவண பெலகோலா என்னும் இடத்தில், மலைமீது நிற்கிற 57 அடி உயரமுள்ள ஆணின் கற்சிலைக்கு உடையில்லை;

 அது பாகுபலி (கோமதீஸ்வரர் என்றும் சொல்கிறார்கள்) என்ற பெயருடைய திகம்பரர்க்கு நினைவுச் சின்னம். நம் காலத்திலும் வடநாட்டில் நிர்வாண சாமியார்கள் இருக்கிறார்கள்.

  ---மறு சாரார், வெள்ளையாடை உடுத்தினர்இவர்கள், 'சுவேதாம்பரர்' எனப்பட்டார்கள்வடமொழி சுவேதா = வெள்ளை. இராமலிங்கர்  வெள்ளுடை தரித்த இந்துத் துறவி.

    
 7 --  வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழா கொண்டாடுகிறோம்அவை  ஆங்கிலேயரிடமிருந்து நாம் கற்றவை. அவர்களிடம் வேறு விழாக்களும்  உண்டு. அவற்றுள் சில:

  இரும்புவிழா 6 ஆம் ஆண்டு;
  செம்புவிழா 7  -----;
  தகரவிழா  10 ----------;
  எஃகுவிழா 11 -----------;
  முத்துவிழா 30  --------;
  பவளவிழா 35 ----------- .

 8 ---  பழந்தமிழர் ஒட்டகம் வளர்த்தனர் என்றால் நம்புவீர்களா? ஆனால் அது உண்மை.

  தொல்காப்பியம் மரபியல் நூற்பா 597,

        ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை
        பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய.

 என்கிறது; பெண் ஒட்டகத்தைப் பெட்டை என்று சொல்லவேண்டுமாம். 562 ஆவது பா, "ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலவும்", ஒட்டகத்தின் பிள்ளையைக் கன்று எனல் மரபு என்கிறது: அதாவதுஒட்டகக் குட்டி என்னாமல்ஒட்டகக் கன்று என்பதே சரி.

 சங்க இலக்கியத்திலும் ஒட்டகம் வருகிறது:
        கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்

 என்று அகநானூறு 245 ஆம் பாட்டில் காண்கிறோம்.

 தமிழகக் கால்நடையுள் ஒட்டகம் இருந்ததால்தானேஅது இலக்கிய இலக்கணங்களில் இடம் பெற்றுள்ளது?


 9 -- மனிதர்க்கு மட்டும் ஆறறிவு என்று சொல்லிப் பெருமிதம் கொள்கிறோம்சில விலங்குகளும் ஆறாம் அறிவைப் பெற்றுள்ளன என்கிறார் தொல்காப்பியர்:

         'ஒருசார் விலங்கும் உளவென மொழிப'   ( பா 578) .

  எந்தெந்த விலங்கு என்பதை அவர் குறிப்பிடவில்லை; உரையாசிரியர்  இளம்பூரணர் தெரிவிக்கிறார்: கிளி, குரங்கு, யானை.

  10 -- 'ஒன்றுக்கு மேற்பட்டது பலஎன்று தமிழ் இலக்கணத்தில் கற்றிருக்கிறோம்; ஒன்றைக் குறிப்பது ஒருமை, ஒன்றைவிட அதிகமானது பன்மை; 'ஒன்று பல ஆயிடினும்' என்று தமிழ் வாழ்த்துப் பாடலில் பாடுகிறோம்.

   சமற்கிருதத்தில் ஒருமை, இருமை, பன்மை என மூன்று எண் உண்டு; இதைத் தொல்காப்பியர் ஏற்றிருக்கிறார் என்பது பின்வரும் பாட்டால் தெரிகிறது:

           ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
           இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி. (பா 45).

 பொருள்: ஓரெழுத்தாலாகிய சொல் (பூ, தீ)இரண்டு எழுத்தாலாகிய சொல் (புலி, குடை)இரண்டுக்கு அதிகமாகிய எழுத்தாலாகிய சொல் (மரம், இடுக்கண்) என்று மூன்று வகை சொற்கள் இருக்கின்றன.

 ஒருமை, இருமை, பன்மை என்னும் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி சிலர் பாடல் புனைந்துள்ளனர்:

       1  -- ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
      பலநாள் சென்று ..................  (புறம் 101 )
  
      2 -- ஒன்று இரண்டு அல பல கடந்து ...  (பதிற்.4)

  இது நம் காலத்திலும் வழக்கத்தில் உள்ளது:

  --- ஒரு தடவை சொல்லலாம், இரு தடவை சொல்லலாம்ஆயிரந்  தடவையா சொல்ல முடியும்?

 ---  ஒரு பொண்ணா ரெண்டு பொண்ணா எத்தினியோ பொண்ணு பாத்தோம்.

  என எழுதுகிறோம், பேசுகிறோம் அல்லவாஇந்த அளவுக்கு வடமொழி நம்மீது ஆழமானநீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கிறதாக்கத்தினை அழுத்தமாக ஆணியடித்து ஊன்றியுள்ளது.


                                                    ----------------------------------------------------
  
  (படம்- நன்றி இணையம்)

Wednesday, 12 April 2017

சில பிழைச்சொற்கள்


நம் மொழியில் யார் வேண்டுமானாலும் எவ்வாறேனும் எழுதலாம் என்னும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. நாளேடுகள், வார இதழ்கள், நூல்கள் எனப் பலவற்றிலும் பிழையான சொற்கள் இடம்பெறுகின்றனதொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் தங்கள் பங்குக்குத் தவறான சொற்களைப் பரப்புகின்றன. சிகப்பு ரோஜாக்கள்நான் சிகப்பு மனிதன் என்று படங்கள் வந்தன. 'என் இனிய தமிழ் மக்களே' என்று அன்புடன் விளிக்கும் பாரதிராஜாஅந்த இனிய மக்களுக்கு வழங்கினார்சிகப்பு எனத்  தப்புத் தலைப்பிட்ட படத்தைஎத்தனையாயிரம் மாணவர்களின் மூளையில் அந்தப் பிழையான வார்த்தை பதிந்திருக்கும்? பாலச்சந்தரைப் போற்றலாம்: வறுமையின் நிறம் சிவப்பு என்று சரியாய்ச் சொன்னாரே!  
பிழை தவிர்க்க எண்ணுபவர்களுக்குப் பயன்படக்கூடும் எனக் கருதிசிலவற்றை இங்கு எடுத்துக்காட்டுகிறேன்:

  1  -- ஏலகிரிமலைYelakiri Hills  என்பதன் மொழிபெயர்ப்பாக இப்படி எழுதுகின்றனர். கிரி எனினும் மலை எனினும் ஒன்றுதான் என்பதுகூடவா தெரியவில்லைகிரிமலை என்பது கேட்கதவுநடுசெண்டர்சோஅதனாலே என்பன போன்றது. ஏலமலை என்பதே சரி.

  2 --  போலீஸார் --- ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழின் ஆர் விகுதி சேர்த்துப்  புழங்குவதை என்னென்பது?   காவலர் என்பது தெரியாதா?

   3  செல்வந்தர் --- தனவந்தர் என்னும் சமற்கிருத வார்த்தையின் தாக்கங் காரணமாய் உருவான சொல் இதுவிருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன்,   தம் 'திவாகரம்' என்னும் நூலில் பல இடங்களில் அப்படி  எழுதியிருக்கிறார்.

    செல்வர் எனல் வேண்டும்:

          எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
          செல்வர்க்கே செல்வம் தகைத்து. (குறள் 125)

  4  -- அரசினர் மேல்நிலைப்பள்ளி என்று பெரிய எழுத்துகள் தாங்கிய பெயர்ப்பலகையைக் காண்கிறோம்;   அஃறிணைச் சொல்லுடன் அர் விகுதி சேர்த்தால் கிடைப்பது மனிதரைக் குறிக்க வேண்டும்:

அலுவல் + அர் = அலுவலர்;  
அரசு + அர் = அரசர்
ஆட்சி + அர் =  ஆட்சியர்.

நடுவில் 'இன்' என்னும் இடைச்சொல் போட்டும் புது வார்த்தை உண்டாக்கலாம்: மாணிக்கவாசகரின் 'திருப்பள்ளி எழுச்சி'   4-ஆம் பாடலில் வருகிற 'யாழினர்,   கையினர்' அவ்வாறு தோன்றியவை;

யாழ் + இன் + அர் = யாழினர்: யாழ் வாசிப்பவர்;   
கை + இன் + அர் = கையினர்: கையை உடையவர்.

 இவை மக்களைச் சுட்டுவதுபோல், 'அரசினர்யாரையாவது குறிக்கிறதா? இல்லை; ஆகவே அது பிழைச்சொல்.

  அரசு என்னும் எளிய சிறிய சொல் இருக்கிறதே! அரசு ஆணை, அரசு இயல், அரசு பள்ளி, அரசு வேலை என்றெல்லாம் எழுதலாம்.

             இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
             வகுத்தலும் வல்லது அரசு. (குறள் 305)

    ராஜாங்கம் என்னும்  வட சொல்லை மனத்துட்கொண்டு அரசாங்கம் என்றெழுதுவது தேவையற்றது.

 5 --  நேர்மறைச் சிந்தனை என்ற  சொற்றொடர் அண்மைக் காலத்தில்  தோன்றியுள்ளது; எதிர்மறைச் சிந்தனை  என்பதற்கு எதிர்ச்சொல்லாக   இதைப் பயன்படுத்துகின்றனர்.

  நேர் என்பதும் மறை என்பதும் எதிர்ப்பதங்கள்.

  எட்டு வகை விடைகளை விவரிக்கும் நன்னூலின் 386-ஆம் பா,  இப்படித் தொடங்குகிறது: ' சுட்டு மறை நேர்'

  மறை = மறுத்தல்;  
  நேர் = ஒப்புக்கொள்ளல்.

  'போவாயா?'   என்ற வினாவுக்கு,  'மாட்டேன்'   என்பது மறை விடை;  'போவேன்' என்றால் நேர் விடைஆதலால்நேர்மறைச் சிந்தனை என்பது, 'ஒப்புக்கொள்கிற மறுக்கிற சிந்தனை' எனப் பொருள்பட்டு அபத்தம் ஆகிறது;  'ஏற்றமான தாழ்வுஎன்பதுபோல; சுடுதண்ணீர் எனச் சிலர் சொல்வதுண்டு: எவ்வளவு தவறு! சுடுகிற குளிர்ந்தநீர் என்பது உளறல் அல்லவா?   வெந்நீர் இருக்கிறதே!

நேர்சிந்தனை எனலாம்ஆக்கச் சிந்தனை என்றுஞ் சொல்லலாம்.


                                           -------------------------------------------

Monday, 3 April 2017

பாவேந்தர் படைப்புகளில் பிரஞ்சுத் தாக்கம்

நூல்களிலிருந்து --- 12

  1672 முதல் 1954 வரையில், ஏறத்தாழ 280 ஆண்டுகள், புதுச்சேரிப் பகுதி பிரஞ்சுக்காரரின் பிடியில் இருந்தது. பிரான்சு நாட்டின் அரசியல் மாற்றங்கள், மக்கள் வாழ்க்கைமுறை, இலக்கியப் போக்கு, மொழியுணர்வு முதலியவற்றின் தாக்குறவுகள் புதுச்சேரியிலும் காணப்பட்டன. உணர்வு மிக்க பாவலர்களை இவற்றின் முற்போக்கான பகுதிகள் கவர்ந்தன; அதனாலாகிய விளைவுகள் அவர்களின் படைப்புகளில் காணப்பட்டன.

  1891-இல் புதுச்சேரியில் தோன்றிப் பிரஞ்சு ஆட்சியில் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்த பாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில்  இவ்வியல்பு படிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை. 1 -- முப்பெருங் கோட்பாடுகள்:

   பிரஞ்சுத் தாக்கங்கள் சில, தம்மிடம் பிள்ளைப் பருவம் முதலே இயல்பாகப் பதிந்திருந்தன என்று பாவேந்தரே,

   இது அறிவெனத் தெரிந்த நாள்முதல் புதுவையில்
   சுதந்தரம் சமத்துவம் சகோ தரத்துவம்
   மூன்றும் என்னுயிர் உணர்வில் ஊறியவை  (நாள் மலர்கள், பக்கம் 65)

 என்று கூறுகிறார்; மற்றோரிடத்தில் இந்த முப்பெருங் கோட்பாடுகள் உலக மக்கள் அனைவர்க்குமே வேண்டியன என்பதை

   சுதந்தரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்
   இதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும் (குடியரசு 9, 10)

என்று பாடுகிறார்.

  சுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற தலைப்பில் தாம் எழுதிய கட்டுரையில்,

  ஒருநாடு இன்ப வாழ்வடைய வேண்டுமானால் பிரான்சின்
  முப்பெருங் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

 என்றும் பரிந்துரைக்கிறார்; மேலும், சுதந்தரம், சமத்துவப் பாட்டு, சகோதரத்துவம் எனத் தம் பாடல்களுக்குத் தலைப்புகள் தந்திருக்கிறார். பிரஞ்சு நாட்டு மக்களின்  உயிரிலும் உணர்விலும் ஊறிய இம்முப்பெருங் கோட்பாடுகள் பாவேந்தரின் உயிர் உணர்விலும் ஊறியிருந்தன என்பதை இவற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

 2 -- விக்தோர் உய்கோ (Victo Hugo) என்னும் புகழ் மிக்க பிரஞ்சுப் பாவலனை இவர் பல இடங்களில் பாராட்டுகிறார்:  

   நாளை நடப்பதை மனிதன் அறியா னென்று
    நல்லகவி விக்தோர் உய்கோ சொன்னான்
                                         (தமிழச்சியின் கத்தி பக். 28)

  என்றும்

        செல்வர் இல்லோர் நல்வாழ் வுக்கே
        எல்லா மக்களும் என்ற பிரான்சில்
        குடிகள் குடிகட் கெனக் கவிகுவிக்க
        விக்தோர் உய்கோ மேவினான் அன்றோ?
                                                (கவிதைகள் - 2,பக் 78)

 என்றும்

  புகழ்வதால் இவருக்கு உய்கோவிடம் இருந்த மதிப்பு புலனாகிறது; இதில், 'செல்வர் இல்லோர் நல்வாழ்வுக்கே எல்லா மக்களும்' என்ற பகுதியில், ழான் ழாக் ருசோ என்ற பிரஞ்சுப் பேரறிஞனின் கருத்தும் அமைந்திருப்பதைக் காணலாம்.

 3 - பிரஞ்சுப் புரட்சி ---

  உருசியப் புரட்சியைப் பாரதியார் சிறப்பித்துப் பாடியதைப் போலவே பாரிசு விடுதலையைப் பாவேந்தர் பாராட்டிப் பாடினார். அந்நாட்டில் நசுக்கப்பட்ட மக்கள் திரண்டெழுந்து புரட்சி செய்து விடுதலை பெற்றதை,

  பிறப்புரி மைகாண் யார்க்கும் விடுதலை எனப்பிழிந்த
  நறுந்தேனை எங்கும் பெய்தாய்; நால்வகைச் சாதி இல்லை
  தறுக்குறும் மேல்கீழ் இல்லை; சமம் யாரும் என்றாய்; வானில்
  அறைந்தனை முரசம்  ' மக்கள் உடன்பிறப் பாளர் ' என்றே.
                                     (கவிதைகள் 4 பக். 230)

என்று பாடுகிறார்.

 4 - சொல்லாட்சிகள் --

  பாவேந்தர் படைப்புகளில்  ஆங்கு ஈங்காகச் சில பிரஞ்சுச் சொற்கள் இடைமிடைந்திருக்கின்றன; இது வேறு எந்தத் தமிழ்ப் பாவலனிடத்தும் காண முடியாத தனித்தன்மை:

 கொம்மிசேர், தெப்புய்த்தே, பர்க்கே, சொசிஎத்தே ப்ரொக்ரெசீஸ்த்து, கோந்த்ரோலர், கோந்த்ரவான்சிஒன், கொம்முய்ன், பிரான், கபினே, அத்மினிஸ்த்ராத்தேர் முதலிய பிரஞ்சு சொற்கள் அவர்தம் 'குயில்' இதழ்களில் காணப்படுகின்றன.

  பேரறிஞர் அண்ணாவின் கூற்று:

 பாவேந்தர், 'புரட்சிப் பாவலர்' என்று பெயர் பெற்று விளங்கியதற்குப் பிரஞ்சின் தாக்கம் ஒரு காரணம் என்பது பேரறிஞர் அண்ணாவின் கருத்து. ஏ, தாழ்ந்த தமிழமே! என்ற நூலில் அவர், "இந்த லோகத்தைப் பற்றிப் புரட்சிகரமாகப் பாடுவதற்குக் காரணம் அவர் வாழும் புதுவையாகும். புதுவையானது பிரான்சு நாட்டை சேர்ந்தது. பிரான்சு சுதந்தரத்துக்குப் பிறப்பிடம். அந்தப் பிரான்சின் சாயல், அந்தப் பிரான்சின் தென்றல், அவர் வாழ்ந்துள்ள புதுவையில் வீசுவதால்தான் அவர் கொடுக்கும் தலைப்புகள் புரட்சிகரமானவையாகப் புரட்சிக் கருத்துகளைக் கொண்டிலங்குகின்றன" என்று கூறியிருக்கிறார்.

          =====================================

 (படம் உதவி - இணையம்)