Wednesday, 29 June 2016

சொல்வதெல்லாம் உண்மை அல்ல


   அச்சடிக்கப்படுவதெல்லாம், திரைப்படத்திலும் தொலைக்காட்சியிலும் கேட்பதெல்லாம்உண்மை என நம்பக்கூடாது; பிழையான தகவல்கள் அவ்வப்போது வெளிப்படுவதுண்டு. நிறையப் படித்தவர்களே தவறான தகவலைத் தெரிவிக்கத் தயங்குவதில்லை.
    டாக்டர் மா.  ராசமாணிக்கனார், தாம் 1944 இல் இயற்றிய 'பல்லவர் வரலாறு'  பக்கம் 20, 23 இல் எழுதியுள்ளார்:

   "கரிகாலன் இமயம்வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியிலிருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. கரிகாலன் இமயம்வரை சென்று மீண்டது உண்மையே என்பதற்குப் புதிய சான்று ஒன்று கிடைத்துள்ளது.

  'சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத்தொடர்க்கு சோழா மலைத்தொடர் (Sola Range) என்றும் அதனையடுத்துள்ள பெருங்கணவாய்க்கு சோழா கணவாய் (Sola Pass) என்றும் பெயர்கள் காணப்படுகின்றன. சோலா என்பது சிக்கிம்திபேத் மொழிகளில் உள்ள சொற்களுக்குப் பொருந்தவில்லை' என இராவ்சாகிப் மு. இராகவையங்கார் அவர்கள் புதிதாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். (கலைமகள் 1932 தொகுதி 1. பக். 62, 63.)

   ஒரு தமிழரசன் இமயம்வரை சென்றான் எனப் பெருமிதம் கொள்வதற்காக ராகவையங்கார் sola என்பதை சோழா என்று  மாற்றினார்.

  அதே தவறான செய்தியைத் தெரிவித்துள்ளார் டாக்டர் கே.கே. பிள்ளை 'சோழர்  வரலாறு' (1971)  என்ற  நூலின் 26  ஆம் பக்கத்தில்:

  "வட நாடு நோக்கிச் சென்ற  கரிகாலன் இமயம்வரை சென்று  அப்பாற் செல்ல இயலாமல் தடுத்து நின்ற இமயத்தில் தன் புலிப்பொறி பொறித்து மீண்டதாக அறிகிறோம்இதற்கு சான்றாக சோழா மலைத்தொடர் (Chola Range), சோழர் கணவாய் (Chola Pass) என்னும் பெயர் இன்றும் அங்கு வழங்கி வருவதாக சிலர் எடுத்துக்காட்டுவர். கரிகாலன் திரும்பி வந்தபோது வச்சிர நாடு, மகதம்அவந்தி ஆகிய நாடுகளின் மன்னர்கள் அவனுக்கு வெகுமதி அளித்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. வரலாற்றறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் இவற்றை நம்புவதற்கில்லை என்று  கருதுகிறார். உண்மையில் கரிகாலன் வட  நாடுகளுக்குப் படையெடுத்து சென்றிருக்கலாமெனத் தோன்றுகிறது." 

 இவரும் Chola என்பதை சோழா என்று திரித்திருக்கிறார். 'அறிகிறோம், தோன்றுகிறதுஎன்கிறார். கற்பனைக் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைத் துணைக்கு அழைக்கிறார். வரலாற்று  ஆதாரம்  எதையும்  காட்டவில்லை. இப்படியொரு 'சோழர் வரலாறு'!

  கரிகாலன்மீது பாடப்பெற்ற பட்டினப்பாலையும் பொருநராற்றுப்படையும் இமயம் பற்றி  எதுவும்  கூறவில்லை என்பதை இவர்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? போக்குவரத்து வசதி  இல்லாக் காலத்தில் அவன் வடக்கெல்லைவரை படை நடத்தினான் என்பது மெய்யென்றால், அது எவ்வளவு மகத்தான சாதனைஇரு நூல்களும் அதைப் பலபடப் பாராட்டியிருக்கும் அல்லவா?

 நீலகண்டர் வரலாற்று அறிஞராதலால், 'நம்புவதற்கில்லை' என்றார்; புலவர்களுக்கு இலக்கிய ஆதாரம் போதும்வரலாற்று  சான்று  இல்லாமலே நம்புவார்கள்,  பரப்புவார்கள். இலக்கியங்களில் பல வரலாற்றுக் குறிப்புகள் உண்டுதான்அவற்றில் உண்மை இருக்கலாம், கற்பனையும் இருக்கும்; அவற்றை நம்ப வேண்டுமானால், அவற்றொடு கல்வெட்டுபட்டயம், நாணயம், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள், பிற நாட்டு வரலாறுகள், அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் முதலியவற்றோடு சேர்த்து  ஆராயவேண்டும்; அப்படிப்பட்ட ஆதாரம் எதுவும் கிட்டாதபோதுஇன்ன இலக்கியம் இப்படிக் கூறுகிறது என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  லா என்பதற்கு சிக்கிம் மொழியில் கணவாய் என்று பொருளாம்.

  Zoji la (Jammu - kashmir),  Shipki la (Himachal  Pradesh), Nathu la (Sikkim), Jelep la (Assam)  எனப் பல லா உண்டு; ஆகவே, Cho la என்றால் சோ கணவாய்இதற்கும் சோழனுக்கும் முடிச்சு போடுவது எள்ளி நகையாடற்குரியது. இங்கிலாந்தில் Canterbury என்றொரு நகர் இருக்கிறது; அதைக் கந்தர்புரி என  மாற்றி,  'அது கந்தனுடைய தலமாய்ப் பழங்காலத்தில் விளங்கிற்றுஇந்து சமயம் ஐரோப்பாவரை பரவி  இருந்தமைக்கு அது  சான்று' என்று  சொன்னாலும் சொல்வார்கள்!

  அடுத்து, ஜுன் 2016  'மஞ்சரிஇதழில் பிரசுரமாகியுள்ள தவறான தகவலைப் பார்ப்போம். (பக். 37)

  'பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரிமாகி, டாமன், டையூ ஆகிய பகுதிகளில் ஆட்சி செலுத்திவந்தனர்.'

 ஒரேயொரு வாக்கியத்தில் இரண்டு பிழையான செய்திகளை வழங்குவதென்றால் அதற்கொரு துணிச்சல் தேவை.

  டாமன், டையூ போர்த்துகீசியர் ஆண்ட பகுதிகள்; அவை இப்போது தனி  யூனியன் பிரதேசங்கள்அவற்றை பிரஞ்சுக்காரர் ஆண்டதாக சொன்னது ஒரு  பிழை.

  பிரஞ்சுக்காரரின் ஆட்சியில் காரைக்கால், யேனாம் ஆகிய பகுதிகள் இருந்தன; இவற்றை விட்டது மறு பிழை.

 இவ்வாறு தப்புத் தப்பாய் எழுதியவர் சாதாரணமானவர் அல்லபேராசிரியர்    கு.ஞானசம்பந்தன்! இப்படித்தான் கற்பிப்பார் போலும்!

      =========================

  (படம் உதவி - இணையம்)