Tuesday, 25 February 2014

தமிழர் திருமண முறை

தமிழரின் திருமண முறை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது. அதை விளக்கமாக அறிந்துகொள்ள வரலாற்று ஆவணம் இல்லை; இலக்கியங்களின் வாயிலாகச் சிலசில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்: 1 - அகநானூறு. பா -86.

 "உளுந்து முதலிய உணவுப் பண்டங்களும் நெய்யில் மிதக்கும் களியும், சோறும் நிறைந்திருந்தன; பந்தலின் கீழே புது மணல் பரப்பி, விளக்கேற்றி, மாலைகள் தொங்கவிட்டு, இருள் நீங்கிய அதிகாலையில், ரோகிணி நட்சத்திரத்தன்று, நன்னீர்க் குடங்கள் ஏந்திய முதிய பெண்கள் கொடுக்கக் கொடுக்க, அவற்றை வாங்கி, ஆண் பிள்ளை பெற்ற நான்கு சுமங்கலிகள்,  "கற்புக்கரசியாகவும் கணவன் விரும்பும் மனைவியாகவும் வாழ்வாயாக!" என வாழ்த்தி மணப் பெண்ணை நீராட்டினார்கள். அந்த நீரில் இருந்த பூவிதழ்களும் நெல்லும் கூந்தலில் அங்கங்குத் தங்கின; பின்பு மணம் நிகழ்ந்தது"

 (இது முழுதும் பெண்கள் சடங்காகத் தெரிகிறது, பூப்பு நீராட்டு, வளைகாப்பு போல; இப்போது மூன்று சுமங்கலிகள் அரசாணிக் கால் நடுகின்றனர்; முன்னாளில் நால்வர் செயல்பட்டுள்ளனர். ஆண் பிள்ளைக்கு ஏற்றம் தந்திருக்கிறார்கள்.)

 2 - அக நானூறு -- பா - 136 - 1 ஆம் நூற்றாண்டு.

 "இறைச்சிச் சோற்றைச் சுற்றத்தார்க்குப் பரிமாறி உண்பித்தனர்; ரோகிணி நாளன்று வீட்டை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணமுழவு என்ற வாத்தியமும் முரசும் ஒலிக்க, மணப் பெண்ணைப் பெண்டிர் நீராட்டினர்; அவளுக்குப் புத்தாடை உடுப்பித்து, மலர் சூட்டி, நகைகள் அணிவித்து, மணப் பந்தலில் மாப்பிள்ளைக்குத் தந்தனர்"

 (இங்கும் பெண்கள் பற்றியே கூறப்படுகிறது. இசைக் கருவிகள் இடம் பெற்றுள்ளன; மணத்துக்கு உகந்தது ரோகிணி என்பது இப் பாடலாலும் அறிகிறோம்)

 3 -- கலித்தொகை -- பாட்டு - 69. 6 ஆம் நூற்றாண்டு.

 "மந்திரம் ஓதிய பார்ப்பனர் மணமக்களைத் தீ வலம் செய்வித்தார்"

 ( பார்ப்பனர் புகுந்து விட்டனர். வடமொழி மந்திரம், தீ மூட்டல் ஆகியவை தமிழரால் ஏற்கப்பட்டன. இப் பாடல் ஓர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது; மண விழாவை விவரிப்பது அல்ல.)

 4 -- சிலப்பதிகாரம் -- 8 ஆம் நூற்றாண்டு.

 "வைரக் கற்கள் பதித்த தூண்கள் தாங்கிய மண்டபத்தில், மேலே நீலப் பட்டுத் துணியும் கீழே முத்து மாலைகளும் தொங்க, ரோகிணி நட்சத்திரத்தில், முதிய பார்ப்பனர் மந்திரம் ஓத, கோவலனும் கண்ணகியும் தீ வலம் வந்தனர்"

 (6 ஆம் நூற்றாண்டு வழக்கம் தொடர்கிறது; ஆண்களின் நிகழ்ச்சி ஆகிவிட்டது)

 5 -- நாச்சியார் திருமொழி - 8 ஆம் நூற்றாண்டு.

 "பந்தலில் பாக்குக் குலைகளும் முத்து மாலைகளும் தொங்கின; பல தீர்த்தங்களைக் கொண்டுவந்து பார்ப்பனர்கள் மணப் பெண்ணை நீராட்டினார்கள்; மத்தளம் முழங்கிற்று; சங்கு ஊதினர்; பார்ப்பனர் மந்திரம் ஓத, பெண்ணும் மாப்பிள்ளையும் கை பிடித்துக்கொண்டு தீ வலஞ் செய்தார்கள். பெண்ணின் காலை மாப்பிள்ளை தூக்கி அம்மி மிதிக்க வைத்தார்."

 (சடங்குகள் அதிகம் ஆயின; நம் காலத்தில் துக்கத்துக்கு ஊதும் சங்கு முன்னாளில் திருமணத்திற்கு ஊதப்பட்டிருக்கிறது.)

 இக் காலத்தில் தாலி கட்டுதலே மிக முக்கிய சடங்கு. இது பழைய வழக்கம் அல்ல என்பது தெரிகிறது. இது 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது என டாக்டர் மா. ராசமாணிக்கனார் தமது "தமிழர் திருமணத்தில் தாலி" என்னும் நூலில் எழுதியுள்ளார்.
 -------------------------------------------

 (படம்: நன்றி இணையம்)


Monday, 17 February 2014

கதம்பம் - தொடர்ச்சி

 7-- நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நாம் ஆங்கிலேயரிடமிருந்து கற்றோம்; தேங்க்ஸ் என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் இல்லாமையால், "நன்றி" என்கிறோம்.

  அது நன்மை என்றுதான் பொருள்படும். அவ்வையார் இயற்றிய "மூதுரை" யின் முதற் பாட்டு, " நன்றி ஒருவற்குச் செய்தக்கால்" எனத் தொடங்குகிறது: 'ஒருவருக்கு நன்மை செய்தால்என்பது அர்த்தம். திருக்குறளின் 101 ஆம் அதிகாரத் தலைப்பு: நன்றியில் செல்வம். நன்மை இல்லாத செல்வம்அதாவது  தானும் துய்க்காமல் பிறர்க்கும் ஈயாமல்  சேர்த்து வைத்துள்ள செல்வம்.

 குறளின் 11 ஆம் அதிகாரம் "செய்ந்நன்றி அறிதல்" என்பதற்கு மற்றவர் நமக்குச் செய்த நன்மையை மறவாமை என்பது பொருள். அந்த அதிகாரத்தில், நன்றி என்னும் சொல்லுக்கு மாற்றாக அதே அர்த்தமுடைய உதவி,  நன்று என்ற சொற்கள் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

குறள் 439:     இதில்,  "நன்றி பயவா வினை" என்பதற்குப் பரிமேலழகர்,  "தனக்கு நன்மை தராத செயல்கள்" என உரைத்துள்ளார்.

     எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
     செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்னும் குறளின் விளக்கம் அறிவோம்:


  எந்த நன்மையைச் சிதைத்தார்க்கும், அதாவது நிழல் தரும் சாலை மரத்தை வெட்டுதல்,  குடிநீர்க் குளத்தை (ஊருணி) அசுத்தப்படுத்தல் முதலான நன்மைகளைக் கெடுத்தார்க்கும் மன்னிப்பு உண்டுஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது மன்னிக்கக் கூடாதது.

   8 -- உழவுத் தொழில் -- பண்டைய   நாகரிக மக்களாகிய பாபிலோனியர், எகிப்தியர், ரோமானியர்உழவையே மகோன்னதத் தொழிலாய் மதித்துப் போற்றினர்தமிழர்களும் அவ்வாறே. திருக்குறளில் அதற்கு ஓர் அதிகாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது:

   "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்"
   "உழுவார் உலகத்தார்க்கு ஆணி"
    "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்"

 என்றெல்லாம் உழவைத் திருக்குறள் உயர்த்திப் புகழ்கிறது. பிற தமிழ் அற நூல்களும் தான்.

 அது பண்ட மாற்றுக் காலத்திய நிலைமை. அவரவரும் தங்களிடம் உள்ளபொருளைக் கொடுத்து அதற்குப் பதிலாகத் தேவையான பொருளைப் பெற்றனர். மிளகுக்கு உப்புஆட்டுக்கு நெல்,  துணிக்குக் கள்முத்துக்கு மாடு எனப் பொருள்கள் கை மாறின:

   "பாலொடு வந்து கூழொடு பெயரும்
  யாடுடை இடையன் ..... " குறுந் --221  

 கைத்தொழிலாளர் தாங்கள் உருவாக்கிய சட்டி பானைபாய்கூடைமரப்பெட்டிவிசிறி  முதலான சாமான்களைத் தந்து மாற்றுப் பொருள் வாங்கினர்உடலுழைப்பைத் தந்து அதற்கு ஈடாய் ஏதாவது பொருள் பெற்றனர். உழைக்கவும் இயலாதவனுக்கு எப்பொருளும் கிட்டாதுஅவன்வாழ வழி ஏதுஇரந்துதான் காலம் தள்ள வேண்டும்ஆகையால், "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார் வள்ளுவர்.  (சில பகுதிகளில் காசும் புழங்கியது)

 பொருள்களுள் இன்றியமையாதது உணவு அல்லவா?   வேறு பொருள் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்;   சாப்பிடாமல் பிழைக்க இயலாதுஅந்த மேம்பட்ட உணவுப் பயிரை விளைக்கிற தொழில் தலைசிறந்ததாய்ப் போற்றப்பட்டதுபணம் இருந்தால், எதையும் கடையில் வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்ட பிறகுஉழவு சிறிது சிறிதாய் மதிப்பு இழந்ததுஉழவர்கள்  பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். வாய்ப்பு  உடையோர், அந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறவே  விரும்புகின்றனர்.

  இப்போது, யாவற்றிலும் உயர்ந்த தொழில் எதுமருத்துவமே. உயிரைக் காப்பது அதுவல்லவோ?   உயிரினும் விழுமியது வேறென்ன?
Saturday, 15 February 2014

கதம்பம் - 1


 1 - லுங்கி -- தமிழக முஸ்லிம்கள் லுங்கி உடுத்துகிறார்கள்; மற்றவர்கள் நைட்டியாகப் பயன்படுத்துகின்றனர். அது மியான்மார் நாட்டு மக்களாகிய பர்மியரின் தேசிய ஆடை. லுங்கி என்பது பர்மியச் சொல்.

 2 -- இரண்டாம் உலகப் போரின் இறுதியில் (1944) ,  படை வீரர்களை எந்த மாதிரி பாதையிலும் கொண்டு செல்லத் தக்கதாய் அமெரிக்கர் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ஊர்தி: ஜீப்.

 3 -- ஐரோப்பாவின் மிக உயரமான மலை உச்சி மவுண்ட் ப்ளான்க் என ஆங்கிலத்தில் சுட்டப்படுகிறது;  மோன் ப்ளான் (Mont Blanc) என்பது அதன் ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயர். வெள்ளை மலை என்று பொருள்.

 4 -- Fortune is blind  என ஆங்கிலம் சொல்வதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்கிறோம்; பிரெஞ்சிலும் அவ்வாறே சொல்கின்றனர்.

பழங் காலக் கிரேக்கர்அதிர்ஷ்டத்தை, ஒரு தேவதையாய் உருவகித்தனர்; அது, கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்ட நிலையில், ஓர் உருளையின்மீது நின்றபடி, விரைந்து செல்லும். "அதிர்ஷ்டம் எப்போது வரும், யாருக்கு அடிக்கும் என்பது உறுதி இல்லை;  அதிர்ஷ்ட தேவதை ஆள் பார்த்து அருளுவதில்லை" என்பதையே கட்டப்பட்ட கண்கள் குறித்தன. இதன் அடிப்படையில்தான் குருட்டு அதிர்ஷ்டம் என்னும் கருத்து பிறந்தது.


நீதி தேவதையின் கண்களும் கட்டப்பட்டு இருப்பதாய்ச் சித்திரிக்கப்படுகிறது. ஆளுக்குத் தக்கபடி நீதி வளையாது என்பது கருத்து.


5 -- பெயர்கள் - 2000 ஆண்டுக்கு முன்பு, பிரான்சு நாடு,  "கோல்" என அழைக்கப்பட்டது. அதன்மீது பலப்பல கூட்டத்தார் அடுத்தடுத்துப் படையெடுத்தார்கள்; அவர்களுள் முக்கியமானவர்கள் "ஃப்ரான்" என்போர்; இவர்கள் அந்த  நாட்டில் ஆட்சி அமைத்து நீண்டநெடுங் காலம்  ஆண்டார்கள்; இவர்களின் பெயரால் கோல் நாடு,  ‘ஃப்ரான்ஸ்ஆயிற்று;

  தமிழர்கள் தம் பெயரில்,   மொழியின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள் அல்லவாதமிழரசி, தமிழ்வேந்தன், தமிழ்மணி, தமிழ்வாணி என்பது போல் . பிரஞ்சியர்க்கும் இந்த வழக்கம் உண்டு: பிரான்சுவா, பிரான்சீஸ், பிரான்க், பிரான்சுவாஸ், பிரான்ஸ். 19 ஆம் நூற்றாண்டில் இலக்கிய நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் பெயர்: அனத்தோல் பிரான்ஸ்.

 அவர்களிடம் இன்னொரு வழக்கமும் உண்டுஆணின் பெயரைச் சிறிது மாற்றிப் பெண் பெயராக்குவது தான் அது. தமிழரசன் - தமிழரசி, தமிழ்ச்செல்வன் - தமிழ்ச்செல்வி என இரண்டுதான் தமிழில் உண்டு; பிரஞ்சில் நிறைய:

அந்த்துவான் - அந்த்துவானேத்
ழுய்ல் - ழுய்லி;  
ழுய்லியேன் - ழுய்லியேத்;  
தெனீ - தெனீஸ்;  
லூய் - லூய்ஸ்;  
ஃரான்சுவா - ஃரான்சுவாஸ்;  
சிமோன் - சிமோன்னு;  
ழான் - ழான்னு;   
ழாக் - ழாக்லீன்;  
ழொசேஃப் - ழொசேஃபீன்;  
வலாந்த்தேன் - வலாந்த்தீன்;  
ஷார்ல் - ஷர்லோத்;  
போல் - பொலீன், பொலேத்.

  சில பிரஞ்சுப் பெயர்களைத்  தெரிந்துகொண்டீர்கள்.

  6 -- இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் சிங்கப்பூரைக் கைப்பற்றி அதற்கு "ஷோனான்" என்று பெயர் சூட்டினர்;  " தெற்குத் தாய்நாடு" என்று பொருளாம்.

                ++++++++++++++++++++++++++++++++Wednesday, 5 February 2014

என் புத்தகம் பற்றிய மதிப்புரை - வல்லமையின் பரிசு பெற்றது

வல்லமை இணைய இதழில் நடத்தப்பட்ட புத்தக மதிப்புரை போட்டியில் நான் எழுதிய பிரெஞ்சிலக்கிய வரலாறு என்னும் நூலைப்பற்றி  திருமதி. கலையரசி எழுதிய மதிப்புரைக்கு மூன்றாம் சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது. தேர்ந்தெடுத்தவர் மூத்த விமர்சகர் திரு. வெங்கட் சாமிநாதன். 

விமர்சகரின் கருத்து:-

மூன்றாவது ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த காரைக்காலில் பிறந்து ஃப்ரெஞ்ச் கற்று அதன் இலக்கிய வரலாற்றை ஃப்ரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் மொழிகள் அறிந்த சொ.ஞான சம்பந்தன் எழுத, அவர் புத்தகத்துக்கு மதிப்புரை எழுதி நம் கவனத்துக்கு அதைக் கொண்டு வந்த கலையரசி அவர்களின் மதிப்புரைக்கு மூன்றாவது சிறப்புப்பரிசு தரவேண்டும்.

வல்லமை இதழின் ஆசிரியர்:-

மிகச் சரளமான நடையில், பிரெஞ்சிலக்கிய வரலாறு என்னும் நூலை படித்தே ஆக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுமளவிற்கு தம் எழுத்துக்களால் நம்மைக் கவர்ந்துள்ள திருமதி.கலையரசி  சிறப்புப்    பரிசை வென்றுள்ளமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள்.

திருமதி. கலையரசி எழுதிய புத்தக மதிப்புரை கீழே:

பிரெஞ்சிலக்கிய வரலாறு’ – புத்தக மதிப்புரை போட்டி


இலக்கிய வரலாறு என்ற தலைப்பைப் பார்த்தவுடன், தலைமறைவாகும் எண்ணம் உடனே உங்களுக்குத் தோன்றுகிறதா?  ‘அச்சச்சோ! படு போர்! ஆளை விடுங்க,’ என்று திரும்பிப் பார்க்காமல் ஓடுபவரா  நீங்கள்.? ‘அது மெத்தப் படித்தோருக்கான நூல்; இலக்கிய கோட்பாடுகளைப் புரியாத மொழியில் இஸம்’, ‘ரசம்,’ என்று ஏதேதோ சொல்லிக் குழப்புவார்கள்,’ என்ற கருத்துடையவரா நீங்கள்

பிரெஞ்சு இலக்கிய வரலாறு என்றால் அம்மொழியின் படைப்பாளர் களையும் படைப்புக்களையும், கால வரிசையில் தொகுத்துத் தருவது தான் ஆசிரியரின் வேலைஅதில் சுவைக்க என்ன இருக்கிறது என்று  நினைப்பவரா

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ஆம்,’ எனில், இந்த மதிப்புரை உங்களுக்கானது தான். இதை ஒரு முறை வாசித்தால், தலைப்பை மட்டும் வைத்து நூலின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது எவ்வளவு பெரிய தவறு என்று தெரியவரும்.

பிரெஞ்சிலக்கிய வரலாற்றைத் தமிழில் கூறும் முதல் நூல் இது.  ஆசிரியர் பிரெஞ்சு மொழி வழிக் கல்வி பயின்றவர் என்பதால் அவ்விலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருக்கிறது.  தமிழிலும் புலவர் பட்டம் பெற்றிருக்கிறார். 

பிரெஞ்சு, தமிழ் இரண்டிலும் இவர் பெற்றுள்ள புலமை, பிரெஞ்சு படைப்புக்களிலிருந்து எடுத்துக்காட்டுத் தரும்போது, ஆங்காங்கே அதற்கிணையான கருத்துக்களைத் தமிழிலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்ட பெரிதும் துணை புரிகின்றது.  கவிதைகளைக் கூட மொழியாக்கம் என்று தெரியாதவாறு, தமிழ்க்கவிதை போல் உருமாற்றித் தாம் பெற்ற இன்பத்தை நாமும் துய்க்கப் பெரிதும் உதவியிருக்கிறார். 

ஆ(ன்)த்ரே ஷெனிஏ (Andre Chenier 1762 – 1794)  என்ற கவிஞர் பாரீசு புரட்சியின் போது மிதவாதி என்பதால் தீவிரவாதிகளால் கைது செய்யப் பட்டு 1794 ல் கொலையுண்டார்.

எந்த நேரமும் தலைவெட்டும் மேடைக்கு அழைக்கப்படலாம் என்ற நிலையில் அவர் பாடிய 88 அடி கொண்ட ஒரு கவிதையின் முதல் 24 அடிகளின் தமிழாக்கத்தைப் படித்துப் பாருங்கள்:

கடைசிக் கதிரைப் போல்,”

அழகிய தொருபகலின் அந்தத்துக்கு உயிரூட்டும்
கடைசிக் கதிரொளியும் கடைமென் காற்றும்போல்
கொலைமேடைக் கீழிருந்து கவிதைதனைப் புனைவதற்கு
இன்னமும் நான் முயல்கின்றேன்.
விரைவில் என்முறை வந்துவிடலாம்.
பளபளக்கும் எனாமல் டயலின் மேலே
அறுபது சுவடுகளே அமைந்துள்ள பாதையில்
வட்டமாக உலாவும் மணிமுள்
ஒலியெழுப்பும் தன்னுடைய காலடியை வைக்குமுன்
கல்லறை உறக்கம் என்இமை தம்மை
அழுத்தக் கூடும்.
இந்தப் பயங்கரச் சுவர்களுக்கு இடையில்
ஆவிகளைத் திரட்டும் கொடுங்கூற் றுவனின்
செய்தியைத் தாங்கித் தூதன் ஒருவன்
பழிப்புக்கு ஆளான படைவீரர் புடைசூழ
வந்தென் பெயரைக் கூவியே இந்த
நீண்ட ஒளியற்ற நடைப்பா தைகளை
நடுங்க வைக்கலாம்,
நானெழுதத் தொடங்கும் இந்தக் கவிதையடி
தன்னிறுதி அசையை அடைவதற் குள்ளே.
கொலை வெறியரைக் குறிவைத் தேநான்
இந்த வேல்களைக் கூர்தீட்டு கின்றேன்,
நீதிக்கு மிகமிக மெல்லிய ஆதரவாய்.
கவிதையை அரைகுறையாய் அவன்முடிக்கக் கூடும்.
கைகளில் தளையிட்டு எனையிழுத்துச் செல்லலாம்.
அந்தச் சோகச் செய்தி வரும்முன்பு
என்னை யறிந்திருந்த எல்லா நண்பரும்
அப்போது என்றனுக்கு அந்நியர் ஆகிப்
பார்வை யாளராய்க் கும்பல் கூடுவர். (பக் 163)

(பி.கு.  பளபளக்கும் எனாமல் டயலின் . . . . . காலடியை வைக்குமுன் ஒரு மணி நேரத்திற்குள்) 

கவிதையை வாசித்தவுடன் சில மணித்துளிகள் ஒன்றுஞ் செய்ய தோன்றாமல் மனம் கனத்துப் போய்விட்டது எனக்கு.  உங்களுக்கு?

வசந்தத்தின் வருகை,’ என்ற கவிதை:-

         “காலமானது காற்று குளிர்மழை
         என்ற போர்வை களைந்து
         பளிச்சென்ற அழகிய ஒளிவீசும்
         வெயில் பூவாடை யணிந்தது. (பக்கம் 36)

படிமம் ஒன்றைச் சுவைக்க வேண்டுமா?

கடல்களின் பட்டுக்கும் வடதுருவப் பூக்களுக்கும் மேலே
குருதி ஒழுகும் இறைச்சிக் கட்டடம்(பக் 229)

(“கடல்கள் உடுத்தியுள்ள நீலப் பட்டாடைக்கும், வட துருவத்தில் நிமிர்ந்து நிற்கும் வெள்ளைப் பனிப்பாறைகளுக்கும் மேலே, இரத்தம் கசிகிற மாட்டிறைச்சி போல், செக்கச் சிவந்து தோன்றும் அந்தி வானம்”)

இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை உண்டு என்றால் நீங்கள் நம்புவீர்களாசேச்சே! இருக்காது என்பீர்கள்.  சான்று காட்டினால்?

இதோ எடுத்துக்காட்டு:-

என்னிரு தோள்மேல் கைகளை வைத்தே
அழைத்துச் சென்றனர் மணப்பெண் போலக்
கொஞ்சம் முரட்டுத் தனமாய்த் தானே.
காவலர் பெற்றார் கெளதாரி ஒன்று;
கொக்கும் முயலும் ஒக்கவே தந்தேன்;
இருப்பினும் உள்ளேன் இங்கே இன்னும்

ஆசிரியரின் குறிப்பு:- (அவர் கைதான போது தப்புவதற்காகக் கையூட்டுக் கொடுத்தார்.  பயனில்லை.  (லஞ்சம் வாங்கியும் காரியத்தை முடிக்காதவர்கள் அக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்) (பக்:44)

அல்போன்ஸ் தொதே(Alphonse Daudet) எழுதிய தர்த்தாரே(ன்) த தராஸ்கோ(ன்)என்ற நகைச்சுவை புதினத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும்  ஒரு காட்சியும் நல்ல நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. (பக்கம் 209)

தமிழில் வழங்கும் உனக்கும் பே பே, உங்கப்பனுக்கும் பே பே,’ என்னும் பழமொழிக்கு மூலம், பிரெஞ்சு நாடகம் பாத்தலே(ன்)என்பது இந்நூலை வாசித்த பிறகு தான் தெரிகிறது. அக்கதை சுருக்கம் தெரிய, பார்க்க
பக்கம் 35.

துவக்கத்தில் பிரான்சு மற்றும் அதன் மொழி வரலாறு பற்றிச் சுருக்கமாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.  ஆங்கிலத்தில் உள்ள அதே 26 எழுத்துக்களே பிரெஞ்சிலும் உள்ளன.  இவை ரோமன் எழுத்துக்கள் அல்லது லத்தீன் எழுத்துக்கள் எனப்படும்.  பிரெஞ்சில் எழுத்துக்களை விட ஒலி மிகுதி.  17 உயிர் 19 மெய் ஒலிகள் இம்மொழியில் உள்ளன.  தமிழின் வுக்கு ஓரளவு ஒப்புமை உடைய ஒலி ஒன்று உள்ளது.

தமிழுக்கு மட்டுமே உரியது என்று தானே, நம்மில் பெரும்பாலோர் இதுவரை நினைத்திருந்தோம்; அது தவறு!

படைப்பாளர் மற்றும் படைப்புகளின் பெயர்களைத் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பதால், அவற்றின் சரியான பிரெஞ்சு உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

நமக்குத் தெரிந்த ALEXANDRE DUMAS ஐ நாம் எப்படி உச்சரிப்போம்? அலெக்ஸாண்டர் டியுமாஸ் என்று தானேசரியான உச்சரிப்பு டியுமாசுமில்லை, பொடிமாசுமில்லை.  அலெக்சா(ன்)த்ரு துய்மா! (பக் 189)

நூற்றாண்டு கால அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் பிரெஞ்சிலக்கிய வானில் உதித்த குறிப்பிடத்தக்க கவிமணிகள், அறிவியல் மற்றும் தத்துவ அறிஞர்கள், நாடகாசிரியர் நாவலாசிரியர் ஆகியோரின் வாழ்வு பற்றிய குறிப்புகளோடு
அவர்களின் முக்கிய சிந்தனைகளையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.

எடுத்துக்காட்டுக்கு பெர்னார்தே(ன்) (Bernardin 1737 – 1814) புகழுக்குக் கட்டியம் கூறும், ‘போலும்  விர்ழினீயும்’ (Paul et Virginie) என்ற நூலில் இருந்து சில சிந்தனைகள்:-

ஆயிரம் ரோஜாக்களின் நறுமணம் ஒரு கணந்தான் இன்பம் அளிக்கும்.  ஆனால் அவற்றின் இடையேயுள்ள ஒரெயொரு முள்ளின் குத்து நெடுநேரம் வலி தரும்.

செல்வர்களுக்கு இன்பங்களின் நடுவே நேரும் ஒரு துன்பம், பூக்களின் நடுவே ஒரு முள்; ஏழைகளுக்கோ இன்னல்களுக்கு மத்தியில் ஓர் இன்பம், முட்களுக்கு இடையே மலர்.” 

திண்ணமாக வந்தே தீரும் என்று நாம் தெரிந்து கொண்ட ஒரு துயரம், அது நிகழும் வரை உள்ள எல்லா நாட்களையும் சோகமயம் ஆக்கிவிடும்.

பிரெஞ்சு படைப்புக்களிலிருந்து எடுத்துக்காட்டுத் தரும்போது ஆங்காங்கே அதற்கிணையான கருத்துக்களைத் தமிழிலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டுவது ஆசிரியரின் இருமொழி புலமைக்குச் சான்று:-

எ.கா:- 1.

வொல்த்தேர் (Voltaire 1694-1778) கூறுகிறார்:-

வாழ்க்கை இனியதும் அல்ல, இன்னாததும் அல்ல; அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வது நல்லது.

கணியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுக்கு முன் கூறினார்:

……………..வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே.”  (பக்கம் 140)

எ.கா:- 2

உவமைகளை மிகையாக்கிப் புழங்கினர். 

காதலியின் கண்ணொளி சூரியனை இருட்டாக்கியது
வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய  (கம்பராமாயணம்)

சூரியனின் ஒளி இராமனின் மேனி ஒளியால் மறைந்தது.  (பக்.60)

எ.கா:-
1.     150 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சியர் கண்டுபிடித்த குறியீட்டியல் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழில் இடம் பெற்றுள்ளது. 

அகநானூறு 160 – ஆமையொன்று முட்டையிட்டு அடும்பு என்னுங் கொடியால் அதை மறைத்தது. (நப்பசலையார்)

தலைவி தன் களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் மறைத்தாள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. (பக் 214)

12 ஆம் நூற்றாண்டில் தான் பிரெஞ்சில் இலக்கியம் தோன்றியிருக்கிறது என்பதை இந்நூல் வாயிலாக அறியும் போது வியப்பு மேலிடுகிறது.  இன்று பிரெஞ்சு எல்லாத்துறைகளிலும் பிரமாத வளர்ச்சியுற்ற செழுமை மிக்க மொழிகளுள் ஒன்றாக மிளிர்கிறது.  அதன் உரைநடை மிக விழுமிய தரம் உடையது.  இத்தரத்தை எட்டுவதற்கு ஆங்கிலத்துக்கு 100 ஆண்டு தேவை என்று கணக்கிட்டுள்ளார் காலஞ் சென்ற தீர்ப்பாளர் எஸ் மகராசன்.” 

சொல்லைத் தேய்த்துத் தேய்த்துச் சன்னக் கம்பிகளாய் இழுத்து இழுத்து நகாசு வேலை செய்யப்பட்ட மொழி பிரெஞ்சு”  (ஆதாரம்: தெய்வ மாக்கவி 1974) (பக் 12)

பிரெஞ்சு உரைநடை மிக விழுமிய தரம் உடையது என்பதாலோ என்னவோ, அதன் வரலாற்றைக் கூறும் இந்நூலின் தமிழ் உரைநடையையும் மிக விழுமிய தரத்தில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.
 
எடுத்துக்காட்டுக்குச் சில வரிகள்:-     
 
பிரெஞ்சு உரைநடைக்கு வளம் தந்து வலுவான அடிப்படை அமைத்தவர் ராப்லே.  இந்த அடித்தளத்தின் மீது தான் அடுத்த நூற்றாண்டு( 17 ஆம் நூ)
எழுத்தாளர்கள் எழில் மிகு மாளிகைகளை எழுப்புவார்கள்.(பக் 46)

வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்த அவரின் நூல்கள், மாந்த மன ஆராய்ச்சியாளர்க்கு மதிப்பிட முடியாப் புதையல்.”  (பக்:53)

இருண்டு கிடந்த கவிதையுலகில் ஒளி பாய்ச்சிய ஞாயிறு’  (பக் 55)
யாப்பைச் செப்பமாய் அமைத்துப் பாமர மொழிச் சொற்களை விடுத்து உரைநடையினின்று மாறுபட்ட கவிதை நடையில் எழுதிப் பிறர்க்கு ஒரு புது வழி காட்டியவர் அவர்.”  (பக் 196)

சிறந்த யாப்பில் செவிக்கின்பம் பயக்கும் அல்லது அறிவை மயக்கும் சொற்களைப் பொறுக்கி எடுத்துப் பயன்படுத்தியதுடன், அடுக்கு மொழிகளையும் ஆங்காங்கே கோத்துள்ளார். (பக் 198)

உரைநடைக்கு மேலும் கொழுமை சேர்த்த லபுருய்யேர் (La Bruyere) பற்றிக் கூறும் போது, ‘அவருடைய நடை வளமானது, படிப்போரின் கவனத்தை தம் பக்கம் ஈர்த்துப் பிணிக்கும் ஆற்றல் கொண்டது,’ என்று எழுதியிருப்பது  இந்நூலாசிரியரின் நடைக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

சட்டமியற்றல், நிர்வாகம், நீதி ஆகிய மூன்று தனித்தனியே இருக்கவேண்டும் என்று முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் பிரெஞ்சு அறிஞர் மோ(ன்)த்தேஸ்க்கிய (Montesquieu).

இவரது இலக்கிய கொள்கையான வாசிக்க வைப்பது போதாது; சிந்திக்கத் தூண்ட வேண்டும்” (பக்கம் 133) என்ற அறிவுரைக்கேற்ப, இந்நூல் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

ஆசிரியர் தாய்மொழி மீது அளவற்ற பற்று கொண்டவர் என்பது ஏற்றம் பெற்றிருக்கும் பிரெஞ்சு மொழியோடு நம் மொழியை ஏக்கத்துடன் ஒப்பிட்டு, தமிழ் உன்னத நிலைக்கு வருவதற்கான ஆலோசனையை வழங்குவதிலிருந்து அறிகின்றோம். 

பிரெஞ்சு மொழி ஆக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் வித்திட்ட பிரெஞ்சுக் கழகம் பற்றி வியந்து கூறும் போது, “இத்தகைய கழகம் தமிழகத்தில் தோன்றி அரசியல் நுழைய இடந்தராமல், மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டால் கொஞ்சங் கொஞ்சமாக நலிந்து வரும் தமிழ் மொழி தலைநிமிரும்; வளம் பெற்று உயர்ந்து ஓங்கும்.”  (பக்கம் 59)

சுற்றுலாவி,’ (பக் 128) (சுற்றுலா சென்று) என்பது இவர் தமிழுக்கு அளித்த புதுச்சொல்.

நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாகிய பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு மொழியின் இலக்கிய செல்வங்கள் பற்றிய வரலாற்றைத் தமிழுக்கு அளித்ததன் வாயிலாக ஞானசம்பந்தத்தின் கொடை ஞானக்கொடையா கிறது,” என்று பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் அவர்கள் முன்னுரையில்
கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையே.

இந்நூலை வாசித்து முடிக்கும் போது ஒட்டுமொத்த பிரெஞ்சு இலக்கியத்திற்குள் நீண்ட தூரம் பயணித்து ஒரு பறவை பார்வையுடன், அதன் சிறப்புக் கூறுகளைச் சுவைத்து மீண்ட திருப்தி நமக்கு ஏற்படுகின்றது. 

நூலின் பெயர்:- பிரெஞ்சிலக்கிய வரலாறு
ஆசிரியர் பெயர்:-சொ.ஞானசம்பந்தன்
பக்கம்:- 272
வெளியான ஆண்டு:- நவம்பர் 2003
உரிமை: ஆசிரியருக்கு
விலை:- ரூ 90.00
வெளியீடு:- மெய்யப்பன் பதிப்பகம்
          53, புதுத்தெரு, சிதம்பரம்-608001. 

எழுதிய பிற நூல்கள்:- லத்தீன் இலக்கிய வரலாறு
                      தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?
                      மோப்பசான் கதைகள் (பிரெஞ்சு சிறுகதைகள்)                       
                      சிங்க வேட்டை (பிரெஞ்சு குறும்புதினம்)
                      மறைந்த நாகரிகங்கள்
         
 ***************************************************************************************************
   
வல்லமை இதழில் போட்டியின் முடிவைக் காண லிங்க்:

மதிப்புரையை வாசிக்க லிங்க்: