Sunday 20 December 2015

நூல்களிலிருந்து -- 1


நான்  வாசித்த  நூல்களின்  சில  பகுதிகள்  பலருக்கும்  பயன்படலாம்  எனக்  கருதுகிறேன்அவற்றை  அவ்வப்போது  பகிர்வேன்முதல்  நூல்அறிஞர்  எஸ். வையாபுரி இயற்றிய  "இலக்கியச்  சிந்தனைகள்"  (இரண்டாம்  பதிப்பு - 1956 . பக். 137.   21   கட்டுரைகளுள்தலைப்புதமிழும்  அகராதியும்)





     அகராதி  என்ற  பெயர்  முதன்முதலில் காணப்படுவது  1594 இல்  தோன்றிய 'அகராதி நிகண்டுஎன்ற  நூலின்  பெயரிலேதான்; இதன்  ஆசிரியர்  சிதம்பர  ரேவண சித்தர் என்னும்  வீரசைவப்  புலவர்இவர்  இட்ட  பெயரே  இப்போது  டிக்ஷனரி என்று  ஆங்கிலத்தில்  கூறும்  நூலுக்குரிய தமிழ்ப்  பெயராய்  அமைந்துவிட்டது.

     அரிச்சுவடியிலுள்ள  எழுத்து முறைப்படியே   சொற்களை  அமைப்பதுதான்   அகராதிமுறைஇது நமக்கு எளிதாகத் தோன்றுகிறது;  ஆனால் இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிற தமிழ்  இலக்கிய சரித்திரத்தில், இம்முறை16-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறதுஅப்பொழுதும் இது அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது; சொல்லின் முதலெழுத்து முறையையே ஆசிரியர்கள்  நோக்கி  வந்தனர். உதாரணமாக அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமர்  முதலிய  சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே கருதிஅவற்றை ஒரு முறையில்  நிறுத்தினர்;  இந்த  முறையை  அகராதி நிகண்டில்   காணலாம்.  இதனால்  அகரத்தில்  தொடங்கும் ஒரு  சொல்லை, குறித்த  ஓரிடத்தில் கண்டுபிடிப்பது எளிதாயில்லை. இரண்டாவது   எழுத்தையும் நோக்கி சொற்களை முறைப்படுத்திய  நூலொன்று   சுமார்  நூறு  ஆண்டுகளின்பின்  தோன்றியது;   இதன் பெயர்,  'அகராதி மோனைக் ககராதி எதுகை' என்பதாகும்; இம்முறையிலேயும் ஒரு  சொல்லைக் குறிப்பிட்ட இடத்தில் கண்டுபிடிப்பதற்கு வழி  இல்லாமலிருந்தது.

      முதன்முதலில்  சொற்களின்  எழுத்துகள்  அனைத்தையும் நோக்கி அகராதி  அமைத்தவர்கள் ஐரோப்பியப் பாதிரிகளே ஆவர்; 17 ஆம்  நூற்றாண்டு  பிற்பகுதியில்  ஐரோப்பியப் பாதிரியார்கள் தமிழ் நாட்டிற்கு வரத்  தொடங்கினர்தமிழ்  மக்களுக்குக்  கிறிஸ்தவ மத   உண்மைகளைத்  தமிழ்  மொழியிலே  போதிக்க  வேண்டுமென  இவர்கள் கருதினார்கள்ஆகவே  இவர்கள்  தாமும்  தமிழ்  கற்க  வேண்டுவது  மிக  அவசியமாய்  முடிந்தது;   கற்பதற்குக்  கருவி  நூலாக   அகராதி  ஒன்று   இயற்ற  வேண்டுவதும்   இன்றியமையாததாயிற்று;  எனவேதமிழில்   முதன்முதலில்  அகராதி  தோன்றுவதற்குக் காரணமாய்  இருந்தவர்கள்   இப்பாதிரிமார்களே  ஆவர்.

    அந்நிய  மொழிக்கு  உரியோராகிய  பாதிரிமார்கள் அகராதி  இயற்றப்  புகுந்தது ஒரு  நல்ல  அதிருஷ்டம்  என்றேதான்  கூறவேண்டும்;    ஏனெனில் சில  நன்மைகள்  இதனால்  விளைந்தனமுதலாவதுபிற  மொழிகளில்  அகராதிகள்   செப்பமாக  அமைந்துள்ள முறையைத்  தமிழ்  அகராதிகளிலும்    கையாள  முடிந்தது; இரண்டாவதுபாதிரிகளுக்குத்  தமிழ்   புதிய  மொழி  ஆகையினாலே இவர்கள் தமிழிலுள்ள எல்லாச் சொற்களுக்கும்  பொருளுணர  வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே கடின பதம் எளிய பதம் என்ற வேற்றுமையின்றி எளிய பதங்களுக்கும்கூடப் பொருள் விளங்க வேண்டுவது  அவசிமாயிற்றுஉதாரணமாகநான்அது, வீடு முதலிய சொற்களையும்  அகராதியில் விளக்கவேண்டியதாயிற்று;  மூன்றாவதுநூல் வழக்கிலன்றிசாதாரண மக்கள் பல பிராந்தியங்களிலும் வழங்கி வந்த சொற்களும்  அகராதியில் இடம் பெற்றன. தமிழ் கற்ற பண்டிதர்கள் இவ்வழக்குச்   சொற்களிற் பலவற்றை, இழிசனவழக்கு என்றேனும்வழுச்சொல் என்றேனும் ஒதுக்கி விடுவார்கள்ஆனால் அந்நிய நாட்டுப் பாதிரியார்கள்  இவ்வாறு  ஒதுக்க  முடியாதுஅவர்கள் சாதாரண மக்களோடுஅதுவும்  கல்வி  பெறாத கீழ்த்தட்டு மக்களோடுபழகி வந்தார்கள்அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே  அவ்வழக்குச்  சொற்களும் அகராதியில்  இடம்  பெற்றனஇவ்வாறாக, தமிழ் மக்களுள்  பல   இனத்தாரும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே  வழிகாட்டியாய்  இருந்தார்கள்.

     1679 இல்  தமிழ்ப்  போர்த்துகீசிய அகராதி  ஒன்று  ப்ரொ  இன்ஸா என்ற  பாதிரியாரால்  இயற்றப்பட்டதுஆனால் இப்போது  இது  மறைந்துவிட்டதுஇதனையடுத்துத்  தோன்றியது  பிரசித்தி  பெற்ற  சதுரகராதியாகும்இதுவே  தமிழில்  முதன்முதலில்  பிறந்த   அகராதி  என்று  சொல்லலாம்இதனை  இயற்றியவர்  தைரியநாதஸ்வாமி என்றும்  வீரமாமுனிவர்  என்றும் பெயர்  வழங்கிய பெஸ்கி  (Father Beschi) யாவர்.

 ----------------------------------------------
(படம் உதவி: இணையம்)