Monday, 27 November 2017

கலப்பு மணத்திற்கு ஆதரவாக ஒரு காவியம்

நூல்களிலிருந்து – 16

   (அருணன் இயற்றிய “தமிழ் இலக்கிய (வழி) வரலாறு” என்ற நூலிலிருந்து (2009) ‘கலப்பு மணத்திற்கு ஆதரவாக ஒரு காவியம்’ என்னுங் கட்டுரையின் முன் பகுதியை இங்கே பதிகிறேன்).   கலப்பு மணத்தைக் கருவாக வைத்து ஒரு காவியம் எழுந்திருக்கிறது; அதுதான் வளையாபதி. கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. காலமென்னுங் கறையான் அரித்தது போக மிஞ்சியிருப்பவை 66 செய்யுள்களே.

   இதன் கதை வைசீய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் புராணத்தில் இது இடம்பெற்றிருப்பதில் மிகுந்த அர்த்தம் உண்டு. கதையின் நாயகன் வளையாபதி ஒரு வைசியன். சமண மதத்தின் புரவலர்களாய் வைசியர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக் காவியம் அந்த மதத்தின் பெருமைகளைப் பேசுகிறது.

   கதைச் சுருக்கம் இதுதான்; மகப்பேறு இல்லாத வளையாபதி, பத்தினி என்ற வேளாளர் குலப் பெண்ணை இரண்டாந் தாரமாய் மணக்கிறான். பின்னர், எங்கே தன்னைச் சாதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்று பயந்து அவளை விரட்டிவிடுகிறான். அப்போது அவள் இவனது கருவைச் சுமந்துகொண்டிருந்தாள். ஆண் குழந்தை பிறந்து உத்தமன் எனப் பெயர் சூட்டப்பட்டு வளர்ந்து பெரியவனாகிறான். இங்கோ, மூத்தாள் ஒரு தாசியின் பிள்ளையைத் தன் பிள்ளை எனச் சொல்லி வளையாபதியை வஞ்சிக்கிறாள். முடிவில் சூழ்ச்சி அம்பலமாகிறது. மகப்பேற்றுக்காகத் தாழ்ந்த குலப் பெண்ணை மணந்தது தவறல்ல என்று வைசிய சாதிப் பெரியோர் கூறி, உத்தமனே வளையாபதியின் வாரிசு எனத் தீர்ப்பளிக்கிறார்கள்; எனினும் அவனுடன் பத்தினி சேர்ந்து வாழவில்லை; துறவி ஆகிவிடுகிறாள்.

   கறாரான வைதிக அடுக்கில் சமணம் ஒரு நெகிழ்ச்சித் தன்மையை வேண்டியிருக்கிறது என்பதன் இலக்கிய வெளிப்பாடாய் இந்தக் காப்பியம் திகழ்கிறது. நம் காலத்திலேயே சாதி விட்டுத் திருமணஞ் செய்வது அபூர்வமாய் இருக்கும்போது அந்தக் காலத்தில் சொல்ல வேண்டியதில்லை; ஆனால் அன்றே இப்படியோர் இலக்கியம் பிறந்தது, எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் சமத்துவச் சிந்தனையானது அவ்வப்போது திமிறிக் கொண்டு எழும் என்பதை உணர்த்துகிறது. நல் பெயர்களைச் சூட்டுவதிலிருந்தே நல்ல கதா பாத்திரங்களை அடையாளங் காட்டும் உத்தியை “பத்தினி, உத்தமன்” என்கிற பெயர்களிலிருந்து காணலாம்.


   பணம் படைத்த வைசியர்களுக்குத் தம் செல்வத்தை விட்டுச் செல்ல வாரிசு அவசியம். எவருமே மக்கட்பேற்றை விரும்பத்தான் செய்வர்; அந்த இயல்பான விருப்பத்துடன் சொத்தைக் கட்டியாள மகன் வேண்டும் என்கிற எண்ணமுஞ் சேர்ந்துகொள்கிறது.

&&&& 

Wednesday, 15 November 2017

வடமொழியின் ஆதிக்கம்
  கிடைத்த பண்டைத் தமிழ் நூல்களுள் மிகத் தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தின் காலம் பொ.யு.மு. 3-ஆம் நூற்றாண்டு எனக் கணக்கிட்டுள்ளனர். அதற்கும் முன்பே தமிழில் வடசொற்கள் கலந்துவிட்டிருந்தமையால் தொல்காப்பியர் ஒரு விதி வகுத்தார்:

   வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
   எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884)

இதன் பொருள்:
வடசொற்களை அவற்றுக்கேயுரிய எழுத்துகளை நீக்கிப் பொருத்தமான தமிழெழுத்துகளைப் பெய்து ஏற்க.

  இவ்விதிப்படி,

    பங்கஜம் – பங்கயம்
    விஷம்  - விடம்
    ஹீனம்  - ஈனம்

என்றெல்லாம் தமிழ்ப் புலவர்கள் எழுதினார்கள். சமற்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தியவர்கள் அம்மொழியின் கருத்துகளையும் கற்பனைகளையுங்கூடத் தழுவிக் கொண்டார்கள்.

   ஆறுகளைப் பெண்ணாய்க் கருதிய ஆரியர், அவறுக்கு கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதா எனப் பொருத்தமான பெயர் சூட்டினர். அவர்களைப் பின்பற்றி நாமும் காவேரி, அமராவதி, பவானி எனப் பெயர் வைத்தோம்.

   ---------------  நடந்தாய் வாழி காவேரி
   நடந்த எல்லாம் நின் கணவன்  (சிலம்பு, கானல்வரி)

என்று இளங்கோ காவேரிக்குக் கணவனாகச் சோழனைக் கற்பனை செய்தார். வையையையும் அவர் பெண்ணாய்ப் பாவித்தார்.

   புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
   வையை என்னும் பொய்யாக் குலக்கொடி (புறஞ்சேரி 169,170)

  ஆரியர் உலகையும் மங்கையாக உருவகித்து பூமாதேவி என்றதற்கிணங்க நாமும் அவ்வாறே கொண்டோம்;

1.   நிலம் என்னும் நல்லாள் நகும் (குறள் 1040)
2.   பூதலம் என்னும் நங்கை (கம்பர் 7401)
3.   நீராருங் கடலுடுத்த நிலமடந்தை (மனோன்மணீயம்)

   பூமியின் மகன் நரகாசுரன் என்பதை நம்புகிறோம். அவன் இறந்த நாளைத் தீபாவளியெனக் குதூகலத்துடன் கொண்டாடுகிறோம். அவன் நமக்கு என்ன தீங்கு செய்தான்? ஒருவன் பரம எதிரியே ஆனாலும் அவனது சாவுக்கு மகிழ்வது பண்பாடல்ல என்று 21-ஆம் நூற்றாண்டிலும் நமக்குத் தோன்றவில்லை.

   நாணம் என்ற பண்பைத் திருவள்ளுவர், “நாண் என்னும் நல்லாள்” எனப் பெண்ணாகக் கூறியதேன்? பரிமேலழகர் காரணஞ்சொல்கிறார்; “பெண்பால் ஆக்கியது வடமொழி முறைமையைப் பற்றி.”

   அதாவது, சமற்கிருதத்தில் நாணம் ‘லஜ்ஜா’ எனப் படுகிறது; இது பெண்பாற்சொல். ஆகவே, நாண் ஒரு பெண்!

  பழைய இலக்கிய, இலக்கணப் படைப்புகளுக்கும் நாம் சமற்கிருதத்துக்குப் பெரிதுங் கடன்பட்டுள்ளோம்;

  கம்ப ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் ஆகியவற்றுக்கு மூலம் வடமொழியிதிகாசங்கள் என்பது யாவரும் அறிந்தது; திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி, பெருங்கதை, நைடதம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், கந்த புராணம், குசேலோபாக்கியானம், அரிச்சந்திர புராணம், நளவெண்பா, தூது இலக்கியங்கள், மண்ணியல் சிறுதேர், தண்டியலங்காரம் முதலான படைப்புகளும் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் அல்லது சமற்கிருதத் தாக்கம் பெற்றவை.

   தொல்காப்பியங்கூட இந்திரன் என்பான் இயற்றி ஐந்திரம் என்ற வடமொழி இலக்கணத்தைத் தழுவியது என்பதை அதன் பாயிரம், “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனக் கூறுவதால் அறிகிறோம். குறிஞ்சி முதலிய நிலப்பாகுபாடு வடமொழிப் பரத சாத்திரத்திலிருந்து பெறப்பட்டதாம். தொல்காப்பியர்,

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெரும்புனல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள்-5)

என்று நால்வகை நிலத்துக்கும் தலைவர்களாக ஆரிய தெய்வங்களைத்தானே குறிக்கிறார்?
(வேந்தன் – தேவர்களின் மன்னன் – இந்திரன்)

  இந்திர விழா, பழந்தமிழரின் விழாக்களுள் குறிப்பிடத்தக்கது. கோவலன் – மாதவி பிரிவு இந்திர விழாவில்தான்.

  தமிழ் மன்னர்கள் அமல்படுத்தியது மனுச்சட்டம். ஆதித்த கரிகாலனைக் கொன்ற நான்கு பார்ப்பனர்களுக்குக் கொலைத்தண்டனை விதிக்கப்படாதது ஏன்? மனுச்சட்டம், பார்ப்பானைக் கொல்லக்கூடாது என்கிறதே! நமக்குப் பொருந்திய புதுச்சட்டங்களை இயற்ற வேண்டுமென ராஜராஜனுக்குக் கூடத் தோன்றவில்லை.

   இவ்வாறு நாம் சமற்கிருத ஆக்கங்களை முன்னோடியாய்க் கொண்டிருப்பதால், Tamil Literature is dependent on Sankskrit literature என்னும் ஆய்வு முடிவுக்கு வந்த மேனாட்டார் வடமொழிக்கே முக்கியந்தந்து போற்றுகின்றனர், கற்கின்றனர்.

  “கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பது” நல்லதுதான்; ஆனால், வடமொழி உரைநடை இலக்கியங்களைக் கற்றுக் களித்துத் தமிழில் அவற்றைத் தோற்றுவிக்காமற் போனது தமிழ்ப் புலவர்களின் தவறு; அப்படிச் செய்திருந்தால் வரலாறு, நாடகம், கட்டுரை, மருத்துவம், கதை, புதினம் முதலான புது வகைகளுள் சிலவாவது பிறந்து மொழியை வளப்படுத்தியிருக்கும். இதற்காக 19-ஆம் நூற்றாண்டு வரை, வெள்ளையர் வருகை வரைக்கும், காத்திருக்க வேண்டியதாயிற்று. 

&&&&&&& 
படம் உதவி - இணையம்