Monday, 30 July 2012

இறையனும் இறைவனும்
காதலியின் எழிலைக் காதலன் மிகையாகப் பாராட்டுவது உயர்வு நவிற்சி அணியின்பாற்படும். தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் இவ்வழக்கம் உண்டு.


சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ? 


என்று பாரதியார் அவளுடைய ஒளி படைத்த கண்களைச் சூரிய சந்திரருடன் ஒப்பிட்டு வியந்து புகழ்ந்தார்.


பிரெஞ்சுத் தலைவன் தன் மனங்கவர்ந்தாளின் நயனங்கள் விண்ணில் ஒளிரும் வெள்ளியைவிடப் பிரகாசமானவை என உறுதிபட மொழிந்தான்.


"அந்திவெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்"


பால்கனியில் ஜூலியட்டின் முகந்தெரிந்ததும் ஆங்கிலக் காதலன்,


"எந்த ஒளி அந்தச் சன்னல்வழி பாய்கிறது?
அது கிழக்கு. ஜூலியட் சூரியன்" 

எனப் போற்றினான்.


சங்ககாலக் காதலன் தன் விருப்புக்குரியாளின் கூந்தல் எவ்வளவு அதிகமான மணங்கமழும் மலரையும் மிஞ்சக்கூடிய வாசனையை வீசுவது என்று புகழ விழைந்தான். அதை எவ்வாறு நயம்பட உரைப்பது என்று யோசித்தான். தானே சொன்னால் மதிப்பு இருக்குமா? நடுநிலையாளர் ஒருவர் கூறினால் உலகம் ஏற்கும். யாரிடங் கேட்கலாம்? 

பளிச்செனப் புலப்பட்டது ஓர் உண்மை. பூ மணத்தைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கக் கூடியது வண்டைக் காட்டிலும் வேறெதுவும் இல்லை என்ற உண்மைதான் அது. 

மதுவை (ஒயினை)க் கண்ணால் நோக்கியும் மோந்து பார்த்தும் நாவில் ஊற்றிச் சுவைத்தும் அதன் நிறம், தரம், சுவை ஆகியவற்றை நிர்ணயிக்கும் வல்லுநர்கள் மேலைநாடுகளில் உண்டு. அவர்கள் சரி(ஓ.கே.) சொன்ன பின்புதான் உயர்வான சரக்கு விற்பனைக்கு வரும். அவர்களைப் போல மலர்களின் நறுமணத் தராதரத்தைச் சீர்தூக்கிப் பார்த்துக் கருத்து சொல்லவல்ல நிபுணர் வண்டு. அதன் தீர்ப்புக்கு அப்பீல் இல்லை.


ஆகவே வண்டிடங் கேட்டுவிட வேண்டியதுதான். ஆனால் எந்த வண்டிடம்? 

இதோ, ஒன்று அவளின் குழலில் மொய்த்துவிட்டுப் பூவை நாடிப் பறந்து வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தகுதி வாய்ந்த நீதிபதி இதுவே.  

கேட்டுவிட்டான். 

பூந்தாதைத் தேர்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள வண்டே, எனக்காகச் செப்பாமல் நீ அனுபவத்திற் கண்டதை மொழி. நெடுநாள் பழகிய நட்பும் மயில் சாயலும் செறிவான பல்வரிசையும் உடைய என் தலைவியின் கூந்தலைப் பார்க்கிலும் அதிக நறுமணங் கொண்ட பூக்களும் உண்டோ, நீ அறிந்தவரைக்கும்?


(இல்லையென வண்டு விடையிறுத்ததாய்க் கொள்ளல் இலக்கிய இன்பத்துக்கேற்றது.) 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ.
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே?


இது சங்க நூலான குறுந்தொகையில் உள்ள பாட்டு. இயற்றியவர் இறையன் (மரியாதை ஆர் சேர்த்தால் இறையனார்.) 

இறையனும், இறைவனும் வெவ்வேறு. தலையனும் தலைவனும் ஒன்றா?


தலையன் - தலையை உடையவன் (மொட்டைத் தலையன்)

தலைவன் - வழி நடத்துபவன்.....


அதுபோல,
இறைவன் - கடவுள்

இறையன் - மனிதர் பெயர் (செழியன், செம்பியன், பாண்டியன் போல)


ஒரு புலவர் எழுதியதைக் கடவுள் எழுதியதாய் யாரோ ஒருவர் கற்பனை செய்து கட்டிய கதைதான் தருமி கதை. 

8 ஆம் நுற்றாண்டிலும் ஓர் இறையன் வாழ்ந்தார். அவரது இலக்கண நூல் "இறையனார் களவியல்" என்று அவர் பெயரால் சுட்டப்படுகிறது. (பட்டினத்தார் பாடல் என்பது போல) 

இந்த இறையனையும் அந்தக் கற்பனையாளர் ஒதுக்கித் தள்ளிக் களவியலை இறைவன் இயற்றியதாய்க் கதை விட்டார். தன் செயல் கடவுளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்குமே என்று அவர் சிறிதும் யோசிக்கவில்லை. 

களவியலில் பல நூற்பாக்கள், ஓர் எழுத்துக் கூட மாறாமல் தொல்காப்பியத்திலிருந்து எடுத்துச் சேர்க்கப் பட்டுள்ளன. முன்னோர் சொன்னதைப் பொன்னே போல் போற்றிப் பின்னோர் தம் நூலில் சேர்ப்பது முற்கால வழக்கந்தான். மனிதர்க்குப் பொருந்துகிற இது கடவுளுக்குப் பொருந்துமோ? 

இறைவன் தொல்காப்பியரைக் காப்பியடித்தான் என்றல்லவா ஆகிவிட்டது?

Wednesday, 25 July 2012

என் ஊர் காரைக்கால் (தொடர்ச்சி)

காரைக்காலில் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காரைக்காலம்மையார். அவர் திருவந்தாதி, இரட்டை மணி மாலை, திருவாலங்காட்டுத் திருப்பதிகம் என்ற மூன்று செய்யுள் நூல்களை இயற்றுமளவுக்குத் தமிழ்ப் புலமை உடையவர். அவரது கதையைப் பெரியபுராணம் விவரிக்கிறது. அதன்படி  அவரது வரலாறு மாங்கனித் திருவிழா என்னும் பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஆனிப் பௌர்ணமியன்று முற்பகலில் அம்மையார்க்குத் திருமணம் நிகழ்ந்து இரவில் முத்துப் பல்லக்கில் மணமக்கள் ஊர்வலம் செல்வார்கள். மறு நாள் விழாதான் முக்கியமானது; அன்று மதியம் பரமசிவன் யாசகர் கோலத்தில் (பிச்சையாண்டவர் என்று பெயர்) அம்மையாரின் இல்லத்துக்கு உணவுண்ணப் போவார். சாமியைச் சூழ்ந்து தெருவை அடைத்துக்கொண்டு, நகரும் பக்தர் கூட்டத்தை நோக்கி, சிற்சில மாடிகளிலிருந்து மாங்கனிகள் வீசப்படும்; பழத்தைத் தாவிப் பிடிக்க முடிந்தவர்கள் பரவசத்துடன் தின்பார்கள். இரு வாரத்துக்குப் பின் விழா முடியும். 

முஸ்லிம்களுக்கு முக்கிய விழா காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்காவின் கந்தூரி. முதல் நாள் மாலை கண்ணாடித் தேர் ஊர்வலமும் பத்தாம் நாளிரவு சந்தனக் கூடு ஊர்வலமும் நடைபெறும். இந்த விழாவின் தேதிகள் ஆண்டுதோறும் மாறும்; பல ஆண்டுக்கொரு முறை இதுவும் ஆனி மாதத்தில் நடக்கும் . இப்போது அப்படித் தான் கந்துரி 30 / 6 இலும் மாங்கனி விழா 2 /7 இலும் தொடங்கி நிகழ்ந்தன. 

சுதந்தர விழா கொண்டாட்டத்துக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது: 

ஆகஸ்ட் 15 : இந்திய விடுதலை;

ஆகஸ்ட் 16 : பிரஞ்சியரிடமிருந்து விடுமுறை. 

1962 இல் பிரஞ்சுக்காரர் வெளியேறியபோது, விருப்பம் உள்ளவர் பிரஞ்சுக் குடியுரிமை பெறலாம் என்று வாய்ப்புத் தரப்பட்டது ; அதன்படி , பொதுமக்களுள் ஒரு பகுதியினரும் பிரஞ்சு ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் பட்டாளத்தாரும், முன்னாள் அரசு அலுவலர்களுமாகச் சுமார் 500 காரைக்கால்வாசிகள் பிரஞ்சுக் குடிகளானார்கள். இவர்களும் சந்ததியினரும் 

1 - இந்திய அரசியலில் ஈடுபடக்கூடாது; 

2 - நம் நாட்டு அரசு அலுவல்குடும்ப அட்டை, அரசு சலுகைகள் பெற இயலாது.  

மற்றெல்லா உரிமைகளும் உண்டு: நிரந்தரமாய் வசிக்கலாம், வாணிகமும் தொழிலும் செய்யலாம், சொத்துகள் வாங்கலாம், விற்கலாம். 

இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கக் காரைக்காலில் ஒரு பிரஞ்சு இடைநிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. மேல் கல்விக்குப் புதுச்சேரி போகவேண்டும். வேலை வாய்ப்புகளைப் பிரான்சில் தேடவேண்டும். 

பிரான்சில் நடைபெறும் தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்கக் காரைக்காலில் ஒரு வாக்குச்சாவடியைப் பிரான்சு அரசு அமைக்கும். 

காரைக்காலின் கல்வி வளர்ச்சியில் பிரஞ்சு ஆட்சி அக்கறை செலுத்தவில்லை. பிரஞ்சு ஒன்றே பயிற்றுமொழி; ஏழாம் வகுப்புவரை நாள்தோறும் ஒரு பாடவேளை மட்டும் தமிழ்  கற்பித்தார்கள்; அதற்குமேல் பிரஞ்சு மாத்திரமே. உயர்நிலைக்குப் பின்பு படிக்கப் புதுச்சேரி போகவேண்டும். அங்குக் கல்லுரி இருந்தது; ஆனால் விடுதி (ஆஸ்டல்) இன்மையால் உறவினர் இருப்பின் அவர்கள் இல்லத்தில் தங்கிப் பயிலலாம். எத்தனை பேருக்கு இந்த வசதி இருக்கும்? ஆகவே உயர்கல்வி கற்ற காரைக்கால்வாசிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தனர்.  

இந்தியாவுடன் இணைந்த பின்பு , மகளிர் கலைக் கல்லூரி, ஆடவர் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி , மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி எனக் கல்விக்கூடங்கள் பெருகியுள்ளன; ஆனால் மற்ற துறைகளில் சொல்லிக்கொள்ளும்படியான வளர்ச்சி இல்லை. மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் தனி யூனியன் பகுதியாக ஆகிவிட்டால்தான் வளர்ச்சி சாத்தியம் என்றெண்ணி அந்தக் கோரிக்கையைக் காரைக்கால் மக்கள் சில ஆண்டுகளாக எழுப்பிவருகிறார்கள்; போராட்டக் குழு ஒன்று அமைத்துப் பலவித நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். 

24 ஆண்டுகள் (கால் நூற்றாண்டு) பறந்துவிட்டன என் ஊரைவிட்டு நான் நீங்கி. இறுதியாய் 2003 இல் சென்றிருந்தேன்: எங்கள் வீதி கடை தெருவாகியுள்ளது; எங்கள் வீடு உட்படப் பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டுப் புத்துருவம் பெற்றுக் கடைகளாகவும் கிடங்குகளாகவும் பயன்படுகின்றன. 

நண்பர்கள், சக ஆசிரியர்கள், உறவினர்களுள் என் வயது உடையோர் ஆகியவர்களுள் கிட்டத்தட்ட யாரும் உயிரோடில்லை. 

காட்சி மாறிக் கலந்து பழகியோரும் காலமாகிவிட சோகத்தைச் சுமந்து ஊர் திரும்பினேன். 

குறிப்பு - விடுகதையின் விடை : குன்றிமணி (குண்டுமணி)

(படம் உதவி: இணையம்)

Saturday, 21 July 2012

என் ஊர் காரைக்கால் (1)
வங்கக் கடலுடன் அரசலாறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள சிறு நகரமாகிய காரைக்கால் நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று அரசு பணியாற்றி ஓய்வு பெற்ற ஊர். சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகை உடைய இதன் எல்லைகள்: கிழக்கே கடல், மேற்கில் வாஞ்சியாறு, தெற்கே அரசலாறு, வடக்கில் கோயில்பத்து என்னும் சிற்றூர். தெற்கு வடக்காக 2 1/2 கி. மீ. அகலமும் கிழக்கு மேற்காக 3 1/2 கி. மீ. நீளமும் கொண்ட காரைக்காலும் இதை முப்புறமும் சூழ்ந்துள்ள பகுதிகளும் சேர்ந்த 160 ச. கி. மீ. பரப்பானது புதுச்சேரி மானிலத்தின் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. 

இந்த மாவட்டத்தின் வடக்கே தரங்கம்பாடியும், தெற்கில் முஸ்லிம்களின் புனிதத் தலமான நாகூரும் இருக்கின்றன; நாகூருக்கும் அதற்குச் சற்றுத் தெற்கிலுள்ள நாகப்பட்டினத்துக்கும் இடையே உள்ள காடம்பாடி மறைமலையடிகளை ஈன்ற பெருமையுடையது. 

( காரைக்கால் மாவட்டம் புதுச்சேரிக்குத் தெற்கில் 150 கி. மீ. தொலைவில் இருக்கிறது என்பதும் இடைப்பட்ட பிரதேசம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடற்குரியது) 

புதுச்சேரியில் போன்றே காரைக்கால் தெருக்கள் கோணல்மாணல் இன்றி, நூல் பிடித்தாற்போல் நேர்நேராய் அமைந்து எழிற்கோலம் காட்டுவதால், "காரைக்கால் வீதியழகு" என வெளியூர்க்காரர்களால் புகழப்படுகிறது "காரைக்கால் கருப்பு, சென்னைப்பட்டினம் சிவப்பு" என்று விடுகதையிலும் என் ஊர் இடம்பெற்றுள்ளது. இதன் விடை உங்களுக்குத் தெரியுமா? (இறுதியில் சொல்வேன் ) 

என் ஊரின் சிறப்பு மூன்று மத மக்களும் பெரிய எண்ணிக்கையில் கலந்து ஒற்றுமையாய் வாழ்வது: கைலாசநாதர் கோயில் தெரு, பெரமசாமி பிள்ளை தெரு, சின்னக்கண்ணு செட்டித் தெரு, மெய்தீன் பள்ளி வீதி, மாமாத்தம்பி மரைக்காயர் தெரு, காதர் சுல்தான் வீதி, மாதாகோயில் தெரு, தோமாஸ் அருள் வீதி, தாவீது பிள்ளை தெரு எனத் தெருப் பெயர்களில் மும்மத மணம் கமழ்வதை உணரலாம்.

பெரும்பாலான இந்துக்கள் வேளாளர்கள்; சோழ நாட்டுக்காரர் ஆகையால் சோழிய வேளாளர் எனப்படுகின்றனர். இவர்களின் சாதிப் பட்டம் பிள்ளை (இச் சொல்லுக்குப் பலசாலி என்று பொருளுண்டு ) 

முஸ்லிம்கள் மரைக்காயர் எனப்படுதற்குக் காரணம் ஒரு காலத்தில் மரக்கலம் செலுத்தி வாணிகம் செய்தமை. இவர்கள் ஊனுணவு விரும்பிகள். திருமணம் முதலிய இன்ப நிகழ்ச்சியானாலும் சாவு முதலான துக்க நிகழ்வு ஆனாலும் ஆட்டுக் கறி பிரியாணி பரிமாறப்படும். முஸ்லிம் மாதர்கள் உடல் முழுதும் வெள்ளைத் துப்பட்டாவால் போர்த்துக்கொண்டுதான் வெளி இடங்களுக்கு வருவார்கள். முஸ்லிம் தமிழ் சிறிது வேறுபடும். அப்பா - வாப்பா; அம்மா - உம்மா; அக்கா - லாத்தா; அண்ணன் - நானா; கொழம்பு - ஆணம்; நின்னான் - நிண்டான்; எழுதுனான் - எளுவினான்; வாங்கித் தா - வேங்கித் தா; அவங்க சொன்னாங்க - அக சொன்னாக. 

தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவியது போலக் காரைக்காலில் கிறித்துவ ஆதிக்கம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. இந்துக்கள் உழவில் ஈடுபட, முஸ்லிம்கள் திரவியம் தேடுவதற்குத் திரைகடல் ஓட, கிறித்துவர்கள் கல்வி கற்று, வேலை வாய்ப்புகளும் பட்டம் பதவிகளும் அரசியல் தலைமையும் போட்டி இல்லாமல் பெற்று உயர்ந்தார்கள். இவர்களும் ஆட்சி புரிந்த வெள்ளையரும் ஒரே மதம் என்பதும் ஏற்றத்துக்கு உதவியது. 

மும்மதத்தாரையும் பற்றி என் ஊரில் வழங்கும் ஒரு கருத்து: "முஸ்லிம் உண்டு கெட்டார், கிறித்துவர் உடுத்துக் கெட்டார், இந்து வைத்துக் கெட்டார்."

( தொடரும் )

Tuesday, 17 July 2012

ஏவாள், பண்டோரா
விவிலியத்தின்படி,  உலகின் முதல் பெண் ஏவாள். கர்த்தரின் கட்டளையை மீறி, பழத்தைத் தான் உண்டதோடு கணவனையும் உண்ணச் செய்து, இருவரும் பாவிகளானமையால் மனிதக் குலம் முழுதையும் பாவக் குழியில் தள்ளியவள்.


முதல் பெண், பண்டோரா என்கிறது கிரேக்கத் தொன்மம்: சீயஸ் கடவுள் களிமண்ணால் அவளை உருவாக்கச்செய்து உயிரளித்தார். மாந்தர்களைத் தண்டிப்பதற்காக அவளிடம் ஒரு பெட்டியைத் தந்து உலகத்துக்கு அனுப்பினார். திறக்கக் கூடாது என்ற அவரது ஆணையைப் புறக்கணித்து மூடியைத் திறந்தான் அவளுடைய மணவாளன். அதிலிருந்து வெளிக் கிளம்பி எங்கும் பரவின எல்லாவிதத் தீமைகளும்.


ஆங்கிலத்தில் பண்டோராவின் பெட்டி ( Pandora's Box ) என்ற சொற்றொடர் எதிர்பாராத மற்றும் கடும் தொல்லைகளின் ஊற்று எனப் பொருள்படும்.


ஆண்டவன் கட்டளையை மீறியவர்கள் யூதரின் மறைப்படி பெண், கிரேக்க நம்பிக்கைப்படி ஆண்.

படம் உதவி: இணையம்

Saturday, 14 July 2012

பராட்டா
கோதுமை விளையாத தமிழகத்தில் சப்பாத்தி , பராட்டா முதலியவற்றை உண்ணும் பழக்கம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் ஏற்படவில்லை.  

சுதந்தரம் கிடைத்தபோது தமிழகம் கொடிய உணவுப் பஞ்சத்தில் சிக்கியது. நெல் விளைச்சல் குன்றியதால் அந்தப் பரிதாப நிலை. பரவலாகப் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்தன. நடுவண் அரசு அந் நெருக்கடியைச் சமாளிக்க எடுத்த நடவடிக்கைகளுள் ஒன்று வட நாட்டுக் கோதுமையை இங்கே அறிமுகப்படுத்திப் பழக்கத்துக்குக் கொணர்ந்தமை. 

தயாரிப்பு அனுபவம் இல்லாமையால் தொடக்கக் கால முரட்டுச் சப்பாத்தியும் பராட்டாவும் சாப்பிட்டோரின் கையையும் பற்களையும் கடுமையாய்ப் பதம் பார்த்தன. 

அவர்கள் பட்ட அவதியை 1951 இல் வெளிவந்த சிங்காரி என்ற திரைப் படத்தின் பாடலொன்று எதிரொலித்தது: 

ஒரு சாண் வயிறே இல்லாட்டா - இந்த

உலகினில் ஏது கலாட்டா?

உணவுப் பஞ்சமே வராட்டா - நம்ம

உயிரை வாங்குமா பராட்டா? 

தஞ்சை ராமய்யாதாஸ் இயற்றியது .

Monday, 9 July 2012

மனசாட்சி
மனம் என்று ஒன்று இருக்கிறதா? அது இதயத்திலா வசிக்கிறது? 

இரு வினாக்களுக்கும் ஆம் என்றே எல்லாரும் விடை சொல்வார்கள். இத்தனைக்கும் இதயம் ஒரு பம்ப் மட்டும் தான். 

சிந்தனை-எண்ணம்-கருத்து முதலியவை மூளையில் உதிப்பது போன்றே மனதில் தோன்றுவதாக நாம் நம்பும் அன்பு-அருள்-இரக்கம் முதலான பண்புகளும் மூளையில் தான் பிறக்கின்றன. ஆயினும் மனம் தனியாக உண்டு எனக் கொள்கிறோம். மனசாட்சி என்றும் ஒன்று இருப்பதாக நினைக்கிறோம். 

பிற்கால வழக்காகிய இந்தச் சொல்லுக்குப் பதிலாகப் பழைய இலக்கியங்கள் நெஞ்சுஎன்பதைப் பயன்படுத்துகின்றன. 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்,’ என்ற குறளின் இரண்டாம் அடிக்குப் பொருள் மனசாட்சியே தன்னை வருத்தும்என்பதாம். இதிலிருந்து நம் முன்னோர்க்கு மனமும் மனசாட்சியும் ஒன்று தான் என்பதை அறிகிறோம்.

ஒருவன் நல்லது செய்யும் போது அமைதி காப்பதும் தீயது செய்ய முயலுகையில் தடுப்பதும் மனசாட்சியின் வேலை என்பது பொதுவான கருத்து.  

மனசாட்சி எப்போது எவ்வாறு உண்டாகிறது? சிறு குழந்தைகளுக்கு அது இருக்க முடியாது. அதனால் தான் அவை மேவன செய்தொழுகின்றன”. பெற்றோர்- உடன்பிறந்தோர்-பாட்டி-தாத்தா ஆகியோரின் அவ்வப்போதைய அறிவுரைகள் குழந்தையின் மூளையில் பதிந்து சிறிது சிறிதாய் மனசாட்சியை உருவாக்கும். கூடி விளையாட வேண்டும். யாரையும் அடிக்கக் கூடாது. மெய் பேச வேண்டும்என்றெல்லாம் பல நெறிமுறைகள் மனசாட்சியில் இடம் பிடிக்கின்றன. 

வயது ஏற ஏறக் கல்வியும் கேள்வியும் பட்டறிவும் புதுப் புதுக் கருத்துக்களை மனசாட்சியில் பதிகின்றன; முந்தைய பதிவுகள் சிலவற்றை நீக்கவும் செய்கின்றன. நல்ல சூழ்நிலையில் வளர வாய்ப்பற்ற குழந்தைகளின் மனசாட்சி தகாத கருத்துக்களைப் பொதிந்து வைக்கும். 

அவரவர் வளர்ந்த, வளர்கிற சூழ்நிலை மட்டுமின்றி கிடைத்த சகவாசம், வாழ்க்கைத் தேவை என்பவற்றுக்கு ஏற்பவும் மனசாட்சியின் இயல்பு ஆளுக்காள் வேறுபடும். சில நேரம் மாறுபடும். அதாவது ஒருவரின் மனசாட்சிக்கு அநியாயமாகத் தெரிவதை, வேறொருவரின் மனசாட்சி நியாயப்படுத்தக்கூடும். 

எல்லாருடைய மனசாட்சியும் ஒரே குரலில் பேசுவதில்லை. ஒரே தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை எடுத்துக்காட்டு ஒன்றால் விளக்கலாம். ஐம்பெரும் பாதகங்களுள் மிக மிகக் கொடியது கொலை என்பதை மறுப்பவர் யாரும் இருக்க மாட்டார். ஆனால் நடைமுறை என்ன? 

கோயில்களில் விலங்குகளைப் பலிகொடுத்து விழாக் கொண்டாடும் வழக்கம் பரவலாக இருக்கிறது. வெட்டுகிற பூசாரிகளோ, சுற்றி நிற்கிற பக்தர்களோ சிறிதும் பதறுவதில்லை. புலால் உண்பவர்கள் தாங்களே கோழிகளை அறுக்கும் போதும், ஆடுகளை வெட்டும் போதும் பிறர் அறுக்க, வெட்டப் பார்க்கும் போதும் அவர்களது மனசாட்சி செயல்படாது. மீன் கொன்று விற்றுப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்களின் மனசாட்சி கொல்லாமையைப் போதிக்குமா? பொழுதுபோக்குக்காக வேட்டையாடியும் தூண்டில் போட்டும் களிப்பவர்களின் மனசாட்சி, அந்தச் செயல்களைக் கண்டிப்பதில்லை. 

விலங்குக் கொலை விடுத்து மனிதக் கொலைக்குப் போவோம்: 

கொலைவெறிக்கு ஆட்படும் மனநோயாளிகளை விடுவோம். அதிகம் பேரைக் கொன்ற பட்டாளத்தார் விருது பெற்றுப் பெருமிதத்தால் பூரிக்கிறார். கொலையே அவர்களின் கடமையாதலின் விட்டுவிடுவோம். 

ஜாலியன்வாலிபாக்கில் அமைதியாய்க் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களைக் கொன்று குவித்தான் ஓர் ஆங்கிலேயன்; முழு இனத்தையுஞ் கருவறுக்கக் கங்கணங் கட்டி லட்சக்கணக்கான யூதர்களைக் கொல்லச் செய்தான் ஹிட்லர்; அவனைப் போன்றே கோரக் கொலைத் தாண்டவமாடிய இடி அமீன், போல்போட் என வரலாற்றின் பக்கங்களைக் குருதிமயமாக்கியவர்கள் எத்தனையோ பேர். 

இந்திரா காந்தியின் கொலையை அடுத்து ஒரு பாவமும் அறியாத நூற்றுக்கணக்கான சீக்கியர்களின் உயிர் பறித்தவர்கள், ரயில்களில் வெடிகுண்டு வைத்துப் பயணிகளைப் பலியாக்குவோர், பதவி உயர்வும் பரிசும் பெறுவதற்காக உள்நாட்டு அப்பாவிகள் மீது அயல்நாட்டுத் தீவிரவாதிகள் என முத்திரை குத்திச் சுட்டுத் தள்ளிய காஷ்மீர் ராணுவத்தினர், போலி மோதல்களில் மனித வேட்டையாடுகிற காவல்துறையினர் இவர்களின் மனசாட்சி, கொலையைப் பாதகச் செயல் எனக் கருதுவதில்லை.

மத வெறியர்கள் அக்கம்பக்கம் வாழ்கிறவர்களையே வெட்டியும் குத்தியும் கழுத்தையறுத்தும் உயிரோடு கொளுத்தியும் உவக்கிறார்களே! அவர்களது மனசாட்சி இடித்துரைக்கவும் இல்லை. காரணம் என்ன? அந்தக் கொலைகள் தங்கள் மதத்தைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாதவை என்னும் கருத்து அந்த மனசாட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 

ரெளடிகள், கூலிப்படையினருக்கு மனிதக் கொலை சர்வ சாதாரணம். பட்டப்பகலில் கூடப் படுகொலை புரியும் அளவு துணிச்சல் மிக்கவர்கள் அவர்கள். ஒரு ரெளடி பகைவராலோ காவலராலோ கொல்லப்பட்ட செய்தியைத் தாங்கி வரும் நாளேடு அவன் மீது எத்தனை கொலைகள் நிலுவையில் உள்ளன என்னும் கூடுதல் தகவலையும் தெரிவிக்கிறது அல்லவா? மனசாட்சியின் உறுத்தல் இல்லாமையால் தானே முதல் கொலையோடு அவன் நிறுத்திக் கொள்வதில்லை? 

தீமையைத் தீமையாக அடையாளங் கண்டு எதிர்ப்புக் குரல் எழுப்புகிற மனசாட்சியை உருவாக்கிக் கொள்வது நல்வாழ்வுக்கு அடிப்படைத் தேவை. சிறு வயதிலிருந்தே அறத்துக்கும் சட்டத்துக்கும் உடன்பாடான கருத்துக்களை மட்டுமே ஏற்று வளர்பவர்களின் மனசாட்சி விழுமிய ஆசானாக விளங்கித் தீதொரீஇ நன்றின்பால் உய்த்துச் சீரிய நண்பனாகவும் திகழ்ந்து மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கும். 

வளர்ச்சிச் சூழ்நிலை எல்லார்க்கும் நல்லதாக அமைவதில்லை என்பது தான் சோகம். இருந்தாலும் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் கடின முயற்சி செய்து மனசாட்சியைத் திருத்திக் கொள்வது சாத்தியமே.


(21/05/2007 ல் தினமணியில் எழுதி வெளிவந்தது)

Wednesday, 4 July 2012

அவர் சொன்னபடியே...
சூடாமணி 50 வயதுப் பெண்மணி. பருத்த உருவம் ஆயினும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. ஆன்மிகப் பழமாகிய அவர் பக்திப் பனுவல்களைப் பரவசத்துடன் பாராயணம் செய்வார். ஆசாரம், அனுஷ்டானம், நோன்பு, சம்பிரதாயம் எல்லாம் தீவிரமாய்க் கடைப்பிடிப்பார். நல்ல நாள் பார்த்துத்தான் முக்கிய செயல்களில் ஈடுபடுவார் .சோதிடத்தில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டவர். 

ஒரே மகன், மருமகளாய் வாய்த்த ஒரு குணவதி, மூவரும் ஒற்றுமையாய்ப் பாசப் பறவைகளாய் இன்ப வாழ்வு வாழ்ந்து பிற குடும்பங்களுக்கு நல்லுதாரணமாய்த் திகழ்ந்தனர்.  

துன்பம் முன்னறிவித்துவிட்டா வருகிறது? ஒரு மாலை நேரத்தில் சூடாமணியைத் தாக்கிய நெஞ்சுவலி மார்பின் இடப் பக்கம் தோன்றி இடக் கைக்குப் பரவிற்று; வியர்த்துக் கொட்டியது. 

இதயத் தாக்கு! மூவரும் புரிந்துகொண்டனர். 

"கிளம்புங்கள் உடனே! மருத்துவ வண்டியைக் கூப்பிடுகிறேன்"  

மகன் பரபரத்தான். அமைதிப் படுத்தினார் தாயார்: 

"தம்பி, நேற்று அஷ்டமி, இன்று நவமி. ரொம்பக் கெட்ட நாளுப்பா. இப்போது வேண்டாம்; விடிந்ததும் போவோம்". 

"ஒரு நிமிஷமும் தாமதம் கூடாதம்மா; இதற்கெல்லாம் நாள் பார்க்காதீங்க" 

கெஞ்சினான். எடுத்துச் சொல்லிப் பார்த்தாள் மருமகளும். 

அவர் மசியவில்லை: 

"பயப்படாதீங்க. ஜாதகப்படி நான் இன்னம் இருபது வருஷம் இருப்பேன். பகவான் கைவிடமாட்டார். பொலபொலன்னு விடியிறத்துக்கு முன்னாடி போயிடலாம்" என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லியமையால் வேறு வழியின்றிக் கைப்பக்குவம் செய்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு கண்மூடாமல் காத்திருந்தனர். எப்போது விடியும் எனக் கடிகாரத்தை அடிக்கடி நோக்கிக்கொண்டிருந்தார்கள். 

முதல் தாக்குதல்தானே? ஆபத்தில்லை என்னும் எண்ணம் மகன் மனத்தில் நிறைந்திருந்தது. 

"ஐயோ!" அலறினார் அம்மா; அவ்வளவுதான், அவர் சொன்னபடியே விடியிறத்துக்கு முன்னாடி போய்விட்டது உயிர்.