Thursday, 27 March 2014

செங்கோல், கொடுங்கோல்:

செங்கோல்கொடுங்கோல்:

     மன்னர்களைப் பற்றி, செங்கோல் செலுத்தினார்கள் என்றோ கொடுங்கோலர்கள் என்றோ குறிப்பிடுவது வழக்கம். கோல் என்றால் கம்பு: ஆளுக்கொரு கம்பைக் கையில் பிடித்திருந்தார்களா சங்கராச்சாரியாரைப்  போல?

  செங்கோல் (செம்மை + கோல்) என்றால் செம்மையான கம்பு,   அதாவது கோணல்மாணல் இல்லாத கம்பு. 390 ஆம் குறளின் உரையில்,   பரிமேலழகர், "செவ்விய கோல் போன்றது ஆகலின் செங்கோல் எனப்பட்டது" ஏன்று விளக்கியுள்ளார். குற்றங் குறை அற்ற ஆட்சியை நூல் பிடித்தாற் போல நேராக உள்ள கம்பாக உருவகித்தார்கள்.

  கொடுங்கோல் (கொடுமை + கோல்);   இங்குகொடுமை என்பதற்கு வளைவு என்று பொருள்ஆகவேகொடுங்கோல் =  வளைந்த கம்பு.  மோசமான ஆட்சிக்குக் கோணல் கம்பு உருவகம்.     சிலப்பதிகாரம், காட்சிக் காதை, அடி 98 , 99 :

                வல்வினை வளைத்த கோலை மன்னவன்
                செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது.

  ஊழானது கோலை வளைத்துவிட்டதுமன்னனின் உயிர் அதை நிமிர்த்தது.

  இங்கேகொடுங் கோலை வளைந்த கோல் எனவும் நிமிர்த்திய கோலைச் செங்கோல் எனவும் புலவர் குறிப்பிடக் காண்கிறோம்.

  ஆகையால்செங்கோல்  கொடுங்கோல் என்பவை  உண்மையான கம்புகள் அல்லவெறும் உருவகமே என்று அறிகிறோம்.

                             --------------------------------------------------- 

(படம்; நன்றி இணையம்)

Sunday, 16 March 2014

ஆத்திசூடி முதலியவை
" ஆத்திசூடிக்கு ஏன் அந்தப் பெயர்?"

"தெரியவில்லை"

"அது அவ்வாறு தொடங்குவதால்"

"அறஞ்செய விரும்பு என்பதல்லவா தொடக்கம்?"

"அல்ல;

முதல் பாடல்:
                                       ஆத்தி சூடி அமர்ந்த தேவனை 
                 ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே

அப்படித்தான் கொன்றை வேந்தனுக்கும் பெயர் வந்ததுஅதன்  தொடக்கம்:

                 கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை
                 என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

ஒளவையாரின் மூதுரையை 'வாக்குண்டாம்'   என்றும் சொல்வதுண்டு. 
முதல் செய்யுள் அப்படித் தொடங்குவதால் அந்தப் பெயர்.

              வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
              நோக்குண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
                துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
                தப்பாமல் சார்வார் தமக்கு.

உலகநீதி படித்திருக்கிறீர்களா?  உலகநாதர் என்பவர் இயற்றிய அந்த அறநூல்

                   உலக நீதிப் புராணத்தை உரைக்கவே
                   கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு

எனத் தொடங்குகிறது.

வெற்றிவேற்கை தெரியுமாபிற்காலப் பாண்டியன் அதிவீர ராமன்  படைத்த அதில்அதனைக் கற்பதால் கிடைக்கும் பயனைக் கூறும் பாட்டு:

                வெற்றி வேற்கை வீர ராமன்
                கொற்கை யாளி குலசே கரன்புகல்
                நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
                குற்றம் களைவோர் குறைவிலா தவரே.

இதன் இன்னொரு பெயர்: நறுந்தொகை. அதுவும் அந்தச் செய்யுளில் இருக்கிறது.

இப்படிச் சில நூல்களுக்கு அவற்றின் தொடக்கச் சொற்களே தலைப்பாய் அமைந்துள்ளன.

                               ++++++++++++++++++++++++++++++++++


   (படம்:  நன்றி இணையம்)

Wednesday, 5 March 2014

அற நூல்கள்
நான் அறிந்தவரை, ஆங்கிலத்திலோ பிரஞ்சிலோ அற நூல்கள் இல்லை. ஆனால்,  தமிழில் அவை ஏராளமாக இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? காலந்தோறும் நூல்கள் இயற்றி மக்களை நன்னெறியில் செலுத்த வேண்டிய தேவை இருந்ததா?   அந்த அளவு தமிழர் தறி கெட்டு வாழ்ந்தார்களா?   நான் அப்படி நினைக்கவில்லை. அற நூல் இயற்றுவது எளிது: புலமையும் யாப்பிலக்கண அறிவும் இருந்தால் போதும். கற்பனை இல்லாத புலவர்கள் எதை எழுதுவார்கள்அற நூலைத்தானே?

அத்தனை அற நூல்களின் போதனைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்: நன்மை செய்,  தீமைதவிர்.

"நன்மை புரிந்தால் நீ நன்மை அடைவாய்,  தீமை இழைத்தால் உனக்குத் தீங்கு உண்டாகும்". இதுவே விளக்கம். இதற்கு அடிப்படை எது? தன்னலம்! நான் நன்மை செய்தால் எனக்கு நன்மை,  தீங்கு செய்தால் எனக்குத் தீமை.

இதைச் செய்தால் புண்ணியம், மோட்சத்துக்குப் போகலாம்; அதைச் செய்தாலோ பாவம் சேரும், நரகத்தில் கிடந்து உழல வேண்டிவரும். இவ்வாறு ஆசை காட்டி, அச்சமூட்டி மனிதரை நன்னெறிப்படுத்த முயல்வது இந்தத்தன்னல அறத்தின் வழி.

இது ஒரு வகை அறம்; இந்தத் தன்னல அறத்தைக் காட்டிலும் சிறந்த வேறு வகை அறம் உண்டு; அது பிறர் நலத்தை நாடுவது: மனிதாபிமானம், சமத்துவக் குறிக்கோள், சுதந்தரவேட்கை, தியாகம், நாட்டுப்பற்று, விலங்குகளிடம் கருணை முதலானவற்றை அது போதிக்கிறது. 
பிரஞ்சுக்குடியரசின் தாரகமந்திரம்: சுதந்தரம்,  சமத்துவம், சகோதரத்துவம்.

டயரை எரிக்காதீர், அதனால் சுற்றுச்சூழலுக்குக் கேடு. மரக்கன்றுகளை நட்டு வளருங்கள்;  மழை வளம் பெருகும். இவை பொதுநல அறப்போதனைக்குக் காட்டுகள். வ. உ. சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார் முதலியோர் பற்பல இன்னல்களை அனுபவித்தது நாட்டுக்காக அல்லவா? அவர்கள் தன்னலம் துறந்து மகத்தான தியாகம் புரிந்தார்கள். அதுபோல, பொதுநலத்தை நாடும்படி குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

திறனாய்வாளர்கள் அறநூல்களைச் சிறந்த இலக்கியமாகக் கருதுவதில்லை; அவற்றில் கருத்து மட்டுமே உள்ளது;  இலக்கிய நயங்கள்  இருக்காது.  (திருக்குறள் மாத்திரம் விலக்கு). அவர்கள் உயர்தர இலக்கிய வகைகளாகக் கருதிப் போற்றுவது இதிகாசம்,  நாடகம், உணர்ச்சி மிகுந்த கவிதை, புதினம் ஆகியவற்றையே.  இவற்றுள் மிகுதியாக இயற்றப்படுபவை புதினங்கள்;  நோபல் பரிசும் தமிழ்நாட்டில் சாகித்திய விருதும் வழங்கப்படுவது புதினங்களுக்குத்தான்.

===========================
(படம்: நன்றி  இணையம்)