Thursday, 29 November 2018

அறை(இருபதாம் நூற்றாண்டில் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளரும் தத்துவ அறிஞருமாகிய Jean Paul Sartre (ழான் போல் சார்த்ர்) La chamber: அறை என்னுந் தலைப்பில் இயற்றிய சிறுகதையின் நேரடி மொழிபெயர்ப்பு)

Jean Paul Sartre 

  இனந்தெரியா நோயொன்றால் அறையில் சிறைப்பட்டிருந்த திருமதி தர்பேதா, சிறிது நேரத்தில் கணவர் வந்து கதவைத் தட்டப்போவதைக் கொஞ்சம் மனக்கிளர்ச்சியுடன் நினைத்தாள். வாரத்தின் மற்ற நாள்களில் அவர் மாலையில் மட்டும் வந்து நெற்றியில் மௌனமாய் முத்திவிட்டு நாற்காலியில் அமர்ந்து நாளேட்டை வாசிப்பார்; வியாழனன்று பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணிக்குள் மகளுடைய வீட்டில் ஒரு மணிநேரம் கழிப்பதற்காகப் போவார்; அதற்கு முன்பு இங்கு வருவார். இணையர் இருவரும் தம் மாப்பிள்ளையைப் பற்றிக் கசப்புணர்வுடன் கருத்துப் பரிமாறிக் கொள்வர், மிகச் சிறு விவரங்கள்வரை. முன்கூட்டியே எதிர்பார்க்கக்கூடிய இந்த வியாழக்கிழமை உரையாடல்கள் திருமதி தர்பேதாவுக்குக் களைப்பு தந்தன. இன்னுங் கொஞ்ச நேரத்தில் ஏவின் ஒப்புதல்களை கணவரிடம் மறுபடியும் சொல்லவேண்டுமே, அது கேட்டு அந்தப் பெரிய உடல் கோபத்தால் தாண்டவமாடுவதைப் பார்க்க வேண்டுமே என்ற நினைப்பு அவளை வியர்க்க வைத்தது.

   கதவு தட்டும் ஓசை: தூக்கிவாரிப் போட்டது.

   உள்ளே வா!” என்று தீனக் குரலில் சொன்னாள். திரு.தர்பேதா விரல் நுனியில் நுழைந்தார்.

   ஏவைப் பார்க்கப் போகிறேன்என்றார் வியாழ வழக்கப்படி.

   திருமதி தர்பேதா புன்சிரித்தார். “என் சார்பிலும் முத்தமிடுஎன்றார்.

   அங்கிருந்து கிளம்பிய பின்பு, ஃப்ரான்ஷோவிடம் போவேன். அவர் அவளிடம் விநயமாய்ப் பேசி அவளை வழிக்குக் கொண்டுவர முயலவேண்டும் என்று விரும்புகிறேன்.”

   அவர் அடிக்கடி மருத்துவர் ஃப்ரான்ஷோவிடம் போயிருக்கிறார்; ஆனால் பலனில்லை.

   திருமதி தர்பேதா சொன்னாள்:

   அவனிடமிருந்து அவளை வலுக்கட்டாயமாகப் பிரிக்கவேண்டும்.”

   அது முடியாதென்று முன்பே சொல்லியிருக்கிறேன். சட்டம் மிக மோசமாக இயற்றப்பட்டுள்ளது. ப்ரான்ஷோ ஒரு நாள் என்னிடம் சொன்னார், பல குடும்பங்களால் டாக்டர்களுக்குக் கற்பனைக்கெட்டாத சிக்கல்கள் உண்டாகின்றன என்று. ஒரு முடிவுக்கு வர இயலாதவர்கள், நோயாளியைத் தம்முடனேயே வைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள்; மருத்துவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன; இவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லலாம், அவ்வளவுதான். நம் விஷயத்தில் அவர் கூறுவது: பொதுவிடத்தில் அவன் ஏதாவது ரகளை பண்ணவேண்டும் அல்லது அவனை மருத்துவமனையில் சேர்க்கும்படி அவள் கோரவேண்டும்.”

  அது நாளைக்கில்லை.”

  ஆமாம்.”

   அவள் இப்படியே தொடர்ந்தால் அவனை விட அதிகப் பைத்தியம் ஆகிவிடுவாள்; ஓரடி தொலைவு கூடப் பிரிவதில்லை; உன்னைப் பார்க்க வருவதல்லாமல் வெளியில் செல்வதே இல்லை; தன்னைக் காண எவரையும் அனுமதிப்பது கிடையாது. அவர்களுடைய அறை மூச்சு விடுவதற்கு அறவே தகுதியற்றது; சன்னலைத் திறப்பதேயில்லை, பியேருக்குப் பிடிக்காதாம். நோயாளியின் விருப்பமா? வாசனைப் பொருள்களை எரிய விடுகிறார்கள்; தேவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறோம். அவளது கண்கள் அசாதாரணமாக உள்ளன, தெரியுமா?”

   நான் கவனித்ததில்லை; அவள் இயல்பாக இருப்பதாய் எனக்குப் படுகிறது. சோகமாக இருக்கிறாள் என்பது மெய்தான்.”

   சோர்வாகத் தெரிகிறாள். தூங்குகிறாளா? சாப்பிடுகிறாளா? அது பற்றியெல்லாம் அவளிடம் கேட்கக்கூடாது, ஆனால் பக்கத்தில் பியேர் போல ஒரு பையனை வைத்துக்கொண்டு இரவில் கண்மூட முடியாதென்று நினைக்கிறேன்.”

   எனக்கு எது விசித்திரமாகத் தோன்றுகிறது என்றால் அது, அவளுடைய பெற்றோராகிய நாம், அவளை அவனிடமிருந்து காப்பாற்றுவதற்கு உரிமையற்று இருப்பதுதான். மனத்தில் நன்றாகப் பதித்துக் கொள், ஃப்ரான்ஷோவின் மனையில் பியேர் மேலான சிகிச்சை பெறுவான் என்பதை. ஒரு பெரிய தோட்டம் இருக்கிறது. அப்புறம், நான் நினைக்கிறேன், அவனையொத்த மனிதர்களுடன் அவனுக்கு நல்லிணக்கம் ஏற்படுமென்று. முதல் நாளே அவனை அங்கே சேர்த்திருக்க வேண்டும். அது அவனுக்காகத்தான், அவனுடைய நன்மைக்காகத்தான் என்பது உறுதி.”

ஒரு கணத்துக்குப் பின்பு தொடர்ந்தார்.  

   பியேருடன் அவள் தனியாக இருப்பதை நான் விரும்பவில்லை, முக்கியமாக இரவில். ஏதாவது நடந்துவிடுகிறது என்பதைக் கற்பனை செய்துபார். பியேரிடம் பயங்கரமான கபடத் தோற்றம் இருக்கிறது.”

   அந்தத் தோற்றம் அவனிடம் எப்போதும் காணப்படுவதால் அது பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டுமா என்பது எனக்குத் தெரியவில்லை. உலகத்தை எள்ளி நகையாடுகிறான் என்று தன்னைப் பற்றி நினைக்க வைத்தவன் அவன்.” என்று சொன்ன திருமதி தர்பேதா, பெருமூச்சு விட்ட பின்பு மேலுங் கூறினார்:

   அவ்வளவு செருக்கு இப்படி முடிந்திருக்கிறது. நம் எல்லாரைப் பார்க்கிலும் தான் அதிகம் புத்திசாலியென நம்பினான். அவனுக்கு நல்ல பேறுதான் தன் நிலைமையைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பது.”

   அவள் வெறுப்புடன் நினைவுகூர்ந்தாள் அந்த, கிண்டல் நிறைந்த, எப்போதும் ஒரு பக்கமாய்ச் சாய்ந்திருக்கிற முகத்தை. ஏவின் திருமணத்தையடுத்த தொடக்க நாள்களில், திருமதி. தர்பேதா தம் மருமகனிடம் கொஞ்சம் உறவு நெருக்கத்தைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை; ஆனால் அவளது முயற்சிகளுக்கு அவன் ஊக்கந்தரவில்லை; பேசுவதே இல்லை எனலாம்.

திரு. தர்பேதா பேசினார்:

   ஃப்ரான்ஷோ தம்முடைய நிறுவனத்தைப் பார்க்கச் செய்தார். பிரமாதம்! நோயாளிகளுக்குத் தனி அறைகள், தோல் நாற்காலிகளுடனும் கட்டில் சோபாக்களுடனும். டென்னிஸ் களம் இருக்கிறது. நீச்சல் குளம் அமைக்கப் போகிறார்கள்.”

  தயக்கத்துடன் திருமதி தர்பேதா, “உன்னிடம் சொல்வதற்கு வியலான (serious) செய்தி இருக்கிறது.” என்றாள். அவளது முதுகெலும்பில் ஒரு லேசான நடுக்கம் ஓடிற்று: நேரம் வந்துவிட்டது, அவள் பேசியாக வேண்டும்.

  செவ்வாய்க் கிழமை நான் ஏவை சந்தித்தேன் என்பது தெரியுமா?”

  தெரியும்.”

  நிறைய விஷயங்களைப் பற்றி நாங்கள் வாயாடினோம். அவளிடம் சில கேள்விகளைக் கேட்டுப் பியரைப் பற்றிப் பேசவைத்தேன். அவனிடம் அவள் எக்கச்சக்கப் பற்று வைத்திருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன்.”

  ஆமாம், அது எனக்கு நன்றாகத் தெரியும்.”

  நான் சொல்ல வந்தது என்னவென்றால், நாம் கற்பனை செய்துகொண்டிருப்பதைப் போல் அல்லாமல் வேறு விஷயத்தில் அவளுக்குப் பிடிப்பு இருக்கிறது என்பதை.”

  நீ சொன்னதற்கு என்ன பொருள்?”

  ஷார்ல், சில விஷயங்களைச் சொல்வதற்கு ஒரு தாய் சங்கடப்படக்கூடும் என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.”

  நீ சொல்வதில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லைஎன்று கடுப்புடன் கூறிய திரு.தர்பேதா, பின்பு கேட்டார்; “நீஅதைச்சொல்லவில்லையே?”

  அதைத்தான் சொல்கிறேன்.”

  அவர்கள் இன்னமும்இப்போதுகூட?”

  ஆமாம், ஆமாம், ஆமாம்!” நறுக்கென்று சொன்னாள், வெறுப்புடன்.

  திரு.தர்பேதா கைகளை விரித்தார், தலை குனிந்தார், மௌனித்தார்.

  அவள், அமைதியிழந்த நிலையில் கூறினாள்;

  ஷார்ல், நான் உன்னிடம் அதைச் சொல்லியிருக்கக் கூடாது; ஆனால் எனக்குள் வைத்திருக்க இயலாமற் போயிற்று.”

  அவர் தாழ்குரலில், “நம் குழந்தை! அந்தக் கிறுக்கனுடன்! அவளை அவன் அடையாளங் காணக்கூட முடியாதவனாய் இருக்கிறானே! அவளை அகாத்து என்கிறான். அவள் தனக்கானதைச் செய்துகொள்ள வேண்டிய அறிவை இழந்துவிட்டிருக்கவேண்டும்.” என்று கூறிவிட்டு தலை தூக்கி மனைவியைக் கடுமையாய் நோக்கி, “நன்றாய்ப் புரிந்துகொண்ட உறுதி உனக்கிருக்கிறதா?” என வினவினார்.

  ஐயம் இருப்பதற்கில்லை. நான் உன் நிலையில் இருக்கிறேன். அவளை என்னால் நம்ப முடியாமலிருந்தது. மேலும் புரியவுமில்லை. அவள் அந்தப் பரிதாபத்துக்குரியவனால் தொடப்படுவதை நினைத்தாலேஆக, அவளை அவன் வசப்படுத்தியிருப்பது அதால் என்று யூகிக்கிறேன்.” எனப் பெருமூச்சுடன் கூறினாள் திருமதி. தர்பேதா.

  அவர் மேசைமேல் அடித்தார், முகம் கடுமையாய்ச் சிவந்தது.

  இது தீயொழுக்கம்! அவளை அவன் கைகளாற் பற்றி அணைத்து முத்தமிடுகிறான். பறக்கிற சிலைகள் மற்றும் வேறு எதையெதையோ குறித்துத் தன் எல்லா உளறல்களையும் அவளிடம் விவரிக்கிறான். அவள் இதற்கெல்லாம் உடந்தை! என்னதான் இருக்கிறது, அவர்களுக்கிடையில்? அவன்மேல் இரக்கங்கொள்ளட்டும், நாள்தோறும் அவனைப் பார்க்க முடிகிற ஓர் ஓய்வு விடுதியில் அவனை விடட்டும். அது ஞாயம்; ஆனால் நான் ஒரு போதும் நினைத்தே பார்த்ததில்லைஅவளைக் கைம்பெண்ணாய்த்தான் பாவித்திருந்தேன். கேள், ழன்னேத், உன்னிடம் மனந் திறந்து பேச விரும்புகிறேன்என்று வியலான (serious) குரலில் கூறினார்; “அவளுக்கு உணர்ச்சியிருந்தால் ஒரு காதலனை வைத்துக் கொள்வதை மேலானதாகக் கருதுவேன்!”

   பேசாதே!” கத்தினாள் திருமதி தர்பேதா.

சலிப்படைந்த தோற்றங்கொண்ட திரு. தர்பேதா, தொப்பியையும் கைத்தடியையும் எடுத்தார்.

   நீ என்னிடம் கடைசியாய்ச் சொன்னதற்குப் பின்பு, எனக்கு அதிக எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் அவளிடம் பேசுவேன், ஏனென்றால் அது என் கடமை.”

  நான் நினைக்கிறேன், ஏவிடம் வேறெதைக் காட்டிலும் அதிகப் பிடிவாதம் இருப்பதாக. தீரா நோய் என்பதை அறிவாள்; ஆனால் முரண்டுபிடிக்கிறாள்.”

  பிடிவாதம்? ஆமாம், இருக்கலாம். இதோ பார், நீ நினைப்பது சரியாய் இருந்தால், அவளுக்கே அலுத்துப் போகும் கடைசியில். அவன் பழகுவதற்கு எல்லா நாளும் இனியவனாக இல்லை. அதோடு, உரையாட விரும்பாதவன். நான் காலைவணக்கம் தெரிவித்தால், தளர்வாகக் கை நீட்டுகிறான், பேசுவதில்லை. தன் மூளையை ஆக்கிரமித்துள்ள எண்ணங்களுக்குத் தாவிவிடுகிறான். அவள் என்னிடம் சொன்னாள், உருவெளித் தோற்றங்களைப் பார்த்துத் தொண்டை இறுக்கப்படுகிறவன் போல அவன் கத்துவதுண்டு என்று. சிலைகள், அவை ரீங்காரஞ் செய்வதால் அவன் அச்சப்படுகிறான். தன்னைச் சுற்றிப் பறக்கின்றன எனவும் கோரவிழி காட்டுகின்றன எனவும் கூறுகிறான்.”

   கையுறைகளை அணிந்த பின்பு தொடர்ந்தார்:

  அலுத்துப் போவதற்கு முன்னால் அவளுக்கே மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டால்? அவள் கொஞ்சம் வெளியே போகவேண்டும், மனிதர்களைப் பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு நல்ல பையனைச் சந்திக்க நேரலாம்; இங்கே அங்கே அவனை மீண்டும் மீண்டும் காணக்கூடும். தன் வாழ்க்கையைப் புனரமைக்கும் எண்ணத்துக்குச் சிறிது சிறிதாகப் பழகக்கூடும்.

   சரி, நான் புறப்படவேண்டும்.”

  மறுபடி பார்க்கலாம். அவளை நன்றாக முத்தமிடு. என் சார்பாகச் சொல், அவள் பரிதாபத்துக்குரிய செல்லம் என்று.”

  ஏவ் தன் கணவனுடன், யாக் தெருவில், ஒரு பழைய வீட்டின் ஐந்தாம் தளத்தில் வசித்தாள். திரு. தர்பேதா 112 படிகளையும் சிரமமின்றி ஏறினார். அழைப்பு மணியை அழுத்தியபோது மூச்சு வாங்கவில்லை. செல்வி தொர்முவாவின் சொற்களைத் திருப்தியுடன் நினைவுகூர்ந்தார்: “உங்கள் வயதுக்கு, ஷார்ல், நீங்கள் வியப்பளிக்கிறீர்கள்!”

  கதவைத் திறந்த ஏவை முத்தினார்: “நற்காலை, பரிதாபத்துக்குரிய செல்லம்!” அவள் ஆர்வக்குறைவுடன் நற்காலை சொன்னாள்.

  அம்மா நலமாக இருக்கிறாளா?”

  ஆமாம், இல்லை. நீ அவளை செவ்வாய்க்கிழமை பார்த்தாயல்லவா? அப்படித்தான், எப்போதும் போல. நேற்று உன் சித்தி அவளைப் பார்க்கக் குழந்தைகளுடன் வந்தாள்; அது அவளுக்கு இன்பந் தந்தது. பலரையும் வரவேற்க அவள் விரும்புகிறாள்.

  பியர் எப்படி இருக்கிறான்?”

  நன்றாக. பார்க்க விரும்புகிறாயா?”

  நிச்சயமாய்.”

  அந்தப் பரிதாபத்துக்குரிய பையன் மீது அவருக்குக் கொள்ளையிரக்கம் இருந்தது; ஆனால் அவனை வெறுப்பின்றிப் பார்க்க அவரால் முடிந்ததில்லை. “நான் ஆரோக்கியமற்றவர்களை அருவருக்கிறேன்.” தெளிவான விஷயம் என்னவெனில், அது பியேருடைய தப்பல்ல என்பதுதான். பயங்கரமாய்ப் பாதிக்கப்பட்ட பரம்பரை அவனுடையது.

  ஒளி மங்கிய நீண்டதோர் இடைவழியின் ஊடாய் மகளைத் தொடர்ந்து சென்றார்.

  இந்த வசிப்பிடம் உங்களுக்குக் கூர் (too) பெரியது, நீங்கள் குடிமாற வேண்டும்.”

  நீ ஒவ்வொரு தடவையும் இதைச் சொல்கிறாய், அப்பா; ஆனால் நான் முன்பே கூறியிருக்கிறேன் பியேர் தன் அறையை நீங்க விரும்பவில்லையென்று.”

  ஏவ் வியப்பளித்தாள்: கணவனின் நிலைமையை அவள் சரிவரப் புரிந்திருந்தாளா? அவனுக்குப் புத்தி சுவாதீனம் இல்லை; இவள் அவனுடைய தீர்மானங்களையும் கருத்துகளையும் அப்படி மதிக்கிறாள். ஏதோ அவனுக்கு முழு அறிவும் இருப்பது போல.

  நான் சொல்வது உனக்காகத்தான்என்று லேசான கோபத்துடன் சொன்ன திரு. தர்பேதா, “எனக்குத் தோன்றுகிறது, நான் ஒரு பெண்ணாய் இருந்தால், இந்தப் பழைய மற்றும் வெளிச்சங் குறைந்த அறைகளில் அச்சத்துடன் வாழ்வேன் என்று. ஒத்தேய் பக்கம் அண்மையில் கட்டியுள்ள பிரகாசமான வாழிடம் உனக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காற்றோட்டமுள்ள அறைகள். வாடகையைக் குறைத்திருக்கிறார்கள், ஆள் கிடைக்காமையால். இது சரியான வாய்ப்பு.”

   தாழ்ப்பாளை ஏவ் மெதுவாய்த் தள்ளினாள். நுழைந்தார்கள். ஒரு பலத்த சாம்பிராணி வாசனை திரு. தர்பேதாவின் தொண்டையைக் கப்பிற்று. திரைகள் மூடி இருந்தன. அரையிருளில் அவர் கண்டார் நாற்காலி ஒன்றின் உச்சியில் ஒரு மெலிந்த பிடரியை: பியேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

  நற்காலை, பியேர்என்றார் திரு. தர்பேதா குரலை உயர்த்தி. “எப்படியிருக்கிறாய்?”

  நெருங்கினார். நோயாளி ஒரு சிறு மேசையின் முன் அமர்ந்திருந்தான்: கபட்டுத் தோற்றம்.

  அரை வேக்காட்டு முட்டைகள்; உடம்புக்கு நல்லது.” என்றார் இன்னம் உரக்க.

  நான் செவிடல்லஎன்றான் பியேர் மென்குரலில்.

  எரிச்சலுற்றார் திரு. தர்பேதா. இவனிடம் பேச சரியான முறையை அறிய முடிவதில்லை.

  ஏவ் முட்டை ஓடுகளையும் கிண்ணத்தையும் அகற்றிவிட்டுத் தட்டு, முள்கரண்டி, கத்தி வைத்தாள்.

  பியேர் கரண்டியை எடுத்துத் தன் நீளமான நிறம் மங்கிய விரல்களின் நுனியில் பிடித்துக்கொண்டு அதைத் துல்லியமாய் ஆய்ந்த பின்பு லேசாய் சிரித்தான். “இது இந்தத் தடவைக்கு அல்லஎன்று முணுமுணுத்தபடி வைத்துவிட்டான். “எனக்கு முன்னெச்சரிக்கை கிடைத்திருக்கிறது.”

  ஏவ் அருகில் சென்று கரண்டியை உன்னிப்பாய்ப் பார்த்தாள்.

  பியேர் சொன்னான்: “அகாத்து, வேறு கொடு.”

  ஏவ் கீழ்ப்படிந்தாள். பியேர் உண்ணத் தொடங்கினான். அவள் ஐயத்துக்குரிய கரண்டியை எடுத்துக் கைகளில் நெருக்கிப் பிடித்துக் கொண்டாள், அதிலிருந்து பார்வையை அகற்றாமல்.

   திரு. தர்பேதா எண்ணினார்: “இவர்களுடைய செய்கைகளும் நடவடிக்கைகளும் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றன!”

  அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

  ஜாக்ரதை, அதை நடுப்பாகத்தில் பிடி; முனையில் முட்கள் உண்டு.” என்றான் பியேர்.

   தமக்குக் கோபம் வருவதைத் திரு. தர்பேதா உணர்ந்தார். அவனுடைய மன விகாரங்கள் எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் இடந்தருவது நல்லதென அவர் கருதவில்லை. ஃப்ரான்ஷோ சொல்லியிருக்கிறாரே! “ஒரு நோயாளியின் குழப்பவுலகில் நாம் ஒருபோதும் நுழையக் கூடாதுஎன்று. வேறு கரண்டி தருவதைக் காட்டிலும் மேலானதாக இருந்திருக்கும், அவனிடம் நல்லவண்ணம் எடுத்துச் சொல்லி முதற்கரண்டி அச்சு அசல் மற்ற கரண்டிகளைப் போலத்தான் என்பதைப் புரியவைப்பது. தட்டையணுகிக் கரண்டியை எடுத்து அதன் பற்களை விரல்களால் லேசாய் வருடினார். பின்பு பியேர் பக்கந் திரும்பினார். அவனோ அமைதியாய் இறைச்சியை அறுத்துக் கொண்டிருந்தான்; மாமனார் மீது சாந்தமான பார்வையைச் செலுத்தினான்.

   திரு. தர்பேதா ஏவிடங் கூறினார்: “நான் உன்னிடம் தனியாகப் பேச விரும்புகிறேன்.”

  வரவேற்பறைக்குச் சென்ற அவரை அவள் பின் தொடர்ந்தாள். அவர் சோபாவில் அமர்ந்தபோது தாம் இன்னமும் கரண்டியைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்து அதை மேசைமேல் எறிந்தார்.

  இந்த இடம் மேலானது.”

  நான் இங்கு வருவதேயில்லை.”

  புகைக்கலாமா?”

  நிச்சயமாக அப்பா, சுருட்டு வேண்டுமா?”

  அவர் தம்முடைய சிகரெட்டை விரும்பினார்; அதைப் பற்றவைத்துப் புகைகள் விட்டார்.

  என் செல்லப் பிள்ளையே, நாம் இருவரும் முன் காலம் போல வாயாடப் போகிறோம். நான் சொல்வதைத் தக்கபடி காதில் வாங்கு. வயதான அப்பா மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.”

  உன்னிடம் என்ன இருக்கிறது என்னிடஞ் சொல்ல?”

திரு. தர்பேதா கொஞ்சங் கடுமையுடன் கேட்டார்: “இதெல்லாம் உன்னை எங்கே கொண்டு போகும்?”

வியப்புடன் திருப்பிக் கேட்டாள்: “எதெல்லாம்?”

  உனக்கு நீ அமைத்துக் கொண்ட வாழ்க்கை. கவனி, உன்னை நான் புரிந்துகொள்ளவில்லை என்று நீ நினைக்கக்கூடாது. நீ செய்ய விரும்புவது மனித சக்திக்கு மீறியது. கற்பனையுலகில் மட்டுமே வாழ எண்ணுகிறாய். அவன் நோயாளி என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய். இன்றைய பியேரைக் காண நீ விரும்பவில்லை, அதுதானே! முந்தைய பியேர்க்கு மட்டுமே உனக்குக் கண்கள் இருக்கின்றன. என் செல்லமே, என் சின்னக் குட்டியே, இந்தப் பந்தயம் வெல்ல இயலாதது.”

  ஏவ் அழுத்தமாய்ச் சொன்னாள்: “எனக்கு நன்றாகத் தெரியும், பியேர்…”

  வார்த்தை வரவில்லை.

  சரி, அப்படியானால்?”

  என்ன அப்படியானால்?”

  நீ…”

  நான் நேசிக்கிறேன் அவனை, அவன் இப்போது இருக்கிற நிலைமையில்.”

  உண்மையல்ல, அது உண்மையல்ல, நீ அவனை நேசிக்கவில்லை; அவனை உன்னால் நேசிக்க முடியாது. ஆரோக்கியமுள்ள மற்றும் இயல்பான ஒருவர் மேல்தான் இந்த மாதிரி உணர்ச்சிகளைச் செலுத்த இயலும். பியேர் மீது உனக்கு இரக்கம் இருக்கிறது; அதில் எனக்கு ஐயமில்லை. அவன் உனக்குத் தந்த மூன்றாண்டு இன்பத்தின் நினைவை நீ வைத்திருக்கிறாய். இதிலுஞ் சந்தேகமில்லை. ஆனால் அவனை நேசிப்பதாகச் சொல்லாதே; நான் நம்ப மாட்டேன்.”

  ஏவ் மௌனங் காத்தாள். தரைக் கம்பளத்தின் மீது பார்வையை மேலோட்டமாய் செலுத்தினாள்.

  பதில் சொல்லேன். இந்த உரையாடல் உனக்குத் தருந் துன்பத்தைக் காட்டிலும் எனக்குக் குறைவாகத் தருவதாய் நினைக்காதே.”

  நீ என்னை நம்பப் போவதில்லை.”

கோபத்தின் உச்சிக்குப் போய் திரு. தர்பேதா கத்தினார்:

  அப்படியா? நீ அவனை நேசித்தால் அது ஒரு பெரிய துர்ப்பாக்கியம், உனக்கு மட்டுமல்ல, எனக்கும், பரிதாபத்துக்குரிய உன் தாய்க்குங்கூட. நான் உன்னிடஞ் சொல்லப் போகிறேன், சொல்லாமல் மறைப்பதை நான் விரும்பக்கூடிய ஒரு செய்தியை. இன்னம் மூன்றாண்டுக்குள் பியேர் முழுப் பித்துக்குள் அமிழ்ந்துவிடுவான், விலங்குபோல் இருப்பான்.”

  மகளை வெறித்துப் பார்த்தார். முரண்டு பிடித்து அந்தத் துன்பத் தகவலை வெளிப்படுத்தத் தம்மை நிர்ப்பந்தித்த அவள்மீது வெறுப்புற்றார்.

(தொடரும்)
(2018 ஜூலை மாத மஞ்சரியில் வெளிவந்தது.)