Wednesday 8 January 2014

மேலும் சில மருச் சொற்கள்

   முன்பு சிலசில மருச் சொற்களை அறிந்தோம்; இப்போது இன்னும் கொஞ்சம் காணலாம்:

 1 -- அரியலூர் -- அரியிலூர் என்பதன் மரு.
அரி + இல் + ஊர்.
திருமாலுக்கு இல்லமாகிய ஊர். அங்குப் பழைமை  வாய்ந்த கோதண்டராமர் கோவில் உள்ளது.

 2 -- அரசலாறு -- அரிசிலாறு என்பது சரியான பெயர்.
 நற்றிணை - 141 :   "அரிசில் அம் அறல்" (அரிசிலாற்றின் தெளிந்த கருமணல்)சங்கப் புலவர் ஒருவரின் பெயர், அரிசில் கிழார்.

  3 -- உழைப்பு - உழப்பு.
   குறள் 1031 : உழந்தும் ...
   திருவிடைமருதூர் மும்மணிக் கோவை:
  " உழப்பின் வாரா உறுதிகள் உளவோ?
   கழப்பின் வாராக் கையறவு உளவோ?"
   ( உறுதி = நன்மை;  கழப்பு = சோம்பல்;  கையறவு = இழப்பு)

   4 -- எள் -- எண் என்பது மருவியது.
  தொல்காப்பியம் - எழுத்து - பா 308 : " எண் என் உணவுப் பெயர்"  என்கிறது;   எண் என்ற சொல் ஒன்று முதலான நம்பர்களையும் குறிக்கும்;  அந்த அர்த்தத்தில் வரும் சொல் அல்ல இந்த எண், என்பதை விளக்குவதற்காகத் தொல்காப்பியர்,  உணவுப் பெயரைக் காட்டுகிற சொல் என்றார். (அதாவது இப்போதைய எள்).

  பழங் காலத்தில் நெய் என்பது ஆயிலைக் (oil ) குறித்தது;  எண்ணிலிருந்து பிழிந்த நெய்யை எண்ணெய் என்றனர்:  எண் + நெய் = எண்ணெய்.   
 ( இப்போது நல்லெண்ணெய் என்கிறோம்)

    நற்றிணை 328 : " எண்பிழி நெய்யொடு" = எண்ணைப் பிழிந்து எடுத்த  நெய்யோடு.

   புறம் 279 :  "குடுமி எண்ணெய் நீவி" = குடுமியில் எண்ணெய் தடவி.
 நாளடைவில் எண்ணெய் என்பது எல்லா ஆயிலுக்கும் பொதுப் பெயராய் மாறி விட்டது:  தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், விளக்கு எண்ணெய்;  ஆகையால் எண்ணிலிருந்து பெறப்படும் ஆயிலுக்குத் தனிப் பெயர் தேவைப்பட்டதுநல் என்னும் அடைமொழி சேர்த்து  நல்லெண்ணெய் என்றார்கள்;  அது வெறும் அடைமொழி தானே தவிர,  கெட்ட என்பதற்கு எதிர்ச்சொல் அல்ல.

  5 --  குறுணை  -- குறு நொய் (நொய்யைவிடச் சிறியது) என்பதன் மரு.

  6 --- தேவலை ---  தாவிலை என்பது ஆதிச் சொல்.
 தா என்பது வலிமை, வருத்தம் ஆகிய இரு பொருள் உடைய சொல்.
   " தாவே வலியும் வருத்தமும் ஆகும்" - தொல். -- சொல் - 827 .
 தா + இலை = தாவிலை = வருத்தம் இல்லை. அது தேவலை ஆகிவிட்டது.
           ( தொடரும் )

   -----------------------------------------------------------------------------------

7 comments:

  1. எள்+நெய்=எண்ணெய் என்னும் அளவில் தெரிந்து இருந்தேன். .பல மருச் சொற்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. பல மருச் சொற்களின் விளக்கம் அறிய முடிந்தது... நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  3. வணக்கம்
    ஐயா.

    பல மருச் சொற்களும் அதற்கான விளக்கமும் தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்... வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

      Delete
  4. தெரியாத பல புதிய தகவல்களை அடக்கிய பயனுள்ள பதிவு. எள்ளுக்கு எண் என்று சொல் இருந்திருப்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். நல்லெண்ணெயில் நல்ல என்பது கெட்ட என்பதின் எதிர்ப்பதம் என்று தான் இதுவரை நினைத்திருந்தேன். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  5. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . என் கட்டுரை பயனுள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி . தொடர முயல்வேன் .

    ReplyDelete