Thursday, 2 January 2014

கவிச் சக்கரவர்த்தி கம்பன்


வ. வே. சு. ஐயர் எனச் சுருக்கமாகச் சுட்டப்படும் வரகனேரி வேங்கட சுப்ரமண்ய ஐயர் (1881 - 1925)  தமிழ்த் திறனாய்வாளர்களுள் தலைசிறந்தவர். கரூர் அருகில் உள்ள  சின்னாளப்பட்டியில்  பிறந்து  திருச்சி வரகனேரியில் வளர்ந்தவர். ஆங்கிலம்,  லத்தீன்சமற்கிருதம் முதலான  பல மொழி பயின்றவர். விபத்தில் அவர் அகால மரணம் அடைந்தமை நம் மொழித் திறனாய்வுக்கு மாபெரும் இழப்பு.


1917 இல் அவர் வெளியிட்ட கம்ப ராமாயண ஆராய்ச்சி என்னும் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துத் தருகிறேன்:

 "உலக வாழ்க்கையில் மனிதன் பெறக்கூடிய பேறுகள் பலவற்றுள்ளும் கம்பனுடைய ராமாயணத்தைப் படித்து அனுபவிப்பது மிகப் பிரதானமானவைகளுள் ஒன்று என்பது எம்முடைய அபிப்பிராயம் .... கவிதையில்தமிழ்ப் பாஷையில் மாத்திரமில்லைவேறெந்தப் பாஷையிலுங்கூட,  கம்ப ராமாயணத்துக்கு மேலான கவிதை, எங்குக் காணலாகும்

நமது முன்னோர் கம்பனுக்குக் கவிச் சக்கரவர்த்தி என்று பேர் தந்தது வெறும் புகழ்ச்சி அல்லஅது உண்மை உரைத்தலே ஆகும். கவிதா லோகத்தின் பேரரசர் என்று சொல்லத் தகுந்தவர்கள் எல்லாம் கம்பனுடைய சந்நிதியில் முடி சாய்த்து வணங்க வேண்டியது தான்!
மேல் நாட்டாருக்குள் கவிச் சிரேஷ்டர்கள் என்று கருதப்படுகிற ஹோமர், விர்ஜில்,  தாந்தே,  ஷேக்ஸ்பியர்,  மில்டன்,  மொலியேர்,  கதே ஆகிய  இவர்கள்,  கவிதையின் உயர்ந்த அம்சங்களில் கம்பனுக்குக் கீழேதான் இருக்கிறார்களே ஒழிய, அவனை மீறவில்லை.

நமது நாட்டிலும் இளங்கோவடிகள்,  துளசிதாஸர்,  காளிதாஸன் முதலிய மகா கவிகளைக் கம்பனோடு தூக்கிப் பார்த்தாலும்தராசு முனை கம்பன் பக்கம்தான் சாயுமே யொழிய அவர்கள் பக்கம் சாயாது. வால்மீகி, வியாஸர் ஆகிய இவ்விரண்டு கவிகளைத்தான் கம்பனுக்கு இணையாகவோ ஒரு முனை ஏற்றமாகவோ சொல்லலாம்;  ஆனால் வியாஸ பாரதம் ஒரு சம்ஹிதையே ஆகிவிடுகிறதுஅதையும் கம்ப ராமாயணத்தையும்  ஒப்பிட்டுப் பார்ப்பது சரியல்ல. ஆனால் கவிதா ரீதியாக மாத்திரம்  ஒப்பிட்டுப் பார்ப்பதாயிருந்தால், கம்ப ராமாயணம் வியாஸ பாரதத்துக்குச்  சமமாகவாவது இருக்குமேயொழிய எள்ளளவு கூடத்  தாழாது.

ஆகிலும், கவிகளில் ஆதியானவரும் ராமாயணத்துக்கே முதலாசிரியரும் கம்பனாலேயே தன்னால் ஏணி வைத்துப் பார்த்தாலும் எட்ட முடியாது  என்று கூறப்பட்டவருமான  வால்மீகி முனிவரின்  கவிதா சாமார்த்தியத்தை அவனுடைய சாமார்த்தியத்தைவிட  மேலானது  என்று சொல்ல வேண்டாமா என்று  ஓர் கேள்வி  பிறக்கும்ஆனால்  இரண்டு காவியங்களையும் பாரபட்சமில்லாமல், சிரத்தையோடும் பொறுமையோடும், படித்துப் பார்த்தால் வழி நூலானது முதனூலை வென்றுவிட்டது  என்று சொல்லவேண்டியதாய் இருக்கிறது!

இப்பேர்ப்பட்ட மகா காவியத்தை நமது நாட்டில் இப்பொழுது எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று பார்த்தால் தொகை மிகமிகச் சொற்பமானதாய்த்  தான் இருக்கும்.

ரஸம் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு நூல்கள் படிப்போரின் தொகை அருகிப் போய்விட்டது; அதிலும் தமிழ் நூல்களின் உண்மையான கவி இன்பம் தேடுவோரின் தொகை ஒரு நூறு வரையில்கூடப் போகுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.. 

கம்பனைப் படித்துப் பொருள் கண்டுபிடிப்பதற்குப் பெரிய இலக்கணப் படிப்பு வேண்டாம்சாதாரணமான தமிழ்க் கல்வியினால் வருகிற செய்யுள் நடை அறிவும் பதச் சேதம் செய்யும் திறமையும் இயற்கையறிவும் உலகானுபவத்தால் வருகிற பாவ (bava ) ஞானமும் இருந்தால் போதும்."

வாசித்தீர்களா?  1917 இன் நிலைமை இது எனில்கிட்டத்தட்ட நூறு ஆண்டுக்குப் பிந்தைய இன்றைய நிலையை ஊகித்துக்கொள்ளுங்கள். தமிழில் ஆர்வமும் வசதி வாய்ப்பும் உடையவர்கள் கம்பனைப் படித்து இன்பம் துய்க்கத் தூண்டுதலாக இருக்கும் என்னும் நம்பிக்கையில் இக் கட்டுரை வெளியிடப்பட்டது.


        +++++++++++++++++++++

15 comments:

 1. அருமையான கட்டுரை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 2. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு மிகுந்த நன்றி . நானும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் உறவினர் நண்பர் யாவருக்கும் என் இனிய வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் .

   Delete
 3. கம்பராமாயணத்தின் சில பகுதிகளைப் பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். அதன்பின் சுய ஆர்வத்தில் நான் சில பகுதிகளை வாசித்து மலைத்துப் போயிருக்கிறேன். வ.வே.சு. ஐயர் அவர்கள் குறிப்பிடுவது போல் கம்பராமாயணத்தைப் புரிந்துகொள்வதென்பது, சங்கப்பாடல்களோடு ஒப்பிடுகையில் மிகவும் எளிமையாக உள்ளது. இக்கட்டுரையை வாசித்தபின் தொடர்ந்து கம்பராமாயணத்தைப் படித்தறிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வம் பிறக்கிறது. ஆர்வத்தைத் தூண்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிகுந்த நன்றி . கம்பனைப் படிக்க ஆர்வம் கொண்டதே பாராட்டுக்கு உரியதுதான் .

   Delete
 4. கம்ப ராமாயணத்தை முழுவதும் படிக்க வேண்டும் என்னும் அவாவுடன் ஓரளவு படித்திருக்கிறேன். சிலரது சொற்பொழிவுகளில் மேற்கோள் காட்டப்படும் பகுதிகள் அதிகம் வாசிக்கப் படுகின்றன. கம்பராமாயணம் படிப்போரைவிட அவரைப் பற்றி பேசுவோரே அதிகம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வதுபோல் எதையும் நேரடியாகப் படிக்க அதிகம் பேர் முயல்வதில்லை . காதால் கேட்பது எளிதாக இருக்கிறது . கற்றலின் கேட்டல் நன்று எனக் கூறப்படுகிறது ; இருப்பினும் நாமே வாசித்து அனுபவிப்பதற்கு அது ஈடாகாது .

   Delete
 5. அருமையான கட்டுரை... பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

   Delete
 6. பன்மொழியில் தேர்ச்சி பெற்ற வ.வே.சு. ஐயர் கூற்றைப் படித்தவுடன், அடடா இத்தனை ஆண்டுகள் கம்பராமாயணத்தை வாசிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்றவுணர்ச்சி மேலிடுகிறது, இந்த ஆண்டு எப்படியாவது வாசித்து ரசிக்க வேண்டும் என புத்தாண்டு சபதம் மேற்கொண்டிருக்கிறேன். கம்பனை வாசித்தே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுதிய இக்கட்டுரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிக்க நன்றி . நல்ல சபதம்தான் . வாய்ப்பும் நேரமும் கிடைக்க வாழ்த்துகிறேன் .யுத்த கான்டமாவது வாசிப்பது அவசியம் . அதில் சிறந்த பகுதிகள் இருக்கின்றன .

   Delete
 7. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_3.html) சென்று பார்க்கவும்...

  நன்றி...

  இந்த புத்தாண்டு சிறப்பாக அமையவும் நல்வாழ்த்துக்கள் பல...

  அன்புடன் DD

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிக்க நன்றி . போய்ப் பார்ப்பேன் .

   Delete